ஜனாதிபதி மைத்திரிபாலவின் சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்து, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் இராஜவரோதயம் சம்பந்தன் ஆற்றிய பொறுப்பான பணி, பலராலும் வியந்து பாராட்டப்பட்ட ஒன்று. அவர், தன்னை ஒரு தமிழ் அரசியல்வாதி என்ற வட்டத்தைத்தாண்டி, ஒரு கண்ணியம்மிக்க statesmanஆக நிலைநிறுத்திக் கொண்டார்.
சில அரசியல் விமர்சகர்கள், அவரை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உதாரணமிகு புருசராக விளிக்கத் தொடங்கியிருந்தார்கள். நாடாளுமன்றத்தில் இராஜவரோதயம் சம்பந்தன் ஆற்றிய உரைகள், சில பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது. இலங்கை நாடாளுமன்றத்தில், அத்தனை செழுமையுடன் உரையாற்றும் ஆற்றல் மிகச் சிலருக்கே வாய்த்ததொரு திறன் சமகாலத்தில், அதில் தலைசிறந்தவராக இராஜவரோதயம் சம்பந்தன் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.
மறுபுறத்தில், நாடாளுமன்ற ஜனநாயகத்தினதும் இலங்கையின் அரசமைப்பினதும் சட்டவாட்சியினதும் காவலர்களாகத் தமிழரசுக் கட்சியை முன்னிறுத்த, தமிழரசுக் கட்சி கடும்பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில், இது ஒரு புதுயுகம் என்றே கருதப்பட வேண்டும். தமிழ்த் தேசிய அரசியலில், செல்வா காலம், அமிர் காலம், விடுதலைப் புலிகள் காலம் என்பவற்றைத் தொடர்ந்து, இது சம்பந்தன் காலம் என்று குறிப்பிடப்பட முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும், “தமிழ்த் தேசியம்” பற்றிய பிரக்ஞையும் அதன் இலக்குகளும் அந்த இலக்குகளை அடைவதற்கான அணுகுமுறையும் வேறுபட்டிருப்பதை நாம், அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இதில், சம்பந்தன் காலம் மிகுந்த சவாலானது. மூன்று தசாப்தகால யுத்தம், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், தமிழ்த் தேசிய அரசியலின் பெரும் பேரம் பேசும் சக்திகள் இல்லாத நிலையில், தமிழ்த் தேசிய அரசியலைத் தக்கவைக்கவும் மீண்டும் கட்டியெழுப்பவும் வேண்டிய சவாலான சூழலைத் தமிழ்த் தலைமைகள் எதிர்கொண்ட காலம். இலங்கை அரசாங்கம், சிங்கள-பௌத்த தேசியவாதம், சர்வதேச சக்திகள், பூகோள அரசியல், புலம்பெயர் தமிழர்கள் எனப் பல்வேறு தரப்புகளின் வேறுவேறான முன்னுரிமைகளுடன் ஊடாட வேண்டிய பொறுப்பும் அதேவேளை, உள்ளார்ந்த முரண்பாடுகளையும் தேர்தல் அரசியலையும் சந்திக்க வேண்டிய சிக்கல் நிலையும் மிகுந்த காலமாக இது இருந்தது; இன்னும் இருக்கிறது.
இந்தச் சிக்கல்களிலிருந்தும் சாம்பலாகிப்போன ஆயுதப் போராட்டத்திலிருந்தும் தமிழ்த் தேசிய அரசியலை எவ்வாறு மீட்பது என்பதற்கு, சர்வநிச்சயமாக நிறுவப்பட்ட சூத்திரங்கள் எதுவுமில்லை. ஆகவே, அரசியலையும் வரலாற்றையும் பொறுத்தவரையில், இது தமிழ்த் தேசத்துக்குப் புத்தாக்கம் செய்வதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதப்படக்கூடிய காலம்தான். தமிழ்த் தேசியத்தையும் அதன் அடிப்படை நோக்கங்களையும் அடைந்துகொள்வதற்கான அணுகுமுறையையும் சித்தாந்தத்தையும் மீள்வடிவமைப்புச் செய்வதற்காகக் காலம் தந்த ஓர் அரிய வாய்ப்பு இது.
தமிழ்த் தேசிய அரசியலில், இத்தகைய வாய்ப்புகள் புதியதொன்றல்ல. சுதந்திர இலங்கையில் ஜீ.ஜீ முதல் செல்வா, அமிர் எனப் பலமுறை இந்த வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அதுபோலவே, 2009க்குப் பின்னர், சம்பந்தனுக்குக் கிடைத்த வாய்ப்பானது, தமிழ்த் தேசிய அரசியல், அதன் அபிலாசைகளையும் இலட்சியங்களையும் அடைந்துகொள்வதற்கான புதிய மார்க்கத்தை, புதிய அணுகுமுறையை ஏற்படுத்திக்கொள்வதற்கும், சித்தாந்த ரீதியாகத் தன்னைத்தானே புதிப்பித்துக் கொள்வதற்குமான வாய்ப்பாக அமைந்தது. அதுவும் ஆயுத வழியைத் தாண்டி, தமிழ்த் தேசியம் பற்றிச் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் மிகுந்த காலம்.
தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில், கடந்த ஒரு தசாப்தம் சிறப்பானதொன்று என்று சொல்லிவிட முடியாது. “தேசியம்” என்ற கருத்தியலை, அதன் உயிரோட்டமான மக்களிலிருந்து பிரித்துத் தனியே ஆராய்ந்துவிட முடியாது. மக்கள் தான், ஒரு தேசத்தின் அடிப்படை. நாம், ஒரு தேசம் என்ற சிந்தனை, ஒரு மக்கள் கூட்டத்திலிருந்து விடுபடும் போது, தேசியத்தின் மரணம் அங்கேயே தொடங்கிவிடுகிறது.
தமிழ்த் தேசியம் பற்றிய பிரக்ஞையும் தாம், தமிழ்த் தேசம் என்ற உணர்வும் தமிழ் மக்களிடம் இருந்து விலகும்போது, தமிழ்த் தேசியமும் மறைந்து போகத் தொடங்கிவிடும். மறுபுறத்தில், ஒரு தேசத்தின் வளர்ச்சியும் வளமையும் மேன்மையும் அதன் மக்களின் வளர்ச்சியிலும் வளமையிலும் மேன்மையிலுமே தங்கியிருக்கிறது.
கல்வி, பொருளாதாரம், சுகாரதாரம், உட்கட்டுமானம் போன்ற அடிப்படைகளில் பின்தங்கியுள்ள மக்களால், கட்டமைந்த தேசமும் பின்தங்கியதாகவே இருக்கும். அத்துடன், அது தகர்க்கப்படக்கூடிய நிலையில்தான் காணப்படும். ஒரு தேசமானது கல்வி, பொருளாதாரம், சுகாரதாரம், உட்கட்டுமானம் போன்ற அடிப்படைகளில் உயர்வடையும்போதுதான், அந்தத் தேசம் வலிமைபெறுகிறது; “தேசியம்” பற்றிய பிரக்ஞையும் உறுதியடைகிறது.
கடந்த ஒரு தசாப்தகாலமாக, “தமிழ்த் தேசியம்” இரண்டு விதமான சவால்களை எதிர்கொள்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
முதலாவது, தமிழ்த் தேசியத்தின் அடையாள நீக்கம்; அல்லது, நீர்த்துப்போதல். ஒரு மக்கள் கூட்டம், தம்மை ஒரு தேசமாக உணராது போகப் போக, அந்தத் தேசிய அடையாளம் நீர்த்துப்போய், கடைசியில் இல்லாமல் போய்விடுகிறது. ஏறத்தாழ இரண்டு தசாப்த காலமாக, ஒரு முனையில் குவிந்திருந்த தமிழ்த் தேசியத்தின் தலைமைத்துவம், 2009க்குப் பின்னர், பரவலாகத் தொடங்கியது. இது, தமிழ்த் தேசியத்துக்கு வேறுபட்ட பரிமாணங்களை, வேறுபட்ட தலைமைகள் வழங்கும் நிலையை உருவாக்கியது.
தமிழ்த் தேசியத்தை நீர்த்துப் போகவும் நீங்கச் செய்யவும் வேண்டிய அவசியப்பாடு உள்ள தரப்புகளுக்கு, இது மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது. கடந்த ஒரு தசாப்த காலத்தில் மட்டும், தமிழ்த் தேசியத்துக்குப் பல்வேறு முகங்கள் உருவாகின. சில அர்த்தமுள்ள முகங்களும் பல கோமாளித்தனமான முகங்களும் உருவாகின; உருவாக்கப்பட்டன.
இவ்வாறு உருவாகிய எல்லா முகங்களும், தமக்குத் தமிழ்த் தேசியப் பெயரைச் சூடிக்கொண்டன. இது, தமிழ் மக்களுக்கு ஒரு புதிய அனுபவம். அதுவரை காலமும் பெருமளவுக்கு ஒருமித்த தன்மை கொண்டமைந்த தமிழ்த் தேசியச் சிந்தனையும் அதிகார மய்யமும் பரவலானது. தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, பலவீனப்படுத்தத் தொடங்கியது.
இதேவேளையில், தமிழ்த் தேசியத்துக்கு மாற்றான சிந்தனைகள் “சிவில் தேசிய”, அதேவேளை இனத்தேசியத்தை இகழும் “தாராளவாத தேசிய” முகமூடிக்குள் நின்றுகொண்டு, தமிழ் மக்களை ஈர்க்கத் தொடங்கியது. “தமிழ்த் தேசியம்” இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று கருதும் அனைத்துத் தரப்புக்கும் இது சாதகமானதொன்றாக மாறியது.
மறுபுறத்தில், மழை ஓய்ந்த பின்னர் காளான்கள் தோன்றுவது போல தோன்றிய தமிழ்த் தேசிய அமைப்புகள், தமிழ்த் தேசியம் என்ற தர அடையாளத்தை, தமது நலன்களுக்காகப் பயன்படுத்த விளைந்தனவே அன்றி, தமிழ்த் தேசியத்துக்கான, அவர்களுடைய பங்களிப்பென்று குறிப்பிடும்படி எதுவும் இருக்கவில்லை.
தமிழ்த் தேசியத்தைக் காப்பது யார் என்ற சண்டையில், தமிழ்த் தேசியம் மறக்கப்பட்டுவிட்டது. மறுபுறத்தில், “தமிழ்த் தேசியத்தின்” பிதாமகராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளான அதிகாரம் மிக்க சில தரப்புகள், தமிழ்த் தேசியத்தைத் தாண்டி, தம்மைத் தாராளவாத தேசியவாதிகளாகக் காட்டிக் கொள்வதில், அதீத கவனம் எடுத்துக்கொண்டன. இதற்காக “தமிழ்த் தேசிய” நலன்களைத் தாண்டி செயற்படுவதற்குக் கூட அவை பின்நிற்கவில்லை. இந்த அரசியல் பகடையாட்டத்தில், “தமிழ்த் தேசியத்தின்” வேர்கள் நீரின்றி வறண்டுபோகத் தொடங்கியது, நீரற்ற மரம் போல தமிழ்த் தேசியம் காய்நது கருகி, தமிழ் மக்களே தீண்ட விரும்பாததொன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.
மறுபுறத்தில், தமிழ்த் தேசியத்தின் உயிரோட்டமான தமிழ் மக்களின் நிலை, இன்னமும் மோசமாகவே இருக்கிறது. தமிழ் மக்களின் பொருளாதார வளம் என்பது, எப்போதுமே சவாலானதொன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால், கல்வி எனும் பலம் அவர்களை எப்போதும் பாதுகாத்து வந்திருக்கிறது.
ஆனால், இன்று பொருளாதாரம், கல்வி, சமூகம் போன்ற ரீதியில், தமிழர் தாயகம் பின்தங்கிப் போயுள்ளது. இதைப் பலகாலமாகப் பலரும் கூறிவந்தாலும், தமிழர்கள் ஒருவித “மறுப்பு” மனநிலையிலேயே இந்தப் பின்னடைவை அணுகி வந்தனர். தாம் பின்னடைகிறோம் என்பதை,“மறுப்பு” மனநிலையில் தமிழ் மக்கள் அணுகிய முதலாவது தடவை இது அல்ல. ஆனால், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த “மறுப்பு” மனநிலை தகரும். அது, எவ்வளவு முன்னதாகத் தகர்கிறதோ அவ்வளவு நல்லது. எமக்கு, ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை, நாம் ஏற்றுக்கொள்வதுதான், அந்தப் பிரச்சினைக்கான தீர்வின் முதற்படி; இது மிக முக்கியமானதாகும்.
இன்று, தமிழ்த் தேசமானது சித்தாந்தம், அடையாளம் ஆகியவற்றின் ரீதியாகவும் சரி, பௌதீக ரீதியாகவும் சரி, வலிமை இழந்துபோயுள்ள நிலையில் இருக்கிறது. ஆனால், தமிழ்த் தேசத்தையும் தேசியத்தையும் போஷிக்க வேண்டிய தார்மிகக் கடமையுடைய தமிழ்த் தேசிய அரசியலானது, அதனைச் செய்வதிலிருந்து தொடர்ந்து தவறி வருகிறது.
இலங்கையின், தமிழ்த் தேசிய அரசியல், ஒரு துப்பறியா நிலையில் நின்றுகொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. தமிழ்த் தேசிய அரசியல் தன் கடமையைச் சரிவரச் செய்யாததன் விளைவாக, தமிழ் மக்கள் ஒருபுறத்தில் தாராள ஜனநாயக முகமூடியிடமும் மறுபுறத்தில், தமிழ்த் தேசிய முகமூடியைச் சூடியுள்ள தென்னிந்தியாவின் சிறு குழுக்களிடமும் சிக்கித் தவிக்கிற நிலை உருவாகியுள்ளது.
இலங்கையில், தமிழ்த் தேசியமும் தென்னிந்திய சிறுகுழுக்கள் பேசும் தமிழ்த் தேசியமும் ஒன்றல்ல; அவை ஒன்றாகவும் முடியாது. இலங்கையின் தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றுடன், தென்னிந்தியத் தமிழ்த் தேசியம் இயைபடையாது. அது, வேறுபட்ட இன்னொரு பரந்த தமிழ்த் தேசியம் பற்றியதாகவே இருக்கிறது. அதிகபட்சமாக, அவை நட்புச் சக்திகளாக அணுகப்படலாமேயொழிய, அவற்றுக்கும் இலங்கையின் தமிழ்த் தேசியத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
ஆனால், இதையெல்லாம் சொல்ல வேண்டிய, தௌிவுபடுத்த வேண்டிய, தமிழ்த் தேசிய பிரக்ஞையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையைத் தாமாக ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கட்சிகள், அதைச் சரிவரச் செய்யவில்லை. தமிழ்த் தேசியம் பற்றி மட்டுமல்ல, தமிழ் மக்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், உட்கட்டமைப்பு, எதிர்காலம் பற்றிய எந்தத் திட்டமும் சிந்தனையும் நோக்கமும் இலக்கும் எதுவுமே தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
மாறாக, தமிழ்த் தேசியத்தின் பெயரால், வாக்கு வேட்டை நடத்துவதில்தான் அவர்களது அக்கறை இருக்கிறது. அதற்குப் பின்னர், ஒரு தரப்பு அமைதியாகத் தமது பதவிகளில் இருந்துகொள்ள, மறுதரப்பு இலங்கையின் தேசிய அரசியலில் தம்மைத் தாராளவாத ஜனநாயகவாதிகளாக நிலைநிறுத்துவதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த இரண்டு தரப்பும், தமிழ்த் தேசியத்துக்கோ, தமிழ் மக்களின் வாழ்வாதாரத்துக்கோ கல்வி, பொருளாதாரம், சமூகம், உட்கட்டமைப்பு வளர்ச்சி, அபிவிருத்திக்கோ எதுவும் செய்யவுமில்லை; செய்யப்போகும் சமிக்ஞையும் இல்லை. இது இவ்வாறாகவே தொடர்ந்தால், தமிழ்த் தேசியம், இனி மெல்லச் சாகும்.