வளாகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வித்தியாலங்கார மற்றும் வித்தியோதய பிரவேனாக்கள் பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்பட்டன. ஆனால், பற்றாக்குறையான பதவிகளில் சேர்க்கைக்கான போட்டி கடுமையாக இருந்தது. இந்நிலையில், 1961ஆம் ஆண்டு ஒரு தேசிய கல்வி ஆணையம், பௌத்தர்களின் அனுகூலமாகக் குறைபாடுகளை ஈடுசெய்ய, பல்கலைக்கழக அனுமதி மற்றும் பொதுச் சேவைக்கு மத ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தது.
இவ்வாறான பல நடவடிக்கைகளின் வழி, மொழிக் கொள்கை மற்றும் கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் ஆங்கிலமயமாக்கப்பட்ட, பெரும்பான்மையான கிறிஸ்தவ உயரடுக்கினரை இடமாற்றம் செய்யும் ஒரு புதிய சிங்கள உயரடுக்கை உருவாக்கும் என்று சிங்களப் படித்த பௌத்தர்கள் நம்பத் தூண்டப்பட்டனர். வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் பின்தங்கிய பொருளாதாரம் ஆகியவற்றால் ஏற்பட்ட வேலையின்மை பிரச்சினையை மொழிப் பிரச்சினை தீவிரப்படுத்தியது.
சிங்களத்திலோ அல்லது தமிழிலோ நன்றாகப் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் எதுவும் காணப்படவில்லை. இந்த விடயத்தை அரசாங்கம் கணிப்பிலெடுக்கத் தவறியது. குறிப்பாகத் தாய்மொழிக் கல்வியின் அறிமுகமும் இலவசக் கல்வியும் சேர்ந்து சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கல்விகற்ற சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை விரைவாக விரிவடையச் செய்தது. இதற்கு வாய்ப்பாகவே பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா 2,500க்கும் மேற்பட்ட தனியார் பாடசாலைகளை தேசியமயமாக்கினார்.
இந்த விடயத்தைத் தமிழரசுக் கட்சி எதிர்த்தது. ஏனெனில் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், ஏறக்குறைய அனைத்துப் பாடசாலைகளும் இந்து அல்லது கிறிஸ்தவ தனியார் நிர்வாகத்தின் கீழ் இருந்ததால், பாடசாலைகளை தேசியமயமாக்குவது யாழ்ப்பாணத்திற்குக் குறிப்பாக கடுமையான பிரச்சினையாக இருந்தது. இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், அரசாங்க உதவி பெறும் இலவசக் கல்விப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றபோது, அப்பாடசாலை நிர்வாகத்திற்கும் பாடசாலையை அரசாங்க உதவி பெறாத தனியார் பாடசாலையாக நடத்த உரிமை வழங்கப்பட்டது.
எனினும், பாடசாலையில் கல்வி பயில்வோரிடம் கட்டணம் வசூலிக்க இயலாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி, மதம் சார்பான பாடசாலைகள் விரும்பினால் தமது சமூகத்தினதும் நலன் விரும்பிகளினதும் நிதி ஆதரவுடன் பாடசாலைகளைத் தனியார் பாடசாலைகளாக நடத்தலாம். மத நிறுவனங்கள் பலவும் இதை விரும்பவில்லை.
இந்தப் பின்புலத்தில் சிங்களம் மட்டுமே சட்டத்திற்கு எதிராகத் தமிழரசுக் கட்சி போராடப் போவதாக அறிவித்த நிலையில், அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இப்பேச்சு வார்த்தைகள் தீர்வை நோக்கி நகராது இழுபட்டன. உடனடியாக ஒரு உடன்பாடு எட்டப்படும் வாய்ப்பு இல்லாத நிலையில், அரசாங்கம் சிங்களத்தை நீதிமன்ற மொழியாக அறிவித்ததையடுத்து, தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் தனது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியது.
சட்ட மறுப்புப் போராட்டம் தொடங்குவதாகவே தமிழரசுக் கட்சி முடிவெடுத்திருந்தது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் அரசாங்க நிர்வாக சேவையை இயங்கவியலாமல் செய்வதே திட்டமாக இருந்தது.
இருதரப்புக்கும் இடையில் என்ன பேசப்பட்டன. என்னென்ன விடயங்களில் உடன்பாடு எட்டப்பட்டது, எவற்றில் உடன்பாடு எட்டவில்லை போன்ற விடயங்களை இருதரப்பும் பகிரங்கப்படுத்தவில்லை. பேச்சுவார்த்தைகள் முறிந்ததாக இரு தரப்புக்களும் அறிவிக்காத நிலையில், தமிழரசுக் கட்சி 1961 பெப்ரவரியில் ஒரு போராட்டத்தைத் தொடங்கியதன் மூலம் அதனுடைய நோக்கம் உடனடியான பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் அப்பாலானது என்ற எண்ணம் தெற்கில் வலுப்பெற்றது.
இவ்விடயத்தில் தமிழரசுக் கட்சியின் அரசியல் முதிர்ச்சியின்மை, தென்பகுதியில் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தின் நியாயங்கள் குறித்த தீராத ஐயங்களுக்கு வழியமைத்தது.
தமிழரசுக் கட்சி தொடங்கிய சத்தியாகிரகப் போராட்டமானது திட்டமிடப்படாததாக இருந்தது என்பது இங்கே முக்கியமானது. யாழ்ப்பாணக் கச்சேரி வாசலில் தொடங்கிய இந்த சத்தியாகிரகப் போராட்டமானது அரச அலுவல்களை நிறுத்தும் நோக்குடையதாயிருந்தது. இப்போராட்டத்தில் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் பார்வையாளர்களாகவே நின்றிருந்தனர். குறித்த சத்தியாகிரகத்தை கலைக்கும் நோக்குடன் பொலிஸார் மேற்கொண்ட வன்முறையைப் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களும் சத்தியாகிரகத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். இது ஒரு மக்கள் போராட்டமாக விரிவடைந்தது.
முதல்நாள் நிறைவில் தமிழரசுக் கட்சி எதிர்பார்த்த மக்கள் ஆதரவு இப்போராட்டத்திற்குக் கிடைத்தது. அடுத்தடுத்த நாட்களில் பெரும்பான்மையான தமிழர் ஆதரவு இந்தப் போராட்டத்திற்குக் கிடைத்தது. இதை ஒரு மக்கள் போராட்டமாக விரிவுபடுத்தும் நோக்கமோ திட்டமிடலோ தமிழரசுக் கட்சியிடம் இருக்கவில்லை. மாறாக ஒருவித உணர்ச்சியூட்டும் அரசியலே முன்னெடுக்கப்பட்டது. வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் இப்போராட்டம் விரிந்தது.
மட்டக்களப்பில் நடைபெற்ற போராட்டங்களில் ஏராளமான முஸ்லிம்கள் பங்குபற்றினார்கள். குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் கல்முனை பிரதேசங்களில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து சத்தியாகிரக இயக்கத்தில் இணைந்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுமாறு கல்முனை பாராளுமன்ற உறுப்பினர் அஹமட் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
மட்டக்களப்பில் வசிக்கும் சிங்கள மக்கள் சத்தியாகிரகப் போராட்டங்களில் தீவிரமாக ஆர்வம் காட்டினர். ஊர்வலங்களில் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தமிழ் பேசும் சத்தியாகிரகிகளுடன் சேர்ந்து கச்சேரியின் முன் அமர்ந்தனர். சிங்கள சத்தியாகிரகிகள் ‘இருவரும் இலங்கையின் சமமான குடிமக்கள் என்பதால், தங்கள் தமிழ் சகோதரர்களை அவமதிப்பது தங்களை அவமதிப்பதாகும்’ என்று குறிப்பிட்டார்கள். பல பணக்கார சிங்கள குடிமக்கள் சத்தியாகிரகிகளுக்கு மதிய உணவு, பழங்கள் மற்றும் பானங்களுடன் பல நாட்கள் சேவை செய்தனர். இப்போராட்டத்திற்காகப் பெருமளவு நிதியும் வசூலித்திருந்தனர்.
இலங்கையின் கிழக்கில் சத்தியாகிரக போராட்டத்திற்குத் தொடர்ச்சியான ஆதரவு சிங்கள முஸ்லிம் மக்களிடமிருந்து கிடைத்தது. இது குறித்த குறிப்புகளை எஸ். பொன்னையாவால் எழுதப்பட்டு 1963ஆம் ஆண்டு வெளியான Satyagraha and The Freedom Movement of the Tamils in Ceylon என்ற நூலில் காணலாம். ஏகோபித்த மக்கள் ஆதரவு இப்போராட்டத்திற்கு இருந்தது. ஆனால், இதை எவ்வாறு முன்னகர்ததுவது என்ற திட்டம் தமிழரசுக் கட்சியிடம் இருக்கவில்லை.
காலப்போக்கில் இதற்காக மக்களின் பங்கேற்பு குறைவடையத் தொடங்கியது. ஆனால் கணிசமான அனுதாபம் இருந்தது. அதேவேளை கச்சேரிகளுக்கு வெளியே மறியல் என்பதைத் தவிர வேறு எவ்வித நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. வெகுசன ஆதரவு குறித்து அறிந்திருந்த அரசாங்கம் வன்முறையைப் பயன்படுத்துவதைத் திட்டமிட்டுத் தவிர்த்தது. போராட்டம் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை என்பதையும் அரச பணிகள் மந்தகதியிலேனும் நடப்பதையும் உறுதி செய்த அரசாங்கம் பொறுமை காத்தது.
சத்தியாகிரகப் போராட்டம் நீண்டுகொண்டிருந்தது. இலக்கேதுமற்ற நிலையில், அதன் மக்கள் தளம் குறைவடைவதும் அரசாங்கத்தின் பொறுமையும் தமிழரசுக் கட்சியின் ஒரு பிரிவினருக்குச் சினமூட்டியது. மிகப்பெரிய வெகுமக்கள் போராட்டமாகத் தோற்றம் பெற்ற இப்போராட்டம் மக்கள் பங்குபற்றலின்றி ஊசலாடியது. இந்நிலையை எவ்வாறு தவிர்ப்பது என்ற யோசித்த தமிழரசுக் கட்சியின் ஒரு பிரிவினர், தமிழரசுத் தபால் சேவையைத் தொடங்கி முத்திரைகளை வெளியிட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை மக்களை உணர்ச்சிகரமாக மீண்டும் ஒன்றிணைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெற்ற போராட்டத்திற்கான தமிழ் மக்களின் வெகுசன ஆதரவு அரசுக்கு மிகப்பெரிய தடையாக இருந்தது. போராட்டத்தை ஒடுக்கவியலாமல் போனதற்கு அதனது பரந்துபட்ட மக்கள் ஆதரவு முக்கிய காரணம். தபால்தலை வெளியீடானது அரசு எதிர்பார்த்த வாய்ப்பை வழங்கியது. தமிழரசுக் கட்சியின் நோக்கம் ‘பிரிவினையன்றி மொழியுரிமை அல்ல’ என்ற பிரச்சாரத்தை அரசாங்கம் தொடங்கியது. அவசரக்கால நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிற தலைவர்களும் உட்பட சத்தியாகிரகத்தில் பங்கு கொண்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், செல்வநாயகம் தனது வீட்டிலும் பிறர் பனாகொடையில் புதிதாகக் கட்டப்பட்ட இராணுவ முகாமிலும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். எல்லாம் முடிந்து போனது.
(Mayu) (Tamil Mirror)
12.31.2023