இந்த முயற்சி, 13ஆம் திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான தீர்வாக உருவகப்படுத்தப்படுவதைக் கண்டித்து, தமது எதிர்ப்பை வலுவாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்து வருகிறது.
அண்மையில், கூட்டமொன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “தமிழர்களுடைய தீர்வு விடயத்தில், தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைத் தமிழர்கள்தான் கூறமுடியும். அதனை எவரும் கூற முடியாது; திணிக்கவும் முடியாது. 13 ஆவது திருத்தத்தைத் தீர்வாக ஒருபோதும் ஏற்க முடியாது. நாம் அதில் தெளிவாகவுள்ளோம்.
13ஆம் திருத்தத்தை, தமிழ் மக்களை ஏற்று கொள்ளவைப்பது, தமிழர்களுடைய அபிலாஷைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, தமிழர் தேசத்தை அழிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகத்தான் நாம் பார்க்கின்றோம். இதற்கு, நாம் ஒருபோதும் ஒத்துழைக்கப்போவதில்லை. நாங்கள் இதை எதிர்ப்பதை இந்தியா, தமக்கு எதிரானதாகப் பார்க்கிறது என்றால், அது இந்தியாவின் முடிவு.
ஆனால், எங்கள் மக்களுடைய நலன்களை, எவருடனும் பேரம்பேசி, நாங்கள் கைவிடத் தயாரில்லை. தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்காக, நேர்மையாகச் செயற்படுகின்ற எந்த நாட்டுடனும், நாங்கள் பயணிக்க மாட்டோம் எனக் கூறவில்லை. மாறாக, அனைவரையும் கேட்டுக்கொள்வது, தமிழர்களுடைய அடிப்படை அபிலாஷைகள் குறிப்பாக, திம்பு கோட்பாடுகளில் கூறப்பட்ட அடிப்படை அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலே, அவர்களுடைய ஆதரவை எமக்குத் தரவேண்டும் என்ற அடிப்படையில்தான் நாம் கோரிவருகின்றோம்” என்று கூறியிருந்தார்.
இது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொடர்ச்சியானதும், நிலையானதுமாக நிலைப்பாடாக இருந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இதேயிடத்தில், “அப்படியானால், மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுமா” என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், “நாம் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது 13ஐ கோரும் தரப்புகளுக்குப் பிரச்சினையாக இருக்கும்.
நாம் மாகாண சபையைக் கைப்பற்றி, அந்த வெற்றுக்கோசத்தை அம்பலப்படுத்தி விடுவோம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால், கட்டாயம் நாம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாம், 13ஆம் திருத்தத்தை நிராகரிக்கிறோம். எமக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. கடந்த தேர்தலை எமது கட்சி பகிஸ்கரித்தது. ஆனால், மக்களைப் பகிஷ்கரிக்கக் கோரவில்லை. மாகாண சபை முறைமையின் அதிகாரமற்ற தன்மையை அம்பலப்படுத்தாமல், அதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கூட்டமைப்பு சென்றுள்ளதால், மாகாண சபை முறையை அம்பலப்படுத்தும் பொறுப்பை, நாமே ஏற்க வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார்.
கஜேந்திரகுமாரின் மாகாண சபைத் தேர்தல் பற்றி இந்த மனமாற்றம், 13ஆவது திருத்தத்தை எதிர்க்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதா என்ற கேள்விகளுக்கும் கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்த விமர்சனங்களை முன்வைக்கும் தரப்புகளை எடுத்துக்கொண்டால், பிரதான தரப்பு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அல்லது, தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள். அரசியல் போட்டி இதற்கான பிரதான காரணமாகும்.
2020 பொதுத் தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 112,967 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 55,303 வாக்குளைப் பெற்றிருந்தது. 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 207,577 வாக்குகளைப் பெற்றிருந்தமையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெறுமனே 15,022 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆகவே, 2020 பொதுத்தேர்தல் முடிவுகளானது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, இனியும் உதிரிக்கட்சியாகக் கருதிவிட முடியாத நிலைக்கு வந்துவிட்டது என்பதை அனைவருக்கும் உணர்த்தியிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெற்றுக்கொண்ட அனைத்தும், தமிழ்த் தேசியத்துக்கான வாக்குகள். ஆகவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால், அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குவங்கியில்தான் கணிசமான பாதிப்பை உண்டாக்கும்.
மறுபுறத்தில், கண்முடித்தனமான கொள்கைப்பிடிப்புள்ளோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உணர்வுபூர்வ ஆதரவாளர்கள் சிலரும், 13ஐ எதிர்த்துக்கொண்டு, 13இனால் வந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது எவ்வாறு ஏற்புடையது என்று கேட்கிறார்கள்.
இவர்களின் எண்ணமானது, ஒரு கட்டமைப்பை எதிர்க்க வேண்டுமென்றால், அந்தக் கட்டமைப்புக்கு வௌியில் நின்றுகொண்டு மட்டும்தான் அதனை எதிர்க்க வேண்டும்; அதுதான் முறையானது என்ற மனநிலையிலிருந்து பிறந்தது. இன்று, இப்படி யோசிப்பவர்களைச் சொல்லியும் பிழையில்லை. ஏனென்றால் இதுவரை காலமும், கஜேந்திரகுமாரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், இதே நிலைப்பாட்டில்தான் இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் முதலாவது வடமாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.
ஓர் ஆதரவாளர் குழுவை, ஒரு வகையான கொள்கை மனநிலையில் வளர்த்தெடுத்துவிட்டு, திடீரென்று அந்த மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அதனால்தான் என்னவோ, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முடிவைத் தெரிவித்த கஜேந்திரகுமார் கூட, “ மாகாண சபை முறைமையின் அதிகாரமற்ற தன்மையை அம்பலப்படுத்தவே நாம் போட்டியிடுகிறோம்” என்று கூறவேண்டியதாக இருக்கிறது.
அரசியலில் இலட்சியவாத (idealism) அடிப்படையில், தமிழ்த் தேசிய அரசியலை அணுகும் போது, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள். இவற்றை எவ்வகையிலேனும் சமரசத்துக்கு உட்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவுதர முடியாது என்ற இலட்சியவாத நிலைப்பாட்டில் நிற்கலாம்.
இலட்சியவாதம் என்பது, சிந்தனைக்கும் பேச்சுக்கும் எழுத்துக்கும் பகிர்வுக்கும் சிறந்ததோர் அணுகுமுறை. ஏனெனில், சிந்தனையில், பேச்சில், எழுத்தில், பகிர்வில் அது புலன்களைத் திருப்திப்படுத்தும் ஒரு சிந்தனை உருவாக்கத்தை, கற்பனையில் சிருஷ்டித்து, பேச்சில், எழுத்தில் கட்டமைத்துப் பகிர்கிறது.
ஆனால் அந்த இலட்சிய சிருஷ்டிக்கும், யதார்த்தத்துக்கம் இடைவௌியிருக்கிறது. அந்த இடைவௌியில் என்ன செய்வது என்பதுதான் முக்கியமான கேள்வி. ஜேர்மனிய பேரரசின் சான்செலராக இருந்த ஒட்டோ வொன் பிஸ்மாக், “அரசியல் என்பது சாத்தியமானவற்றின், அடையக்கூடியவற்றின் கலை. அடுத்த சிறந்ததைப் பெற்றுக்கொள்ளும் கலை” என்பார். யதார்த்தவாத அரசியல் (realpolitik) சிந்தனை இது. யதார்த்தவாத அரசியலை, இலட்சியவாத அரசியலின் எதிரியாக உருவகப்படுத்தும் போக்கு தவறானது.
இலட்சியவாத அரசியல் என்பது, எதிர்கால அடைவுகளைப் பற்றியது. யதார்த்தவாத அரசியல் என்பது, தற்கால பயணத்தைப் பற்றியது. கொள்கைற்ற யதார்த்தவாதம் என்பது, சந்தர்ப்பவாதமாகும்.
சந்தர்ப்பவாத அரசியல் என்பதுதான், இலட்சியவாத அரசியலின் எதிரி. யதார்த்தவாதம் என்பது, கொள்கையற்ற நிலை அல்ல. அது கொண்ட கொள்கையையும் இலட்சியத்தையும் மட்டுமல்லாது, களநிலையையும் யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு செயற்படுதலைக் குறிக்கும்.
“ஆறாம் திருத்தத்தின் கீழ், சத்தியப் பிரமாணம் செய்யமாட்டோம்” என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியிழந்த பின்னர், தமிழர் பிரதிநிதித்துவம் நின்றுவிட்டதா? இல்லை.
கொள்கை அடிப்படையில் அன்று எடுத்த நடவடிக்கை சரி. அதுபோலவே, கொள்கையை மட்டுமல்லாது, யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு, ஆறாவது திருத்தத்தின் கீழ் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டமைதான் யதார்த்த அரசியல். அது, தமிழ்த் தேசியம் கண்மூடித்தனமான ‘தனிநாடு’ என்ற பிரசாரத்திலிருந்து விலகி, தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்ள ‘தனிநாடு’ தான் ஒரே வழி அல்ல என்பதையும் புரிந்துகொண்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை சமரசம் செய்யாத, அதேவேளை, ஓர் அரசுக் கட்டமைப்புக்குள்ளான தீர்வை நோக்கி, தமிழ்த் தேசிய இலட்சியவாத அரசியலை வழிப்படுத்தியது. இலட்சியவாத அரசியலும் யதார்த்தவாத அரசியலும் எதிரிகள் அல்ல. இலட்சியவாதத்தின் அடைவுகளைப் பெற்றுக்கொள்ள, நல்லதொரு பாலமாக யதார்த்தவாத அரசியல் உதவும்.
அது, அதைக் கட்டமைப்பவர்களின் கைகளில் தங்கியிருக்கிறது.
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாது விடுவது, ஒரு கட்சியாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பெரும் பின்னடைவைத் தரும். மேலும், தமிழ் மக்களுக்குத் தமது அரசியலில், சரியான மாற்றுத்தெரிவுகள் அவசியம்.
அரசியலில் ஏகம், ஏகத்துவம் என்பன ஆரோக்கியமானதல்ல. போட்டி நல்லது என்பதைத்தான் பாமரத் தமிழன்,‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ என்று எளிமையாக எடுத்துச் சொல்லிவிட்டான். தாம், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கஜேந்திரகுமார் எந்தக் காரணத்தையும் சொல்லட்டும்; ஆனால், அந்த முடிவு வரவேற்கத்தக்கது.