தமிழ் தேசியக் கூட்டமைப்புப்பிளவும் தமிழர் அரசியலும்

இலங்கையில் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள சூழலில் இந்தப் பிளவு ஏற்பட்டுள்ளதால் முக்கியத்துவம் உள்ளதாக இருக்கின்றது. அதனால் பதவி ஆசை காரணமாகவே இந்தப் பிளவு ஏற்பட்டுள்ளதாக வழமைபோல மலினமான முறையில் இந்தப் பிளவு குறித்துப் பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகளால் தமது தேவை கருதி உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பதை எவரும் மறைத்துவிடவும் மறந்து விடவும் முடியாது, கூடாது. புலிகள் 2009 இல் அரச படைகளால் அழிக்கப்பட்ட பின்பும் சில தேவைகள் கருதி (பதவி ஆசை காரணமாக) அந்தக் கூட்டமைப்பு நீடித்துவந்தது.

ஆரம்பத்தில் கூட்டமைப்பில் பல கட்சிகள் அங்கம் வகித்தாலும், காலத்துக்காலம் ஒவ்வொரு கட்சியாக அதிலிருந்து வெளியேறி இறுதியில் மூன்று கட்சிகளே அதில் எஞ்சி இருந்தன. கூட்டமைப்பில் காலத்துக்குக் காலம் உடைவுகள் ஏற்பட்டு அது இன்றைய வங்குரோத்து நிலையை அடைந்ததிற்கு அதன் தலைமைக் கட்சியான தமிழரசுக் கட்சியே காரணமாக இருந்து வந்துள்ளது.

கூட்டமைப்பில் பல கட்சிகள் அங்கம் வகித்தாலும், தமிழரசுக் கட்சியின் பெயரிலேயே அதன் தேர்தல் திணைக்களப் பதிவு இருக்கின்றது. தேர்தல் சின்னமாகவும் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னமே இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனியானதொரு அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என பங்காளிக் கட்சிகள் காலத்துக்காலம் கோரி வந்தாலும், தமிழரசுத் தலைமை அதைத் தொடர்ந்தும் தட்டிக்கழித்தே வந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஆரம்பம் முதலே முரண்பாடுகள் இருந்து வந்தாலும், எம்.ஏ.சுமந்திரன் தமிழரசுக் கட்சி ஊடாக கூட்டமைப்புக்குள் வந்த பின்னரே அந்த முரண்பாடுகள் தீவிரமடைந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும், இதர தமிழ் தேசியவாதக் கட்சிகளும் புலிகளின் பெயரை வைத்தே தமது அரசியல் பிழைப்பை மக்கள் மத்தியில் நிகழ்த்தி வந்தன. தமிழரசுக் கட்சியிலும் சிலர் அதையே செய்தனர். ஆனால் சுமந்திரன் புலிகளை விமர்சிக்கும் வேலையை ஆரம்பித்தார். கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனும் சுமந்திரனின் நிலைக்கு ஆதரவாகவே இருந்தார்.

சுமந்திரன் இரண்டு நோக்கங்களைக் கருதியே இந்த நிலைப்பாட்டை எடுத்தார். முதலாவது விடயம், தமிழரசுக் கட்சியை ஆயுத வன்முறையில் ஈடுபடாத அகிம்சை வழியைப் பின்பற்றும் ஒரு ஜனநாயகக் கட்சியாகக் காட்டுவது. இரண்டாவது, தமிழ் ஈழம் என்ற தனிநாட்டுக் கருத்தை நிராகரித்து, தமிழரசுக் கட்சியை ஐக்கிய இலங்கைக்குள் தமிழருக்கு நீதியான அதிகாரப் பகிர்வு கோரும் கட்சி என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது.

ஏனெனில், சுமந்திரன் தென்னிலங்கையிலுள்ள முதலாளித்துவ அரசியல் சக்திகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். அதேபோல மேற்கத்தைய ஏகாதிபத்திய – முதலாளித்துவ நாடுகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். இந்த இரு சக்திகளுடனும் உறவைப் பேணுவதானால், தமிழரசுக் கட்சி பயங்கரவாதத்துக்கும் நாடு பிரிவினைக்கும் எதிரானது என்ற ஒரு தோற்றப்பாட்டை உண்மையிலேயே காட்ட வேண்டிய தேவை அவருக்கு இருக்கின்றது.

சம்பந்தனுக்குப் பிறகு தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு வரக்கூடியவர் என்ற வகையில் அவருக்கு இந்தத் தேவை மிகவும் அவசியமானது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளல் உருவாக்கப்பட்டதால், அந்தப் பிம்பத்தையும் அழித்துவிட அவர் விரும்புகிறார்.

அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களான புளொட்டையும், ரெலோவையும் அதிலிருந்து நீக்கி தமிழரசுக் கட்சியைச் ‘சுத்தம்’ செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார். அதற்கு ஏதுவாக ‘காகம் இருக்க பனம்பழம் விழுந்த’ கதையாக உள்ளுராட்சித் தேர்தல் வந்து அவருக்குக் கைகொடுத்தது.

இப்பொழுது தமிழரசுக் கட்சி உள்ளுராட்சித் தேர்தலில் தனியாகப் போட்டியிடுகின்றது. கூட்டமைப்பில் இருந்த மற்றைய இரு கட்சிகளும் வேறு மூன்று முன்னாள் ஆயுதக் குழுக்களுடன் இணைந்து ஐந்து கட்சிக் கூட்டணியாகத் தேர்தலில் களம் இறங்கி உள்ளன.

இப்பொழுது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சார்பில் 6 அணிகள் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றன. அவையாவன: தமிழரசுக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, 5 கட்சி கூட்டமைப்பு, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான அணி.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் கட்சிகளின் பலம் பலவீனத்தையும், எதிர்கால இருப்பையும் தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக இது அமைய வாய்ப்பு உள்ளது. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை, தாங்கள் எப்படிச் செயற்பட்டாலும், என்னத்தைச் சொன்னாலும், தமிழ் மக்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்ற இறுமாப்புடன்தான் இருக்கின்றது.

ஆனால் தமிழரசுக் கட்சி வரலாற்றில் நடந்த சில விடயங்களை மறந்துவிட்டது போல இருக்கிறது. அதற்கு தமிழ் மக்களினதும் கட்சியினதும் வரலாறு தெரியாத சுமந்திரனின் ஆதிக்கம் அந்தக் கட்சிக்குள் ஏற்பட்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

1976 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழர் அரசியலில் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுமே இரண்டு பிரதான கட்சிகளாகச் செயற்பட்டன. இவ்விரண்டு கட்சிகளும் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொண்டாலும், எதிரும் புதிருமாக, கீரியும் பாம்புமாகவே செயற்பட்டு வந்தன.

இவர்களது ஏமாற்று அரசியலில் வெறுப்புற்ற தமிழ் மக்கள் 1970 பொதுத்தேர்தலில் இரண்டு கட்சிகளினதும் தலைவர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், மு.ஆலாலசுந்தரம் ஆகியோரைத் தேர்தலில் தோற்கடித்துப் பாடம் புகட்டினர்.

அந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் கொடுத்த சூடு காரணமாகவே 1976 இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக ‘தமிழீழ’ தீர்மானம் நிறைவேற்றியதுடன், தமிழரசும் காங்கிரசும் ஒன்று சேர்ந்து ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ என்ற புதிய அமைப்பொன்றையும் உருவாக்கின. மக்கள் மீண்டுமொருமுறை ஏமாற்றபபட்டனர். அந்த ஏமாற்று வேலை இன்றுவரை தொடர்கிறது.

மீண்டுமொரு புதிய முறையிலான ஏமாற்று வேலைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் கலைத்துவிட்டு, தனித்தனிக் கட்சிகளாக உள்ளுராட்சி தேர்தலில் நிற்பதற்கு முடிவெடுத்துள்ளனர். ஆனால் இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியோ மற்றை கட்சிகளோ எதிர்பார்த்த அளவு மக்கள் ஆதரவைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

முக்கியமாக தமிழரசுக் கட்சி எதிர்பார்ப்பது போல தமிழ் மக்கள் வீட்டுச் சின்னத்துக்கு வாக்குகளை அள்ளிப் போடுவார்களா என்ற கேள்வி இருக்கிறது.

ஏனெனில், தமிழரசுக் கட்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு மக்கள் வாக்குகளை அள்ளிப்போட்ட காலம் மலையேறிவிட்டது. அதனால்தான் தமிழரசுக் கட்சியின் முந்திய தலைமுறைத் தலைமையே காங்கிரஸ் கட்சியைச் சேர்த்துக்கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி என நாடகமாடியது. அதன் பின்னர் இன்றைய தலைமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இதுநாள்வரை சேடமிழுத்து வந்தது.

அவர்களது கதை கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதைதான். புலிகள் காலத்தில் புலிகளின் ஆதரவுடன் கள்ள வாக்குப்போட்டு 22 உறுப்பினர்களை நாடாளுமன்றம் அனுப்பினார். அந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்து கடைசித் தேர்தலின் போது பத்தாக வீழ்ச்சி அடைந்தது.

அதுவுமல்லாமல், தமிழரசுக் கட்சியின் ஆதார வாக்களர்கள் பலர் நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்து விட்டனர். இப்பொழுது இருக்கும் வாக்காளர்களில் ஏறத்தாழ பாதிப்பேர் 2000 ஆண்டுக்கு முன் பின்பாகப் பிறந்த இளைஞர்கள். அவர்களது வாக்குகள் யார் யாருக்கு அளிக்கப்படும் என்பது தெளிவில்லாத விடயம். எனவே, இந்தத் தேர்தலில் சுமந்திரனின் தலைக்கனமும் சர்வாதிகாரப் போக்கும் காரணமாக தமிழரசுக் கட்சி ஒருவேளை மண்ணைக் கவ்வக் கூடும்.

இன்னொரு விடயத்தையும் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது அவசியமானது. தமிழ் அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரிவுகளும் புதிய அணிசேர்க்கைகளும் இன்னொரு வகையில் தமிழர்கள் மத்தியில் உள்ள வர்க்க வேறுபாட்டு நிலைப்பாட்டையும் கூட எடுத்துக் காட்டுகிறது.

முன்னைய காலங்களில் தமிழர் அரசியலில் தமிழரசு – தமிழ் காங்கிரஸ் என இருகட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டாலும், இரண்டு கட்சிகளும் பழமைவாதமும், நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவத் தன்மையும், சாதிவெறியும் பிடித்த தமிழ் மேட்டுக்குடியினரின் பிரதிநிதிகளாகவே இருந்தனர்.

தமிழ் இளைஞர்களின் இயக்கங்கள் உருவான பின்னரே ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கிய தமிழ் குட்டிமுதலாளித்துவ சக்திகளின் பிரதிநிதித்துவ சக்திகள் அரசியல் அரங்குக்கு வந்தன. ஆரம்ப கட்டத்தில் புலிகளும் அவ்வாறான சக்திகளில் ஒன்றாக இருந்த போதிலும், பின்னர் தமிழ் மேட்டுக்குடியினரினதும் ஏகாதிபத்திய சக்திகளினதும் செல்லப்பிள்ளைகளாக மாறி ஏனைய குட்டி முதலாளித்துவ இயக்கங்களை அழித்தனர். எஞ்சியோரை மிரட்டி பிற்போக்கு தமிழரசுக் கட்சியின் தலைமையில் செயற்பட வைத்தனர். புலிகளின் அழிவுக்குப் பின்னர் காட்சிகள் மாறிவிட்டன.

இப்பொழுது பழையபடி தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் தமிழ் பிற்போக்கு மேட்டுக்குடியினரின் பிரதிநிதிகளாக (தனித்தனியாக) மாறிவிட்டனர். அந்த அணியில் புதிதாக விக்னேஸ்வரன் தலைமையிலான அணியும் இணைந்துள்ளது.

மறுபக்கத்தில், தமிழ் குட்டி முதலாளித்துவ சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புகள் இரண்டு மூன்று அணிகளாக இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. அதில் ஒரு அணிதான் கூட்டமைப்பால் விரட்டப்பட்ட ஐந்து கட்சிக் கூட்டணி. அவைகள் சந்தர்ப்பவாத அணிகளாக – பதவிக்கு விலைபோகும் அணிகளாக இருந்தாலும் அவைகளின் வர்க்க அடிப்படை குட்டி முதலாளித்துவம்தான். எனவே ஒப்பீட்டு வகையில் தமிழரசு – தமிழ் காங்கிரஸ் மற்றும் விக்னேஸ்வரன் அணிகளை விட சற்று முற்போக்கானவை.

எனவே, இத்தேர்தலை இன்னொரு வகையில் தமிழ் நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ – மேட்டுக்குடிப் பிரதிநிதிகளுக்கும், தமிழ் குட்டி முதலாளித்துவப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெறும் தேர்தல் போட்டியாகவும் கொள்ளலாம்.

ஆனால் மக்கள் இன்னமும் போதிய அளவு அரசியல் விழிப்புணர்ச்சி அற்று இருப்பதால் என்ன செய்யப் போகிறார்கள், யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

(வானவில்)