அதேவேளை தமிழ் தேசியக் கூட்டம்மைப்பின் பிரதான கட்சியான இலங்கைத்தமிழரசுக் கட்சி தாங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை, தேர்தலில் அதிக உறுப்பினர்களைப் பெறுவதற்கான ஒரு உத்தியாகவே தனித்து தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று கூறியதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை தேர்தலில் எவரும் பயன்படுத்தக் கூடாது எனவும் பங்காளிக் கட்சிகள் முடிவெடுத்திருந்ததாகவும் கூறியிருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஜனநாயக தமிழ் தேசியக் கட்சித் தலைவர்களின் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான உரிமைக்கோரிக்கை தொடர்பாக எவ்வித எதிர்வினையும் தமிழரசுக் கட்சியிடமிருந்து இப்பத்தி எழுதும்வரை வெளியாகவில்லை.எப்படியிருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயர் தமிழ் மக்களிடையே பல்வேறு காரணங்களால் கௌரவத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படுவதாலும் அதுவே தமிழர்களின் தரப்பாக இதுவரை கருதப்படுவதாலும் அப்பதாகையின் கீழ் தேர்தல்களில் போட்டியிடுவது தமக்குச் சாதகமாக அமையும் என்பதால் அப்பெயரின் உரிமைக்காகப் போட்டி போடுகின்ற அரசியல் கட்சிகள்,அது உருவாக்கப்ப்ட்டதற்கான நோக்கம் பற்றியோ,அதன் மூலம் உரிமைப் போராட்டத்திற்குக் கிடைத்த சாதக விளைவுகள் பற்றியோ, அதனடிப்படையில் எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவது பற்றியோ அக்கறை கொள்வதாகத் தென்படவில்லை.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்கள் இவையெல்லாவற்றையும் கைவிட்டு தனியே தேர்தல் வெற்றிக்கான ஒரு கோசமாகவே அப்பெயரைப் பயன்படுத்தி வந்துள்ளதைக் காணமுடியும். இவ்வகையில் இனிமேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாங்கள்தான் எனக்கூறும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அப்பெயரை உரித்து ஆக்குவதற்கான வாய்ப்புகள் பற்றியும், அதன்மூலம் அக்கட்சி எதிர்பார்க்கும் வெற்றிகளின் சாத்தியத் தன்மை தொடர்பிலும் இப்பத்தி கவனஞ் செலுத்துகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தேர்தல் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல்கட்சி அல்ல.அங்கீகரிக்கப்பட்ட சில அரசியல் கட்சிகளின் தேர்தலுக்கான ஒரு கூட்டு மட்டுமே. இதுபோல தென்னிலங்கையிலும் கட்சிகளின் கூட்டணிகள் சில உள்ளன. இவ்வறான தேர்தல் கூட்டைத் தேர்தல் திணைக்களம் அங்கீகரிப்பதுடன் குறிப்பிட்ட கட்சிகளின் உடன்பாட்டின் பிரகாரம் வரையறுக்கப்பட்ட தேவைகளுக்கு அதனைக் கையாண்டும் வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற எண்ணக்கரு 2001இல் ஊடகவியலாளர் சிவராம் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாணத்தின் சில சமூகச் செயற்பாட்டாளர்களும் கொழும்பில்லுள்ள சில தொழில் அதிபர்களும் இணைந்து உருவாக்கியதாகும். இதன் உருவாக்கத்தில் விடுதலைப் புலிகள் நேரடியாக பங்கு கொள்ளாவிடினும் மறைமுகமான ஆசீர்வாதமும் ஒப்புதலும் இருந்தது. அந்நேரத்தில் இவ்வாறானதொரு கூட்டுக்கான தேவைபற்றிச் சிந்திக்கவும் அதனை ஏற்கவும் அடிப்படையாக அமைந்த பிரதான காரணி 2000ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு வீழ்ச்சி அடைந்தமையாகும்.
நிலவும் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் தமிழ்த் தரப்பு பல கட்சிகளாகப் பிரிந்து தனித்தனியாகத் தேர்தலில் போட்டியிட்டதால் கிழக்குமாகாணத்தில் பல உறுப்பினர்களை இழக்கவேண்டி ஏற்பட்டது. திருகோணமலையில் சம்பந்தன் தோல்வி அடைந்தது மட்டுமன்றி அங்கு தமிழர் பிரநிதித்துவமும் இல்லாமல் போனது. இதனால் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுபடுவதன் மூலமே பாராளுமன்றப்பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க முடியும் என்ற பட்டறிவின் விளைவாக இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணி,அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், TELO, EPRLF ஆகிய நான்கு கட்சிகள் கூட்டுச் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அறிவிக்கப் பட்டதுடன் 2001 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 15 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டது.
இதன்மூலம் பிரிந்து நிற்கும் தமிழர் தரப்பு ஒற்றுமைப் படுவதன் மூலமே சாதிக்க முடியும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்திற்கான நோக்கம் அனுபவரீதியாக உணர்த்தப்பட்டது. அதன்பின் 2004 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் வந்ததுடன் தேர்தல் வெற்றிக்கான கூட்டு என்பதற்கப்பால் தமிழ்த் தேசியத்துக்கான ஜனநாயக முகம் என்ற சிறப்பிடத்தையும் அது பெற்றுக்கொண்டது.
இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு தமிழ்த் தரப்பின் ஒற்றுமை, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கான ஜனநாயக வடிவம் என்ற இரு முக்கிய பண்புகளை உணர்த்தி நிற்கிறது.இந்த இரு விடயங்களையும் இதுவரை கூட்டமைப்பாக இருந்தவர்கள் குறிப்பாகத் தமிழரசுக்கட்சியினர் கருத்தில் எடுத்துச் செயற்பட்டார்களா? அவ்வாறு செயற்பட்டிருந்தால் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’ நிலைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று தள்ளப்பட்டிருக்காதே. சரி, இப்போது உரிமை கோருபவர்கள் அவற்றைக் கருத்திற் கொண்டார்களா? கருத்திற் கொண்டிருந்தால் பிரிந்திருக்க மாட்டார்களே.பொதுப் பிரச்சினைகளில் ஏனைய கட்சிகளுடன் ஒன்றுபட்டு கூட்டாக இயங்குவோம் எனக்கூறும் இவர்கள் பதவிகளுக்காகவே பிரிந்து நிற்கிறோம் என்பதை மறைமுகமாக ஏற்றுக் கொள்கிறார்கள் எனக் கொள்வது தவறாகாது.
அரசியல் கட்சி ஒன்றில் பிளவுகள் ஏற்படுமிடத்து சட்டரீதியாக கட்சியின் பெயர், சின்னம் என்பவற்றை யார் உரிமை கோரத் தகுதி உடையவர் என்பதைப் பல காரணிகள் தீர்மானிக்கும் எனினும் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவும் அதன்மூலம் முக்கிய பதவிகளைத் தக்கவைக்கும் தரப்புக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்படியான ஒன்றன்று. அதற்கெனத் தனியான யாப்பு,நிர்வாகம், பதிவு எதனையும் கொண்டிராத அருவப் பொருள் அது.
அதற்கு மேலாக அதன் தற்போதைய சின்னமாகக் கருதப்படும் வீடு தமிழரசுக் கட்சியினுடையது. இதனால் சட்டரீதியாக அதனை எவரும் உரிமை கோரும் தகுதி அதற்கில்லை. ஆனால் இவ்வாறான கூட்டு ஒன்றில் இருந்த கட்சிகளில் பெரும்பான்மைக் கடசிகள் ஒன்றாக தொடர்ந்தும் இயங்குமாயின் அப்பெயரை உரிமை கோரும் தார்மீகத் தகுதியை அவை பெறும் என்பதையும் நாம் மறுக்க முடியாது. இவ்வடிப்படையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி என்ற கட்சியில் இணைந்துள்ளவர்கள் அவர்கள் கூறுவது போல தம்மைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனக் குறிப்பிடுவதற்கான ஏதுநிலைகள் உள்ளனவா?
ஏலவே சுட்டியது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடக்கப் பங்காளிகள் தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், TELO, EPRLF ஆகிய நான்கு கட்சிகளாகும். தொடங்கும்போது இணையாத PLOTE 2013 ஆண்டிலேயே இணைத்துக் கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் ஆனந்தசங்கரிக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணி 2004 இல் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது. ஆயினும் அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் ஆனந்தசங்கரியுடன் சேர்ந்து வெளியேறாது வீட்டுச் சின்னத்துடன் தமிழரசுக் கட்சியாக கூட்டமைப்பில் தங்கிவிட்டனர்.
பின்னர் 2010இல் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. 2015 ஆம்ஆண்டுக்குப் பின் EPRLF உம் அக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது. தர்க்க ரீதியாக நோக்கினால் EPRLF கட்சியின் வெளியேற்றத்துடன் தொடக்கக் கட்சிகள் நான்கில் மூன்று வெளியேறி விட்டதால் தார்மீக ரீதியாக கூட்டமைப்பு என்பது வலுவிழந்து விட்டது. இப்போது மீண்டும் தொடக்கக்கட்சிகளில் TELO, EPRLF கட்சிகளுடன் இடையில் இணைந்து கொண்ட PLOTE உம் ஒரே அணியில் இருப்பதால் தாங்கள்தான் கூட்டமைப்பு என வெளிப்படுத்துவது நியாயமானது எனக் கருதுகின்றன.
அதேவேளை EPRLF என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியும் அதன் சின்னமான பூவும் இப்போது இல்லை.பதிலாகத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற கட்சியும் அதன் மான் சின்னமுமே இப்போது உள்ளது. மேலும் அக்கடசி அக்கூட்டணியிலிருந்து விலகியதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வந்ததாகத் தெரியவில்லை என்பதுடன் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணிக்கு மான் சின்னத்தை வழங்கவும் அக்கட்சி உடன்படவில்லை.
அத்துடன் தேர்தல் திணைக்களத்தில் அக்கட்சி ஒரு தேர்தல் கூட்டணியாகவும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் அதை கூட்டமைப்பின் தொடக்கக் கட்சியாகக் கருதுவது எவ்வளவு தூரம் பொருத்தமானது என்ற ஐயமும் எழுவது தவிர்க்க முடியாது. இவ்வாறு மூன்று கட்சிகள் இணைந்திருந்தாலும் இக்கூட்டணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மக்கள் ஏற்றுக் கொண்டார்களா?இல்லையா? என்பதை எதிர்காலத் தேர்தல்கள் தான் தீர்மானிக்கும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பதாகையின் கீழ் தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலம் ஜனநாயகதமிழ் தேசிய கூட்டணிக் கட்சிகளுக்கும் அப்பதாகையின்றி தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தமிழரசுக் கட்சிக்கும் வரும் தேர்தல்களில் அவற்றின் வாக்கு வங்கிகளில் கணிசமான மாற்றங்கள் ஏற்படும் சாத்தியங்கள் தற்போதைய களநிலைமைகளில் காணப்படுவதாகத் தெரியவில்லை. முன்னரைப் போன்று தனியே கட்சிப் பெயர், சின்னம் என்பவற்றை கருத்திற் கொண்டு மக்கள் வாக்களிக்கும் நிலை இப்போது அருகிவிட்டது.
அரசியல் கட்சிகளின் அணுகுமுறை, தேர்தல் உத்திகள், நிதி போன்ற பல்வேறு காரணிகளுடன் ஊடகங்களின் அபரிதமான பயன்பாடும் இன்று தேர்தல் வெற்றியில் அதிகம் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. இதனால் புதிய கட்சியில், புதிய சின்னத்தில் வெற்றி பெறுவது கடினமான விடயமில்லை என்பதற்கு ராஜபக்ஷக்களின் பொதுஜன பெரமுன கட்சி பெற்ற வெற்றி சிறந்த எடுத்துக்காட்டு. எனவே தமிழ்த் தேசியக் கூட்மைப்பு என்ற பெயர் மட்டும் வெற்றியையோ அல்லது தோல்வியையோ தீர்மானித்து விடப் போவதில்லை.
அத்துடன் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் அரசியல் மற்றும் தனிப்பட்ட செயற்பாடுகள் கூட்டமைப்பின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை அதிகளவில் பாதிப்புறச் செய்துள்ளன. அதன் தாக்கத்தை 2020 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன. மேலும் போராளிக் கட்சித் தலைவர்களின் மீதான தமிழ் மக்களின் எதிர்மறை எண்ணங்கள் இன்றும் கணிசமாக உள்ளன. அவர்களின் கடந்த காலச் செயற்பாடுகள் பல இன்றும் விமர்சிக்கப்படுவதுடன் தேர்தல் வரும்போது அவை எதிர்க்கட்சிகளால் ஊதிப் பெருப்பிக்கப்படும்.
சுரேஸ் பிரேமச்சந்திரன், ஶ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் போன்ற தலைவர்கள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து கூட்டமைப்பாகத் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அளவுக்கும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியபின் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அளவுக்கும் இடையில் அதிகளவு வீழ்ச்சி உள்ளது. EPRLF கட்சிக்கான வாக்கு வங்கி வடக்கு கிழக்கில் பரவலாக இருந்தாலும் அதன் செறிவு மிகக் குறைவானது. TELO கட்சிக்கான வாக்கு வங்கி யாழ் தேர்தல் மாவட்டத்தில் குறைவாக இருந்தாலும் வன்னி மாவட்டத்தில் கணிசமாக உள்ளது.
அந்த வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பதாகை அதற்கு அவசியமில்லை எனினும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் பெற்றளவு வாக்குகளை அதனால் தனித்து அல்லது புதிய கூட்டில் பெறமுடியாதிருக்கும். PLOTE கட்சி என்றால் அது சித்தார்த்தன் தான். அதுவும் யாழ் மாவட்டத்தில்தான் அதனது வாக்கு வங்கி உள்ளது. அந்த வாக்குகள் கூடக் கட்சிக்கானதல்ல. அது சித்தார்த்தன் என்ற தனி மனிதனுக்கானது.
அதுவும் அவரது தந்தையின் அரசியல் முதுசொத்தில் இருந்து வந்ததாகவேநோக்கப்படுகிறது.அதனால் அவரது வாக்கு வங்கி தமிரசுக் கட்சியுடன் பின்னிப் பிணைந்தது.அவருக்கு எதிராக தமிழரசு களத்தில் நிற்குமானால் அவருக்கான வாக்குகள் கணிசமாக வீழ்ச்சி காணும்.
திட்டமிட்டவாறு உள்ளூராட்சித் தேரதல் நடைபெற்றிருக்குமானால் குத்துவிளக்குச் சின்னத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி கணிசமான உறுப்பினர்களைப் பெற்றிருப்பதற்கான வாய்ப்பு இருந்தது. அது கட்சிக்கானதல்ல.
வட்டாரங்களில் செல்வாக்குப் பெற்ற நபர்களுக்கானது. இருப்பினும் அவ்வாய்ப்பு புதிய கூட்டணிக்கு உந்து சக்தியை வழங்கியிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.
மறுபுறத்தில் தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பதாகை இல்லாவிட்டாலும் அதன் சொந்த வாக்கு வங்கியில் பெரிய மாற்றம் நிகழ்ந்து விடாது. ஏனெனில் அக்கட்சி கூட்டமைப்பு என்பதிலும் பார்க்கத் தமிழரசுக் கட்சி என்பதையே முதன்மையாகப் பேணி வருகிறது தமிழரசுக்கட்சியின் இந்நிலைப்பாடே கூட்டமைப்பின் வெடிப்புக்கான பிரதான காரணம் என்பது வேறு விடயம். இன்றும் வடக்குக் கிழக்கில் பரவலான கட்சிக் கட்டமைப்பைக் கொண்ட தமிழ்க் கட்சி அது மட்டுமே.
ஆனால் அக்கட்சியும் அதன் உள்ளக முரண்பாடுகளாலும் தலைமைத்துவ வறுமையாலும் தனிநபர் போட்டிகளாலும் தனது வாக்கு வங்கியை வேகமாக இழந்து வருகிறது.எதிர்காலத் தேர்தல்களில் இதன் தாக்கம் அதிகம் உணரப்படும்.அத்துடன் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் வெளியேற்றம் வட்டு மொத்தத் தமிழர் பிரதிநிதித்தவத்தைப் பெருமளவு பாதிக்கும். இது கிழக்கு மாகாணத்தில் பெருமளவு உணரப்படும். இதுகூட்டமைப்பைத் தோற்றுவித்தபோது இருந்த நிலைமையை விட மோசமான நிலைமையே ஏற்படுத்தும்.
இன்று தமிழ்த் தேசியப் பரப்பில் அதற்கு எதிரான சக்திகளும் அரச அடிவருடிகளும் வேகமாக ஊடுருவி உறுதியான தளங்களை அமைத்துவரும் ஒரு சூழ்நிலையில் தமிழ்க் கட்சிகள் மேலும் மேலும் பிளவடைந்து செல்வது பாதகமான விளைவுகளையே எதிர்காலத்தில் தோற்றுவிக்கும். இதனால் மக்களுக்கு மட்டுமன்றி அக்கட்சிகளுக்கும் எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. இதனை உணர்ந்து செயற்படும் நிலையிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று இருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் அக்கட்சிகள் தமிழ் மக்களின நலன்களை விட வேறு விடயங்களையே முக்கியமாகப்பார்க்கின்றன.
இவ்வகையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பதாகையையும் அவை கையாளவிரும்புகின்றன. எனவே கட்சிகள் ஒன்று பட்டாலே கூட்டமைப்பு மக்களுக்கானதாகஇருக்கும்.இல்லையெனில் அது கட்சிகளுக்கானதாகவே பார்க்கப்படும்.
ஈழநாடு (25/6) ஞாயிறு