இதற்குப் பலரும் சம்மந்தன், சுமந்திரன், சேனாதிராஜா, சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரைத் தாக்கிப் பேசுகின்றனர்.
இவர்களைப் பேசுவதால் எந்தப் பயனுமில்லை.
அவர்கள் ஒன்றும் முன்னர் சிறந்த அரசியல்சாதனையாளர்களாவும் வல்லவர்களாகவும் இருந்து இப்பொழுதுதான் பிழையானவர்களாக மாறியிருக்கிறார்கள் என்றில்லை.
ஒரு போதுமே அரசியல் பெறுமானங்களை உருவாக்காத, மக்களுக்கு பெரும் நன்மைகளைச் செய்யாத, பெருந்திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தாத, பெரும் போராட்டங்கள் எதையும் நடத்தாதவர்களே.
மக்கள் செய்த தியாகங்களில் ஒரு சிறிய அளவிலான தியாயங்களையும் செய்யாதவர்கள்.
மக்கள் சந்தித்த இழப்புகளில் சிறிய அளவிலான இழப்பைக் கூடச் சந்திக்காதவர்கள்.
சேனாதிராஜா மட்டும் இளமைக்காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு அரசியல் செயற்பாடுகளின் நிமித்தமாகச் சிறைக்குச் சென்றவர்.
செல்வம் அடைக்கலநாதன் ஒரு காலம் போராளியாக இருந்தாலும் பின்னர் அப்படியான அனுபவத்தையும் உணர்வையும் கொண்டதாக அவர் ஒரு போதுமே நடந்ததில்லை.
மற்றவர்களுக்கு எந்த வகையான சிறப்பு அரசியல் அடையாளங்களுமில்லை.
ஒரு சாதாரண போராளி செய்த அளவுக்கு அரசியல் பெறுமானமுடைய பங்களிப்பில்லாதவர்கள்.
இப்படியானவர்களைத் தொடர்ந்து தங்கள் அரசியல் தலைவர்களாகவும் பிரதிநிதிகளாகவும் தெரிவு செய்த மக்களையும் மாற்று அரசியலை மக்கள் மயப்படுத்தாதவர்களையுமே நாம் பழிக்க வேண்டும்.
அவர்களின் பலவீனத்தையே கூட்டமைப்பினர் வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார்கள்.
சம்மந்தன், மாவை இருவரும் 50 ஆண்டுக்கும் அதிகமான அரசியல் வாழ்வைக் கொண்டவர்கள். ஆனால் இதுவரையில் இவர்கள் செய்த ஒரு சிறிய அரசியல் சாதனை என்ன? என்று யாராவது சொல்ல முடியுமா?
குறைந்தது இந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் இவர்களில் ஒருவர் நட்ட மரம் இது என்று சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு மரத்தையாவது யாரும் காட்ட முடியுமா?
தலைவர்களிடத்திலேயே நற்சாதனைகள் இல்லை என்றால் தொண்டரடிப்பொடிகளான மற்றவர்களிடம் எதைக்காண முடியும்?
அதனால்தான் இவர்கள் 50 ஆண்டுகால அரசியல் வாழ்வைக் கொண்டவர்களே தவிர, அரசியல் வரலாற்றைக் கொண்டவர்களில்லை என்கிறோம்.