தமிழ் அரசியல் கட்சிகளின் தலைகீழ் நிலை!

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு ஒற்றுமையின்மையைக் காரணமாகக் கூறும் இவர்கள், மறுபக்கத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற வெளிநாடுகளும், ஐ.நா. மனித உரிமைப் பேரவை போன்ற அமைப்புகளும் வந்து தலையிட்டு இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

அப்படியானால் எது சரி? தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வந்துவிட்டால் மட்டும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடப் போதுமா? அல்லது வெளிநாடுகள் வந்துதான் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டுமா? எது சரி?

இன்னும் ஒரு பிரச்சினையிலும் இவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. அதாவது, தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு என்ன விதமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் இவர்கள் மத்தியில் ஒத்த கருத்துக் கிடையாது. சிலர் தனித் தமிழீழம்தான் ஒரேயொரு தீர்வு என்கின்றனர். வேறு சிலர் ஒன்றுபட்ட இலங்கை;குள் சமஸ்டி முறையிலான தீர்வே வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறையே பொருத்தமான தீர்வு என்கின்றனர்.

மாகாண சபை முறை அமுலாக்கப்பட்ட போது அதை எதிர்த்த புலிகள், அதன் அமுலாக்கத்தை உறுதிப்படுத்த வந்த இந்திய அமைதிப்படையுடன் போர் புரிந்து, பிரேமதாச அரசு மூலம் அந்தப் படையைத் திருப்பி அனுப்ப வைத்ததோடு, அவர் மூலம் வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த மாகாண சபையையும் இயங்கவிடாமல் செய்தனர். பின்னர் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிய பிரேமதாசவையும் கொலை செய்து தமது ‘நன்றிக் கடனையும்’ தீர்த்துக் கொண்டனர்.

புலிகளின் வழியைப் பின்பற்றிய தமிழ் அரசியல் கட்சிகளும் “மாகாண சபை முறை தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வல்ல” என்று சொல்லி அதை முற்றாக நிராகரித்தனர். அவ்வாறு சொல்லிக் கொண்டே மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு பதவிகளையும் சலுகைகளையும் சம்பளங்களையும் பெற்றுக் கொண்டனர். இருந்தும் அந்த மாகாண சபைகளை முழு அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தாது, அதைவிட வேறொரு தீர்வு வேணும் என்கிறார்கள். அந்த வேறு ஒரு தீர்வு என்ன என்பதையும் தெளிவாக முன்வைக்கிறார்கள் இல்லை. அதே நேரத்தில் அரசாங்கம் மாகாண சபை முறையை இல்லாமல் செய்யப் போகின்றது என்ற கதை எழுந்தவுடன், “ஐயோ மாகாண சபைகளை இல்லாமல் செய்யப் போகிறார்களே” எனக் கூப்பாடும் போடுகிறார்கள். இவர்களது நிலைதான் என்ன?

அதாவது, இனப் பிரச்சினைக்கு இவர்களது தீர்வுதான் என்ன? தனித் தமிழ் ஈழமா? சமஸ்டியா? அல்லது மாகாண சபை முறைமையா?
இனப் பிரச்சினை தீர்வின்றி இழுபடுவதற்கு என்னென்னவோ காரணங்களையும், நாட்டுக்கு வெளியே யார் யாருடையவோ உதவிகளையும் தேடும் நாடும் இவர்கள், இலங்கையின் சனத்தொகையில் 72 சத வீதமான சிங்கள மக்களின் ஆதரவைப் பெறாமல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை உணர்ந்து அந்த மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கான, ஜனநாயக சிந்தனையுள்ள அரசியல் சக்திகளின் ஆதரவைப் பெறுவது பற்றி எள்ளளவும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

அதேபோல, வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி வேணும் என்று கோருகின்ற இவர்கள், வடக்கு கிழக்கில் தமிழர்களோடு இணைந்து வாழுகின்ற முஸ்லீம் இனத்தின் ஆதரவை வென்றெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் இல்லை.

எனவே, தவறான அரசியல் நிலைப்பாட்டையும், அணுகுமுறைகளையும் வைத்துக்கொண்டு, ஒற்றுமையின்மையும், வெளிநாட்டுத் தலையீடும் இல்லாதபடியால்தான் இனப் பிரச்சினை இன்னும் தீராமல் இருப்பதற்குக் காரணங்கள் என்று சொல்லும் வரை, இனப் பிரச்சினை ஒருபோதும் தீரப் போவதில்லை. வேணுமானால் பிச்சைக்காரனின் புண்ணைப் போல அதைத் தீராமல் வைத்துக் கொண்டு, அதைக் காலங்காலமாகக் காட்டி வாக்குப் பிச்சை கேட்டு, அதன் மூலம் பதவிச் சுகங்களை பெற்று அனுபவிக்கலாம். அதுதான் இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் தமிழ்த் தலைமைகளின் பாரம்பரிய நடைமுறையாக இருந்து வருகிறது.

முதலில் நீங்கள் சரியான இலக்கை நோக்கிப் போவதற்கான, சரியான தடத்தில்தான் நிற்கிறீர்களா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். காங்கேசன்துறை நோக்கி தண்டவாளத்தில் நிற்கும் புகையிரதம் ஒன்று கொழும்பை நோக்கிச் செல்வதாக சொல்லிக் கொண்டாலும், இறுதியில் அது கொழும்பு செல்லாது காங்கேசன்துறைக்குத்தான் சென்றடையும் என்ற நிலையில்தான் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலையும் இருக்கின்றது. எப்பொழுதுதான் இவர்களது மண்டைகளுக்குள் உள்ள மூளைகள் சரியாக வேலை செய்யப் போகின்றனவோ?