இந்நாட்டில் வாழும் இலங்கை தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர், முஸ்லிம்கள் எனத் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் கூட்டங்களை ஒன்றிணைக்கும் வார்த்தையாக, ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற வார்த்தை பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆகவே, இங்கு ‘தமிழ் பேசும் கட்சிகள்’ என்ற பதம், மேற்சொன்ன மக்கள் கூட்டங்களை மையப்படுத்திய அரசியல் கட்சிகளைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளலாம்.
‘தமிழர்’ என்ற ஒற்றை அடையாளத்துக்குள் வந்திருக்க வேண்டிய, வந்திருக்கக்கூடிய கட்சிகள்தான் இவை. ‘தமிழர்’ என்ற பலமான ஒற்றை அடையாளம் இங்கு ஏற்படுத்தப்பட்டு இருந்தால், அது, இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு, பலவழிகளில் சாதகமாக அமைந்திருக்கும்.
அது நடக்காது போனது, பேரினவாதத்துக்குச் சாதகமாக அமைந்தது. இந்த இடத்தில், அது ஏன் நடக்காது போனது என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தல் அவசியமாகிறது.
இந்நாட்டின் தமிழர்கள், தம்முள்ளே மதத்தால், பிரதேசத்தால், சாதியால் பிரிந்த அடையாளங்களைக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும், ஒரே காலகட்டத்திலும் ஒரே அடிப்படைகளிலும் ஏற்பட்ட சமூகப் பிரிவினைகள் அல்ல. வெவ்வேறு காலகட்டங்களில், இந்தப் பிரிவினைகள் மாற்றமடைந்தன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
இவ்வாறு தம்முள் சமூகப் பிரிவுகளைக் கொண்டிருந்த தமிழர்களிடம், ஒரு சில பிரிவினரின் ஆதிக்கமும் மற்றைய பிரிவுகள் அந்த ஆதிக்கத்திடம் அடக்கு முறையையும் எதிர்கொண்டது. இந்த அடக்குமுறையிலிருந்து வௌிப்படுவதற்கு, மாற்றுப்பிரிவுகள் உருவாகின. ஆனால், தமக்குள் சமூகப் பிரிவுகளைக் கொண்டவர்களாகவே இந்நாட்டின் தமிழர்கள் தொடர்ந்தும் காணப்படுகிறார்கள்.
ஆனால், இதே சமூகப்பிரிவுகள் இருந்தாலும், தமிழ்நாட்டில் ‘தமிழர்கள்’ என்ற ஒற்றை அரசியல் அடையாளம் எழுப்பப்பட்டிருக்கிறதே என்று சிலர் வினவலாம்.
இந்திய அரசியலும் இந்திய அரசியல் கட்டமைப்பும் அங்கிருந்த பிரச்சினைகளும் அந்தத் தலைவர்களின் முன்னுரிமைகளும், இலங்கை விடயங்களில் இருந்து மிகவும் வேறுபட்டவை. இந்த ஒப்பீடு, ஒரு தனித்த ஆய்வாகவே நடத்தப்படக் கூடிய தலைப்பாகும்.
தென்னிந்தியாவின் தமிழ்த் தலைமைகள், ‘திராவிடக் கொள்கை’யைக் கையிலெடுத்தார்கள். அது சித்தாந்த அடிப்படையிலேனும், ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்தை விடப் பரந்ததோர் அடையாளமாகும். இதற்கான உந்துணர்வாக, ‘ஆரிய எதிர்ப்புணர்வு’ அமைந்திருக்கலாம்.
இலங்கையின் தேசிய கட்டுமானத்தின் வரலாறு, வேறாக அமைந்தது. இங்கு, சிவில் தேச அரசு ஒன்று கட்டமைக்கப்பட முயற்சிக்கப்பட்டது. அதுவே, சுதந்திரத்துக்கு மிகவும் முற்பட்ட தமிழ்த் தலைமைகளின் அவாவாக இருந்தது.
ஆனால், பேரினவாதம், அந்த முயற்சியைக் கையகப்படுத்தி, சிவில் தேச அரசின் ஒற்றையரசு, ஒற்றைத் தேசிய சிந்தனை என்பவற்றைத் தனது பெரும்பான்மை இனத் தேசியத்தின் மேலிருத்தி, இலங்கையில் இனத் தேசிய முரண்பாட்டுக்கு வழிவகுத்தது.
எண்ணிக்கையில் பெரும்பான்மை இனம், தன்னை இனத் தேசிய அடிப்படையில் கட்டமைக்கத் தொடங்கிய போது, அதன் விளைவாக, எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்த மக்கள் கூட்டத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைக்கு எதிராகவே, தற்காப்புத் தேசியமாக ‘தமிழ்த் தேசியம்’ இந்த மண்ணில் பிறந்தது.
ஆனால், ‘தமிழ்’ என்ற ஒற்றை அடையாளம், தமிழ் பேசும் மக்களை இணைக்கவில்லை. மதத்தாலும், வாழும் இடத்தாலும் பிரிக்கப்பட்டது. அவர்களுக்கான தனித்தனி அரசியலைத் தேடி, அவர்கள் பயணம் தனிவழிபோனது.
தமிழ்த் தேசிய அரசியல் பிறந்தபோது, அதில் ‘தமிழ் பேசும் முஸ்லிம்கள்’ ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்துக்குள் சேர்ந்திருந்தார்கள். ஆனால், அந்த ஒற்றுமை நீண்ட காலம் நிலைக்கவில்லை. அரசியல் முன்னுரிமைகளில் வேறுபாடுகள் இருந்தன. தமக்கான தனிவழி அரசியலை, அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள்.
இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பொறுத்தவரையில், ‘இலங்கை தமிழர்’கள் என்போர், அவர்களுக்கான பலமான குரலாக இருக்கவில்லை. இந்திய வம்சாவளி தமிழர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை, வெறும் எழுத்திலான கோரிக்கையாகவே வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்பட்டது.
‘தனிநாடு’ என்ற பாதையில், அவை பயணிக்கத் தொடங்கிய போது, அந்தத் தனிநாட்டில், மலையகத்தில் செறிந்து வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலையைப் பற்றிய உறுதியானதும் சாத்தியமானதுமான நிலைப்பாடு எதுவுமே, வடக்கு-கிழக்கு தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்படவில்லை.
ஆகவே, இங்கும் இருதரப்பின் அரசியல் முன்னுரிமைகள் வேறுபட்டிருந்தது. ஆகவே, இருதரப்பும் தம்வழியே தனிவழியெனப் பயணப்பட்டன. சௌமியமூர்த்தி தொண்டமான், தமிழ் ஐக்கிய முன்னணியிலிருந்து விலகவும் இதுவே காரணம் எனலாம்.
இன்றும் இந்த அரசியல் முன்னுரிமைகளின் வேறுபாட்டில், பெருமளவு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. வடக்கு-கிழக்கு தமிழர்களின் முன்னுரிமையாக, ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்ற ‘தமிழ்த் தேசிய அபிலாஷைகள் காணப்படுகின்றன. அதற்கே, அம்மக்கள் பெருவாரியாகத் தொடர்ந்தும் தமது அரசியல் அங்கிகாரத்தை வழங்கி வருகிறார்கள்.
தம்மை ஒரு தனித்த ‘தேசமாக’ வடக்கு-கிழக்கு தமிழர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். அரசியல் அதிகாரப் பகிர்வு, அவர்களின் அடிப்படை அரசியல் கோரிக்கையாக இருக்கிறது.
மறுபுறத்தில், தமிழ்பேசும் முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரையில், தம்மைத் தனித்த தேசமாக முன்னிறுத்துவதிலும், அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் அவை அக்கறை காட்டவில்லை. மாறாக, இந்நாட்டின் சிறுபான்மையினமாகத் தம்மை முன்னிறுத்துகின்றன.
சிறுபான்மையினருக்கான சமவுரிமை என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. இது சித்தாந்த அடிப்படையில், தமிழர்களின் ‘தனித்தேச’ நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டது. வடக்கு-கிழக்கு தமிழர்கள், தம்மை வெறும் சிறுபான்மை இனமாக அடையாளப்படுத்தவில்லை.
மாறாக, இந்நாட்டில் வாழும் தனித் தேசமாக தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். இதேயொத்த வேறுபாட்டை, மலையகத் தமிழ் அரசியலுக்கும் வடக்கு-கிழக்கு தமிழ் அரசியலுக்கும் இடையில் நாம் காணலாம்.
மலையக தமிழ் அரசியலில், மலையகத் தமிழரை அல்லது இந்திய வம்சாவளித் தமிழரை, தனித்த தேசமாக அடையாளப்படுத்தும் மிகச் சில முயற்சிகளை நாம் அவதானித்தாலும், அது அவர்களின் அரசியல் முன்னரங்கில் இடம்பெறவில்லை என்பதோடு, அது சித்தாந்த ரீதியில் நிறுவக் கடினமானதொன்றாக அமைவதையும் அவதானிக்கலாம்.
எது எவ்வாறாயினும், இம்மக்கள் கூட்டங்கள், அரசியலில் தம்மை வேறாக அடையாளப்படுத்துவதுடன், வேறுபட்ட அரசியல் அபிலாஷைகளையும், முன்னுரிமைகளையும் கொண்டிருக்கின்றன என்பது மிக நிதர்சனமானது.
ஆகவேதான், ‘தமிழ் பேசும் கட்சிகள்’ ஒன்றிணைவதில் இத்தனை வாதப்பிரதிவாதங்கள்; ஒரு பொது ஆவணம் தயாரிப்பதில் இத்தனை இழுபறிகள்.
வேறுபாடுகள் எப்படியானதாக இருப்பினும், குறைந்தபட்ச ஒற்றுமை என்பது சாத்தியம்தான்.
‘தமிழ் பேசும் கட்சி’களாக இவை இம்மக்கள் கூட்டங்கள், சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் பற்றி, ஒருமித்த குரலில் பேசுவதும் மற்றவர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தார்மிக ஆதரவையேனும் வழங்குவதும் குறைந்த பட்ச ஒற்றுமையை வௌிப்படுத்துவதாக அமையும்.
இம்மக்கள் கூட்டங்கள், அரசியல் அபிலாஷைகளில் ஒன்றிணையும், ஒரு கூட்டமைப்பாக அரசியலில் இயங்கும் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. அந்த முயற்சி, மேற்சொன்ன அடிப்படை வேறுபாடுகளின் காரணத்தால், யதார்த்தத்தில் சாத்தியப்படாது.
ஆனால், தமக்கிடையேயான தொடர் உரையாடல்களுக்கான ஒரு மேடையை, இவை கொண்டிருப்பது இம்மக்கள் கூட்டங்கள் அனைத்துக்கும் சாதகமானதொன்றாகவே அமையும்.
இது எதிர்காலத்தில், இம்மக்கட் கூட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் விடயங்கள் தொடர்பில், இவை ஒரு ‘கோகஸாக’ பாராளுமன்றத்தில் இயங்கவும் வழி வகுக்கலாம். ஆகவே, அந்த அடிப்படையில், இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டும்.
அடிப்படையிலேயே வேறுபட்ட அரசியல் முன்னுரிமைகளைக் கொண்டவர்கள்தான் இங்கு ஒன்றிணைவதால், அதற்குள் சிலரை அழைக்காது விடுவதும், தவிர்ப்பதும் அந்த மேடைக்கு அழகல்ல.
அதேபோல, ஓர் உரையாடலுக்கான மேடையில் கூட ஒன்றிணையாது தவிர்ப்பதும் அழகல்ல. இதையுணர்ந்து, ‘தமிழ் பேசும் கட்சி’கள் இந்த மேடையை ஒரு முறை முயற்சித்துப் பார்ப்பது உசிதமானது.
ஆனால், இந்த ஒற்றுமையின் பெயரை, எவரோ ஒருவரின் அல்லது ஏதோ ஒரு வௌிநாட்டின் அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்த விளைந்தால், அந்த முயற்சி தோல்வியில்தான் முடியும் என்ற வரலாற்றுப் பாடத்தையும் நினைவில் கொள்வது அவசியம்.