கஜேந்திரகுமார், முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்கள் தொடர்பில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து, தீர்க்கமான உரையொன்றை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறுக்கீடுகளுக்கு மத்தியில் உரையாற்றி இருந்தார்.
சாணக்கியன், முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க உரிமையை, கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் விதிமுறைகளைப் பயன்படுத்தி, அரசாங்கம் தடுத்துள்ள நடவடிக்கை தொடங்கி, தற்போது கவனம் பெற்றிருக்கின்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தார். அப்போதும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டார்கள். ஆனால், அவர்களை, அவர்களது மொழியிலேயே அடக்கும் அளவுக்கான தோரணையோடு சாணக்கியன் பேசினார்.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில், கனதியான உரைகள் பல, தமிழ்த் தலைவர்களால் ஆற்றப்பட்டு இருக்கின்றன. ஜீ.ஜீ.பொன்னம்பலம், தந்தை செல்வா, அ. அமிர்தலிங்கம் தொடங்கி தற்போதுள்ள இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் ஈறாகப் பலரும், அந்தந்தத் தருணங்களில் முக்கியமான உரைகளை ஆற்றியிருக்கிறார்கள். அவை, பாராட்டப்பட்டும் வந்திருக்கின்றன.
ஆனால், அவை எல்லாமும் நாடாளுமன்றப் பதிவேட்டில் (ஹன்சாட்டில்) பதிவாகி இருக்கின்றன என்கிற அளவைத் தாண்டி, அரசியல் ரீதியான மாற்றங்களைத் தமிழருக்கான அரசியலில் பெரியளவில் ஏற்படுத்திவிடவில்லை என்பதுதான் சோகம். அதற்கு, அந்த உரைகளை ஆற்றிய தலைவர்களையோ, நாடாளுமன்ற உறுப்பினர்களையோ முழுமையான பொறுப்பாளிகளாக ஆக்கிவிட முடியாது.
ஏனெனில், ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்கான முக்கியமான வழியாக, இனவாதத்தையும் மதவாதத்தையும் தென் இலங்கை கையாண்டு வருகின்றது. 72 சதவீதத்துக்கும் அதிகமாக சிங்கள மக்கள் இருக்கின்ற நாட்டில், இனவாத அடிப்படைகளை முன்னிறுத்தி, பல தடவைகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கங்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன.
அப்படியான சிக்கலுள்ள அரசியல் பரப்பில், நாடாளுமன்ற உரைகள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று தமிழ், முஸ்லிம் மக்கள் நம்பிவிட முடியாது; அதற்கான சாட்சிகளும் இல்லை.
முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகளில் இம்முறைதான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தாண்டியும் இன்னும் இரண்டு தமிழ்த் தேசிய கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்றிருக்கிறார்கள்.
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், ‘தியாகி’, ‘துரோகி’அடையாள அரசியலை மேடைகள் தோறும் முழங்கி, வாக்கு அரசியல் செய்து வந்தாலும், நாடாளுமன்றத்துக்குள் குறிப்பிட்டளவான இணக்கத்தோடு அவர்கள் செயற்படுவதைக் காண முடிகிறது. கஜேந்திரகுமாரின் உரையை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குறிக்கீடு செய்யும் போது, அவருக்காக சுமந்திரன் வாதாட வருவதும், கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தும் போது, அதற்கு எதிராக கஜேந்திரகுமார் உரையாற்றுவதும் நாடாளுமன்றத்துக்குள் நிகழ்கின்றது. இவை, தமிழ்த் தேசிய அரசியலில் வரவேற்கக் கூடியவை.
ஆனால், இந்த நிலை என்பது, நாடாளுமன்றத்தோடு சுருங்கிவிடக் கூடாது என்பதுதான் முக்கியமான விடயம். ஏனெனில், கனதியான நாடாளுமன்ற உரைகளும் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான குறிப்பிட்டளவான இணக்கமும், நாடாளுமன்றத்தைத் தாண்டி அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். அதுதான், தென் இலங்கைக்கு எதிரான அழுத்தத்தை உருவாக்கும். அதன்மூலமே, சிறியதாகவேனும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
ராஜபக்ஷர்களின் அரசாங்கம் என்பது, ராஜபக்ஷர்களின் ஒற்றை எண்ணத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படுவது. அங்கு அமைச்சர்களாக, ஆளுங்கட்சி உறுப்பினர்களாக, கூட்டணிக் கட்சிகளாக இருப்பதால் எல்லாம், மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது. ராஜபக்ஷர்கள் நினைப்பதுதான் அங்கு நடக்கும். ஆளுங்கட்சிக்கு உள்ளேயே நிலைமை அப்படியென்றால், நாடாளுமன்றத்துக்குள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் போது, ராஜபக்ஷர்களுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் என்ன செய்துவிட முடியும்?
நாடாளுமன்ற அமர்வுகளைத் தங்களுக்கு தேவையான சட்டங்களை இயற்றுவதற்காக மாத்திரமே, ராஜபக்ஷர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏனைய தருணங்கள் பூராவும், நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து, அவர்கள் அக்கறை கொள்வதே இல்லை.
ஆளுங்கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்கள், ராஜபக்ஷர்களுக்கான விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் அவர்களைக் குளிர்விப்பதற்காகவும் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துகிறார்கள்; அவ்வளவுதான். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக அண்மையில் பதவியேற்ற சரத் வீரசேகர தொடங்கி, பலரும் அதற்கான உதாரணங்களாகக் கொள்ளக் கூடியவர்கள்.
அப்படியான நிலையில், நாடாளுமன்றத்தைத் தாண்டிய அரசியல் பரப்பை நோக்கியும் தமிழ்த் தேசிய பரப்பு, தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும். அது, தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாலான அடிப்படைகளோடு உருவாக வேண்டும். அதற்கு, இந்தக் கட்சிகளும் தலைவர்களும் திறந்த மனதோடு இயங்கத் தயாராக வேண்டும்.
பொது எதிரியின் சதித் திட்டங்களை, தனித் தனியே எதிர்கொள்வதைக் காட்டிலும், ஒன்றிணைந்து எதிர்கொள்வது என்பது, பலத்தை அதிகரிக்கும். அது அசுர பலமுள்ள அரசாங்கத்துக்கு எதிராகத் தவிர்க்க முடியாதது.
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், இன்னொரு கட்சிக்காரரை எதிரியாகவே முன்னிறுத்தும் பழக்கமொன்று இருந்து வருகின்றது. அது தேர்தல் அரசியலுக்கு வேண்டுமானால் பலனளிக்கலாம். ஆனால், அதனால் ஒட்டுமொத்தத் தமிழர் அரசியலுக்கும் பலனில்லை. அதன்போக்கில்தான், பொது நிலைப்பாடுகளுக்கான ஒருங்கிணைவும் செயற்பாடும் தவிர்க்க முடியாததாகின்றது.
ஒவ்வொரு கட்சியும் தமக்கான தனித்த கொள்கைகள், அதன் தூய்மைத்தன்மை தொடர்பில் பேசி வருகின்றன. ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் சார்பில் இந்தக் கட்சிகள் எல்லாமும் ஒருங்கிணைவதற்கு 80 சதவீதத்துக்கும் அதிகமான காரணங்கள் இருக்கின்றன.
தேர்தல் நேரத்தில் மீதியுள்ள 20 சதவீதமான முரண்படும் காரணங்களைச் சொல்லிக் கொண்டு மக்களிடம் செல்லலாம். ஏனைய நேரங்களில், 80 சதவீதமான ஒத்த காரணங்களுக்காக இணங்கி இயங்க வேண்டும். அதுதான் கடந்த தேர்தல் முடிவுகளின் மூலம் தமிழ் மக்கள் வழங்கி இருக்கின்ற செய்தியாகவும் இருக்கின்றது.
கடந்த காலத்தில், ஏக நிலை அங்கிகாரத்தை மக்கள் தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்கிற இறுமாப்போடு, கூட்டமைப்பினர் நடந்திருக்கிறார்கள். இந்த நிலை எப்படி மோசமானதோ அதேமாதிரி, ‘கூட்டமைப்புக்கு மாற்றாக, எங்களை முன்னிறுத்தி இருக்கிறார்கள். ஆகவே, நாங்களே தூய்மையானவர்கள்’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியோ கருதி தனித்திருந்துவிடக் கூடாது.
ஏனெனில், வடக்கு – கிழக்கு பூராவும் இன்னமும் அங்கிகாரம் பெற்ற ஒரே தமிழ்த் தேசிய கட்சியாகக் கூட்டமைப்பே இருக்கின்றது. அப்படியான நிலையில், மூன்று கட்சிகளும் மக்களின் செய்திகளை முழுமையாக உள்வாங்கி, பிரதிபலித்தாக வேண்டும். அது, எதை நோக்கியது என்பதை, தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று சிந்தித்தாக வேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியலுக்கு, தேர்தல் அரசியலே பெரும் சாபக்கேடு என்கிற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. அந்தக் குற்றச்சாட்டோடு இந்தப் பத்தியாளர் உடன்படவில்லை.
ஆனால், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் குறிப்பாக, பொதுவான விடயங்களில் தேர்தல் அரசியலுக்கு அப்பாலான இயங்கு நிலையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அது, அரசியல் கட்சிகளைத் தவிர்த்துக் கொண்டு உருவாக வேண்டியதில்லை. மாறாக, அரசியல் கட்சிகள் பிரதான பங்கேற்பாளர்களாக இருக்கும் நிலையில், உருவாக்கப்பட வேண்டும். அதுதான், சோர்ந்து போயிருக்கின்ற மக்களை, உற்சாகப்படுத்த உதவும். அதுவே தற்போதுள்ள நிலையில், தோல்விகளைக் கடப்பதற்கான முதல் வழி.