அண்மையில், இதைப் பற்றிய கேள்வியொன்றை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரனிடம் முன்வைத்த போது, “இந்தக் குறையொன்று, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ளது” என்பதை, அவர் நேர்மையாக ஏற்றுக்கொண்டார். ‘சப்பைக் கட்டு கட்டும்’ அரசியல்வாதிகளிடையே, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் இந்தப் பண்பு பாராட்டுக்குரியது.
இதேவேளை, வயதானவர்களின் கூடாரமாகிப்போய் உள்ள தமிழ்த் தேசிய அரசியல், பெருமளவுக்கு எந்தவித தூரநோக்கும் இல்லாமல், ‘அரைத்த மாவை அரைத்துக் கொண்டு’, வெற்று ‘விடுதலை’ பேசிக்கொண்டு, உள்ளுக்குள் ‘குழாயடிச் சண்டை’களாகவே கடந்துகொண்டிருக்கிறது.
யாராவது இதைச் சுட்டிக்காட்டினால், அவர்களுக்குத் ‘துரோகி’ப் பட்டம் கட்டிவிட்டு, மண்ணுக்குள் தலையைக் கொடுத்துவிட்டிருக்கும் தீக்கோழி போல, தமிழ்த் தேசிய அரசியல் கடந்துகொண்டிருக்கிறது.
மறைந்தவர்களுக்கான அஞ்சலி என்பது முக்கியமானதுதான். ஆனால், அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பாதியை என்றாலும், தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனைக்குக் கொடுக்க வேண்டாமா?
வெறும் உணர்ச்சிப்பிழம்பினையும் வாய்ச்சொல் பகட்டாரவாரத்தையும் வைத்துக்கொண்டு, அரசியல் நடத்துவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா என்றெல்லாம், நாம் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
இலங்கையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய கடையிரு மாகாணங்கள் கிழக்கும் வடக்கும். எந்த நிலத்தைத் தமிழர்கள் ‘தாயகம்’ என்கிறார்களோ, அந்த நிலமும் அதன் மக்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள். 30 வருட கால யுத்தத்தின் நிலை இது.
இதையேதான், அரசியல்வாதிகளும் சொல்வார்கள். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 12 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த 12 வருடத்தில், 30 வருடகால யுத்தத்தில் உழன்று கொண்டிருந்த மக்களை மீட்டெடுக்க, என்ன செய்தீர்கள் என்ற கேள்விதான் முக்கியமானது.
இந்த மக்களின் உணர்வுகளை விற்றுப்பிழைத்ததைத் தவிர, தமிழர் அரசியலும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும், தமிழ் மக்களின் வாழ்வாதாரம் தொடர்பிலும் தமிழ் மக்களின் பொருளாதாரம் தொடர்பிலும் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பிலும், அக்கறை காட்டவில்லை.
இந்த இடத்தில்தான், தமிழ் மக்களின் பொருளாதார மீட்சி பற்றிப் பேசுதல் அவசியமாகிறது. ‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ என்கிறான் வள்ளுவன்.
தமிழ் அரசியல்வாதிகள், பகட்டாரவாரப் பேச்சில் வல்லவர்கள். மற்றவர்களை எதிரிகளாகவும் துரோகிகளாகவும் முத்திரை குத்தி, வாய்ச்சொல் அரசியல் செய்வதில் சமர்த்தர்கள்.
ஆனால், அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. பொருளின் பெருமை சொல்லும் வள்ளுவன், ‘செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்’ என்கிறான். அதாவது, ஒருவன் பொருளை ஈட்டவேண்டும்; அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்கவல்ல வாள், அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை என்பதாகும்.
அதற்காக, எல்லாத் தமிழ் அரசியல்வாதிகளும் பொருளீட்டுவது பற்றிச் சிந்திப்பதில்லை என்று சொல்லிவிடவும் முடியாது. சிலர் தமக்கும் தம்மக்களுக்கும் (அதாவது, அவர்களது பிள்ளைகளுக்கு) என, நிறையவே பொருளீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனை ஏக்கர் நிலங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று, அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் நன்கறிவார்கள். ஆனால், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள்.
பொருளாதாரம் பற்றிச் சிந்திக்கவும் தம்மக்களை நேசிக்கவும், கொஞ்சம் அறிவும் நிறைய நல்லெண்ணமும் மிகுந்த தீர்க்கதரிசனமும் முழுமையான நேர்மையும், கொண்ட அரசியல்வாதிகள் தேவை. அது இன்று அரிதிலும் அரிதாகவே காணப்படுகிறது.
இங்கு அரசியலில் உள்ள பலருக்கு, அரசியலை விட்டால் வேறு வயிற்றுப்பிழைப்பு இல்லை என்ற நிலையிலேயே, தமிழர் அரசியல் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆகவேதான், தம்பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளவதற்கான அரசியலை, அவர்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இரா. சம்பந்தன், ம.ஆ. சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற ஒரு சிலரைத் தவிர்த்து, மற்றையவர்களுக்குத் தாம் என்ன பேசுகிறோம் என்று கூடத் தெரியுமா என்ற ஐயம், அவர்களது பேச்சைக் கேட்கும் போது எழுகிறது. மக்களது உணர்வுகளைத் தட்டியெழுப்ப எதையாவது பேசிவிட வேண்டியது.
தமிழ்த் தேசியத்துக்கு, இப்போது அவசர அவசியமாகியுள்ள ‘விடுதலை’ இத்தகைய கேவலமான அரசியல்வாதிகளிடம் இருந்தான விடுதலையே ஆகும். நிற்க!
பொருளாதார மீட்சிக்கான வழி என்ன? இது மிகமுக்கியமான கேள்வி ஆகும். இதற்குப் பதில் உற்பத்தி.
வடக்கு-கிழக்கின் உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். பொருட்கள், சேவைகள் என, அங்கு உற்பத்தியைப் பெருக்குவதும் வணிகத்தை மேம்படுத்துவதும் மட்டுமே, எதிர்கால வளர்ச்சிக்கான ஒரே வழியாகக் காணப்படுகின்றது.
தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களிடம் மீண்டும் மீண்டும் எடுத்துச்சொல்ல வேண்டிய கருத்து, உற்பத்தியைப் பெருக்குவதும் வணிகத்தை மேம்படுத்துவதும் ஆகவே இருக்க வேண்டும்.
மற்றவர்களின் உதவிகளிலும், கருணைப்பார்வையிலும் தங்கியிருக்கும் மக்கள் கூட்டமொன்று, அந்தத் தங்கியிருப்பிலிருந்து வௌியேவரும் வரை தப்பிப்பிழைக்கலாமேயொழிய வளர முடியாது.
‘வீழ்வது வெட்கமல்ல; வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்’. வீழ்ந்த தமிழினம், எழுச்சி காண்பதற்கான ஒரே வழி, பொருளாதார மேம்பாடு மட்டும்தான்.
அதனால்தான், ஒரு தேசத்தைக் கட்டி எழுப்புவதிலும் பொருளாதாரம் என்பது முக்கியம் பெறுகிறது. ‘பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்’ என்ற வள்ளுவன் வாக்கு ஞாபகமிருக்கட்டும்.
உற்பத்தியை எப்படிப் பெருக்குவது? குறித்த நிலப்பரப்பிலுள்ள வளங்கள் என்ன என்ற புரிதல் முதலில் ஏற்பட வேண்டும்.
வளம் என்பது, இயற்கை வளம் மட்டுமல்ல; மனித வளமும் செயற்கை வளங்களும் உள்ளடங்கும். அடுத்து, அந்த வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்தி, சந்தையில் கேள்வியுள்ள, கேள்வியை உருவாக்கக்கூடய உற்பத்தியை எப்படி மேற்கொள்வது என்று சிந்திக்க வேண்டும். மிக முக்கியமாக மூலதனத்தைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி சிந்திக்க வேண்டும்.
மூலதனத்தைக் கவர்ந்திழுக்க, முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் கவர்ந்திழுக்க வேண்டும். அதற்கு உட்கட்டமைப்பு வசதிகள், முதலீட்டு ஊக்குவிப்பு வசதி வாய்ப்புகள் எல்லாம் அவசியம்.
இந்த இடத்தில்தான், உலகெங்கும் பரவி வாழும் புலம்பெயர் தமிழ் மக்களின் உதவி, இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் அவசியமாகிறது. வடக்கு-கிழக்கில் முதலிடுவதும் அங்கு உற்பத்தியைப் பெருக்குவதும் அங்கு பொருளாதார மீட்சிக்கு உதவுவதும்தான், புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்த் தேசத்துக்குச் செய்யக் கூடிய பேருதவி.
உங்கள் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும், கடந்தகாலத்துக்கான நியாயம் தொடர்பானதே ஆகும்.
ஆனால், எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு, கடந்த காலத்துக்கான நியாயத்தைத் தேடுவது என்ன பயனைத் தந்துவிடும்?
உண்மையாகத் தன் தாயகத்தையும் தன் தேசத்தையும் நேசிப்பவன், அதன் எதிர்காலத்தையும் நிரந்தர இருப்பையும் நீண்ட நிலைப்பையும் பற்றியே அதிகம் அக்கறை கொள்வான்.
உற்பத்தியைப் பெருக்குவதில், முதலீட்டைப் போலவே உழைப்பின் பங்கும் முக்கியமானது. வௌிநாடு போய், அங்கேயே குடியேறிவிட வேண்டும் என்பதையே, வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டுள்ள இளையோர் கூட்டம் உள்ள நாடும் தேசமும் ஒரு போதும் முன்னேறப்போவதில்லை.
தமிழ்த் தேசத்தின் பெரும் பின்னடைவுக்கு முக்கிய காரணம், உழைக்கும் படையின் வெளியேற்றம் ஆகும். எவ்வளவு அரிய மூளைவளம், இங்கிருந்து வௌியேறிவிட்டது; வௌியேறிக்கொண்டிருக்கிறது.
உடலிலிருந்து புது இரத்தம் வௌியேறுவதைப் போன்ற நிலை இது. நோய்கள் பீடித்த உடலாகத்தான் அந்த உடல் காணப்படும். அந்த உடல் எப்படி வாழும்?
ஆனால், நாட்டிலிருந்து வௌியேற விரும்பும் இளைஞர்களை மட்டும் பிழை சொல்லிவிட முடியுமா? அவர்களது எதிர்காலம் பற்றி, எந்த நம்பிக்கையும் கொடுக்க முடியாத அரசியல்வாதிகள் நிறைந்த இடத்தில், எந்த நம்பிக்கையில் அவர்கள் இங்கே வாழ்வது?
ஆகவேதான், இங்குள்ள உழைக்கும் படையை, மூளைவளத்தைத் தக்கவைப்பதற்கு மட்டுமல்லாது, மூலதனத்தை ஈர்த்தெடுக்கவும் வடக்கு-கிழக்கை பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீட்கவும், தீர்க்கதரிசனம் மிக்க புதிய அரசியல்பாதை, தமிழ்த் தேசிய அரசியலில் வகுக்கப்படவேண்டும்.
அதுவே, தமிழ் மக்களின் பொருளாதார மீட்சிக்கான பிள்ளையார் சுழியாக அமையும்.