தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 1)

(Thiruchchelvam Kathiravelippillai)


எண்பதுகளின் முன்னர் தமிழ் பேசும் மக்களிடையே நெருங்கிய உறவு இருந்தது. தமிழர்கள் தமிழ் பேசுகின்ற மக்களாவர். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் மெதுவாக கூர்மையடையத் தொடங்கிய வேளையிலும் தமிழ் பேசும் மக்களிடையே நெருங்கிய உறவு நிலவியது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கூட பல நூறு முஸ்லிம் இளைஞர்களும் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.

பெரும்பான்மையினத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட ஆட்சி அதிகாரத்திலிருந்தவர்கள் போராட்ட முன்னகர்வை அல்லது வேகத்தை குறைப்பதற்கு அல்லது வேறு திசை நகர்த்துவதற்கு கையிலெடுத்த ஆயுதம் எண்ணிக்கையில் குறைவாக இருந்த தமிழ்பேசும் மக்களிடையே குரோதத்தை ஏற்படுத்தி சிறுசிறு பொருள்நியாயம் கொண்டோர்களாக சிதைவுறச்செய்வது.
இஸ்ரவேல் மொசாட்டின் துணையுடன் மிகவும் நிதானமான திட்டமிடலுடன் பிரித்தாளும் தந்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவ்விடயத்தை அப்போது உணர்ந்திருந்த ஈரோஸ் அமைப்பு கொழும்பில் உல்லாசவிடுதியில் தங்கியிருந்த இஸ்ரவேலின் மொசாட் உறுப்பினர்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டது. அத்தாக்குதலில் இரண்டு மொசாட் உறுப்பினர்கள் சாவடைந்தனர். 
ஒரு சில ஆண்டுகள் மொசாட்டின் செயற்பாடுகள் இல்லாதிருந்தாலும் பின்னர் ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கையினால் மொசாட்டின் வழிகாட்டல் அரசுக்கு கிடைத்தது. 
சிறப்பு அதிரடிப்படை (STF) உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணத்திலே வாழ்கின்ற தமிழ்பேசும் மககளிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கச்சிதமாக மேற்கொண்டார்கள். சிறப்பு அதிரடிப்படை பல வடிவங்களிலே தமது நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். 
அவர்களது திட்டமிட்ட செயற்பாடுகளின் உள்நோக்கினை புரிந்து கொள்ளாது தமிழ்த் தேசிய விடுதலை போராட்ட அமைப்புகள் தமக்கிடையே கருத்துப் பரிமாற்றல் பொறிமுறையும் தொடர்புகளுமின்மையினால் ஆட்சியாளர்களின் செயற்பாடுகளுக்கு அறியாமலே துணை போயினர்.
அது தமிழ்பேசும் மக்களிடையே நிரந்தரமான கருத்தொருமைப்பாட்டை, ஒற்றுமையை சிதைப்பதற்கு அடிகோலின.

(தொடரும்…..)