முகாம்களில் வாழ்பவர்களை தமிழக அரசின் அகதிகளுக்கான மறுவாழ்வுத்துறையின் கண்காணப்பின் கீழ் அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு,ரேசன் பொருட்கள் என்பன வழங்கப்படுகிறது. அத்துடன் முகாமின் அடிப்படைத்தேவைகள், முகாம் மக்களின் பதிவுகள்,வேறு முகாமகளுக்கு மாறிச் செல்லின் அது தொடர்பான நடைமுறைகள், தமிழக அரசின் விசேட சலுகைகள் என்பனவற்றை மக்களுக்கு வழங்க தமிழக அரசின் அகதிகள் மறுவாழ்வுத்துறையே முகாம்களில் உள்ள மக்களின் தேவைகளை தீர்த்து வைக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பாக செயல்படுகிறது.
தமிழகத்தில் உள்ள இலங்கை மக்களைப் பொறுத்தமட்டில் பெரும்பாலோனோர் இந்திய குடியுருமை கிடைத்தால் நல்லது என பல தளங்களிலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதன் பிரதிபலிப்பாகவே தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் இதனை கையில் எடுத்து செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது எதிரொலித்ததை நாம் அறிவோம். தி.மு.க ஆட்சி அமைத்த பின்னர் தமிழக முதல்வர் இந்திய பிரதமரிடம் இது தொடர்பாக கூறியது. தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது, கவர்னர் உரையில் இவ்விடயம் இடம் பெற்றது என்பன தமிழகம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு நல்லதொரு சமிக்கையாக பலராலும் பார்க்கப்டுகிறது.
அண்மைக்காலமாக தமிழக அரசின் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் தமிழகத்தில் உள்ள முகாம்களுக்குச் விஜயம் செய்து மக்களின் குறைகளைக் கேட்டு வருகின்றனர். இது அண்மைக்காலமாக பெருமெடுப்பில் நடந்துவருகிறது. முகாமிற்கு விஜயம் செய்யும் இவர்கள் கொரோனா கால நிவாரணப் பொருட்களும் வழங்கி வருகின்றனர். இவை முகாம் மக்களுக்கு தமிழக அரசின் மீது நம்பிக்கைiயை ஏற்படுத்தியுள்ளது. முகாம் செல்பவர்கள் மக்கள் குறைகளைக் கேட்கின்றனர் அதனை தீர்க்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கின்றனர்.
கனிமொழி அவர்கள் தூத்துக்குடியில் அமைந்துள்ள முகாமிற்கு சென்று மக்களைப் பார்த்து குறைகளைக் கேட்றிந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் லேனாவிளக்கு முகாமிற்கு திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சென்று நிவாரணம் வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டம் தயாமங்கலம் முகாமிற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வி அவர்கள் நிவாரணம் வழங்கியுள்ளார். திருச்சி கொட்டப்பட்டு முகாமிற்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இனிகோ இருதயராஜ் அவர்கள் சென்று மக்களைச் சந்தித்து குறைகள் கேட்டுள்ளார். திருச்சி வளவந்தான் கோட்டை முகாம், கொட்டப்பட்டு முகாம் ஆகியவற்றுக்கு அகதிகள் மறுவாழ்வுத்துறை ஆணையர் திருமதி.ஜெசிந்தாலாசர் அவர்கள் சென்று மக்கள் குறை கேட்டுள்ளார்.
29.06.2021 அன்று அகதிகள் மறுவாழ்வுக்கு பொறுப்பான அமைச்சர் திரு.செஞ்சிமஸ்தான் அவர்கள் விஜயம் செய்யவுள்ளார் என்ற செய்திகள் என்பன அகதி மக்களின் காதுகளின் இன்ப தேனைப் பாச்சுவதாகவே அமைந்துள்ளது. திருச்சி சிறைவளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமிற்கும் அகதிகள் மறுவாழ்வுத்துறை ஆணையர் அவர்கள் சென்று அவர்களைச் சந்தித்து அவர்கள் குறைகளையும் கேட்டறிந்துள்ளார்.
முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு விசேடமாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு வெளியே வாழும் இலங்கை மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசு எமக்குபக்கபலமாக உள்ளது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆகமொத்தம் என்றும் இல்லாதவாறு தற்போது அமைந்துள்ளதி.மு.க தலைமையிலான தமிழக அரசு முகாம்களிலும்,வெளியே வாழும் இலங்கை தமிழ் மக்களின் குறைகளையும் தீர்து வைக்கும் எனபதில் ஐயம் ஏதும் இல்லை. இதேபோல் தற்போது நீர்த்துப் போயுள்ள உள்ள இலங்கை தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் தமிழக அரசு இந்திய ஒன்றிய அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.