தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி
294, கண்டி வீதி, யாழ்ப்பாணம்
அ. வரதராஜா பெருமாள்
கட்சி அமைப்புச்செயலாளர்.
———————————————————-
பத்திரிகைகளுக்கான
அறிக்கை 15-10-2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாம் வாக்குறுதி அளித்து பொறுப்பேற்றுள்ளபடி அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.இலங்கையின் பல்வேறு சிறைகளில் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மனிதாபிமானமற்ற ரீதியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் தமக்கான நீதியையும் நியாயமான சட்டத்தின் ஆட்சியையும் கோரி நடத்தி வந்த காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தும்படியும், விரைவில்; அவர்களது விடுதலையை நிச்சயமாக்குவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கதே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் இவ்வாறுதான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் அரசியற் கைதிகள் விவகாரத்தில் வாக்குறுதி அளிப்பதுவும் பின்னர் அவற்றை காற்றிலே பறக்க விடுவதுமான நடைமுறையைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். அவ்வாறு இந்தத் தடவை நடந்து கொள்ளக் கூடாது என எதிர்பார்க்கிறோம். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழுள்ள அரசியற் கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுதலை செய்யப்படும் வகையாக தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் அதிகாரக்; கதிரைகளைக் காப்பாற்றுவதிலும், சர்வதேச மட்டத்தில் அதன் கௌரவத்தைப் பேணுவதிலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே உறுதுணையாக செயற்பட்டு வந்துள்ளனர். அதற்காக அவர்கள் தமது அரசியல் முகமூடிகளையெல்லாம் மாற்றிக் கொண்டுள்ளதுடன் எத்தனையோ அடிப்படையான விடயங்களில் தமிழ் மக்களுக்கு தேர்தற் காலங்களில் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் பின்னர் அவர்கள் எந்த அரங்கத்திலும் முன்னெடுக்காமற் போனவை அனைவரும் அறிந்ததே.
தமிழ் அரசியற் கைதிகளின் விடயம் இப்போது தமிழர்கள் அனைவரினதும் கரிசனைக்குரிய முதன்மையான விடயமாகியுள்ளது. தமிழ் மக்களின் வாக்குகளை அமோகமாகப் பெற்று பாராளுமன்றத்தில் இப்போதும் பலமான ஒரு நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளனர். தமிழ் அரசியற் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக தாம் எதிர்நோக்கிய அரசியல் நெருக்கடியை கெட்டித்தனமாக வாக்குறுதிகள் மூலம் சமாளித்து விட்டதாகக் கருதாமல் தமது சாணக்கியங்களை அரசை நோக்கிப் பிரயோகித்து மிக விரைவில் அரசியற் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள கடமையாகும்.
அடுத்த மாதம் அரசாங்கம் சமர்ப்பிக்கப் போகும் வரவு செலவுத் திட்டமானது 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு உரிய வகையில் தமது வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அவற்றை விரிவுபடுத்துவதற்குமான தந்திரங்களைக் கொண்ட ஒன்றாகவே அமையப் போகின்றது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளபாதார நெருக்கடிகளை மேலும் மோசமானதாகவே ஆக்கும். அத்துடன் பொருளாதார நிலையில் கீழ்மட்டத்திலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்;தை மேலும் கீழேயே தள்ளும். ஆந்த வகையில் தமிழ் மக்களும் பாதிக்கப்படப் போகின்றார்கள். அவ்வாறான ஒரு வரவு செலவுத் திட்டத்தை ஒரு பொறுப்பான எதிர்க் கட்சியாகச் செயற்பட்டு விமர்சித்து, எதிர்த்து வாக்களிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையாகும்.
தமிழ் அரசியற் கைதிகள் விடயத்தில் வரவு செலவுத் திட்டத்தை அரசுடன் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்பாக பேரம் பேசுவதற்கான ஒரு கருவியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் பயன்படுத்த முடியாது. மாறாக கடந்த காலங்களைப் போல அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு மட்டுமே பயன்படலாம்;. வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையினால் அரசாங்கத்தினால் நிறைவேற்றிட முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமலேயே அரசாங்கத்தினால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எனவே அது தமிழ் அரசியற் கைதிகள் விடயத்தில் ஒரு காத்திரமான கருவியாக அமையமாட்டாது. அவ்வாறான அணுகுமுறை தமிழர் தரப்புக்குத் தோல்வியாகவே முடியும்.
ஆனால், வேறு பல பிரதானமான விடயங்களில் இன்றைய அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணை மிகவும் தேவையானதொன்றாக உள்ளது. அவற்றின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உரிய முறைகளில் நேர்மையாகவும், உண்மையான தியாக சிந்தனையுடனும் செயற்பட வேண்டும். மேலும் அவர்களே காந்தீய வழியில் நேரடியாக போராட்டங்களை முன்னெடுத்து அரசை இணங்கும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வினைத்திறனுடன் செயற்பட்டு அரசியற் கைதிகள் அனைவரினதும் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வறிக்கையை வெளியிடுபவர்
அ. வரதராஜா பெருமாள்,
கட்சி அமைப்புச் செயலாளர், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி.
முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர்.