தமிழ் அடையாளத்தினூடாக யாழ். உயர்வர்க்க நலன் பேணல்

இதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் தேர்தல் பகிஸ்கரிப்பை ஏற்றுக்கொண்டபோதும் எஸ்.என்.ஆனந்தன் என்பவர் தேர்தலில் போட்டியிடுவதால் அவரை எதிர்த்து போட்டியிடுவதாகவும் தான் தெரிவு செய்யப்பட்டால் வாக்களர்களினதும் இளைஞர் காங்கிரசினதும் ஆலோசனையைப் பெற்று செயற்படப்போவதாகவும் கூறியிருந்தார். இதனால் அவரை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் முல்லைத்தீவு – மன்னார் தொகுதியில் ஆதரித்தது. (இது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் கொள்கைத் தெளிவின்மை என்பது வேறு விடயம்)

இதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தோல்வியடைந்ததும் பகிஸ்கரிப்பு தவறு என்றும் இந்தப் பகிஷ்கரிப்பினால் தேர்ந்தெடுக்கப்படாது விடப்பட்ட யாழ்ப்பாணத்தொகுதி பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக மீண்டும் தேர்தலை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து மகஜர் அனுப்பியவர்களில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் முக்கியமானவராக இருந்தார்.

1934 ஆம் ஆண்டு இடம்பெற்ற இடைத்தேர்தலில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் பருத்தித்துறை தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டார். சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் சட்டசபையில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் தேர்தல் பகிஷ்கரிப்பை இருட்டிப்புச் செய்து உரையாற்றியமையையும் தேசாதிபதிக்கு விசுவாசமாக செயற்பட்டமை பற்றியும் சென்ற பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டது. இது போன்று தேசாதிபதி மனிங்கினால் வழங்கப்பட்ட மேல்மாகாணத்துக்கான தமிழ் உறுப்புரிமை டொனமூரினால் கொண்டுவரப்பட்ட பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தினால் இல்லாமல் ஆக்கப்பட்ட சூழ்நிலையில் அங்கு உறுப்பினராக இருந்த அ.மகாதேவா 1934ம் ஆண்டுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.

1936ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அரசாங்க சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 50 பிரதிநிதிகளுள் 38 சிங்களவர்களும் 07 இலங்கைத் தமிழரும் 02 இந்தியத் தமிழரும் 02 ஐரோப்பியரும் ஒரு முஸ்லீமும் இடம்பெற்றிருந்தனர். சிங்களப் பிரதிநிதிகளுக்கிருந்த பெரும்பான்மையினைப் பயன்படுத்தி 10 பேர் கொண்ட அமைச்சரவையை அமைத்தார்கள். இந்த அமைச்சரவையில் எந்தவொரு தமிழ் பிரதிநிதியும் இடம் பெறவில்லை. இதுவே பின்னர் ‘முழுச் சிங்கள அமைச்சரவை’ என அழைக்கப்பட்டது.

சிங்களத் தேசிய வாதம் தமிழர்களையும் காலனித்துவ ஆட்சியாளர்களையும் மிகவும் தந்திரோபாய ரீதியில் கையாண்டு தமிழ் தேசிய வாதத்தினை முறியடிப்பதிலும் தமது தேசிய வாதத்தினை வளர்த்தெடுப்பதிலும் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டு வந்திருப்பதை வரலாறு முழுக்க அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் டொனமூர் அரசியல் திட்டம் சிங்களத் தேசிய வாதத்துக்கு கிடைத்த பெரும் கொடை எனலாம்.

“சிங்களப் பிரதிநிதிகள் தமக்குச் சாதகமாக அமைந்த அரசியற்திட்டத்தை ஆதரிப்பதற்காகவும், பிரித்தானிய அரசைத் திருப்திப்படுத்துவதற்காகவும் தமிழராகிய டபிள்யூ. துரைசாமி என்பவரை அரசாங்க சபையின் சபாநாயகராக நியமித்தனர். அத்தோடு ஜீ.ஜீ.பொன்னம்பலம், ஆர்.சிறி.பத்மநாதன், ஏ.மகாதேவா அகிய தமிழரை அமைச்சரவையின் நிறைவேற்றுக் குழுவுக்குத் துணை அமைச்சர்களாகத் தெரிவு செய்தனர். உண்மையில் மேற்குறிப்பிட்ட தமிழர் அப் பதவிகளுக்கு ஆசைப்படாமல், அமைச்சரவையில் தமிழ் பிரதிநிதிகளுக்கு இடம் தரப்படவில்லை என்பதையிட்டு பிரித்தானிய அரசுடன் வாதாடியிருக்க வேண்டும். தமிழ்த் தலைவர்கள் தமிழரின் எதிர்காலம் குறித்துத் தூரநோக்குடன் செயற்படாது, தமது சொந்த அபிலாசைகளிலும் பதவிகளிலுமே கண்ணாக இருந்துள்ளனர் என்பதனை 18.04.37 ஈழகேசரியில் வெளிவந்த கட்டுரை துல்லியமாகக் காட்டுகிறது”. (முருகர் குணசிங்கம், இலங்கையில் தமிழர் – ஒரு முழுமையான வரலாறு – கி.மு.300 கி.பி 2000)

1942ல் டி.பி.ஜயதிலக்காவின் இடத்துக்குப் பதிலாக அருணாசலம் மகாதேவா உள்நாட்டு அமைச்சராக பதவியேற்றார். இவர் இந்தப் பதவியினைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சிங்களப் பிரதிநிதிகளுடன் ஒத்துப்போகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இனவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கேட்டு ஒற்றைக்காலில் நின்று குரலெழுப்பிய தமிழ்த் தேசியவாதிகள் இவ்வாறு பதவிகளுக்குள் கட்டுப்பட்டு அமைச்சரவைக்கும் டொனமூர் அரசியலமைப்புக்கும் தேசாதிபதிக்கும் விசுவாசமானவர்களாக விளங்கினார்கள். தமக்குக் கிடைத்த பதவிகள் மூலம் தேசாதிபதியின் நம்பிக்கையினைப் பெற்று வடகிழக்குத் தமிழர்களுக்கான ஆட்சியுரிமையினை பெற்றுக்கொடுப்பதற்கான எந்தவொரு செயலையும் இவர்கள் முன்னெடுக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். இதனை சந்தர்ப்பவாத தமிழ்த் தேசியத்தின் வெளிப்பாடாகக் கொள்ளமுடியும்.

தமிழ்த் தேசியவாதிகளின் நிலை இதுவென்றால் இலங்கைத் தேசியவாதம் பேசி, தொழிற்பட்ட யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் செயற்பாடுகளும் சிங்கள மக்களாலும் காலனித்துவ ஆட்சியாளர்களாலும் தமிழ் இனவாதமாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், டொனமூர் அரசியல் திட்டம் இலங்கைக்கு பூரண சுயாட்சியை வழங்கவில்லை என்று அதனை எதிர்த்து தேர்தலையும் பகிஷ்கரித்த போது அவர்களுக்கு ஆதரவாக தென்னிலங்கையில் எந்த ஒரு பகிஷ்கரிப்பு நடவடிக்கையும் இடம்பெறவில்லை. இலங்கையின் இடதுசாரித் தலைவர்கள் கூட யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசுக்கு ஒத்த நடவடிக்கை எதனையுமே மேற்கொள்ளவில்லை. அல்லது அவ்விடதுசாரித் தலைவர்களை தமது நடவடிக்கைக்கு ஒத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான எந்த வேலைத் திட்டமுமின்றி குடாநாட்டுக்குள் மட்டும் நின்று தேசியம் பேசியவர்களாகத்தான் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசினைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் 1935 ஆம் ஆண்டில் உருவான லங்கா சமசமாஜக்கட்சியைச் சேர்ந்த இடதுசாரித் தலைவர்களான என்.எம்.பெரேரா, பிலிப்குணவர்த்தன, கொல்வின்.ஆர்.டி. சில்லா, லெஸ்லி குணவர்த்தன, எஸ்.ஏ.விக்கிரமசிங்க, டபிள்யூ.தகநாயக்க போன்ற தலைவர்கள் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் கூட்டங்களில் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களை விட ஜே.ஆர்.ஜெயவர்த்தன, டி.எஸ்.சேனநாயக்க போன்றவர்களும் உரையாற்றியுள்ளார்கள். இவர்கள் எவருமே யாழ்ப்பாண காங்கிரஸ் போன்று தென்னிலங்கையில் டொனமூர் திட்டத்தை எதிர்க்கவில்லை என்பதோடு தென்னிலங்கைக்கு யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் கொள்கையினை எடுத்துச் செல்லவும் இல்லை. இதனால் சிங்கள மக்களிடம் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் ஒரு இனவாத அமைப்பாகவே கருதப்பட்டிருக்கின்றது. இதற்குக் காரணம் ஏற்கனவே தமிழர் மகாசபை, மற்றும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றவர்களின் செயற்பாடுகள் காரணமாக காங்கிரசிற்கு இனவாதச் சாயம் பூசப்பட்டிருக்கிறது. இது பற்றி யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் ஸ்தாபகரான ஹன்டி பேரின்பநாயகம் குறிப்பிடுகையில் “பல பொறுப்புவாய்ந்த சிங்களத் தலைவர்கள் பகிஷ்கரிப்பு மற்றும் அதன் பொருட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு விடாப்பிடியாக இனவாத அர்த்தம் கற்பித்து வந்துள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு மாநாட்டில் காலம் சென்ற டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் நானும் சந்தித்த சந்தர்ப்பத்தில், பகிஷ்கரிப்பு நடவடிக்கை இனவாத நோக்கங்களினால் உந்தப்பட்டது என அவர் கூறியபோது, அது அப்படியல்ல என நான் மறுதலித்தது ஞாபகமாக இருக்கிறது. அண்மையில் திரு.எச்.ஏ.ஜே.ஹ லுகல்ல எழுதிய டி.ஆர்.விஜயவர்த்தன சரிதையில் அதே பழியை சுமத்தியுள்ளார். எமது வாழ்க்கை வரலாற்றையும் ஒரு ஐக்கியப்பட்ட சுதந்திரமான இலங்கை என்ற இலட்சியத்திற்கு நாங்கள் இடையறாது அர்ப்பணித்து நின்றதற்காக கொடுத்த விலையையும் கணக்கில் எடுத்தால் எவருமே அவ்வாறான கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. டொனமூர் சீர்திருத்தங்கள் முழுமையான சுதந்திரத்துக்கு மிகவும் குறைவாக இருந்ததன் காரணமாகவே பகிஷ்கரிப்பு இயக்கம் முடுக்கிவிடப்பட்டது.” (மேற்கோள். சாந்தசீலர் கதிர்காமர், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்)

இதுபோன்றே காங்கிரசின் தேர்தல் பகிஷ்கரிப்பினை காலனித்துவ ஆட்சியாளர்களும் இனவாதத் தன்மை கொண்ட ஒன்றாகவே பார்த்தனர். “1931 மே 6 ஆம் திகதி ஆளுநர் உத்தியோக பூர்வமாக அனுப்பிவைத்த தந்தியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் “ பகிஷ்கரிப்பிற்கான வெளிப்படைக் காரணம் புதிய அரசியலமைப்பானது சுதந்திரத்தை எட்டுவதற்கு முன்னேற்றம் போதுமானது அல்ல என்பதாகும். ஆனால் தமிழர் தமக்குக் கிடைத்த பிரதிநிதித்துவம் போதுமானது அல்ல என்ற அதிருப்தியே உண்மையான காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.” ( சாந்தசீலர் கதிர்காமர், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்) இது போன்றே 1931இல் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் திரு.ஓர்ம்ஸ்பி குடியேற்ற நாட்டுக்கான பிரதிச் செயலாளரிடம் “இலங்கையில் வடபகுதித் தமிழர்கள் தமக்கு இனரீதியான பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு ஏனைய இனங்களோடு பொது இடாப்பில் அல்லது பதிவில் சேர்க்கப்பட்டதே தேர்தல் பகிஷ்கரிப்பிற்கான பிரதான காரணம் அல்லவா?” (மேற்படி நூல்) என கேள்வியெழுப்பியிருந்தார்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் இனவாதம் பேசிய தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தேசியவாதிகளுடன் ஒட்டி உறவாடிக்கொண்டதும், இலங்கைத் தேசியம் பேசிய தமிழ்த் தலைவர்கள் இனவாதிகளாகப் புரிந்துகொள்ளப்பட்டமையுமாகும். இந்த நிலைக்கு சிங்கள மக்களோ அல்லது சிங்களத் தலைவர்களோ அல்லது காலனித்துவ ஆட்சியாளர்களோ பொறுப்பல்ல. ஒரு போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவர்கள் அப் போராட்டத்தின் நியாயத்தன்மையினை எந்தளவுக்கு இலங்கைமயப்படுத்தினார்கள், பிரித்தானியாவுக்கு எவ்வாறு புரியவைத்தார்கள் என்பதிலே தங்கியுள்ளது. இதற்குக் காரணம் அந்தப் போராட்டத் தலைமைத்துவத்தின் வர்க்க குணாம்சம் எனலாம். தமிழ்த் தேசியப் போராட்டத்தின் இன்றைய நிலைக்கும் இந்த தலைமைத்துவங்களின் இந்த வர்க்ககுணாம்சம்தான் காரணம் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

டொனமூர் அரசியல் திட்டமும் சர்வசன வாக்குரிமையும்

டொனமூர் அரசியல் திட்டத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வசன வாக்குரிமையினை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் வரவேற்ற போதிலும் அது எதிர்காலத்தில் ஏற்படுத்தவிருக்கும் தேர்தல் மைய அரசியல் தொடர்பாக விளக்கம் பெற்றவர்களாகவோ அல்லது சர்வசன வாக்குரிமையினை மக்கள்நல அரசியலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக சிந்தித்தவர்களாகவோ இவர்கள் எவரும் இருக்கவில்லை;.

சர்வசனவாக்குரிமை தொடர்பாக பின்வரும் இருவித நிலைப்பாடுகள் காணப்பட்டன.

  1. சர்வசன வாக்குரிமையின் ஊடாக மக்கள் நல அரசியலை முன்னெடுக்க முடியும் என்று செயற்பட்டவர்கள்

இந்த விடயம் தொடர்பாக கரிசனை எடுத்துக் கொண்டவர்கள் மட்டக்களப்பைச் சேர்ந்த திருமதி.ஈ.ஆர்.தம்பிமுத்து அவர்களும் திருமதி சி.இ.த.சில்வா அவர்களும் ஆவர். படித்த சொத்துள்ள உயர்வர்க்க ஆண்கள் அரசியலில் பங்கு பற்றி எல்லாருடைய நலன்களையும் தீர்மானிக்கின்றவர்களாக இருந்த சூழலில், பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கு வேண்டிய அடிப்படை உரிமையாகிய வாக்குரிமைக்காக, பல்வேறுபட்ட ஆண்மையவாத அரசியல் அமைப்புக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ‘பெண்கள் வாக்குரிமைச் சபை’ என ஒன்றை அமைத்து பெண்களின் வாக்குரிமைக்காக குரல்கொடுத்து, டொனமூர் ஆணைக்குழுவினரை 1928 ஜனவரி 14 இல் சந்தித்து இலங்கையில் ஆண்களுக்குச் சமனாக பெண்களும் வாக்குரிமையினை பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் அப்பால் ஏன் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை பின்வரும் காரணங்களை முன்வைத்து எடுத்துக்காட்டியிருந்தனர்.

இலங்கையில் குழந்தை இறப்பு உயிர் விகிதம்
வீடமைப்பில் சீர்திருத்தத் தேவை
குழந்தை நலம்
மருத்துவம்
கர்ப்பிணிகளுக்கான உதவி

மேலுள்ள ஐந்து காரணங்களும் பொதுவான மனிதகுல விருத்தியின் அடிப்படைத் தேவைகளாக இருக்கின்றன. பிரதிநிதித்துவத்தின் அதிகரிப்பு, பூரண சுயாட்சி போன்றவை பற்றி ஆண்கள் ஈடுபாடுகாட்ட, பெண்களோ கிடைத்திருக்கின்ற வாய்ப்பை பொதுவான மனிதகுல அடிப்படைத் தேவைகள் தொடர்பாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்தித்து செயற்பட்டிருக்கிறார்கள். அத்துடன் இவ் ஐந்து கோரிக்கைகளையும் ஒரு அரசியல் தேவைப்பாடாக எடுத்துக்காட்டியுள்ளதில் இருந்து இப் பெண்கள் அரசியலையும் சமூகவிருத்தியையும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைந்ததாக நோக்கியுள்ளார்கள் எனும் அவர்களின் தூர நோக்கான அரசியல் பார்வையையும் இது தெளிவுபடுத்துகின்றது. இவ்வாறு யதார்த்தத்தை புரிந்து அதற்கேற்றாற்போல் அரசியல் நகர்வுகளை எடுக்க தமிழ்த் தலைவர்கள் தவறியிருக்கின்றனர்.

டொனமூர் ஆணைக்குழுவினர் இப் பெண்களின் கோரிக்கையினை சாதகமாக அணுகினர் என்பதை அவர்களுடைய அறிக்கை எடுத்துக்காட்டுகின்றது. அவர்கள் இது பற்றி பின்வருமாறு அறிக்கை செய்துள்ளனர். “ பெண்கள் வாக்குரிமை பற்றிய கேள்வியை நாம் கருத்துடன் ஆராய்ந்துள்ளோம். அவர்கள் சார்பில் எடுத்துக் கூறப்படும் வழக்கமான வாதங்கள், ஆண் பெண் சமத்துவம் ஆகியவற்றைத் தவிர, இலங்கையில் குழந்தை இறப்பு உயிர் விகிதம், வீடமைப்பில் சீர்திருத்தத் தேவை, குழந்தை நலம், மருத்துவம், கர்ப்பிணிகளுக்கான உதவி ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்கப்பட வேண்டிய தேவை ஆகியன எம்மைக் கவர்ந்தன. இச் சிக்கல்கள் யாவற்றையும் தீர்ப்பதில் பெண்களின் ஆர்வமும் உதவியும் மிகுந்த பயனளிக்கும்” என அவர்கள் இப் பெண்களுடைய கருத்தினைச் சார்ந்து சிந்தித்துள்ளார்கள்.

ஆயினும் அப்போதைய ஆண்மையவாத அதிகாரத்துவ அரசியல் தலைவர்கள் இந்த மக்கள்நல அரசியலை அல்லது இவர்களுடைய கோரிக்கையின் நியாயப்பாட்டினை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

சேர்.பொன்.இராமநாதன் போன்ற தலைவர்கள் வெள்ளாளரல்லாத சாதியினருக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பது கும்பலாட்சிக்கு வழிவகுக்கும் ஒரு பாரிய பிழையென்றும் அவ்வாறு வாக்குரிமை வழங்குவது இந்து வாழ்க்கை முறைக்குப் பழிகேடு விளைவிப்பது என்றும் நம்பினர், வாதிட்டனர். ஏ.ஈ.குணசிங்காவினைத் தவிர வேறெந்தத் தலைவர்களும் சர்வசன வாக்குரிமை வேண்டுமென்று வாதிடவில்லை. இது போல மிக முக்கியமான அரசியல் செயற்பாட்டில் இருந்த இலங்கை தேசிய காங்கிரஸ், தமிழர் மகாஜன சபை, யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், மற்றும் இடது சாரிச் சிந்தனையாளர்கள் என எவருமே சர்வசன வாக்குரிமைக்கு அல்லது பெண்கள் வாக்குரிமைக்கு சார்பாக குரல்கொடுத்ததாக பதிவுகள் எதுவும் இல்லை. இவ்வாறு இவர்கள் மௌனமாக இருந்தது அல்லது சர்வசன வாக்குரிமை வேண்டாம் என எதிர்த்தற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது இருந்திருக்கலாம். தமது இன சகோதரிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமையினை வழங்க கூடாது என்று சிந்தித்து செயற்பட்ட எமது தலைவர்கள் ஆங்கிலேயர் தங்களுக்கு சுயாட்சியினை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வாறு தார்மீகத்தனமுடையதாக இருக்க முடியும்?

சர்வசன வாக்குரிமையுடன் கூடிய வேறுபல திருத்தங்களுடன் இவ்வரசியல் திட்டம் சட்டநிருபணசபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஒரு வாக்கினால் இவ்வரசியல் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஒரு வாக்கினை செலுத்தி, திருமதி.தம்பிமுத்துவின் கணவர் இ.ஆர்.தம்பிமுத்து அவர்களே அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் ஆதரவாக வாக்களித்ததில் திருமதி தம்பிமுத்துவின் செல்வாக்கு இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் டொனமூர் அரசியல் திட்டத்தினை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் நிராகரித்தும் சேர்.பொன்.இராமநாதன், ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற தமிழ் தலைவர்கள் அனைவரும் அதற்கு எதிராக வாக்களித்த சூழலில் திரு.இ.ஆர்.தம்பிமுத்து மாத்திரம் அதற்கு ஆதரவாக வாக்களித்ததிலிருந்து இதனை விளங்கிக்கொள்ளமுடியும்.

எனவே திருமதி. தம்பிமுத்து அவர்கள் பெண்களுக்கான வாக்குரிமை விடயத்தில் இனம், மதம், சாதி, பிரதேசம், என்பவற்றுக்கப்பால் சிந்தித்து மனிதகுல விருத்திக்கு பெண்களின் அரசியல் பங்கு பற்றல் அவசியம் என்ற ஒரு திடமான கொள்கையுடன் இருந்திருக்கிறார். வாக்குரிமையினை மக்களின் நலனுக்கு பாவிக்க வேண்டும் என்பதே இவர்களுடைய பிரதான நோக்கமாக இருந்திருக்கிறது. தம்மையும் தமது அதிகாரத்தினையும் மட்டும் வைத்து அரசியல் கோரிக்கைகளை முன்வைக்காமல் பொதுவான மனிதகுலவிருத்தி தொடர்பாக சிந்தித்தமையினாலேயே பெண்களுக்கான வாக்குரிமைக் கோரிக்கை வெற்றியடைந்தது எனலாம்.

  1. தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பான அச்ச உணர்வு கொண்டு செயற்பட்டவர்கள்

சர்வசன வாக்குரிமை என்ற பேச்சு எழும்வரைக்கும் தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பாக எவரும் குறிப்பிட்டு எதுவும் கூறியதில்லை. கொழும்புவாழ் மலையாள, பாகிஸ்தானிய தொழிலாளிகளைப் போல், இவர்கள் தங்களுடைய வேலைகளைப் பறித்துக் கொள்கிறார்கள் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என எவருமே கோரிக்கை விடுக்கவும் இல்லை. ஆனால் வாக்குரிமை பெற்று அரசியல் முடிவுகளை தீர்மானிப்பவர்களாக இவர்கள் வருவதை எவருமே விரும்பவில்லை. 1928 ஆம் ஆண்டு சட்ட நிர்வாக சபையில் தோட்டத் தொழிலாளர்களுடைய வாக்குரிமையால் சிங்களவர் சிறுபான்மையாகி விடுவர் என்ற அச்சத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ளனர்.

“பிரான்சிஸ் மொலாமூர் ‘இந்திய அச்சுறுத்தல்’ பற்றி உரிய நேரத்தில் எச்சரிக்கிறேன் என்று கூறினார். பொதுசன வாக்குரிமை அடிப்படையிலான தேர்தலில் எதிர்காலத்தில் இனவாதத்தை ஒரு சுலோகமாக்குவதில் உள்ள அரசியலை அவர் தெளிவாகக் காட்டினார். அவரை விமர்சித்தவர்களுக்குப் பதிலளிக்கும் போது இன வேறுபாடுகாட்டாத கொள்கைகளை ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு தேர்தலில் தோல்வி ஏற்படும் என்று கூறினார். “நான் இந்தச் சவாலை விடுக்கிறேன். அவர்கள் கிராமங்களுக்குப் போய் தமது மேடைப் பிரசாரத்தில் “என்னை சட்டசபைக்கு அனுப்புங்கள். நான் இலங்கையர்களுக்கும் இலங்கையர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் காட்டமாட்டேன்.” என்று கூறட்டும் அவருடைய எதிர் வேட்பாளரோ இலங்கையருக்காக இலங்கையைக் காப்பதே என் நோக்கம்” என்று சொல்லட்டும்” இவ்விவாதத்தில் சி.டபிள்யூ.கன்னங்கராவும் ‘இலங்கையின் நிலையான மக்களை’ செயலறச் செய்யக்கூடிய இந்திய அச்சுறுத்தல் பற்றிக் கூறி இந்தியரின் வாக்குரிமையை எதிர்த்தார் துரோகிகள் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார். ( மேற்கோள் – குமாரி ஜயவர்த்தன)

ஏ.ஈ.குணசிங்க தொழிற்சங்கத் தலைவராக இருந்த போது தோட்டத் தொழிலாளர்களுக்கான வாக்குரிமையினை ஆதரித்துப் பேசியிருந்தார். “இந்தியர்கள் சிங்களத் தொழிலாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் எனச் சில செல்வந்தர் பேசுகின்றனர். தமது தொழிலாளர் துன்பமும் தொல்லையும் உற்றபோதும் மனச்சாட்சியும் நாட்டுப்பற்றும் உடைய இந்தச் செல்வந்தர் என்ன செய்தனர். நமது நாட்டு ஏழைகளுக்கு உதவுவதற்குப் பதில், ஏழை கிராமத்தவனை அவனது சிறுதுண்டு நிலத்திலிருந்து விரட்டி அடிப்பதில் தமது சக்தியை செலவழித்தனர். இப்போது இவர்களுக்கு நாட்டுப்பற்று வளர்ந்துள்ளது. இந்த அக்கறைக்கு காரணம் என்ன? ஏழைகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குரிமையே காரணம். இதே செல்வந்தர்கள்தான் விசேட ஆணைக்குழுவுக்கு சர்வசனவாக்குரிமை வழங்குவதை எதிர்த்துக் கூறியவர்கள். தமது திட்டத்தில் தோல்வியுற்ற இவர்கள் இப்போது இந்தியர்களுக்கு வாக்குரிமை மறுப்பது பற்றிப் பேசுகின்றனர்.” (மேற்கோள்- குமாரி ஜயவர்த்தன)

நாம் இங்கு இங்கு கவனிக்க வேண்டியது எமது தமிழ் தலைவர்கள் பிரதிநிதித்துவ அதிகரிப்புப் பற்றியும் பூரண சுயாட்சி பற்றியும் கேட்டபோது, தங்களுடைய உரையாடல் வட்டத்துக்கு அப்பால் இலங்கையிலுள்ள மற்றவர்கள் தமது இனத்துக்கான பொறிமுறைபற்றிச் சிந்தித்து செயற்பட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். தமிழர் நலன் தொடர்பாகப் பேசியவர்களுக்கு ஏ.ஈ. குணசிங்க அவர்களுடைய உரையாவது ஒரு இன உணர்வை வழங்காத அளவுக்கு மேலாதிக்க உணர்வுகளால் கட்டுண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சோல்பரி அரசியல் திட்டம்

டொனமூர் அரசியல் திட்டம் நடைமுறையிலிருந்தாலும் அவ்வரசியல் திட்டத்தின் போதாமைகள் குறித்தும் அது திருத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இலங்கை அரசியல் தலைவர்களினால் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இக் கோரிக்கைகளினைத் தொடர்ந்து பிரித்தானிய அரசு ஒரு பிரகடனத்தை வெளியிட்டது. “அப்பிரகடனம் போரை அடுத்து நடத்தப்படும் அரசியல் திட்டச் சீர்திருத்தப் பரிசீலனை அதிகாரத்தை இலங்கைக்கு முடியின் அரசாணையின் கீழ், முழுமையான பொறுப்பாட்சி அதிகாரத்தை வழங்கும் என்றும், அப்பொறுப்பாட்சியானது உள்ளூர் சிவில் நிர்வாக அதிகாரத்தைக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டது. இலங்கையின் பாதுகாப்பும் வெளிநாட்டு விவகாரங்களும் பிரித்தானிய அரசின் அதிகாரத்தின் கீழ், அதன் ஆலோசனைப்படி நடத்த ஒழுங்குகள் செய்யப்படும். இடைக்காலத்தில் மந்திரிமார் முழுமையான ஒரு அரசியல் திட்டத்துக்கான பிரேரணைகளை முன்வைக்கலாம். ஆனால் அத்தகைய அரசியல் திட்ட வரைவு மேற்சொன்ன பிரகடனத்தோடு ஒத்துப்போவதாக இருக்க வேண்டும். மேலும் அரசாங்க சபை அங்கத்தவர்களின் ¾ பங்கினரின் சம்மதத்தை அது பெற்றதாகவும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டது.” ( அம்பலவாணர் சிவராஜா)

இதற்கிணங்க மந்திரிமார் அரசியல் திட்ட நகல் ஒன்றை தயார் செய்து 1944 ஆம் ஆண்டு பெப்ரவரியில் குடியேற்ற நாட்டு மந்திரிக்கு அனுப்பிவைத்தனர். பிரித்தானிய அரசு அதே ஆண்டு டிசம்பரில் சோல்பரி பிரபுவைத் தலைவராகக் கொண்ட ஒரு குழுவை இலங்கையின் யாப்புத் சீர்திருத்தத்துக்காக அனுப்பிவைத்தது. இக்குழுவினர் 1945 ஆம் ஆண்டு வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறுபட்ட குழுக்களையும் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி இலங்கைக்குப் பொருத்தமானதொரு யாப்பினை தயாரிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே டொனமூர் அரசியல் திட்டத்தில் இனவாரிப் பிரதிநிதித்துவம் கோரி தோல்வியடைந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற தலைவர்கள் இம்முறை அந்தக் கோரிக்கையின் தோல்வியினைப் படிப்பினையாகக் கொண்டு தமிழர்களுக்குரிய அரசியல் உரிமையினைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகளை வகுத்திருக்க வேண்டும். ஆகக் குறைந்தது டொனமூர் அரசியல் திட்டத்தின் மூலம் சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மையினர் எவ்வாறு உதாசீனப்படுத்தி செயற்பட்டார்கள் என்பதைப் பட்டியலிட்டு சிறுபான்மையினருக்கு பொருத்தமான ,எல்லோராலும் எற்றுக்கொள்ளக்கூடிய ,யதார்த்தபூர்வமான ஒரு அரசியல் திட்டத்தை முன்வைத்திருக்க வேண்டும்.

இதனை அவர்கள் மேற்கொள்ளாதமைக்குக் காரணம் சிங்களத் தலைவர்களால் சமயோசிதமாக வழங்கப்பட்ட சலுகைகளைப் பெற்று சுகபோகங்களை அனுபவித்துவித்தமையினால் குறைகளை எடுத்துக்காட்டுவதற்குரிய தார்மீகத்தினை இழந்திருந்தமையினாலாகும். இருந்த போதிலும் திரு.சின்னத்துரை அவர்களும் எம்.கணபதிப்பிள்ளை (All Ceylon Aboriginal Inhabitants Association, Jaffna) அவர்களும் தமிழ் பிரதேசத்துக்கு சமஷ்டி அரசியல் அமைப்புமுறை வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். இவர்களுடைய இந்த தூரநோக்கிலான கோரிக்கையினை தமிழர்களிடத்தில் கதாநாயகத் தன்மைபெற்றிருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற தலைவர்கள் பொருட்படுத்தாமல் அதிக பிரதிநிதித்துவத்தினைப் பெறுவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் பொருளாதார முன்னேற்றத்தினையும் அடையலாம் என தமிழ் மக்களை நம்பவைத்து 50:50 எனும் கோரிக்கையினை நடைமுறைச் சாத்தியமான கோரிக்கையாக பிரித்தானிய அரசிடம் முன்வைத்தனர்.

இக்கோரிக்கைக்கு மகாதேவா, செல்வநாயகம், நாகநாதன், போன்றவர்கள் பக்கபலமாக இருந்தனர். அத்துடன் மலேய முஸ்லீம் பிரதிநிதியான டி.பி.ஜாயா, இந்திய தமிழ்ப் பிரதிநிதியான கே.நடேச ஐயர், இவர்களை விட பறங்கிய, ஐரோப்பியப் பிரதிநிதிகளும் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களுடைய கோரிக்கைக்கு ஆதரவினை வழங்கினர். ஆயினும் சிறுபான்மையினருக்கான 50 வீத பிரதிநிதித்துவத்தை விகிதாசார அடிப்படையில் முஸ்லீம்களுக்கு வழங்க மறுத்தமையினால் முஸ்லீம் லீக் தனது ஆதரவினை வழங்கவில்லை. மொத்த சனத்தொகையில் 75 வீதமாக இருக்கும் சிங்கள மக்களுக்கு 50 வீதமான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் சிறுபான்மையினருக்கான 50 வீதத்தில் மற்ற சிறுபான்மையினருக்கு விகிதாசார அடிப்படையில் வழங்க மறுத்திருப்பது அவருடைய அரசியல் நேர்மையீனத்தக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

இருந்த போதும் அன்றைய முக்கிய சிங்களத் தலைவராயிருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்கள் 50:50 கோரிக்கைக்குப் பதிலாக 60:40 என்ற பிரதிநிதித்துவம் தொடர்பாக பேசுவதற்கு முன்வந்த போதும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அப்போது தேசாதிபதியாக இருந்த சேர்.அன்றூ கல்டிகொட் 50:50 கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளாதவராகவே இருந்தார்.

அ.மகாதேவா 50:50 கோரிக்கையினை ஆரம்பத்தில் ஆதரித்திருந்தபோதிலும் அக்கோரிக்கையின் நியாயப்பாடின்மையைப் புரிந்து கொண்டு 60:40 எனும் கொள்கையினை முன்னிறுத்திச் செயற்பட்டார்.

அப்போது சிங்கள மக்களின் முக்கிய தலைவராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா அவர்கள் சேர்.ஐவர் ஜெனிங்ஸ் அவர்களுடைய உதவியினைப் பெற்று மிகவும் புத்திசாலித்தனமாக செயற்பட்டார். சேர்.ஐவர் ஜெனிங்ஸ் பிரித்தானிய அரசியல் யாப்பில் ஆழ்ந்த அறிவும் புலமையும் பெற்றிருந்ததோடு பிரித்தானிய ஆட்சியாளர்களின் நம்பிக்கைக்குரியவருமாக இருந்தார். இவர் யுனிவசிற்றி கொலிஜ் அதிபராகவும் அதன் பின் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடமே டி.எஸ்.சேனநாயக்கா சிறுபான்மையினரின் உரிமைகளை உள்ளடக்கக்கூடிய வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்ற முன்னுதாரணத்தினைப் பின்பற்றி அரசியல் யாப்பினை வரையும் பொறுப்பினை ஒப்படைத்திருந்தார். இவரால் வரையப்பட்ட திட்டம் ‘மந்திரிகள் நகல் திட்டம்’ என அழைக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் சோல்பரி ஆணைக்குழுவினரிடம் மூன்றுவிதமான அரசியல் திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

  1. டி.எஸ். சேனநாயக்காவினுடைய முயற்சியினால் சேர்.ஐவர் ஜெனிங்ஸ் அவர்களினால் தயாரிக்கப்பட்ட ‘மந்திரிகள் நகல் திட்டம்’
  2. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களைத் தலைவராகக் கொண்ட அவரால் அகில இலங்கை தமிழ் காங்கிரசினால் தயாரிக்கப்பட்ட 50:50 எனும் பிரதிநிதித்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட அரசியல் திட்டம்.
  3. மகாதேவா குழுவினரால் தயாரிக்கப்பட்ட 60:40 எனும் பிரதிநிதித்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட அரசியல் திட்டம்.

சோல்பரி ஆணைக்குழுவினர் அகில இலங்கை தமிழ் காங்கிரசினால் தயாரிக்கப்பட்ட அரசியல் திட்டம் 12 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்ததால் அதனை நிராகரித்தனர். இது போன்றே மகாதேவா அவர்களினால் தயாரிக்கப்பட்ட திட்டத்தினையும் நிராகரித்தனர். சட்டசபையில் 2/3 பெரும்பான்மையினைப் பெற்றிருந்த மந்திரிகள் நகல் திட்டத்தினை ஏற்று அதனை சீர்திருத்தி சமர்ப்பித்தனர்.

இதில் கவனிக்கத்தக்க விடயம் சிங்கள மகாசபையை ஆரம்பித்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவோ அல்லது தொழிற்சங்கவாதியாக இருந்து சிங்கள இனவாதம் பேசிய ஏ.ஈ.குணசிங்காவோ எந்தவிதமான அரசியல் திட்டங்களையும் தயாரிக்கவும் இல்லை. சோல்பரிக்குழுவினரை சந்திக்கவும் இல்லை. இது டி.எஸ்.சேனநாயக்கவுக்கு தகுந்த புறச்சூழ்நிலையினை வழங்கியிருந்தது என்பதேயாகும்.

ஆனால் தமிழர்கள் அகவயரீதியாகவும் புறவயரீதியாகவும் முரண்பட்ட சூழ்நிலைகளுடனேயே சோல்பரிக்குழுவினரை எதிர்கொண்டிருக்கின்றார்கள். இந்த முரண்பாடுகளுடன்தான் ஏற்றுக்கொள்ளமுடியாத 50:50 எனும் கோரிக்கைக்கு ஆதரவு தேடி ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் பிரித்தானியா சென்றிருந்தார். அப்போது சோல்பரி அரசியல் திட்டம் அரசாங்க சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஆதரித்து டி.எஸ்.சேனநாயக்கா பின்வருமாறு உரையாற்றினார்.

“எமது நோக்கங்களின் நேர்மையை எந்த நியாயமான மனிதனும் சந்தேகிக்க மாட்டான். சிறுபான்மையினருக்கு அவர்களுக்குக் கிடைக்க வேண்டியதிலும் பார்க்க அதிக பங்கு கிடைக்கக்கூடிய திட்டம் ஒன்றைத் தயாரித்தோம். அவர்களுக்குப் பாதகம் விளைவிக்கும் சட்டங்கள் இயற்ற முடியாத ஒழுங்குகளைச் செய்துள்ளோம். கவர்னர் ஜெனரல் பக்கச் சார்பற்ற வகையில் நடப்பார் என்று சிறுபான்மையினர் கருதுவதால், அவரிடம் முக்கிய அதிகாரங்களைக் கொடுத்தோம். தமக்குப் பாதுகாப்பளிப்பதற்குத் தேவை எனச் சிறுபான்மையினர் கோரிய சுதந்திரமான அரசாங்க சேவைக் கமிஷனையும் கொடுக்க முடிவுசெய்துள்ளோம்.” (மேற்கோள்.த.சபாரெத்தினம்) என மிக நம்பகமான உரையொன்றினை ஆற்றியிருந்தார்.

இத்திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 51 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 3பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஆதரித்து வாக்களித்தவர்களில் 5 பேர் தமிழர், 3 பேர் முஸ்லீம்கள், 4 பேர் ஐரோப்பியர்கள், ஒருவர் பறங்கியர். எதிர்த்து வாக்களித்தவர்களில் ஒருவர் சிங்களவர், இரண்டு பேர் இந்தியத் தமிழர். ஆதரித்து வாக்களித்தவர்களில் முக்கியமானவர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கோரிக்கைக்கு பக்கபலமாக இருந்த திரு.அ.மகாதேவா ஆவார். அரசாங்க சபையில் இருந்த தமிழ்ப்பிரதிநிதிகளே 50:50 கோரிக்கையினை ஏற்காதநிலையில் பிரித்தானிய அரசும் ஜீ.ஜீ.யின் கோரிக்கையினை மிக இலகுவாக புறந்தள்ளிவிட்டது. 50:50 நிராகரிக்கப்பட்டால் மாற்றுவழியாக எதை முன்வைப்பது என்பது தொடர்பாகவும் தமிழர்கள் தலைசிறந்த அறிவாளிகள் எனக் கருதிய இந்த அறிவாளிகளிடம் திட்டமேதும் இருக்கவில்லை.

தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழரசுக் கட்சியை ஆரம்பித்ததன் பின் நடந்த முதலாவது பொதுக்கூட்டத்தில் தந்தை செல்வநாயகம் 50:50 கோரிக்கை தொடர்பாக பின்வருமாறு உரையாற்றினார். “தமிழ்த் தலைவர்கள் இதுகால வரை ஸ்திரமற்ற எதிர்மறைக்கொள்கையையே பின்பற்றி வந்தனர். குறைந்த விகிதாசாரத்தையுடைய சிறுபான்மை மக்களுக்கு கூடிய விகிதாசாரப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கோரினர். நாங்கள் சிங்களவராகப் பிறந்திருந்தால் அக்கோரிக்கைக்கு இணங்கியிருப்போமா? நான் நிச்சயமாக இணங்கியிருக்கமாட்டேன். தமிழர்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையினராக இருந்து சிங்களவர் சிறுபான்மையினராக இருந்து சிங்களவர்கள் எமது தலைவர்கள் கோரிய ஐம்பதுக்கைம்பதைக் கோரியிருந்தால் நாங்கள் அதற்கு இணங்கியிருப்போமா? நிச்சயமாக இணங்கியிருக்கமாட்டோம். ஐம்பதுக்கைம்பது நியாயமான கோரிக்கையுமல்ல. நடைமுறைப்படுத்தத்தக்க கோரிக்கையுமல்ல. அப்போதைய தமிழ்த் தலைவர்கள் நடைமுறைக்கொத்த மாற்றுத் திட்டத்தை முன்வைத்திருந்தார்களானால் பிரிட்டிஷ் அரசு அதை ஆதரவுடன் பரிசீலித்திருக்கும்” (மேற்கோள்.த.சபாரெத்தினம்)

இவ்வாறு யதார்த்தபூர்வமாக உரையாற்றிய எஸ்.ஜே.வி.செல்வநாயம் அவர்கள்தான், ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களது 50:50 கோரிக்கைக்கு பக்கபலமாக இருந்ததோடு திரு.பொன்னம்பலத்துடன் இணைந்து சோல்பரி ஆணைக்குழுவினரிடம் அக் கோரிக்கையினை முன்வைத்து சாடட்சியமளித்தும் இருந்தார்கள். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் அது அது நடைமுறைக்கு உதவாத ஒரு திட்டம் என செல்வநாயகம் அவர்கள் கூறுவது அவருடைய அரசியல் நேர்மையீனத்தை அல்லது தமது தவறை சுயவிமர்சனம் செய்யாத நிலையினைக் காட்டுகின்றது.

தமிழ் உயர் வர்க்கத்தினர் எப்போதும் மற்றவர்களை விட தாம்தான் அறிவாளிகள் திறன்மிகுந்தவர்கள் என்ற கற்பனை மிகுதியில் வாழ்ந்துகொண்டு தமது ஆதிக்க மனோபாவத்தை நிலைநாட்டுவதில் அக்கறையாக இருக்கிறார்களே தவிர சந்தர்ப்பத்துக்கு ஏற்ப அகப் புறச் சூழ்நிலைகளை கையாண்டு தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் எப்போதும் தவறிழைத்தே வந்திருக்கிறார்கள் என்பதற்கு சோல்பரிக் குழுவினர் விடயத்தில் அவர்கள் நடந்து கொண்டமையும் ஓர் உதாரணமாகும்.

தொடரும்.