தமிழகத்து மக்களின் மனநிலை… தேர்தல் நெருங்கும் வேளையில்

சாதாரண மக்கள் என்ன மனநிலையில்
தேர்தலை எதிர்கொள்கிறார்கள்?

எதை வைத்து அவர்கள் தங்களுக்கான வேட்பாளரையோ, கட்சியையோ தேர்வு செய்கிறார்கள்?

கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதாரண மக்களை எத்தனையோ பிரச்சினைகள் கடந்து போயிருக்கின்றன. புயல்கள் கடந்து போயிருக்கின்றன. வெள்ளம் கடந்து போயிருக்கின்றது. பணமதிப்பிழப்பின் பாதிப்புகளும், ஜி.எஸ்.டி. சுமைகளும் கடந்து போயிருக்கின்றன.

பலருடைய வேலைகளும், தொழில் வாழ்வாதாரங்களும் தொலைந்து போயிருக்கின்றன. ஜல்லிக்கட்டு துவங்கி ஹைட்ரோகார்பன், ஸ்டைர்லைட், எட்டுவழிச்சாலை என்று எத்தனையோ போராட்டங்கள் கடந்திருக்கின்றன. பொருளாதாரம் சீர்குலைந்து அவர்களைக் கடந்து போயிருக்கிறது.

இதெல்லாம் மக்கள் எந்த அளவுக்கு நினைவு வைத்திருக்கிறார்கள்?

‘’ இப்போ வந்து பிரச்சாரம் பண்ணுறவங்க எங்களைச் சுத்திப் பிரச்சினையாக் கிடக்கிறப்போ எங்கே போனாங்க?’’

‘’ எங்க பிள்ளைங்க பொதுப்பிரச்சினைக்காக போராடனப்போ என்னென்ன பேசினாங்க? அவங்களை அடிச்சாங்க.. கைது பண்ணினாங்க..அப்போ எங்களைப் பெரிசாத் தெரியலை.. இப்போ மட்டும் எங்க ஓட்டு பெரிசாத் தெரியுதா?’’

‘’ பல ஊர்களில் குடிக்கத் தண்ணீ இல்லை.. ரொம்பத் தொலைவுக்குப்போய்த் தான் கலங்கிப் போன தண்ணியை எடுத்துட்டு வர்றோம்.. இதுக்கு யாராவது செஞ்சாங்களா? முதல்லே..சொல்லுங்க.. அப்புறம் ஓட்டுப் போடுறதைப் பத்திப்பேசலாம்’’

பரவலாக மக்களுடைய பேச்சில் சுட்டெரிக்கிறவெயிலின் தாக்கம். குரல் கனக்கப் பேசுகிறார்கள். குமைகிறார்கள். ஆதங்கப்படுகிறார்கள். கொச்சையாகக் கோபப்படுகிறார்கள். கண்கலங்குகிறார்கள்.
பலர் மீது நம்பிக்கையிழந்த சொற்களை வெளிப்படுத்துகிறார்கள்.

சுற்றியிருக்கும் சூழல் அவர்களை அப்படிப் பேச வைத்திருக்கிறது.பண மதிப்பிழப்பு பலரைத் தவிக்க வைத்திருக்கிறது என்றாலும் சிலர் குடும்பத்தேவைகளுக்காக, திருமணத்திற்காக,மருத்துவமனைச் செலவுகளுக்காகத் தவித்துத் தடுமாறிப் போனதைச் சொல்லும்போதும், சிறு மளிகைக்கடை வைத்திருக்கும் ஒருவர் தன்னுடைய பத்து வயது மகளை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்த்துப் பணத்தை வங்கியிலிருந்து எடுக்க முடியாமல் அலைக்கழிந்துபோய் அதற்குள் சிறு பெண்உயிரிழந்துவிட, இறுதிச்சடங்கிற்குக் கூடத் திண்டாடியதைச் சொன்னபோது குரல் உடைந்துபோய் தீனக்குரலில் அழுதார்.

பலருடைய வாழ்க்கையில் மின்னலின் கீற்று செருகியதைப் போலப் பல பாதிப்புகள்.

மதுரையில் சாதாரண சாலையோரத்தில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் பழவியாபாரியிடம் தேர்தல் பற்றிப்பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னதை லேசில் மறக்கமுடியவில்லை.

‘’ இப்போ எதுக்கு என் கிட்டே தேர்தலைப் பத்திக் கேட்கிறீங்க..’’ – முதலில் கடுமை காட்டியவர் பிறகு தணிந்து பேசினார்.

‘’ என்னத்தைச் சொல்றதுங்க.. அடிக்கடி நாம அனாதையாயிட்ட மாதிரி இருக்குங்க..ஏதோ ஒப்புக்குச் சொல்றேனேன்னு நினைக்காதீங்க.. அப்படி நானும், என் குடும்பமுமே யோசிச்சிருக்கோம்ப்பா..பல பேரு மேலே நாங்க வைச்சிருந்த நம்பிக்கை எல்லாம் பாழாப் போச்சு.. இப்போ மதுரையில் பாருங்க.. இங்கே புதுசா ஒரு தம்பி –வெங்கடேசன்-ன்னு நிக்கிறாரு.கம்யூனிஸ்ட் கட்சி.. அதுக்குத் தான் போடலாம்னு இருக்கோம்.. பார்ப்போமே’’

சொல்லிக் கொண்டிருந்தவரிடம் உரையாடல் நகர்ந்து கடைசியில் கேட்டேன்,

‘’ இப்போ கடைசி நேரத்தில் பணம் கொடுக்கப்பட்டா மாத்திப்போட்டுற மாட்டாங்களா?’’- கேட்டதும் தான் தாமதம்.

பொங்கிவிட்டார் அந்த எளிமையான மனிதர்.

‘’ எப்படிங்க நீங்க அப்படிக் கேக்கலாம்? நொந்து நூலாகிக் கிடக்கிறோம்ங்கிறது வாஸ்தவம் தான். ஆனா எங்களுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு .. இல்லையா? கடைசி நேரத்தில் வந்து பணத்தைக் கொடுத்தா நாங்க மாத்திப் போட்டுறுவோமா? சொல்லுப்பா.. ‘’ என்றவர் தரையில் அப்படியே குனிந்து உட்கார்ந்தார்.

சற்றுக் கனத்த மௌனம்.

‘’ எல்லோரும் எங்களை நாதியத்தவன்னு நினைச்சிராதீங்க..உங்களுக்கு வேணும்னா நேத்து நடந்ததெல்லாம் மறந்து போயிறலாம்.. எங்களுக்கு சூடு, சொரணை இல்லைன்னு நினைச்சீங்களா?’’

என்று சொல்லிவிட்டு ‘’த்தூ’’ என்று காறித்துப்பியபோது மல்லாந்த பல்லியைப் போல கீழே விழுந்து மண் ஒட்டியது அடர்ந்த எச்சில்.

நெஞ்சைச் சுட்டன அக்னிக்குஞ்சைப் போன்ற வெப்பம் ஏந்திய அந்தப் பாசாங்கற்ற சொற்கள்.

தன்னுடைய வியாபாரத்தை விட்டு தரையில் உட்கார்ந்து அந்த எளிய மனிதர் குரல் கமறப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது அதுதான் ஜனநாயகத்தின் அசலான குரலைப் போலத் தெரிந்தது.
#
உங்கள் உணர்வுடன் ஒன்றியிருந்தால் மற்றவர்களுடன் பகிருங்கள்…