(Thiruchchelvam Kathiravelippillai)
கிண்ணியாவில் தற்போது பிரதேச செயலகம் அமைந்திருக்கும் இடத்தில் 1973 ஆம் ஆண்டிற்கு முன்னர் 45 தமிழ்க் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
1973 ஆம் ஆண்டு DRO (Divisional Revenue Office) அலுவலகம் அமைப்பதற்கான இடம் கிண்ணியாவில் தேவையான போது கிண்ணியாவின் ஒரு மையப்பகுதியில் அலுவலகம் அமைக்கப்படுதலே சிறந்தது என்ற நோக்கில் 45 தமிழ்க்குடும்பங்கள் வசித்த பகுதி தெரிவுசெய்யப்பட்டது. அவ்வூரின் தலைவராக இருந்த அருள்ராஜா என்பவருடன் அப்போது மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் அப்துள் நஜீப் அவர்களின் தந்தை மர்ஹும் அப்துள் மஜீத் அவர்கள் இடம் தேவையின் அவசியம் பற்றி கலந்துரையாடினார்.
அத்துடன் மூதூர் தொகுதியின் இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் தங்கத்துரை அவர்களிடமும் உரையாடியதன் விளைவாக 45 தமிழ்க்குடும்பங்களில் 13 குடும்பங்கள் அவ்விடத்திலிருந்து இடிமண் என்ற இடத்தில் எகுதார் ஹாஜியாருக்கு சொந்தமான காணியில் குடியமர்த்தப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் தலா அரை ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன. 13 தமிழ்க் குடும்பங்களுடன் இரண்டு முஸ்லிம் குடும்பங்களும் குடியமர்த்தப்பட்டனர். அவ்வாறு குடியமர்த்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்தில் ஒரு குடும்பம் தற்போது மருத்துவராக இருக்கும் ஜிப்ரி அவர்களது குடும்பமும் ஒன்றாகும். எனினும் 1991 இல் நடைபெற்ற சனாதிபதி நடமாடும் சேவையில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து எகுதார் ஹாஜியாரின் காணியில் குடியமர்த்தப்பட்ட குடும்பங்கள் வெியேற்றப்பட்டு அவரது மகனான வன்னியன் என்பவருக்கு காணி சொந்தமானது. உரிய முறைப்படி எகுதார் ஹாஜியாரிடமிருந்து காணி சுவீகரிக்கப்படாது ஆவணம் வழங்கப்படாமையினால் அம் மக்களுக்கு காணியற்ற நிலை உருவாக்கப்பட்டது.
மக்கள் வெளியேற்றப்பட்ட இடத்தில் டீ.ஆர்.ஓ அலுவலகம், கமநல கேந்திர நிலையம், பள்ளிவாசல் என்பன நிர்மாணிக்கப்பட்டன.
கிண்ணியா நகர் விடுதலைப்புலிகளினால் எரிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த “சிங்க ரெஜிமென்ட்“ படைப்பிரிவினர் தாம் முகாம் அமைக்கவுள்ளதாகவும் அவ்விடத்திலிருந்து 24 மணிநேரத்தினுள் அவ்விடத்தை விட்டு அங்கு வசிக்கும் 32 தமிழ்க்குடும்பங்களும் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மொசாட் பயிற்சி பெற்ற வசீரின் ஆலோசனையினடிப்படையில் சுரோஸ் காசிமினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஊர்த்தலைவரான அருள்ராஜா அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இம்ரான் மஹமறூஃப் அவர்களின் தந்தை மர்ஹும் எம்.ஈ.எச். மஹ்றூப் அவர்களிடம் சென்று முறையிட்டார். “படையினர் கோரினால் எனது இடமென்றாலும் வழங்கத் தான் வேண்டும்“ என்பது பதிலாக கிடைத்தது.
மக்கள் அனைவரும் தமது இருப்பிடங்களை விட்டு கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு தங்களது உறவினர்கள் வசித்த இடிமண், ஆலங்கேணி ஆகிய ஊர்களில் தஞ்சமடைந்தனர். மக்கள் வசித்த 9 ஏக்கர் காணியிலும் படையினர் முகாம் அமைக்கவில்லை. காவல்துறையினரே தமது நிலையத்தினை அமைத்தனர். அமைக்கப்பட்ட காவல்துறை நிலையத்திற்கு காதர் எனபவர் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
மக்கள் பின்னர் ஆலங்கேணி, ஈச்சந்தீவு பள்ளிகளில் ஈரண்டரை ஆண்டுகள் அகதிகளாக முகாம் வாழ்க்கை வாழ்ந்தனர். பின்னர் சரணவணமுத்து தோட்டத்தில் அகதி முகாம் அமைக்கப்பட அவ்விடத்தில் வசித்தனர். பின்னர் கிளப்பன்பேக் முகாமில் வசித்தனர். இக்காலங்களில் ஊர்காவல் படையினரின் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகினர். இராணுவத்தினால் சிலர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். சொல்லொணா துன்பங்களை இம் மக்கள் அநுபவித்தனர்.
தற்போது கடலூர் என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
கிண்ணியா நகர் எரிப்பின் பின்னர் வசீர் தலைமையில் அமைக்கப்ட்ட ஊர்காவல்படையினர் கிண்ணியாவில் வசித்த தமிழ் மக்களை கிண்ணியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் எனபதில் குறியாக இருந்து செயற்பட்டு வெற்றியும் கண்டார்கள்.
கிண்ணியாநகர் எரிக்கப்ட்டு ஐந்தாவது நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூதூர் பிரதேசத்தில் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன் என்பவரின் மாமாவான பஞ்சலிங்கம் உட்பட நான்கு பேரை அப்போது கிண்ணியா போக்குவரத்து சபை டிப்போ இருந்த இடத்தில் வைத்து வசீர் குழுவினர் கொலை செய்து ஆலங்கேணியிலுள்ள பனங்காட்டில் புதைத்தனர்.
கொல்லப்பட்ட நால்வரும் தற்போது கிண்ணியா மருத்துவ மனை இருக்குமிடத்திற்கு முன் பகுதியில் வசித்தவர்கள்.
கொல்லப்பட்டவர்களில் சத்தியா எனும் தாதியின் துணைவரும் ஒருவர். சத்தியா என்ற தாதியினை இன்றும் கிண்ணியாவில் உள்ள பலர் சிறந்த சேவையாளர் என்று நினைவுகூருகின்றனர். அவரது மகள் இஸ்லாம் மதத்தினைத் தழுவி தற்போது அவரும் ஒரு தாதியாக கிண்ணியாவில் வசிக்கின்றார்.
இவ்வாறான கொலைகள் அப்பகுதியில் இடைக்கிடை நடைபெற்றதனால் கிண்ணியாவிலிருந்து தமிழ் மக்கள் அச்சத்தினால் தமது காணிகளை விற்றுவிட்டு வெளியேறி வேறிடங்களில் தமது இருப்பிடங்களை அமைத்துக்கொண்டனர்..