(Janaki Karthigesan Balakrishnan)
நேற்றைய தினம் யாழ். நகரசபை மேயர் தெரிவில் இணக்க அரசியலை நடைமுறைப்படுத்தியதைப் போற்றி எழுதிவிட்டு, இன்று இக்கட்டுரையை எழுதுவதற்கு தயக்கமாக இருந்தாலும், அதில் ஒரு கட்டாயம் இருக்கிறது என்பதை தீர்க்கமாக உணர்கிறேன். இன்றைய அரசியல் பல வயதினரும், குறிப்பாக இன்றுவரை அதிக ஜனநாயக தேர்தல்முறை அரசியலில் பங்கேற்காத இளைஞரும், யுவதிகளும் கூட, ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் இணக்க அரசியல் என்பதை கடந்த காலங்களில் அறிய வாய்ப்பிருந்திருக்காததுடன், அதை யாழ். நகரசபை மேயர் தெரிவில் நடைமுறைப்படுத்தின் காரணம், பயன்கள் என்ன என்பதை புரிந்து கொள்வதற்கு, இதை நடைமுறைப்படுத்திய தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைப் போல் வயதிலும், அறிவிலும் முதிர்ச்சியும், அரசியல் அனுபவமும் போதாது. இது அதில் ஈடுபட்ட சில மூத்த அரசியல்வாதிகளுக்கும், வயதைத் தவிர்ந்த ஏனைய விடயங்களில் பொருந்தும். இந்தக் கட்டுரை ஒரு யதார்த்தமான அரசியலில் என்னவெல்லாம் நடக்கலாம், அதை ஒவ்வொருவர் எவ்வாறு கையாளுவர் என்று எதிர்பார்க்கலாம் என்பதைத் தெரிவிக்குமுகமாக எழுதப்படுகிறது.
அரசியலில் ஈடுபட்டுத் தேர்தலில் போட்டியிடுபவர் பலவிதம். அதில் இரண்டு முக்கியமான ஒன்றக்கொன்று மிகுந்த முரண்பாடான வகையினர்:
1) மக்களின் நலன் கருதி அவற்றிற்கான கொள்கைகளைக் கடைப்பிடித்து தேர்தலில் வெற்றிபெற முயற்சிப்பவர்;
2) தமது வெற்றிக்காக மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கி அல்லது வேறு உபாயங்களைக் கையாண்டு, வெற்றி பெற்று ஈற்றில் மக்கள் நலன்களைப் புறக்கணிப்பவர்.
நேற்றைய தினம் நடைபெற்ற இணக்க அரசியல், இவ்விரண்டு குணாதிசியங்களைக் கொண்ட கட்சிகளுக்கிடையில் நடந்ததுதான் பலரின் விமர்சனத்திற்குள்ளாகி, போயும் போயும் இதுதானா அரசியல், இதில்தானா எமது பங்களிப்பை ஆற்றினோம் எனும் அளவிற்கு சிலரை விரக்தி நிலைக்கு தள்ளியது என்பதை, சில முகநூல் கருத்துப் பரிமாறலில் காணக்கூடியதாக இருந்தது. அந்த உந்துதல்தான் இக்கட்டுரை வடிவம் பெறக் காரணமாயிருந்தது.
முதலாவது வகையாகக் கருதப்படும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபீடிபீ – EPDP), தேர்தல் பிரச்சாரக் காலத்திலும் உள்ளூராட்சி சார்ந்த மக்கள் சேவையையொட்டி விஞ்ஞாபனம் தொட்டு அனைத்திலும் கவனம் செலுத்தி அதற்கேற்ப அனைத்து விடயங்களையும் கையாண்டனர். ஆனால் இரண்டாவது வகையான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் அரசியல் பிரதிநிதிகளும், தாம் வெற்றியீட்ட வேண்டுமென்பதையும், தம்முடன் போட்டியிடும் கட்சியினர் தோல்வியடைந்தால்தான் தமக்கு வெற்றி கிடைக்கும், அதனால் மற்றக் கட்சிகள் மீது அப்பட்டமான சேறுபூசல்களில் ஈடுபட்டார்கள். தம்மில் சிலர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக தமது கட்சியினர் மேல், பெண்கள் உட்பட, வன்முறைப் பிரயோகம் செய்யவும் முயற்சித்தார்கள் எனும் குற்றச்சாட்டை அக்கட்சியினரே தேர்தல் ஆணைக்குழுவில் முறையிட்டார்கள். உட்கட்சிப் பிரச்சனைகளையே, கட்சிஅங்கத்தவர், கட்சி பங்காளிகள் என்று தீர்க்க முடியாமல் அல்லாடினார்கள். இவை எவற்றிற்கும் நடுவே வீட்டுச்சின்னத்தைத் தவிர வேறு அதிகமாக உள்ளூராட்சி மூலம் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று கூறியதாகத் தெரியவேயில்லை. ஆனால் ஒற்றையாட்சி, சமஷ்டி என்று உள்ளூராட்சி தேர்தலுக்கு சம்பந்தமில்லாத விடயங்களைப் பற்றி சைக்கிள் கட்சியினருடன் விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் இவ்விரு ஒன்றுக்கொன்று கொள்கையளவிலும், நடைமுறையிலும் முரணான கட்சிகள் இணக்க அரசியல் செய்ய நேரிட்டது அசாதாரண விடயம்தான். நேரிட்டது என்றுதான் கூறவேண்டும், ஏனெனில் முன்வருவதற்கு இங்கே எந்த ஒற்றுமைப்பாடும் இல்லை. பெப்ரவரி 10, 2018 தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே ஈபீடிபீ தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தமது தேர்தல் பெறுபேறுகள் நிலையறிந்து மக்கள் நலன் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் கருதி, அதை நோக்கிய முன்னெடுப்பில் எந்தக் கட்சிக்கும், எந்த சபையிலும் ஆதரவு தருவதாக பகிரங்கமான அறிக்கையை விட்டிருந்தார். அதில் எந்த தனிப்பட்ட அல்லது கட்சி சார்ந்த மறைமுகமான உடன்பாடுகளுக்கு (deals) அழைப்பு விடுத்தது போல் தொனிக்கவுமில்லை, அவசியம் இருந்ததாகவும் தெரியவில்லை. மக்களுக்கு சேவை செய்ய எமது கட்சி தயார் (ready) என்பது போல்தான் தொனித்தது. அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்கள் பெற்றும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத நிலையில், யார் தமது கட்சியில் யாழ் மேயராவது எனும் சர்ச்சையையும் தீர்ப்பதில் அதிக நாட்கள் செலவிட்டு, மேயர் தெரிவுக்கு இரண்டு நாட்கள் முன்புதான் சீரியஸாக ஈபீடிபீ தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தமது கட்சியிலிருந்து பகுதி பகுதியாக, நபர் நபராக, தொடர்பு கொண்டுள்ளனர் என அறியப்படுகிறது. இத்தனையும் தாம் வெற்றி பெற வேண்டும், தாம் நியமிக்கும் கட்சியினர் வெற்றி பெறவேண்டும் என்பதேயன்றி, மக்கள் சேவையை முன் வைத்தல்ல என்பது வெளிப்படை.
இப்படியான ஒரு கட்சியுடன் மக்கள் சேவையே, மகேசன் சேவை எனும் கட்சி இணக்க அரசியல் என்பது அசம்பாவிதமே! இது நடைபெறாவிடில் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்பது தூரநோக்கும், நீண்ட கால அரசியல் அனுபவமும் உடைய ஈபீடிபீ தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினுடைய அபிப்பிராயமாக இருந்திருக்க வேண்டும். இதனால்தான் தனது கட்சிக்குள்ளும் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களையும் சமாளித்து, அனைவரையும் சமரசமாக்கி இந்த இணக்க அரசியலை பெருந்தன்மையாக முன்னெடுக்கிறார் என்று ஊகிக்கக் கூடியதாகவுள்ளது.
அவ்வாறிருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிதளவேனும் அறிவு முதிர்ச்சியுடனும், பெருந்தன்மையுடனும் நடப்பார்களா அல்லது நடந்தார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கிடையில் “தமிழ் பக்கம் – Page Tamil” ததேகூ விற்கு ஆதரவாக, ஈபீடிபீ ஏதோவொரு உடன்பாட்டுடன்தான் ஆதரவு அளித்தாக சில ஈபீடிபீ ஆதரவாளர்களைக் குழப்புவது நம்பத்தகுந்த செய்தியாகத் தென்படவில்லை. மேலும் “தமிழ் பக்கம்” 12 வாக்குகளைப் பெறுவதற்கே வாய்ப்புடன் இருந்த ஈபீடிபீ யின் பிரதிநிதியான ரெமிடியஸ் எவ்வாறு 13 வாக்குகளைப் பெற்றார், யார் அந்த கறுப்பு ஆடு என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டு அனைவரையும் குழப்புவது மட்டுமல்ல அவநம்பிக்கையை ஒருவர் மீது ஒருவர் விதைக்க முயல்கிறது. ஈபீடிபீ யின் மீதான ஏற்க முடியாத பழியைக் கண்டு வெகுண்ட முகநூல் நண்பர் ஜீவானந்தம் நிதிஸ்வரன் கருத்துக்களத்தில் தானும் இயற்கதைகள் எழுதலாம் என்று இருப்பதாக கூறினார். நானும் அவருக்கு உதவுமுகமாக ஒரு இயற்கதையை எனது பதிவாக கருத்துக்களத்தில் எழுதியிருந்தேன்.
அதன்படி இது போன்ற கல்குலேஷன் எல்லாவற்றிலும் அத்துபடியாக இருக்கக்கூடிய
ததேகூ சுமந்திரன், ஆர்னல்டை முதல் ரவுன்ட் வாக்கில் ஈபீடிபீ க்கு போடச் சொன்னார். இதை யாரும் நம்ப மாட்டார்கள், ஆனால் நடந்திருக்க சாத்தியம். ஏனெனில் முன்னொருமுறை தேர்தல் பிரச்சாரக் காலத்தில் ஆர்னல்டை மணிவண்ணனாகவும், மணிவண்ணனை ஆர்னல்டாகவும் ஒரு தந்திர நோக்கத்தோடு, மணிவண்ணனின் வாக்குகளை அபகரிக்க, சுமந்திரனின் பத்திரிகையில் படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்தவர்கள்.
இந்த ஒரு வாக்கினால் மற்ற இரு கட்சிகளும் சமனாகும். அவர்களிடையே போட்டி வரும். இல்லையேல் 12 வாக்குகள் மட்டும் பெற்ற ரெமெடியஸ் போட்டியில் இருந்து தவிர்க்கப்பட்டால், இரண்டாவது ரவுண்டில் ஆர்னல்டை ஆதரிக்காத ரெமெடியஸும் அவரது ஆட்களும், மணிவண்ணனுக்கு வாக்களித்தால், ஆர்னல்டின் நிலை ஆபத்தாகி விடும். ஆகவே சமனான வாக்குகளைப் பெறவைத்து ஒரு இக்கட்டான நிலையை இருகட்சிகளுக்கும் ஏற்படுத்தி, அனைவரையும் குழப்பி ஆர்னல்டுக்கெதிரான சூழலை வேறுபக்கம் திசை திருப்ப முயன்றனர். இருந்தாலும் திருவுள குலுக்கல் முறையும், ஈபீடிபீ யின் நிபந்தனைக்குக் கட்டுபட்ட தன்மையும், எதுவித குழப்பமுமில்லாமல் ததேகூ வின் கோரிக்கையும், தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் உடன்படிக்கையும் சேதமுறாமல் நடந்தேறின. இது இயற்கதையல்ல, உண்மையான கதையாகவும் இருக்கும். தலைவர் டக்ளஸ் தேவானந்தா செய்தது நல்லிணக்க அரசியல், ததேகூ செய்தது கள்(ள)ளிணக்க அரசியல் என்றாகும்.
இதுவெல்லாம் அரசியலில் சாத்தியம் என்பதையும், இவை ஒருவகை ஓநாய்த் தந்திரம் என்பதையும் புதிதாக அரசியல் அனுபவம் பெறுபவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதில் நெளிவு, சுழிவுகளைக் கண்டு, தமது கொள்கையிலிருந்து தடம்புரளாமல் இருப்பவர்கள் நல்ல, திறமையான அரசியல்வாதிகள். அவர்களை மக்களும் ஆதரவாளர்களும் எந்நேரமும் நம்பலாம். குழப்ப அரசியல் பண்ணுபவர்களால் மக்களுக்கு எதுவித பயனுமில்லை, தமது வெற்றியையும், தமது பதவிகளை தக்க வைப்பதிலும், அதற்கு உடந்தையாக இருக்கக் கூடியவர்களின் பதவிகளை தக்க வைப்பதிலும் கண்ணும் கருத்துமாயிருப்பர். மக்களுக்கான சேவையில் அல்ல.
மக்கள்தான் தமக்கு எந்த அரசியல் பொருத்தமானது, எவர் தகுந்தவர் என அறிந்து முன்கூட்டியே ஆதரவளித்து, தெரிவு செய்து தமது வாழ்வினையும் சுபீட்சமாக்கி, நல்ல அரசியல்வாதிகளை இக்கட்டான சூழ்நிலையிலும் மாட்ட வைக்காமல் காக்க வேண்டும்.