தமிழகத் தேர்தலும் இலங்கை தமிழரும்

(ருணாகரன்)

‘தமிழ்நாட்டுத் தேர்தல் களம் எப்பிடியிருக்கு? யார் அங்கே ஆட்சியைப் பிடிக்கப்போகிறார்கள்? யாருக்குச் சான்ஸ் இருக்கு? எந்தத்தரப்பினர் அதிகாரத்துக்கு வந்தால் நல்லது? அதாவது யார் பதவிக்கு வந்தால் ஈழத்தமிழருக்கு வாய்ப்பாக இருக்கும்?….’ என்ற விதமாக பேஸ்புக்கிலும் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் ஏராளமாக எழுதப்படுகின்றன. தினமும் ஆய்வுகள் வேறு நடந்து கொண்டிருக்கின்றன. எந்தத் தரப்பு அதிகாரத்தைக் கைப்பற்றும் என்ற ஊகங்கள், கருத்துக் கணிப்புகள் கூட நடக்கின்றன. பலர் இதில் முழுநேரக் கவனத்தை வேறு கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் தமிழ்நாட்டில் நடப்பது வேறு. அதற்கப்பால், ஈழத்தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்று இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நடக்கிறது. இதுவே நம் கவனத்துக்குரியது.

தமிழ் நாட்டுத் தேர்தல், இலங்கையர்களுக்குரியதல்ல. அந்தத்தேர்தலில் எந்த இலங்கையரும் வாக்களிக்கப்போவதுமில்லை. அந்த ஆட்சியும் இலங்கையருக்குரியதல்ல. அது, இலங்கையருக்குரிய அரசாங்கமும் இல்லை. என்றாலும் தமிழகத் தேர்தலும் அதன் முடிவுகளும் அமையும் ஆட்சியும் நமது கவனப்புலத்தில் நிறைந்திருக்கு. இது பழக்கதோசமா அல்லது இலங்கைத் தமிழர்கள், தங்கள் நன்மைகள், நலன்களுக்காகத் தமிழ்நாட்டை இன்னும் நம்பியிருக்கும், எதிர்பார்க்கும் குணாம்சத்தின் வெளிப்பாடா அல்லது சில ஆய்வாளர்கள் நம்புவதைப்போல, ‘சென்னை, ஒரு திறவுகோலாக ஈழத்தமிழரின் அரசியற் பிரச்சினைக்கு வழிதரும்’ என்ற காரணத்தினாலா அல்லது ‘தமிழர்கள் தேசமாகச் சிந்திக்க வேண்டும்’ என்ற அகன்ற பெருந் தமிழ்ச்சிந்தனையின் விளைவா?

எதுவாக இருந்தாலும், தமிழ் நாட்டுத் தேர்தல், நம் வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்வாக உணரப்படுகிறது. எங்கள் வீட்டுக்குரிய நிகழ்வைப்போலிருக்கிறதே தவிர, அது எங்களுடையதில்லை. எங்களுக்குரியதும் இல்லை. ஒரு தோற்றம் மட்டுமே. நாம் இதில் எந்த வகையிலும் பொறுப்பாளிகளாகவோ தீர்மானிக்கும் ஆட்களாகவோ இல்லை. இந்தப் பின்னணியில் நாம் சில விடயங்களைப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டுத் தேர்தலையும் அங்குள்ள அரசியலையும், இலங்கையிலுள்ள முஸ்லிம் தரப்புகள் அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. அவர்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் அவ்வளவு நெருக்கமான உறவோ தொடர்புகளோ கிடையாது. தவிர, தமிழ் நாட்டு அரசியலினால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிட்டியதும் இல்லை. அதனால் எந்த விதமான எதிர்பார்ப்புகளும் அக்கறைகளும் அவர்களிடத்தில் உண்டாகவில்லை. சில வணிக – பண்பாட்டுத் தொடர்புகளைத் தவிர. ஆகவே, தீவிர அரசியற் கவனங்கள் இதற்கு அவசியமுமில்லை.

மலையகத் தமிழர்களும் இதில் பெருங்கவனம் கொள்வதில்லை. மலையகத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்குமே நெருக்கம் அதிகம். தொப்புள்கொடி உறவு என்று சொல்லப்படும் அளவுக்குச் சொந்த பந்தங்களும் போக்குவரத்தும், இருதரப்புக்கும் உண்டு. வாழ்க்கையின் அத்தனை அம்சங்களிலும் தமிழ்நாடு மலையகத் தமிழர்களிடம் பிரதிபலிக்கிறது. இதற்குக் காரணம், தாய் அங்கே, பிள்ளை இங்கே, பாட்டன் அங்கே, பேரன் இங்கே என்ற வகையில் உள்ள நெருக்கம். தவிர, உரிமை, உறவு என்பதெல்லாம் மலையகத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்குமே அதிகம். ஆனால், அப்படியிருந்தும் மலையகத் தமிழர்கள் தமிழ்நாட்டு அரசியலை அதிகம் எதிர்பார்ப்பதில்லை. தமிழ் நாட்டு அரசியலினால் மலையகத் தமிழர்கள் பெரிதாக எந்த நன்மைகளையும் பெற்றதாகவும் இல்லை. மட்டுமல்ல, மலையக அரசியலில் செல்வாக்குச் செலுத்திய எந்தத் தலைமைகளும் தமிழ்நாட்டையும் அங்குள்ள அரசியலையும் அரசியற் தலைமைகளையும் தங்கள் அரசியலோடு சம்மந்தப்படுத்தியதுமில்லை. அவற்றை தங்கள் வாழ்வோடும் எதிர்காலத்தோடும் தொடர்புபடுத்திக் கொண்டதுமில்லை. மலையக அரசியலில் பெரும் செல்வாக்கை நீண்டகாலமாகச் செலுத்தியிருந்த தொண்டமான், தமிழகத்தலைவர்களுடன் சம்பிரதாயபுர்வமான தொடர்பை மட்டுமே கொண்டிருந்தார். அரசியற் தொடர்புகளை எப்போதும் கொழும்புடன் மட்டுமே வைத்திருந்தார். இது அவர் புரிந்து கொண்ட யதார்த்தத்தின் விளைவாகும்.

ஆகவே, தமிழ்நாட்டு அரசியலைப்பற்றியும் அங்கே நடக்கின்ற தேர்தலைப்பற்றியும் இவர்கள் அவ்வளவாக அக்கறைப்படுவது கிடையாது. ஏதோ நடக்கிறது, நடக்கட்டும். என்ன நடந்தாலும் நமக்கென்ன என்ற போக்கில் இருப்பதுண்டு. இப்பொழுதும் இதுதான் நிலை. ஆகவே, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களே இதில் கூடுதலான அக்கறையோடிருக்கிறார்கள். அதிலும் வடக்கிலுள்ளவர்களுக்கு இதில் அதிக ஈடுபாடு. புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டும் கணக்குகளைப் போடுகிறார்கள். இதற்கான காரணங்களும் உண்டு.

வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் தொப்புள்கொடியிலும் நெருங்கிய உறவாகத் தமிழ்நாட்டையும் அங்குள்ள அரசியலையும் பார்க்கிறார்கள். உணர்கிறார்கள். அண்மைய தசாப்தங்களின் தமிழக உறவு அந்த அளவுக்கு நெருக்கமாக இந்தத் தமிழர்களுக்குண்டு. இந்த உறவின் காரணங்களையும் விதங்களையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

1. இனப்பிரச்சினையின் விளைவாக, தமிழர்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் தமிழ்நாடு குரல் கொடுத்தது. ஈழத்தமிழர்களின் அரசியல் விவகாரத்தையும் மக்களின் பாதிப்புகளையும் பற்றிப் பேசும் நிலையை ஒரு காலம் தமிழ்நாடு கொண்டிருந்தது. குறிப்பாகத் தமிழ்நாட்டு வானொலிகளின் மாநிலச்செய்திகள் தமக்காகவே ஒலிபரப்பாகின்றன என்று நம்பும் அளவுக்கு ஈழத்தமிழர்கள் இருந்தமை.

2. இனப்பிரச்சினையினாலும் பின்னர் உருவாகிய போரினாலும் இடம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்குச் செல்லக் கூடியதாக இருந்தது. சென்றவர்கள் அங்கே தங்கியிருக்க நேர்ந்தது.

3. இயக்கங்களின் போராட்டப்பின்தளமாக 1980 களிலிருந்து தமிழ்நாடு இருந்தது. பின்னரும் அந்தத் தொடர்புகள் ஏதோவகைகளில் தொடர்வது.

4. ஈழவிடுதலைப் போராட்டத்துக்கும் ஈழப்போருக்கும் தாம் எப்போதும் ஆதரவு என்று காட்டிய தமிழ்நாட்டு அரசியலும் தலைமைகளும். இன்னும் இது தொடர்ந்து கொண்டிருப்பது.

5. புவியியல் ரீதியாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கும் தமிழ்நாட்டுக்குமிடையில் உள்ள நெருக்கமும் கடல் வழியான தொடர்பும்.

6. வடக்கு, கிழக்கு மக்களைப் பிரதிபலித்த தமிழ்த்தலைமைகள் எப்போதும் தமிழ்நாட்டைத் தங்களுக்கு ஆதரவுச் சக்தியாகக் காண்பித்து வந்தமை. இது அரசியல் ரீதியாக ஓர் எதிர்பார்ப்பை தமிழ்நாட்டிடமிருந்து, ஈழத்தமிழர்களிடத்தில் உண்டாக்கியது.

7. இலங்கையில் நிலவிய யுத்தத்தின் காரணமாகப் புலம்பெயர்ந்தவர்கள், இலங்கைக்குத் திரும்பி வரமுடியாத நிலை இருந்தபோது, தமிழ்நாட்டுக்கே வந்து செல்லக்கூடியதாக இருந்தது. பலர் இலங்கையில் இருந்த உறவினர்களைத் தமிழ்நாட்டுக்கு அழைத்து அங்கே தங்க வைத்தனர். இப்போதும் கூடச் சென்னையில் வலசரவாக்கம், ஈ.ஸி.ஆர், மடிப்பாக்கம், எழும்பூர் போன்ற இடங்களில் குறிப்பிடத்தக்க தெருக்களில் சற்றுச் செறிவாகவும் அதிகமாகவும் இவர்கள் உள்ளனர். தவிர, திருச்சி, மதுரை, இராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் கூடுதலாக இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். தங்கள் உறவுகளை அங்கே அழைத்து திருமணங்களைக் கூடப் பலர் தமிழ்நாட்டில்வைத்தே நடத்த முடியுமாக இருந்தது. இன்னும் இது தொடர்கிறது.

8. இன்னும் அங்கே ஒன்றரை இலட்சம்பேர் அகதிகளாக இருப்பது.

9. கல்வி, வணிகம், தலயாத்திரை மற்றும் மொழிசார்ந்த பண்பாட்டு நடவடிக்கை எனப் பல விதங்களில் கொண்டிருக்கும் உறவு.

இப்படிப் பல காரணங்கள், தமிழக அரசியலை அவதானிக்கவும் ஈடுபடவும் வைக்கின்றன. அதாவது, இலங்கையின் தமிழ் ஊடகங்களில் தமிழ்நாட்டு அரசியல், தவிர்க்க முடியாததொரு முக்கிய பேசுபொருள். ஆனால், இந்தக் காரணங்களுக்கான எதிர்பார்க்கை இனியும் சாத்தியமானதா அல்லது தமிழ்நாட்டு அரசியலின் மூலமாக இலங்கை இனப்பிரச்சினையிலும் ஈழத்தமிழர் வாழ்விலும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படுமா, இலங்கை முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் எதிர்காலத்திலும் தமிழ்நாடு எதையாவது செய்ய முடியுமா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே பதில். கடந்த கால அனுபவங்களும் இதையே சொல்கின்றன. இந்திய – இலங்கை அரசியல் யதார்த்தமும் இதையே உணர்த்துகின்றன. இதற்கப்பால் அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ வேண்டுமானால், அந்த அதிசயங்களும் அற்புதங்களும் தமிழ் நாட்டில்தான் முதலில் நிகழ வேண்டும். மாறுதலான தலைமைகள் அங்கே உருவாக வேண்டும். அதற்கடுத்து அது இந்திய அளவில் நடக்க வேண்டும்.

இதல்லாம் கனவு பாதி, நிஜம் பாதி என்ற கலவைதான்.இதில் கனவு மெய்ப்படுவதென்பது? சரி, இந்த அக்கறைகளை எப்படிக் கடப்பது அல்லது இந்த அக்கறைகளின் ஊடாக எதைக் கற்றுக்கொள்வது?

முதலில் இந்த அக்கறைகளைக் கடக்கத்தான் வேண்டுமா என்பது. தமிழ்நாட்டை நம்பியிருந்த காலம் ஒன்றிருந்தது. தவிர்க்க முடியாமல் அக, புறக்காரணங்களால் அந்த நம்பிக்கை இலங்கைத்தமிழர்களிடம் உருவான ஒன்று. அதற்கான நியாயங்களும் அப்போதிருந்தன. இலங்கையின் இனப்பிரச்சினையிலும் ஈழப்போராட்டத்திலும் தமிழ்நாடும் இந்தியாவும் குறிப்பாக டில்லியும் கரிசனை கொண்டிருந்தன அப்போது. இலங்கை அரசின் இன ஒடுக்குமுறையைக் கட்டுப்படுத்துவதில் டெல்லியும் தமிழ்நாடும் செல்வாக்கைச் செலுத்தும் என்ற நம்பிக்கையும் ஓர் எல்லைவரை அப்படிச் செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலையும் அப்போதிருந்தன.

பின்னர் உருவாகிய அரசியல் நடவடிக்கைகளும் உலக அரசியற்போக்கும் இந்த நிலையை மாற்றி விட்டன. இந்திய அரசியலும் இந்தப் போக்கை விட்டு வெகுதூரம் விலகி விட்டது. எனவே, இனியும் ஈழத்தமிழர்கள், இந்தியாவையும் தமிழ்நாட்டையும் நம்புவதில் பயனில்லை என்பதே யதார்த்தம். ஒரு எல்லைவரையில் இராஜதந்திர ரீதியாக இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு இலங்கைத்தமிழர்களின் அரசியல் நிறைய முதிர்ச்சியடைய வேண்டும். நிபுணத்துவத்தைப் பெற வேண்டும். ஆகவே, அதைப்பற்றிய புரிதலும் நடைமுறை வளர்சியும் இல்லாமல் வெறுமனே வாய் சப்புவதிலும் கற்பனைச் சித்திரங்களை வரைவதிலும் பயனில்லை. அடுத்தது, இந்த அக்கறைகளின் ஊடாக எதைக் கற்றுக்கொள்வது என்பது. இது இரண்டு வகையான பயனைத் தரக்கூடியது. ஒன்று தமிழகத்தில் இப்பொழுது தேர்தலில் முன்னணியில் இருக்கும் தரப்புகள் மூன்று அல்லது நான்கு. அ.தி.மு.க, தி.மு.க மற்றும் மக்கள் நலக்கூட்டணி. நான்காவதுதரப்பு என்றால் சீமானின் நாம் தமிழர் அணி. இதில், தி.மு.வுக்கும் அ.தி.மு.கவுக்குமே உச்சநிலைப்போட்டி. மூன்றாவது சக்தியென்றால் மக்கள் நலக்கூட்டணிதான்.

இவற்றில் எந்தச் சக்தி வந்தாலும் இலங்கை அரசியல் விவகாரங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை. ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் தொடர்பான அறிவிப்புகள் காட்டுகின்ற கவர்ச்சி சிரிப்புக்கிடமானது. ஏனென்றால் இதுவரையிலும் ஆட்சியில் இருந்தவர் அவரே. அப்படி ஆட்சியிலிருந்த போது செய்யமுடியாததையா இனிச் செய்யப்போகிறார். அப்படித்தான் கருணாநிதியிடம் எதிர்பார்ப்பதும். அவருடைய தி.மு.கவும் பல சந்தர்ப்பங்களில் அதிகாரத்தில் இருந்த ஒன்றே.

அப்போது செய்யமுடியாததை இனிச் செய்வதற்கு எந்த உத்தரவாதங்களும் இல்லை. அதில் அவர்களுக்கு ஈடுபாடுகளும் கிடையாது. மக்கள் நலக்கூட்டணி பங்காளிகளை அதிகமாகக் கொண்ட தரப்பு. எந்தத்தீர்மானங்களை எடுப்பதாக இருந்தாலும் அதில் ஏகப்பட்ட நிலைப்பாட்டு மாறுதல்கள் உண்டு. அதைக் கடந்தே அது செயற்பட வேண்டும். தவிர, இவை எல்லாவற்றுக்கும் ஈழத்தமிழர் விவகாரத்தை விடப் பெரிய பிரச்சினைகளாக தமிழ்நாட்டில் ஏராளம் எரியும் பிரச்சினைகள் உண்டு. கல்வி, விவசாயம், நீர்ப்பங்கீடு, அணுமின்நிலையம், பொருளாதார வளர்ச்சி, சாதியம், தொழிற்றுறை மேம்பாடு, கடற்றொழில் போன்றவற்றில் தலைக்குமேல் பாரங்கள் அதிகம்.

ஆகவே, அவற்றைத்தான் ஆட்சிக்கு வரும் தரப்பு கவனிக்கும். அது தவிர்க்கமுடியாதது. அதற்குப்பிறகே இலங்கைப் பிரச்சினையைக் கவனிக்கலாம். தவிர, ஈழத்தமிழர் விவகாரம் என்பது தனியே தமிழ்நாட்டின் விருப்பு வெறுப்புகள், சட்டப்பிரச்சினையோடு சம்மந்தப்பட்டதல்ல. அது, இந்திய மத்திய அரசின் நிபந்தனைக்குட்பட்டது. எனவே இந்த யதார்த்தங்களின்படி தமிழ்நாட்டை ஓர் ஆதரவுத்தரப்பு என்பற்கப்பால் எதிர்பார்ப்பது யதார்த்த முரணும் வரலாற்றறிவுக்கு மாறானதுமாகும். அடுத்தது, இந்தத்தடவை நடக்கும் தேர்தலில் வழமையான தரப்புகளின் வழமையான பரப்புரை மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பால், சற்று மாறுதலான ஒரு போக்கு அல்லது நிலை அங்கே காணப்படுகிறது. இதையே நாம் கவனிக்க வேண்டும். இந்தக் கட்டுரையின் மைய இலக்கே இதுதான். கட்சி விசுவாசம், கட்சிச் சார்பு போன்றவற்றுக்கு அப்பால், தேர்தல் என்றால் என்ன, கட்சி அரசியலின் பாதகமான போக்கு எப்படியானது, ஜனநாயகத்தின் பேரால் நடக்கும் குடும்ப ஆட்சி அல்லது மன்னராட்சி முறையை ஒத்த நடைமுறைகளின் அபாயம், அரசியலில் ஆர்வம் கொள்ளவேண்டியதன் அவசியம், தவறான அரசியலில் இருந்து விடுபடுவது எப்படி, சுயேட்சைகளின் முக்கியத்துவம், ஊடகங்கள் செய்வதென்ன, செய்யத்தவறியதென்ன என்ற விளக்கங்கள், இளைய தலைமுறையின் பொறுப்புணர்வு, சமூகச்செயற்பாட்டியங்களின் பங்கும் பணிகளும், புதிய ஆட்சிக்கான அவசியம், ஜனநாயகத்தை எப்படிப் புரிந்து கொள்வது, அதை எப்படிப் பலப்படுத்துவது, வழமைகளில் இருந்து விடுபடுவது எப்படி, எனப் பலவகையான விடயங்களில் பரந்த அளவில் விவாதங்களும் எழுத்துகளும் கருத்தாடல்களும் இந்தத் தேர்தலில் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் எழுத்தாளர்கள், அரசியற் சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டியக்கங்களைச் சேர்ந்தோர், கல்வியாளர்கள், இளைய தலைமுறையைச் சேர்ந்தோர், நிர்வாக அனுபவமுடையவர்கள், கலையுலகத்தினர் எனப் பலரும் பங்கேற்றிருக்கின்றனர். இவர்கள் சமூக வலைத்தளங்களிலும் மின்னூடகங்களிலும் பத்திரிகைகளிலும் தொடர்ச்சியாக இயங்கி, மக்களைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். இதெல்லாம் உடனடியாக எந்த அளவுக்கு இந்தத் தேர்தலில் செல்வாக்கைச் செலுத்தி மாறுதல்களை உண்டாக்கும், இவற்றின் சமகாலப் பலம் என்ன, என்ற கேள்விகளை யாரும் முன்வைக்கலாம். ஆனால், அதற்காக இவற்றை, இந்தச் செயற்பாட்டை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

முக்கியமாகச் சமூக அசைவியக்கத்தின் முக்கிய புள்ளிகளாக இருக்கும் தரப்புகள், ஒத்தநிலையில் மாறுதலைக் குறித்துச் சிந்திக்கத்தொடங்கியிருக்கின்றன. இதுதான் மாற்றத்துக்கான தொடக்கமாகும். நமது கவனத்தை இவையே பெறுகின்றன. ஏனென்றால், இது தனியே தமிழ்நாட்டுக்கு மட்டுமானதல்ல. இலங்கைச்சூழலுக்கும் பொருந்தக் கூடியது. அதிலும் இலங்கைத்தமிழ் அரசியலுக்கு அப்படியே பொருந்துவன. அதாவது, நமக்கு. குறிப்பாக கட்சி விசுவாசம், கட்சிச் சார்பு போன்றவற்றுக்கு அப்பால், தேர்தலை எப்படி அணுகுவது, தேர்தல் என்றால் என்ன, கட்சி அரசியலின் பாதகமான போக்கும் அதன் விளைவுகளும், ஜனநாயகத்தின் பேரால் நடக்கும் தவறான நடைமுறைகளிலுள்ள அபாயம், அரசியலில் ஆர்வம் கொள்ளவேண்டியதன் அவசியம், தவறான அரசியலில் இருந்து விடுபடுவது எப்படி, சுயேட்சைகளின் முக்கியத்துவம், ஊடகங்கள் செய்வதென்ன, செய்யத்தவறியதென்ன என்ற விளக்கங்கள், இளைய தலைமுறையின் பொறுப்புணர்வு, சமூகச்செயற்பாட்டியங்களின் பங்கும் பணிகளும், புதிய தரப்புகளுக்கான அவசியம், ஜனநாயகத்தைப் புரிந்து கொள்வது எப்படி ,அதைப் பலப்படுத்துவது எப்படி, வழமைகளில் இருந்து விடுபடுவது எப்படி, என்பவை கூர்மையான கவனத்துக்குரியவை.

இதில் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சானின் ‘சொல்லத் தோணுது’ என்ற தொடர் (இது நூலாகவே வந்துள்ளது) எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘ஜனநாயகச் சோதனைச் சாலையில்’ என்ற தினமலர் கட்டுரைகள் (இதுவும் புத்தகமாக வெளியிடப்படுகிறது) வாஸந்தி, அ.ராமசாமி, சமஸ், ஜமாலன், பன்னீர்ச்செல்வம், ராம் எனப்பலர் எழுதிய கட்டுரைகள், பலருடைய தொலைக்காட்சி விவாதங்கள் என இது ஒரு பரந்த அளவில் நிகழ்ந்திருக்கிறது. இவற்றைக் கூர்ந்து அவதானித்திருந்தால் தமிழ்நாட்டை எதிர்பார்க்கும் நமது கற்பனையும் முடிவுக்கு வந்திருக்கும். கூடவே நமது அரசியலை வளப்படுத்துவதற்கான செழிப்பான அறிதலும் கிட்டியிருக்கும்.