தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில், மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களுக்குத் தெளிவூட்டும் வகையிலமைந்த, விழிப்புணர்வுக் கருத்தரங்கு, களுவாஞ்சிக்குடி, கிரான் ஆகிய இடங்களில் திங்கட்கிழமை (12) நடைபெற்றிருந்தது.
இதன் முதலாவது கூட்டம், களுவாஞ்சிக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்திலேயே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினம் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புக் கிளைத் தலைவருமான பா. அரியநேத்திரன், மேற்குறிப்பிட்டவாறான கருத்தைப் பகிர்ந்திருந்தார்.
தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், அந்தக் கருத்துப் பிழையென்றால், அதன் பிரதம பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மறுதலித்திருக்க வேண்டும்.
இந்தக் கருத்தியல் முகிழ்ப்பின் அடி நாதமாக, வெளிக்கிளம்புகின்ற வினாக்கள் தொடர்பில், கருத்துச் சொல்ல வேண்டிய கடப்பாடு, தமிழரசுக் கட்சிக்கும் அது சார்ந்த அங்கத்துவக் கட்சிகளுக்கும் உண்டு.
உண்மையிலேயே, புலிகளின் காலத்தில் ஜனநாயக அரசியலை இந்தக் கட்சிகளால் மேற்கொள்ளமுடியாமல் இருந்ததா? அவ்வாறாயின், புலிகளின் கருத்தியலில் உருவான இக்கூட்டமைப்புக்குள், இவர்கள் பங்காளிகளாக வேண்டிய தேவை, ஏன் ஏற்பட்டது?
அவ்வாறான, ஒடுக்குமுறை அரசியலைப் புலிகள் மேற்கொண்டிருந்தால், இன்றும் கூட, தமிழத் தேசியம் தொடர்பாகத் தேர்தல் காலங்களிலும் ஏனைய தீர்மானங்கள் எடுக்கின்ற போதுகளிலும் இவர்கள் ஏன், புலிகளை முன்நிறுத்தி நிற்கின்றனர்; அல்லது, தொடர்ச்சியான அச்சுறுத்தலின் மத்தியிலா இவர்கள், இந்த அரசியலைக் கொண்டு நடத்துகின்றனர் என்பதைத் தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தப் பின்புலத்தில், தமிழ்த் தேசியம் பேசும் அதன் பங்காளிக் கட்சிகள், தமிழரசுக் கட்சியின் இந்த அரசியல் கருத்துக்கு, ஏன் உடன்பட்டுள்ளார்கள், உடன்பட வைக்கப்பட்டுள்ளார்களா, தங்கள் சுயநலன்களுக்காக இக் கருத்தியலோடு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிக் கட்சிகளான டெலோ, புளொட் ஆகிய கட்சிகள் உடன்பட்டு நிற்கின்றார்களா?
இந்த வினாக்கள், இன்று தமிழ்த் தேசியத்திடம் உணர்வு பூர்வமாக எழுந்து நிற்கின்றன. இந்தச் சூழ்நிலைக்கு விடையளிக்க வேண்டிய தேவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் உண்டு.
இந்த வகையில், களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பா.அரியநேத்திரன், “விடுதலைப் புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, முழுநேர அரசியலில் ஈடுபடத் தொடங்கியது. அதற்கு முன், பகுதிநேர அரசியலிலேயே ஈடுபட்டது. முழுநேர அரசியலை, அப்போது விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர்” என்று குறிப்பிட்டார்.
புலிகள் காலத்தில், இரண்டு தடவைகள் நாடாளுமன்றம் சென்ற அரியநேத்திரன் இந்தக் கருத்தைக் கூறியிருப்பது கவனத்துக்கு உரியது.
மக்களுடைய கருத்துகளை, மக்களாட்சி மன்றத்தில், ஜனநாயக ரீதியாகத் தெளிவுபடுத்த வேண்டிய தேவைக்காகவே, புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றைத் தமிழ் மக்களின் சக்தியாக ஒன்றுதிரட்டி, தேர்தலில் பங்கேற்கச் செய்து, நாடாளுமன்றம் அனுப்பிவைத்தனர்.
அதன் நோக்கம், யுத்த காலத்திலும், மக்களுக்கு ஜனநாயக ரீதியாக ஆற்ற வேண்டிய பணிகளை, தமிழ்த் தேசியத்தின் உரிமையையும் அபிலாஷைகளையும் சர்வதேசத்துக்கும் இலங்கையில் வாழுகின்ற ஏனைய அனைத்து இனமக்களுக்கும் தெளிவுபடுத்துவதாகும் .
அவ்வாறாயின், அரியநேத்திரன் இந்நோக்கத்தை மறுதலிக்கின்றாரா? காலம் காலமாகப் புலிகளின் ஆதிக்கத்தின் போது, தனது கருத்துகளைத் தமிழீழம் சார்பாக வெளியிட்டவர், தற்போது, தாம் முழுமையான அரசியலை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் வசதியையும் விடுதலைப்புலிகள் செய்யவில்லை; தமது கட்சிக்குத் தரவில்லை என மறுதலிப்பதென்பது, எந்த உலகத்தில் அல்லது, எந்த நாட்டில் வாழுகின்ற மக்களுக்குக் கதை சொல்லப்படுகின்றது என்று புரியவில்லை. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக அமைந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2001ஆம் ஆண்டில், தமிழ்த் தேசிய அரசியலை, சிக்கலில்லாமல் ஒருங்கிணைப்பதுடன், அஹிம்சை ரீதியில், மக்களுடைய போராட்ட உணர்வை, முன்னெடுக்கும் ஒரு மூலோபாயமாக முன்கொண்டு செல்வதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்றும் கூடச் சொல்லலாம்.
இவ்வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடிவம் பெற்றதையடுத்து, அதற்கான சின்னம் எது என்கிற குழப்பத்தின்போது, முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான ‘உதயசூரியன்’ பிரேரிக்கப்பட்டது. அதிலேயே, 2001 டிசெம்பர் தேர்தலில் போட்டியிட்டனர். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 15 ஆசனங்களைப் பெற்றது.
ஆயினும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தொடர்ச்சியான அதிருப்தியால், ‘உதயசூரியன்’ சின்னம் மறுக்கப்பட்டதன் காரணமாக, செயலிழந்து போயிருந்த தமிழரசுக் கட்சியின் சின்னமான ‘வீடு’ பரிந்துரைக்கப்பட்டது.
பின்னர், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகப் பதிவு செய்யப்படும் எனச் சொல்லப்பட்ட போதும், அக்கால கட்டத்தில் நிகழ்ந்த புலிகளுடனான பேச்சுவார்த்தைகள், சர்வதேசப் பேச்சுவார்த்தைகள், யுத்த நிறுத்தம் போன்ற காரணங்களால், அவை ஒருவகையில் கிடப்பில் போடப்பட்டு இருந்தன.
அன்று, புலிகளின் பலம் காரணமாக, கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள், 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டன. அதில், பலத்த வெற்றி பெற்று, 22 ஆசனங்களைப் கைப்பற்றியது என்பது, இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
2004இன் பின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளில், தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்த அங்கத்தவர்கள் சிலர், தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமான வந்ததால், அதைத் தங்களுடைய நலன்களுக்காக மீண்டும் புடம் போட்டு, அவர்கள் அக்கட்சியின் அங்கத்தவர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டனர்.
அந்த வகையில், செயலிழந்திருந்த தமிழரசுக் கட்சியின் பழைய அங்கத்தவர்களையும் இணைத்துக் கொண்டே கட்சியை ஸ்திரப்படுத்தினர். அதன்பின், 2010ஆம் ஆண்டுத் தேர்தலில், தமிழரசுக் கட்சி, தம்முடைய சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படவேண்டும் எனக் கூறி, மற்றைய கட்சிகளுடன் பேரம் பேசும் அரசியலை உருவாக்கியது. இந்த நிலைமைகள், 2010ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின், தமிழரசுக் கட்சியின் தன்னிகரில்லா மேலாதிக்கப் போக்கை, கூட்டமைப்புக்குள் வலுப்படுத்தியது.
இது, 2015ஆம் ஆண்டுத் தேர்தலில் உச்சக் கட்டத்தை அடைந்தது. இதன் காரணமாக, தமிழரசுக் கட்சியின் சர்வாதிகாரப்போக்கு மிக மேலோங்கியிருந்தது. கூட்டமைப்புக்குள் பங்காளிக்கட்சிகளுக்கு எதிரான குத்து வெட்டுகளும் துரோகிகளாகப் பிரகடனப்படுத்துகின்ற போக்கும் ஏனைய கட்சிகளுக்கெதிரான உட்பூசல்கள், உட்கட்சி முரண்பாடுகள், கழுத்தறுப்புகளும் இடம்பெற்றன.
நாடாளுமன்றம், மாகாண சபைத் தேர்தல் ஆசன ஒதுகீடுகளில் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. ஏனைய கட்சிகளுக்குச் சம வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருந்தன.
மாற்றியக்கங்களைத் துரோகிகளாகக் கருதிய புலிகளே, அவர்களுக்குப் பொது மன்னிப்புக் கொடுத்து, தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்காகக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கியபோதும், தமிழரசுக்கட்சி தான் சார்ந்த சொந்த நலன்களுக்காக, அந்த ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில், தமிழ்த் தேசியத்தின் பேரில், தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றுவதாக அமைகிறது.
மாவட்ட சபை, மாகாண சபை, தனிநாடு, சமஷ்டி என்று எல்லாத் தீர்வுகளுக்கும் காலத்துக்குக் காலம் தேர்தல் காலங்களில் பேசி, மக்களுக்குக் கருத்துச் சொல்லுகின்றவர்கள், சிங்களப் பேரினவாதத்துடன் முறையான பேரம் பேசாத, அரசியல் உபாயங்களையே கையாண்டு, பேரினவாதத்துக்குத் துணை போகின்றனர்.
இவற்றுக்கு அடிப்படைக் காரணம், தமிழரசுக் கட்சி, தாய்க் கட்சியாக இருந்து, அனைவரையும் அரவணைத்து, ஏனைய கட்சிகளுடன் ஒட்டி உறவாட வேண்டியவர்கள், வெட்டி உறவாடுவதன் மூலம், தங்களின் சுயநல அரசியலுக்காக தமிழ் மக்களையும் அவர்களது அரசியல் அபிலாஷைகளையும் குழி தோண்டிப் புதைப்பதோடல்லாமல், மக்களுக்கு சலுகைகளையோ உரிமைகளையே பெற்றுக் கொடுக்காமல், நாடாளுமன்ற சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவிப்பதை மட்டுமே கடமையாகக் கொள்கின்றனர்.
இந்த ஆட்சி அதிகார ஆசைதான், தமிழர்களை நடுத்தெருவில், யாருமற்ற அநாதைகளாக, ஏதிலிகளாக இந்த நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும் பரிதவிக்க விட்டிருக்கின்றது.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) தன்னுடைய மேலாதிக்கப் போக்கைத் தவிர்த்து உட்கட்சி ஜனநாயகத்தைப் பேணுவதன் மூலமே, தமிழ்த் தேசியத்தின் நீடித்த இலக்குகளையும் இலட்சியத்தையும் அடைய முடியும்.