தமிழ் அரசியலுக்கான மாற்றுத் தலைமை – மடிக்குள்ளேயே மருந்து

(கருணாகரன்)

அவருக்கு வயது, 68. பெயர், சிவராஜா. கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் தச்சுத் தொழில் செய்கிறார். அவருடைய நான்கு பிள்ளைகளில் ஒருவர் 2007 இல் விடுதலைப் புலிகளால் இயக்கத்தில் இணைக்கப்பட்டு 2009 இல் காணாமல் போய்விட்டார். இது இப்போது இந்தக் குடும்பத்தின் முக்கியமான பிரச்சினையாகி விட்டது. பாதி நேரம் காணாமல் போனவரைத் தேடுவதற்கே செலவாகிறது. இதனால், முன்னரைப்போல அவரால் ஒழுங்காகத் தொழில் செய்ய முடிவதில்லை. மனச்சோர்வும் இடைக்கிடை ஏற்படுவதுண்டு. காணாமல் போன மகன் அவருக்கு உதவியாக வேலை செய்தவர். ஆகவே அவன் இல்லாத நிலையை உணரும்போது மனம் சோர்ந்து விடும்.

காணாமல் போன மகனைப் பற்றி, அரசியல்வாதிகள், படைத்தரப்பு, பொலிஸ் நிலையம், பரணவிதான ஆணைக்குழு, LLRC, மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கம் என எல்லா இடத்திலும் முறைப்பாட்டைப் பதிவு செய்திருக்கிறார். போதாக்குறைக்கு ஜனாதிபதிக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் கடிதங்கள் எழுதியிருக்கிறார். எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் மகனைப் பற்றியே கதைப்பார். அப்படி மகனைப்பற்றிய கதை வரும்போது, அது அப்படியே அரசியலின் பக்கமாகச் செல்லும். ஏற்கனவே இருந்த அரசியல் அவதான அறிவோடு, மகனைத் தேடத் தொடங்கிய பிறகு, கிடைத்த அனுபவங்கள் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் அறிவையும் பகிர்ந்து கொள்வார்.

இப்படித்தான் கடந்த வாரம் அவர் வந்திருந்தபோது, தமிழ்ச் சூழலில் மாற்றுத் தலைமையைப் பற்றிய கதை வந்தது. அப்பொழுது கேட்டார், “மடிக்குள்ளே மருந்திருக்கும்போது மலையெல்லாம் ஏன் தேடவேணும்?” என்று.

தொடர்ந்தும் அவரையே ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தேன். சிரித்தவாறு மீண்டும் அவரே சொன்னார்,

“எங்கட ஆக்களுக்கு எப்பவும் வானத்தை அண்ணாந்து பார்க்கிற பழக்கந்தானே! தலைமை எண்டால், அதுக்குப் பெரிசாகப் படிச்ச ஆட்களே தோது எண்டுதான் நினைச்சுக் கொண்டிருக்கினம். அவைக்கு அப்பிடியான ஆட்கள்தான் வரோணும். அது எங்கயிருந்தெண்டாலும் சரி. அப்பிடி வாற ஆட்கள் (படித்த மேதாவிகள்) இதுவரையில என்ன செய்திருக்கினம் எண்டதைப் பற்றியோ, என்ன செய்யக் கூடியவை எண்டதைப் பற்றியோ ஒருநாளும் சிந்திக்கிறேல்ல. சும்மா, வாயால ஆட்லறி அடிக்கிறமாதிரி, எப்பவும் அரசாங்கத்துக்கு எதிர்ப்புக் காட்டி, நாலு வாணம் விட்டால் போதும். இல்லாட்டிக்கு வெளிநாட்டில இருந்து வாற போற வெள்ளைக்காருக்கும் இந்தியாவுக்கும் எதையாவது முறையிட்டால் சரி. இவ்வளவுதான் தமிழற்றை அரசியல். இதுக்குச் சம்மந்தனும் சுமந்திரனும் தோதுப்படேல்ல எண்டு, விக்கினேஸ்வரனைத் தூக்கிப் பிடிச்சினம். அவரலாயும் இப்ப ஏலாமப் போயிட்டு. இதால இப்ப வேறயொரு மாற்றுத்தலைமை வேணுமெண்டு கேட்கினம்? இதை இப்ப இருக்கிறவை செய்தாலென்ன? இனி வரப்போறவை செய்தாலென்ன? எல்லாம் ஒண்டுதான்.

“இப்பிடித்தான் வெளியில இருந்து தீர்வு வரும், தீர்வுக்கு அழுத்தம் வரும்? எண்டெல்லாம் ஆண்டுக் கணக்கில வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கினம். போதாக்குறைக்கு தங்களைப் போலச் சனங்களையும் நம்ப வைச்சினம். கடைசியில என்ன நடந்திருக்கு? எல்லாரும் கையைக் கழுவி விட்டான்கள். இப்ப இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசியலமைப்பை புதிசா உருவாக்க வேணும் எண்டு சொல்லி, அதையும் அரசாங்கத்தின்ரை கையிலயே குடுத்திருக்குது இந்த வெளிநாடுகள். நாங்கள் இப்ப வெறுங்கையைப் பிசைஞ்சு கொண்டிருக்கிறம்.

“ஏன், இங்க ஊர்வழிய இருக்கிற சனங்களுக்கை இருந்து உண்மையான கொள்கைப் பிடிப்போட அரசியல் செய்யிறதுக்கு ஆரும் இல்லையோ? அப்பிடிச் சனங்களுக்கை இருந்து மாற்றுத் தலைமையாக வரக்கூடிய ஆட்கள் எண்டு ஆரும் கிடையாதோ? இல்லை, மெய்யாத்தான் கேட்கிறன், உங்கட மகன், அந்தா, அந்த வீட்டுப் பிள்ளை, இப்பிடியே எங்கட சமூகத்துக்குள்ள இருக்கிற இளைய தலைமுறையைச் சேர்ந்த எத்தனையோ பிள்ளைகள், நேர்மையாக இந்தச் சமூகத்துக்காக உழைக்கிறதுக்குத் தயாராக இருக்குதுகள். அதுகளிட்ட நல்ல அர்ப்பணிப்பான உணர்வும் இருக்கு. கெட்டித்தனமும் ஆற்றலும் இருக்கு. எவ்வளவு ஆளுமையான பிள்ளையள் சந்தர்ப்பம் கிடைக்காமலிருக்குதுகள். ஆனால், இவையள் அதுகளை நம்பிறேல்ல. அதுகளுக்கு வாய்ப்புக் குடுக்கவும் மாட்டினம். உண்மையாகத்தான் கேட்கிறேன், இந்தப் பெரிய படிச்ச ஆட்கள், அரசியல்வாதிகள் எல்லாம் இருக்கேக்கதானே, ஆயிரக்கணக்கான பெடியள் போராடினவங்கள். அப்ப இவையெல்லாம் எங்க போய்ச்சினம்? அப்பிடிப் போராடினதாலதான் இண்டைக்கு இந்தளவிலயாவது எங்கட பிரச்சினை பேசப்படுகிற அளவுக்கிருக்கு. இல்லையெண்டால், நாயும் எங்களைக் கணக்கில எடுத்திருக்காது. அவங்கள் செய்த வேலையில் ஒரு துரும்பளவு வேலையைக் கூட இவை செய்திருக்க மாட்டினம்.

சின்னப் பெடியளாக இருக்கேக்கதான், சிவகுமாரனும் பிரபாகரனும் பாலகுமாரனும் பத்மநாபாவும் உமாமகேஸ்வரனும் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனும் விசுவானந்ததேவனும் வரதராஜப் பெருமாளும் போராட வந்தவங்கள். அப்ப ஒவ்வொருத்தருக்கும் என்ன வயசிருக்கும்? 18, 20, மிஞ்சிப்போனால், 25 க்குள்ளதானே. அவங்கள் போராட்டத்தை நடத்தேல்லையா? போராட்டத்துக்குத் தலைமை தாங்கேல்லையா? இலங்கை அரசாங்கத்தை ஆட்டம் காண வைக்கேல்லையா? சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்கேல்லையா? இந்தியாவின்ரை மத்தியஸ்தத்தோட பேச்சுவார்த்தை நடத்திறதுக்கு அவங்கட போராட்டம்தானே காரணமாக இருந்தது? ஏன், பிறகுகூட நோர்வேயின்ரை மத்தியஸ்த்தோட வெளிநாடுகளில நடந்த பேச்சுகளுக்கும் பெடியளின்ரை போராட்டம்தானே காரணம்?

“இதைவிடப் படிச்சாக்கள் இதுவரையில என்ன செய்து கிழிச்சிருக்கினம்? கொழும்பிலயும் வெளிநாடுகளிலயும் தங்கட வசதி, வாய்ப்புகளைப் பெருக்கினதைத் தவிர, சனங்களுக்கு என்னத்தப் பெரிசாச் செய்து குடுத்திருக்கினம்….?” என்று.

மிகச் சாதாரணமான ஒருவரின் அரசியல் அவதானம் இது. இதைப் பற்றிய விவாதங்கள், மாற்றுக் கருத்துகள் எல்லாம் உள்ளன. ஆனால், அதற்காக இவர் சொல்வதிலுள்ள நியாயத்தை யாரும் புறக்கணிக்க முடியாது.

நான்கூட மாற்றுத் தலைமையைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் நான்கைந்து கட்டுரை எழுதியிருக்கிறேன். ஆனால், இவரோ மிக எளிமையாக மாற்றுத் தலைமை எங்கிருந்து உருவாக வேண்டும் என்ற விடயத்தைக் கண்டு பிடித்து விட்டார்.

அதுதான் அவர் குறிப்பிட்ட “மடிக்குள் மருந்திருக்கும்போது மலையேறித் தேடவேண்டியில்லை” என்பது. இந்த மலையேற்றம் என்பது சிரமத்தைக் குறிப்பதாகும். எங்களிற் பலரும் மாற்றுத் தலைமையாக யாரை அடையாளப்படுத்தலாம்? யாரை ஏற்றுக்கொள்ளலாம்? என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும்போது, மிக எளிதாகவே தெரிவைச் செய்யத் துணிகிறது இந்த மனம். இது யதார்த்தத்தையும் உண்மையையும் விளங்கிக்கொண்ட, அதில் அடித்தளத்தைக் கொண்ட வாழ்க்கை அமைப்பிலிருந்து உருவாகிய மனம். ஆகவே, இவருக்கு யதார்த்தம் புலப்படுகிறது. உண்மை பளிச்செனத் தெரிகிறது. ஏனையவர்களுடையது, வானம் பார்த்த புமியைப் போன்றது. ஆகவே, அவர்கள் “தேவன் வருகை”க்காகக் காத்திருக்க வேண்டியதுதான். கற்பனைக் குதிரையில் சவாரி விடுவது.

ஆக, நமக்குப் பொருத்தமானவர்கள். நம்முடைய பிரச்சினைகளைப் புரிந்தவர்கள். நம்முடைய வலியை உணர்ந்தவர்கள். அதைத் தீர்த்து வைப்பதற்கு விசுவாசமாகவே பாடுபடக்கூடியவர்கள் நம்முடனேயே இருக்கிறார்கள். அவர்களை நாம் கண்டறியவோ, ஏற்றுக்கொள்ளவோ தயாரில்லை என்பதே இங்கே கவனிக்க வேண்டியது.

இதை இன்னும் சற்றுக் கூராகச் சொன்னால், நாம் நம்முடைய பிள்ளைகளை, தம்பி, தங்கையரை, நண்பர்களை, சகோதரர்களை, அயலவரை எல்லாம் நம்பத்தயாராக இல்லை. ஆனால், யதார்த்தம் அவர்களையே நம்பச் சொல்கிறது. அதற்கு அவர்களுடைய ஆற்றலிலும் ஆளுமையிலும் அரசியல் ஈடுபாட்டிலும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதை மதிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான போராளிகள் நம்முடைய சூழலில் இருந்து, எங்களுடைய குடும்பங்களிலிருந்தே போராடச் சென்றனர். எங்களுடைய கண்களுக்கு முன்பாகவே, அவர்கள் பெரும் சாதனையாளர்களாக வளர்ச்சியடைந்தார்கள். பெருஞ்செயல்களையெல்லாம் செய்தனர். இதனால், சனங்களிடம் மதிப்பையும் அன்பையும் பெற்றார்கள். சனங்களின் மனதிலே நீங்காத இடத்தைப் பிடித்தார்கள். அப்படி இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் எங்களிடமும் எங்களைச் சூழவுமிருக்கிறார்கள்.

உண்மையில் ஒரு தலைமை என்பது வேறு எங்கோ இருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை. அப்படி இறக்குமதி செய்யப்படும் தலைமைகள் மெய்யாகவே மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, அவற்றைத் தீர்ப்பதற்காக முயற்சிப்பதுமில்லை. மிகச் சிறந்த அண்மைய உதாரணம், வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். அவரிடம் பல நற்பண்புகள் உண்டு. படித்தவர். நீதியரசராக உயர் பதவி வகித்தவர். ஆனால், அரசியற் தலைமைக்கும் மக்களுக்கான செயற்பாட்டுக்கும் அவர் பொருத்தமானவரல்ல. அதற்கான கள அனுபவமோ வாழ்க்கை ஒழுக்கமோ அவரிடமில்லை. அப்படியான நிலையில் அவரைப் பிடித்து இதைச் செய்யுங்கள் என்று வற்புறுத்துவது தவறே. இதற்குக் காரணம், அவரை அவருக்குப் பொருத்தமில்லாத பதவிக்கு அழைத்து வந்து அமர்த்தியதே. அவரும் அதற்குச் சம்மதித்து வந்திருக்கக் கூடாது. பதிலாக அவர் சட்ட ஆலோசனைகளை வழங்குபவராக, பின்னூட்டம் செய்கின்றவராக இருந்திருக்க வேண்டும. அதுவே பயனுள்ளது.

மக்களுக்குரிய தலைமை என்பது மக்களுக்கான செயற்பாடுகளின் வழியாக உருவாகுவதாகும். களத்தில் செயற்படும்போது எதிர்கொள்ளப்படும் நடைமுறை அனுபவங்களின் தொகுப்பாக இந்த உருவாக்கம் நிகழும். இதனால், எந்தப் பிரச்சினைகளையும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை அது பெற்றுக் கொள்கிறது. இது தன்னியல்பில் தலைமைக்குரிய, செயற்பாட்டுத்திறனுக்குரிய நிபுணத்துவத்தை வழங்குகிறது. இதனால்தான் களச் செயற்பாடுகளின் வழியாகச் சிறந்த தலைமைகள் உருவாகின்றன. உலகத்தின் அத்தனை சிறந்த தலைமைகளிலும் இந்தப் பண்பையும் இந்த அடிப்படையையும் நீங்கள் காணமுடியும்.

ஆகவே, செயற்படும் தரப்புகளிலிருந்தே நாம் நமக்கான தலைமையை – மாற்றுத் தலைமையைக் கண்டறிய வேண்டும். மலையேறித் தேடுவதாலும் வானத்தை அண்ணாந்து பார்ப்பதாலும் எந்தவொரு “அற்புதமான தலைமை” யும் கிடைத்து விடாது. அது மேலே போகிற பிசாசை ஏணி வைத்து இறக்குவதாகவே அமையும்.

எனவே அந்தக் காணாமல் போன மகனின் தந்தையாகிய மிக எளிய மனிதர் சொன்னதைப்போல, மடிக்குள்ளே மருந்திருக்கும்போது மலையெல்லாம் அலைந்து மருந்து தேடுகிற வீண் முயற்சிகளை விட்டு விட்டு, உருப்படியான தலைமையை இனங்காண முயற்சிப்போம். “கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவர்களையெல்லாம் கூடுதலாக நம்பி, நம்மை இவர்கள், வானமேறி வைகுண்டத்திற்குக் கொண்டு போவார்கள் என்று எண்ணுவதை விடுவோம்.

தமிழரின் அரசியலை வினைத்திறனோடு முன்னெடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான தலைமை வேணும் என்று இனியும் விளம்பரம் செய்யத் தேவையில்லை. தொடர்ந்தும் மாயமான்களைத் தேடி அலைந்து கொண்டிருக்க முடியாது. ஆனால், இன்னும் சிலர் இதையெல்லாம் புரிந்து கொள்ள முற்படாமல், யாரையெல்லாமோ கெஞ்சுகிறார்கள். கொஞ்சக் காலமாக வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அமத்திப் பிடித்துத் தலைப்பாகை கட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். சிலர் விக்கினேஸ்வரனுக்கு முடிசூட்டுவதற்கு முயற்சித்தனர்.

அவரோ “பிச்சை வேண்டாம், நாயைப் பிடியுங்கள்” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கிறார். என்றாலும் இவர்கள் விடுவதாயில்லை. எப்படியாவது “தலையைப் பிடித்து முடியைக் கொழுவி விடுவது” என்றே முடிவெடுத்திருக்கிறார்கள்.

அவரால்தான் என்ன செய்ய முடியும்? ஏறிய பனையே வட்டுக் கொள்ளவில்லை. இதற்குள் இன்னொரு பனையில் ஏறமுடியுமா? என்ற அதிர்ச்சியில் உள்ளார்.

ஏற்கனவே அடிக்கடி நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், மனக்குழப்பம், நினைவு மறதி என்று தடுமாறிக் கொண்டிருக்கும் விக்கினேஸ்வரனுக்கு மாகாணசபையின் தலைமைப்பொறுப்பே பெரும் சோதனையும் வாதையுமாக உள்ளது. இதற்குள் இன்னொரு தலைமை ஏற்பா? “வேண்டாம் சாமீ. ஆளை விடுங்கள். பேசாமல் கொழும்பிலோ வேறு வசதியான எங்கோ ஓரிடத்திலோ சத்தமில்லாமல் ஓய்ந்திருக்கவே விரும்புகிறேன். அல்லது கம்பன் கழகத்திலோ தமிழ்ச்சங்கத்திலோ பொழுதைப் போக்கிக் கொள்கிறேன். அதுவுமில்லையென்றால், எங்காவது ஆசிரமம் ஒன்றில் தஞ்சமடைந்து விடுகிறேன். அதைக் கெடுத்து விடாதீர்கள்” என்று தனக்கு நெருங்கிய சகாக்களிடம் அழாக்குறையாக வாய்விட்டே சொல்லியிருப்பதாகத் தகவல்.

இன்னொரு தரப்பினர், விக்கினேஸ்வரனுக்கு எதிராக அல்லது சவாலாக இன்னொரு நீதிபதியைக் களமிறக்க முயன்று கொண்டிருக்கிறது. அதைப் பற்றிய கனவுகளில் அது மிதக்கிறது. இதற்காக நீதிபதிகள் ஸ்ரீபவன், இளஞ்செழியனின் பெயர்கள் காற்றில் விடப்பட்டுள்ளன. இவர்களுக்கு அரசியல் ஆசையை ஊட்டும்விதமாக இவர்களுடைய வீடுகளுக்கும் பணிமனைக்குமாக மாறி மாறித்திரிந்து கொண்டிருக்கின்றார்கள் இந்தத் “தலை”மை விரும்பிகள். இது சும்மா கிடக்கும் சங்கினை ஊதிக் கெடுக்கிற முயற்சியாகவே அமையும்.

இப்படியே உண்மையைக் கண்டறிய முடியாதவர்கள், மாற்றுத் தலைமை என்ற பேரில் முன்னதை விட இன்னும் மோசமான முறையில், விக்கினேஸ்வரன், ஸ்ரீபவன், கஜேந்திரகுமார், இளஞ்செழியன் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரை அடையாளப்படுத்துகிறார்கள். இது இவர்களுடைய விருப்பம். அல்லது நம்பிக்கை. அல்லது அவதானம். அல்லது தேர்வு என்று வைத்துக் கொள்ளலாம். அல்லது இது போல ஏதோ ஒன்று என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால், இவர்களெல்லாம் தமிழ்ச்சமூகத்துக்குரிய மருந்துகளே அல்ல. அது உங்கள் மடிக்குள்ளேயே, நல்ல மனசுக்குள்ளேயே இருக்கிறது.

“கையிலே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதை” வேண்டாம்.