(தோழர் ஸ்ரனிஸ்)
இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினையின் காரணமாக அங்கிருந்து அகதிகளாக 1983 தொடக்கம் 2009 வரை தமிழகத்தில் தஞ்சம் அடைந்து தமிழகத்தில் உள்ள 107 முகாம்களில் 62445 பேரும் வெளியில் 32231 பேரும் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் நாகபட்டினம், நீலகிரி, திருவாதவூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் நீங்களாக மற்றய மாவட்டங்களில் அகதிகள் முகாம்கள் அமைந்துள்ளது. இதில் செய்யாறு, திருச்சி கொட்டப்பட்டு(கொட்டப்பட்டு சிறைச்சாலையுடன்) விசேட முகாம்களும் உள்ளன.
இந்த விசேட முகாம்கள் என்பது குற்றச்செயல்களில் அதாவது அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டோர் மற்றும் கடவுச்சீட்டு மோசடி,வெளிநாட்டிற்கு ஆட்களைக் கடத்துவதில் ஈடுபட்டு கைதானவர்கள் இதில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி கொட்டப்பட்டு,மண்டபம் முகாம்கள் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் போது தாயகம் திரும்பிய இந்திய வம்சாவளி மக்கள் தங்குவதற்காக கட்டப்பட்டு நிரந்தர கட்டிடங்களாக உள்ளது.இது இடைத்தங்கல் முகாம்களாகும்(Transit camp) மற்றய முகாம்கள் இனப்பிரச்சினை மேலோங்கிய காலகட்டங்களில் தமிழகத்துக்கு அகதிகளாக சென்றவர்களுக்காக அமைத்துக் கொடுக்கபட்ட தற்காலிக இடங்களாகவே காட்சியளிக்கிறது.
இவர்களில் முகாமில் வாழ்பவர்களின் அடிப்படைத் தேவைகளை தமிழக அரசு கவனித்து வருகிறது. இவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்படுவதுடன் தமிழக மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களான முதியோர் உதவித்தொகை, விதவைகளுக்கான உதவித்தொகை, ஊனமுற்றவர்களுக்கான உதவித்தொகை, என்பனவும் தமிழக மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்காக வழங்கப்படும் சைக்கிள், மடிகணினி, சீருடை போன்றவையும் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு இலங்கை அகதிகள் விடயத்தில் கரிசனை கொண்டுள்ளதை நாம் தமிழக அரசின் ஒவ்வொரு பஜட்டிலும் அவதானிக்க முடியும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்காக அதில் ஒருவிடயமாவது கண்டிப்பாக அமைந்திருக்கும்.
இது தவிர தொண்டு நிறுவனங்களான oferr, jrs, libra, aldra ஆகியவை முகாம்களில் பல திட்டங்கள்,விழிப்புணர்வுகள் என்பவற்றை செய்து வருகிறது.இதில் ழகநசச தொண்டு நிறுவனத்தின் பங்கும், செயற்பாடும் மிகவும் காத்திரமானதாக காணப்படுகிறது. இந்த நிறுவனம் நமது மக்களின் எதிர்கால நலன்களில் மிகவும் அக்கறயுடன் செயற்பட்டு வருகின்றது.
முகாமில் உள்ளவர்களுக்கு மாதாந்தம் தழிழக அரசினால் பணக்கொடை வழங்கப்படுகின்ற போதிலும், தங்களது பொருளாதார பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக பல கடினமான தொழில்களில் ஈடுபட்டு தங்களது தேவைகளை கவனித்து வருகின்றனர்.குறிப்பாக பிள்ளைகளின் கல்விச் செலவு,மருத்துவம் போன்றவற்றுக்காக அவர்கள் பாடாய் படுவதை அவதானிக்க முடிகிறது.
அகதிகளாக தமிழகம் வந்தபலர் கடற்றொழில்,விவசாயம் போன்ற தொழில்களை இலங்கையில் செய்தபோதும் அவர்களுக்கு தமிழகத்தில் இவ்வேலைகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்ல.
சென்னை புழல், கும்மிடிப்பூண்டி போன்ற முகாம்கள் அமைந்துள்ள இடங்கள் பெரும் தொழில் பேட்டையைக் கொண்டுள்ளதால், அங்கு சீமென்ட் குடோன்களிலும்,வெங்காய குடோன்களிலும் வேலை செய்கிறார்கள்.மேசன்களாக உள்ளனர்,கூலிகளாக உள்ளனர்.பல முகாம்களில் பெயின்ரிங் வேலை செய்கிறார்கள். படித்தவர்கள் கூட தங்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தால் உரிய வேலை கிடைக்காமல் கிடைக்கும் வேலையைச் செய்து வருகிறார்கள்.
வெளியில் தங்கியுள்ள அகதிகள் தமிழ்நாட்டின் பிரதான நகரங்களான சென்னை,திருச்சி,மதுரை போன்ற இடங்களில் செறிவாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய விசாவில் தமிழகம் வந்து பின்னர் பொலிசில் பதிவு பெற்று உள்ளவர்கள். சிலர் முகாம்களில் இருந்தும் வெளியேறி அவர்களது வசதிவாய்ப்புகளுக்கு ஏற்றவாறு வீடு எடுத்தும் தங்கியுள்ளார்கள். எப்படி முகாமில் இருந்து வெளியில் சென்று தங்கியுள்ளனரோ அதோ போல் முகாமில் பதிவு பெற்றிருந்த சிலரும் முகாம் பதிவினை நீக்கிவிட்டு வெளியில் பொலிஸ்பதிவுபெற்று தங்கியும் உள்ளார்கள்.
வெளியில் உள்ள இலங்கை அகதிகளைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு தமிழக அரசின் சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இருந்தும் அவர்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இலங்கையரைப் பொறுத்தமட்டில் அவர்கள் முகாமிலோ,வெளியிலோ பதிவுபெற்று இருக்க வேண்டும் என்பது நியதி. அல்லது விசா முடிவடையாமல் இருக்க வேண்டும்.அப்படி இல்லாத நபர்கள் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியிருக்கிறார்கள் என்பதாக கணிக்கப்பட்டு கைது செய்யப்படும் வாயப்புகளும் உள்ளது.
தமிழகத்தில் தற்போது முகாம்பதிவோ அல்லது வெளிப்பதிவோ 2012ம் ஆண்டுக்குப் பின்னர் வழங்கப்படுவதில்லை. யுத்தம் முடிவடைந்து விட்டது என்ற காரணம் கூறப்பட்டு இது அமுலுக்கு வந்துள்ளது.
நீண்ட பலவருடங்களாக முகாம்களில் குடும்பத்துடன் இருந்த ஒரு நபர் தனது தாய், தந்தை, உறவுகளை பார்ப்பதற்காக முகாமிலிருந்து இலங்கை சென்றால் அவரது பதிவு நீக்கப்படும். இலங்கை சென்ற நபர் மீண்டும் முகாமிற்கு வரும் பட்சத்தில் அவருக்கு பழைய பதிவு தற்போது வழங்கப்படுவதில்லை. அவர் முகாமிற்கு பக்கத்தில் உள்ள பொலிசில் தகவலை தெரிவித்துவிட்டு முகாமில் தங்கமுடியும்.
இதனால் பலர் இந்திய விசா முடியுமுன் மீண்டும் இலங்கை சென்று விசாவை புதுப்பித்து வருகிறார்கள். இதேபோல்தான் வெளியில் பொலிஸ் பதிவு பெற்று இருக்கும் நபர்களின் நிலைமையும் உள்ளது.
கல்வி தொடர்பாக தாய், தந்தையர் மிகவும் அக்கறையுடன் இருந்து தங்களது பிள்ளைகளின் கல்விக்காக பாடுபடுகிறார்கள். பலர் பட்டதாரிகளாக உள்ளார்கள். இதுவரை கல்லூரிப்படிப்பை முகாம்களில் உள்ள 3500 மாணவர்கள் நிறைவு செய்துள்ளனர். 1500 பேர் தற்போது கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கின்றனர். இது இவர்களுக்கு இலங்கையில் கிடைத்திருக்கமாட்டாத ஒரு வாய்ப்பாகவே பலராலும் அவதானிக்கப்படுகிறது.பல முகாம்களில் தங்களது பிள்ளைகளை பலர் ஆங்கிலக்கல்வியில் கல்விகற்க வைத்துள்ளனர்.
நம்நாட்டில் கிடைக்காத தொழில் நுட்பங்கள் இந்தியாவில் கிடைப்பதாலும் தொழில்துறை தொடர்பாக இலங்கையில் கிடைக்கப்பெறாத அரிய வாய்ப்பு இருக்கின்ற காரணத்தாலும், இது நாடு திரும்பிய பின் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்க பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்ற எண்ணம் கொண்டதாலும், சிலர் அதனை சரியாக திட்டமிட்டு செய்துவருகிறார்கள். பலரிடம் இந்த அக்கறையின்மை காணப்படுகிறது.
தமிழகத்தில் பிறந்த குழந்தைகளில் பிறப்புச்சான்று மற்றும் குடியுருமைச்சான்று
தமிழக முகாம்களில் 1990 இலிருந்து இன்றுவரை 24000 குழந்தைகள் பிறந்துள்ளார்கள். தமிழகத்தின் முகாம்களில் தங்கியிருப்பவர்களோ அல்லது வெளியில் தங்கியிருப்பவர்களோ தங்களுக்கு குழந்தைகள் பிறந்தால் அந்தக் குழந்தைகளுக்கு இலங்கைப்பிப்புச்சான்று மற்றும் இலங்கை குடிருமைச்சான்று எடுக்க வேண்டியது இன்றியமையாததாகும். இதனை சென்னையில் உள்ள இலங்கைத் துணைத்தூதரகத்திற்கு பெற்றோர் சென்று அவர்கள் கேட்கும் ஆவணங்களைச் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தில் பெற்றோர் கவனக்குறைவாக இருந்தால் அது தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
நாடு திரும்புதல்
தற்போது முகாம்களில் நாடுதிருப்பும் வேகமும் அது தொடர்பான பேச்சுக்களும் சற்றே அதிகரித்து உள்ளது. இந்தப்பேச்சு வெளியில் தங்கியுள்ள இலங்கையரிடமும் சூடுபிடித்து விட்டது. முகாம்களில் உள்ளவர்கள் சொந்தச் செலவிலும் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிபத்தின் அனுசரனையுடனும் நாடு திரும்புகின்றனர். வெளியில் உள்ளவர்கள் சொந்தச் செலவில்தான் செல்லமுடியும். இருந்தும் வெளியில் உள்ளவர்களின் பொருளாதார பின்னணியைப் பொறுத்து அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகம் நாடு திரும்ப உதவிகள் செய்துவருகிறது. இதில் .இரண்டாவதாகக் குறிப்பிட்ட வழிமுறையின் மூலம் நாடுதிரும்புவதை முகாமில் உள்ளோர் பெரிதும் விரும்புகிறார்கள். இந்த வழிமுறை மூலம் செல்வதால் அவர்கள் பல தரப்பாலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு அவர்களுக்கு உதவிகள் கிடைக்கும் என நம்புகிறார்கள்.
அடுத்த பத்தியில் நாடு திரும்புபியவர்கள், திரும்ப நினைப்பவர்கள் எதிர்பார்ப்புகள் பற்றி தொடர்கிறேன்…………..