இவை குறித்து மேலோட்டமாகப் பார்த்தால் அவை நம்பிக்கை தருவனவாக இல்லை. மிக ஆழமான தலையீட்டின் அவசியத்தை உணர்த்துகின்றன. தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சனத்தொகைப் பலம் மிகவும் குறைந்துள்ளது. காலம் காலமாக இப் பிரதேசங்களில் செயற்பட்ட தனித்துவமான சமூக கட்டுமானங்கள் செயலிழந்துள்ளன. கல்வித் தளம் மிகவும் வேதனை தருவதாக உள்ளது. உள்ளுர் பொருளாதார உற்பத்தித் துறைகள் மிகவும் பலவீனமாகியுள்ளன. மீன்பிடித் தொழில் என்பது மிகவும் சுருங்கியுள்ளதோடு, அடுத்த தலைமுறையினர் அத் தொழிலைத் தொடர்வார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. தற்போதைய இளம் தலைமுறையினரின் உளவியல் போக்கு மிகவும் மாற்றமடைந்துள்ளது. வெளிநாட்டு வருமானமும், திறந்த பொருளாதார வருகையும் ஒரு நுகர்வோர் சமூகமாக அவர்களை மாற்றியுள்ளது. வெளிநாட்டு வருமானங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கும் முயற்சிகள் குறைவடைந்துள்ளதால் இப் பகுதிகளின் பொருளாதாரம் என்பது குமிழ் பொருளாதாரமாக (Bubble economy) உள்ளது. அதாவது சுழற்சியிலுள்ள பணம் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படாமல், நுகர்ச்சிக்குச் செலவாகும்போது ஏற்படும் தாக்கம் குறித்து கல்விமான்களோ, அரசியல்வாதிகளோ கவலைப்படுவதாகவோ அல்லது எச்சரிப்பதாகவோ இல்லை. கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்தி கடைகளும், வீடுகளும், போக்குவரத்து சொகுசு வாகனங்களும் அதிகரிக்கலாம். இவை வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் காட்டலாம். ஆனால் வெளிநாட்டு வருமானம் என்பது நிச்சயமற்றது என்பதால் அவை குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் இவை தற்காலிகமாக ஓர் வளர்ச்சி போல குமிழ் போல காணப்படலாம். ஆனால் அவை குறைவடையும்போது பாரிய சமூக நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏனெனில் வருமானப் பற்றாக்குறை வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும்போது சமூக நெருக்கடிகள் கூடவே ஆரம்பிக்கின்றன. இதுவே மேற்கு நாடுகளின் அனுபவமாக உள்ளது. இதற்குப் பிரதான காரணம் இப் பிரதேசங்களுக்கான சுயாதீன பொருளாதாரக் கட்டுமானங்களின் பற்றாக்குறையாகும்.
பொருளாதார அடிப்படைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
இப் பற்றாக்குறைப் பொருளாதாரம் புதிய நிலமைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சேவைத் துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நுகர்ச்சி அதிகரிப்புக் காரணமாக வியாபார நிறுவனங்களின் வளர்ச்சி, உல்லாசப் பயணத்துறை காரணமாக ஹோட்டல் மற்றும் உணவு விடுதிகளின் அதிகரிப்பு என்பது சேவைத்துறையில் வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளது. இதனால் பாரம்பரிய விவசாய நடவடிக்கைகள் கைவிடப்பட்டு சேவைத்துறையில் பலர் இணைவதால் விவசாயத்துடன் சார்ந்த கலாச்சார பாரம்பரியங்களும் படிப்படியாக மறைந்து செல்கிறது.
வலுவிழந்த தேசியக் கோட்பாடு
மேலே குறிப்பிட்ட விபரங்களை ஆராயும்போது தமிழ்த் தேசியம் என அழைக்கப்படும் கோட்பாடு அதன் உள்ளடக்கத்தைப் படிப்படியாக தொலைத்துச் செல்வதை நாம் அவதானிக்கலாம். இதன் காரணமாக தமிழ்பேசும் மக்கள் என்ற பொது அடையாளத்திற்குள் செல்வதும் மிகவும் சிக்கலாகி வருகிறது. ஏனெனில் தமிழ் பேசும் மக்கள் என அழைக்கப்படும் சமூகப் பிரிவினரின் அபிலாஷைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதைக் காணலாம். இதன் ஓர் பக்க விளைவே 13வது திருத்த அமுலாக்கத்திற்கு ஆதரவாக எழுந்த நிலமைகள் ஈற்றில் சிதைந்து சென்றமையாகும். இப் பிரச்சனையை நாம் ஆக்கபூர்வமாக அணுகுவது அவசியமானது. குறிப்பாக மலையக மற்றும் முஸ்லீம் மக்களின் அபிலாஷைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் கவனத்திற்குரியவை. இவை தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவை என்பதை விட இச் சமூகங்களின் இருப்பு என்பது பெரும்பான்மைச் சமூகங்களின் நல்லிணக்கத்தில் தங்கியிருப்பதை அங்கீகரிப்பது அல்லது புரிந்து கொள்வது முக்கியமானது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படும் அரசியல் சக்திகள் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் காத்திரமான இணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் இந்த யதார்த்தத்தினைப் புரிந்து செயற்படுவது அவசியமானது. தமிழ்த் தேசியவாதம் என்பது அதன் அடிப்படை இலக்குகளை மாற்றுவதும், அதற்கு ஏற்றவாறான விதத்தில் கொள்கை, கோட்பாடுகளை மாற்றுவதும் தேவையாகிறது. இதனையே மூலோபாய மாற்றம் என்கிறேன். இம் மூலோபாய மாற்றத்தின் அவசியத்திற்கான சில காரணங்களை முன்வைக்கிறேன்.
– படிப்படியாக வடக்கு, கிழக்கிற்கு வெளியில் இச் சமூகங்கள் தமது இருப்பை மாற்றி வருவதோடு, முதலீடுகளையும் ஆரம்பித்துள்ளன. இம் மக்கள் தமது கல்வியையும் சிங்களத்திற்கும், ஆங்கிலத்திற்கும் மாற்றி வருகின்றனர். இவை காலப் போக்கில் எவ்வாறு ஐரோப்பிய தேசங்களில் புலம்பெயர்ந்த மக்கள் தமது கல்வியாலும், பொருளாதாரத்தாலும் படிப்படியாக உயர் கட்டுமானங்களை நோக்கி நகர்ந்தார்களோ அவ்வாறான மாற்றங்கள் அங்கும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இவை ஒரு வகையில் நேர்மறை சாதகங்களாகும்.
– சிங்கள, பௌத்த தேசியவாத உணர்வுகள் பல வகைகளில் பலமடைந்து செல்கிறது. ஒரு புறத்தில் திறந்த பொருளாதாரத்தையும், மறு புறத்தில் இவ்வாறான குறும் தேசியவாதத்தினையும் எடுத்துச் செல்ல முடியாது. ஏனெனில் சுமுகமான சந்தைப் பொருளாதாரத்திற்கு அவை மிகவும் இடையூறாகவே அமையும். இதுவே இன்று காணப்படும் பரிதாப நிலையாகும். ஓர் குறிப்பிட்ட பிரிவினர் தமது அதிகார இருப்பிற்காக இனவாதத்தைப் பேசிய போதிலும் அதிகாரக் குவிப்பும், பொருளாதாரக் குவிப்பும் அதன் பின்னணியில் செயற்படுவதை மக்கள் தற்போது தெளிவாகக் காண்கின்றனர். எனவே இனவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் அதிகார இருப்பின் ஆயுதம் என்பதும், அதனால் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மட்டுமல்ல, தேசத்தின் பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினரும் அதற்கான விலையைக் கொடுக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.
– தமிழ்த் தேசியம் என அதிகளவு அலட்டிக் கொள்கின்ற போதிலும் இத் தேசியவாதிகள் மத்தியில் குறைந்தபட்ச அளவிலான இணக்கம் இதுவரை இல்லையே! மக்கள் படும் அவதிகளுக்கு தலைமை வழங்க இதுவரை முடியவில்லையே!
– ஒரு புறத்தில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத நெருக்கடிகளும், மறு பக்கத்தில் தமிழ்த் தேசியவாத சக்திகள் மத்தியிலே போட்டி, பொறாமைகளும் அதிகரித்துள்ள நிலையில் பொது நன்மை கருதி மாற்று யுக்திகள் பற்றி விவாதிப்பது தேவையாகிறது.
தந்திரோபாய அரசியல்
இவ்வாறான சிக்கலான நிலமைகளிலிருந்து மாற்றம் தேவையாயின் தமிழ் அரசியல் தனது அரசியல் அடிப்படைகளை புதிய நிலமைகளைக் கவனத்திலெடுத்து புதிய வகையில் 21ம் நூற்றாண்டிற்கு ஏற்றவாறான புதிய அடிப்படைகளை வகுக்க வேண்டும். இங்கு இரண்டு அம்சங்கள் குறித்து இக் கட்டுரை ஆராய்கிறது. அதாவது மூலோபாய (Strategical) மாற்றம் அடுத்தது தந்திரோபாய (Tactical) மாற்றம் என்பதாகும். மூலோபாய மாற்றத்திற்கான தேவைகள், அதற்கான அடிப்படைகள் குறித்த சில அம்சங்கள் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது தந்திரோபாய மாற்றங்கள் குறித்து அணுகலாம்.
தந்திரோபாய அரசியல் முடிவுகளின் தேவை என்ன?
ஏற்கெனவே குறிப்பிட்டவாறு பார்க்கையில் நாட்டின் தமிழ்த் தலைமைகளும், ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் தலைமைகளும் அல்லது மக்கள் பிரிவினரும் மிகவும் பலவீன நிலையில் அதாவது அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படைகளில் உள்ளனர். இச் சமூகங்களுக்குத் தலைமை தாங்கும் அரசியல் தலைமைகளும் மிகவும் பலவீனமாக உள்ளன. இப் பலவீனங்கள் என்பது கட்சிகளின் உட்கட்டமைப்பு, உட்கட்சி ஜனநாயகம், ஊழல் தாக்கங்கங்கள் என்பன சில காரணிகளாகும். சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகளின் அழுத்தங்களும் குறிப்பாக சமூகங்களைப் பிளவுபடுத்தி ஆளும் போக்கு அதிகமாக உள்ளது. சமீப காலமாக ராணுவத்தின் தலையீடு பல்வேறு விதங்களில் அரச கட்டுமானங்களில் தாக்கம் செலுத்துகிறது. இவை சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகளின் கருவியாகவே செயற்படுகிறது. இவ்வாறான அரசியல் வழிமுறையின் இன்னொரு சக்தியாக பௌத்த பிக்குகளின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. அவர்களும் தமது நலன்களை இப் பிளவுகளைப் பயன்படுத்தி அதிகாரத்தின் பகுதியை அனுபவிக்கின்றனர்
இவ்வாறான போக்குகளை அரசியல் கோரிக்கைகளால் அல்லது பாராளுமன்ற உரைகளால் தடுத்துவிட முடியாது. இவை அரச நேரடி ஆதிக்கத்திற்கு வெளியில் இயங்குகின்றன. அரச அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், கட்சி ஆதரவாளர்கள் போன்ற பிரிவினரால் இயக்கப்படுகின்றன. அரச உயர்மட்டம் தெரிந்தும் தெரியாதது போல் செயற்படுகிறது. அதே வேளை பொருளாதார தாக்கங்களுக்குள் அகப்பட்டுள்ள மக்கள் இவற்றிற்கெதிராக தினமும் போராட்டம் நடத்தும் நிலையிலில்லை. இதனால் பாதிக்கப்படும் மக்கள் மட்டுமே போராடுகிறார்கள். இப் போராட்டங்கள் பரந்த மக்களின் ஆதரவைப் பெற முடியாததால் ஒடுக்கப்படுகின்றன அல்லது பலவீனமடைகின்றன. உதாரணமாக, மகாவலி ஆற்றுப் படுக்கைகளுக்கு அருகில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு உல்லாச பயணத்துறைக்கான உபசரிப்பு நிலையங்கள் கட்டப்படுகின்றன. இதனால் பல பயிர்ச் செய்கை நிலங்கள் கட்டிடங்களாக சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுகின்றன. குடிநீர் அசுத்தமாகிறது. இதனால் நெடுந்தூரம் குடிநீருக்காக மக்கள் அலைகின்றனர். இவற்றிற்கெதிராக நீதி மன்றம் சென்று போராட மக்களால் முடியவில்லை. இதுவே வடக்கு, கிழக்கிலுள்ள அழகிய கடற்கரை ஓரங்களிலுள்ள நிலங்களின் நிலையாகும். முக்கியமான கடற்கரைப் பகுதிகள் ராணுவத்தின் பாதுகாப்பு வலையங்கள் என்ற போர்வையில் முட் கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள காணிகள் பலவற்றில் ராணுவ குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் சாமான்ய வறுமைப்பட்ட மக்கள் குடியேற்றப்பட்ட நிலமைகள் மாறி ராணுவ நிரந்தர குடியிருப்புகளும், வருமானமீட்டும் தொழில் ஏற்பாடுகளும் நிறுவப்படுகின்றன. இதனால் சில தனியார் காணிகளுக்கும் பல ஆபத்துகள் உள்ளன.
ஐக்கியமும், போராட்டமும்
இவ்வாறான பல ஆபத்துகளை வெறுமனே ஆர்ப்பாட்டம் அல்லது சத்தியாக்கிரகம் நடத்தித் தடுத்துவிட முடியாது. அரசுடன் அல்லது எதிர்க்கட்சியுடன் அல்லது ஜனநாயக சக்திகளுடன் ஓர் புரிந்துணர்வுக்குச் செல்வதும், அரசாங்கத்தின் சமூக விரோத தீர்மானங்களால் பாதிக்கப்படும் மக்கள் மத்தியில் ஐக்கியம் தேவையாகிறது. கூட்டணி அமைப்பது என்பது பரஸ்பரம் நலன்களைப் பகிர்ந்து கொள்வதாகும். உதாரணமாக, முஸ்லீம் மக்களின் அல்லது மலையக மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு பலமான ஆதரவை வழங்கும்போது அவை தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கும் பலமாக அமைகின்றன. எனவே இணைந்து செயற்படக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு அதில் இணைந்து செயற்படுவதற்கான தந்திரோபாயங்களை வகுக்க முடியும். தந்திரோபாயம் என்பது பொதுவாகவே உடனடிப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளிலிருந்து ஆரம்பிக்க முடியும். இவ்வாறாக செயற்படும்போது நீண்டகாலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான புரிந்துணர்வு அங்கிருந்தே ஆரம்பிக்கிறது. அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை என்பார்கள். அது மட்டுமல்ல, அரசியல் என்பது முடிந்ததை அடைவதற்கான ஒரு கலைவடிவம் என்றே கூறுகிறார்கள்.
13வது திருத்த விவகாரம்
மேற்குறித்த கருத்துக்களை மேலும் அழுத்துவது அவசியம் என்பதால் இன்னும் சில காரணங்களைத் தருகிறேன். சமீப காலமாக தமிழ் அரசியல் தலைமைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வெளிப்படுகின்றன. உதாரணமாக, தமிழ்த் தேசிய நீக்க அரசியலை சுமந்திரன் மேற்கொள்வதாக தம்மைத் தேசியவாதிகள் எனக் கருதுவோர் குற்றம் சாட்டுகின்றனர். அவரை அரசாங்கத்தின் முகவராகவும் அடையாளப்படுத்துகின்றனர். 13வது திருத்தம் தொடர்பாக காணப்படும் விவாதங்கள் அவரை அத் திருத்தத்திற்கு எதிரான ஒருவராக காட்ட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இவ் வகை அரசியல் தமிழ் அரசியலின் கடந்தகால வாக்கு வங்கி அரசியலின் விளைபொருளாக உள்ளது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை இவ்வாறாக அவமானப்படுத்துவது தமிழரசுக் கட்சியை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானது. அவ்வாறான ஒருவர் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக செயற்படுகிறார் எனக் கருதினால் அக் கட்சியை நோக்கி விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும். பதிலாக தனி நபரை நோக்கிய விமரசனங்கள் என்பது வேறு வகையில் நோக்கப்பட வேண்டியுள்ளது. தமிழ் அரசியலில் மிகவும் காத்திரமான பாத்திரத்தை வகிக்கும் அவரின் செல்வாக்கை சிதைக்கும் நோக்கமே பின்னணியில் செயற்படுகிறது. குறிப்பாகக் கூறுவதாயின் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்தும், அரசுக்கெதிரான சர்வதேச விசாரணைகள் குறித்தும் அவரது அபிப்பிராயங்கள் வாக்குவங்கி அரசியல் நடத்துவோரின் அபிலாஷைகளுக்கு இடையூறாகவே உள்ளன. விடுதலைப்புலிகளின் குற்றங்களையும் விசாரிக்கப்படுவது தவிர்க்கமுடியாதது என்பதைப் பலரும் அறிவர். அரசாங்கத்தை மட்டும் விசாரிக்க முடியாது. பிரச்சனையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். அவர் ஒரு மனித உரிமைவாதி என்ற வகையிலும், சட்டத்தரணி என்ற வகையிலும் அவ்வாறான அபிப்பிராயத்தை வெளியிடுவதே முறையானது. என்னை விசாரிக்கும்படி நான் ஏன் கேட்கவேண்டும்? என முறையிடுவது எந்த வகையில் நீதியைக் கோருவதாகும். அரசாங்கம் தனது குற்றங்களை மறைக்க சர்வதேச நீதியரசர்கள் தேவையில்லை எனக் கூறுவது போலவே நாமும் எதையோ மறைக்க இவ்வாறான விவாதங்களை நகர்த்துகிறோம்.
சமீப காலமாக தமிழ் அரசியலில் காணப்படும் 13வது திருத்தம் தொடர்பான விவாதங்கள் கட்சிகளுக்குள் பிளவு நிலையை ஏற்படுத்துவதற்கான முன்நகர்வாகவே காணப்படுகிறது. 13வது திருத்தம் அரசியல் யாப்பின் ஒரு பிரிவாக இருப்பதாலும், அதனை உருவாக்குவதில் இந்தியா செயற்பட்டதாலும் இந்தியாவிடம் அதன் செயற்பாட்டின் அவசியத்தை வற்புறுத்துவது அவசியமானதே. ஆனால் தமிழ் அரசியல் 13வது திருத்தத்திற்கு அப்பால் வெகுதூரம் சென்றுள்ளது. பல அறிக்கைகள், அரசியல் யாப்பு யோசனைகள், சகல கட்சிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகள் எனப் பல அம்சங்களில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து சிங்கள அரசியல் தலைமைகள் விலகிச் செல்ல அனுமதிக்க முடியாது. 13வது அரசியல் யாப்பில் இருப்பதால் அதனை அமுல்படுத்துவது அரசின் கடமை. ஜனாதிபதியின் சத்தியப் பிரமாணத்தில் அரசியல் யாப்பிற்கு விசுவாசமாகச் செயற்படுவதாகவே சத்தியம் பெறப்படுகிறது. எனவே ஜனாதிபதி அரசியல் அமைப்பின் பிரகாரம் செயற்படவில்லை எனில் நீதிமன்றத்தை நோக்கிச் செல்வதே பொருத்தமானது. இந்தியா அதனை எவ்வாறு வற்புறுத்த முடியும்? ஆனால் 13வது திருத்தம் என்பது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கையால் தயாரிக்கப்பட்ட ஆவணமாகும். அப்போதைய காலகட்டத்தில் காணப்பட்ட அரசியல் நெருக்கடிகள் அவ்வாறான அரைகுறை ஆவணத்தைத் தந்திருக்கலாம். ஆனால் அது பூரணமானது அல்ல எனக் கூறி புதிய ஒன்றை வரைவதாக அரசு கூறுமானால் அது குறித்து தமிழ் அரசியல் தலைமைகள் எச்சரிக்கையோடு இந்தியாவை அணுகி அதன் தார்மீக கடமையை வற்புறுத்துவது நியாயமானதே. இருப்பினும் இந்த ஒப்பந்தம் சுமார் 40 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் இடைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் இந்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதுவே இன்று நடைபெற்றிருக்கிறது. ஆனாலும் இம் முயற்சிகளின்போது முஸ்லீம் மற்றும் மலையக கட்சிகளுடன் ஏற்பட்ட இணக்கம் என்பது 13வது திருத்த வற்புறுத்தலை விட முன்னேற்றகரமானது. அதனால் இணைந்த சகல தரப்பாரும் புதிய கோரிக்கைக்கான முயற்சியில் இறங்கி அதனை இந்தியாவிடம் கையளிப்பதற்கான தந்திரோபாயத்தை உருவாக்கியிருக்க வேண்டும்.
மாற்று ஏற்பாடு தவறவிடப்பட்டுள்ளது
அடுத்ததாக, தமிழ், முஸ்லீம், மலையக அரசியல் தலைமைகளிடையே 13வது திருத்தம் தொடர்பாக இந்தியாவை வற்புறுத்துவது தொடர்பாக சில உடன்பாடுகள் எட்டப்பட்ட போதிலும் இறுதியில் கைவிடப்பட்டன. இது மிகவும் துரதிர்ஸ்டமானது. உள்நாட்டு அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான புதிய வாய்ப்பாக அமைந்திருந்தது. நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சார்ந்த அரசியல் கட்சிகளிடையே 13வது திருத்தத்தினை மையமாக வைத்த புதிய கோரிக்கையாக அது அமைந்திருந்தது. அது இந்தியாவிற்கு செல்லாவிட்டாலும் உள்நாட்டில் புதிய பாதைக்கான திட்டமாக அமைந்திருந்தது. இந்தியாவிடம் சகல தரப்பினரும் தமது கோரிக்கைகளை புதிய விதத்தில் தயாரித்து வழங்கியிருக்க முடியும். 13வது திருத்த அமுலாக்கம் குறித்த புதிய வியாக்கியானமாக அது அமைந்திருக்கும். 13வது திருத்தத்தின் உள்ளடக்கத்தின் பொது அம்சங்களாக அடையாளப்படுத்தி அதனையும் சமர்ப்பித்திருக்க அல்லது புதிய உபாயங்களை வகுத்திருக்க முடியும். ஆனால் வாக்குவங்கி அரசியல் இம் முயற்சிகளையும் தோற்கடித்துள்ளது.
அரசுடன் பேச்சுவார்த்தை
ஆளும் தரப்புடன் பேசுவது என்பது எதுவும் வெட்கம்கெட்ட அணுகுமுறையல்ல. முதலில் நாட்டில் நிலவும் ஜனநாயக நடைமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கம் தேசிய இனப் பிரச்சனையில் எத்தனை மோசமான கொள்கைகளைக் கொண்டிருந்த போதிலும் தனது தீர்வாக எதை முன்வைத்தாலும் அவை குறித்து விவாதிக்க தமிழ் அரசியல் தலைமைகள் தயாராக வேண்டும். ஏனெனில் அரசியல் தீர்வு அல்லது சமாதானம் என்பது அரசுடன் பேசி முடிவு செய்யும் செயலாகும். எனவே எந்த அரசு பதவியிலிருந்தாலும் பேசுவது அவசியமானது. இவ்வாறாக அரசுடன் பேசுவது மக்களின் ஆதரவைப் பெறாவிடினும் தந்திரோபாய அடிப்படையில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது முக்கியமானது. அரசின் போலி முகத்திரையை அடையாளப்படுத்துவதற்கு இதுவும் தந்திரோபாயமாகும். வாக்குவங்கி அரசியலை நடத்துவோருக்கு இது பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கிய எந்த வாய்ப்புகளையும் பயன்படுத்தும் அரசியல் சாணக்கியம் தலைவர்களுக்கு அவசியம்.
முடிவுரை
தமிழ் அரசியல் பழமைவாதிகள் அல்லது முன்னாள் அரசியல்வாதிகளால் மாற்றங்களைப் பிறப்பிக் முடியாது என்பதை தவறவிடப்பட்ட பல சந்தர்ப்பங்களின் தொகுப்பு உணர்த்துகிறது. கடந்த கால அரசியல் அனுபவங்கள் இன்றைய முயற்சிகளுக்குத் தடையாக இருக்க முடியாது. சர்வதேச பின்புலங்கள் பலமாக இருக்கையில் புதிய அரசியல் தலைமைகள் புதிய வகைகளில் பிரச்சனைகளை அணுகுவதும், அதற்காக புதிய மூலோபாய, தந்திரோபாயங்களை வகுப்பதும் தேவையாகிறது. எனவே கடந்தகால தோல்விகள், அனுபவங்கள் புதிய அணுகுமுறைகளுக்கு எச்சரிக்கையாக இருக்கலாமே தவிர அவை தடையாக இருக்க அனுமதிக்காமல் புதிய தலைமுறையினர் புதிய வழிகளில் பிரச்சனைகளை அணுக இடமளிக்கப்பட வேண்டும்.
முற்றும்.