(Thiruchchelvam Kathiravelippillai)
தமிழீழ விடுதலைப்புலிகளின் தம்பலகமம் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த குரு மற்றும் அவருடன் உடன் களப்பணியாற்றிக் கொண்டிருந்த உதயன் ஆகியோர் கிண்ணியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் அப்துள் மஜீத் அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட புகாரியில் கலந்துகொள்வதற்காக தம்பலகமத்திலிருந்து புறப்பட்டார்கள். தமிழ் பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வாய்ப்பினை எதிர்பார்த்திருந்த அரச புலனாய்வாளர்களுக்கு குறிப்பாக மொசாட் வழிகாட்டலில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சந்தர்ப்த்தை தவறாது பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அதற்கான காய்நகர்த்தல்களை எதுவித பிசிகுமின்றி செய்வதற்கு தம்மால் பயிற்றப்பட்டவர்களை ஏற்கனவே பொதுமக்களுடன் வாழ்வதற்கு அனுப்பியிருந்தது அரச இயந்திர புலனாய்வு.
குட்டிக்கரைச்சை சந்தியைக் கடந்து சிறுதூரத்தில் வலையினால் வீசிப் பிடிக்கப்பட்டார்கள். பலர் அவர்களை விடுவிப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டார்கள். போராளிகளும் தம்மை விடுவிக்குமாறு கோரினார்கள். ஏற்படப்போகும் விளைவினை எச்சரித்தார்கள். எதற்கும் செவிசாய்க்ப்படவில்லை. இருவரும் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
செய்தி தமிழ் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியது. குரு தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமல்ல முஸ்லிம் மக்கள் மத்தியிலும் மரியாதைக்குரியவராக இருந்தார். அவரது பண்பினை அனைவரும் மதித்தனர். குரு தம்பலகமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஏற்பட்ட நிலையினை மன்னிப்பதற்கு விடுதலைப்புலிகள் தயாராக இருக்கவில்லை. கட்டைப்பறிச்சான், சேனையுர், கடற்கரைச்சேனை, சம்புர், கூனித்தீவு போன்ற இடங்களில் தமது பிரதான முகாம்கள் விடுதலைப் போராட்ட அமைப்புகள் அக்காலத்தில் வைத்திருந்தார்கள். விடுதலைப்புலிகளின் மூதூர்ப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்த கணேஸ் மற்றும் அவரது நெருங்கிய சகா நந்தன் ஆகியோரால் கிண்ணியா தாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனை அறிந்த ஈரோஸ் போராளிகள் விடுதலைப் புலிகளுடன் பேசினார்கள். அரசின் திட்டமிட்ட செயல் என்பதனை எடுத்துக் கூறினார்கள். இதன் மூலம் தமிழ் பேசும் மக்களிடையே விரிசலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை என்பதனையும் எடுத்துக் கூறினார்கள். எனினும் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.விடுதலைப் புலிப் போராளிகளின் அணிகள் மூன்று பிரிவாக தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. சின்னக் கிண்ணியா பக்கமாக கடலினால் தரையிறக்கப்பட்ட போராளிகள் தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கினார்கள். ஆலங்கேணியுடாக வந்த போராளிகள் குட்டிக்கரைச்சை ஊடகவும் தம்பலகமத்திலிருந்து வந்த போராளிகள் குறிஞ்சாக்கேணியுடாக புகாரியடிச் சந்தியை நோக்கியும் தாக்குதல்கள் நடத்தினார்கள்.
மூன்று அணிகளும் புகாரியடிச்சந்தியில் ஒன்றிணைந்து தாக்குதலை நிறைவு செய்து தமது தளங்களுக்குத் திரும்பினார்கள். பலநூறு வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. ஆனால் விடுதலைப் புலிகள் எந்தவொரு பொருட்களை எடுத்துச்செல்லவில்லை. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் ஊர்காவல் படையினர் எரிந்த வர்த்தக நிலையங்களிலிருந்த பொருட்களை எடுத்துச்சென்றனர். அது விடுதலைப் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டதாகவே முஸ்லிம் மக்களால் பேசப்பட்டது. புகாரிடியச்சந்தியில் அச்சத்தின் காரணமாக ஒரு வர்த்தக நிலையத்தின் உள்ளே இருந்த இருவர் நெருப்பில் எரியுண்டு சாவடைந்தார்கள். குறிஞ்சாக்கேணி சந்தியுடாக வருகை தந்த விடுதலைப்புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததின் நடுவே சிக்குண்டு ஒருவர் உயிரிழந்தார். குட்டிக்கரைச்சைசந்தியில் ஒருவர் துப்பாக்கி சுட்டின் இடைநடுவே சிக்கி சாவடைந்தார். மொத்தமாக நான்கு பொது மக்கள் உயிரிழந்தனர்.
எரித்துவிட்டு திரும்பிய விடுதலைப்புலிகள் கட்டைப்பறிச்சானில் வெற்றி மகழ்ச்சியில் இருந்தனர். இத்தாக்குதலின் முக்கிய நோக்காக இருந்தது முஸ்லிம் மக்களை அச்சமூட்டுவதாகும். ஆனால் எதிர்பார்த்ததற்கு எதிர்மாறான விளைவுகளே மெதுமெதுவாக ஏற்படத் தொடங்கியது. தமிழ் மக்கள் மீது முஸ்லிம் மக்களுக்கு வெறுப்பு ஏற்படத்தொடங்கியது.
தம்பலகமத்தில் உள்ள சிலரின் பொருட்கள் பாதுகாப்பிற்காக தமது கிண்ணியா முஸ்லிம் நண்பர்களின் கடைகளில் வைத்திருந்தார்கள். அவையும் எரிந்து நாசமாகின.
ஆலங்கேணி, ஈச்சந்தீவு தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களால் தாக்குதல்கள் தொடர்ந்தன. நெருக்கமான உறவுகள் விரிசலடையத் தொடங்கியது.
அடிக்கடி சுற்றி வளைப்புகளும் காட்டிக்கொடுப்புகளும் நடைபெறத் தொடங்கின. கிண்ணியாவிற்கு தமிழ் மக்கள் செல்வது வெகுவாகக் குறைந்தது. ஆலங்கேணி, தம்பலகமம் பகுதிகளுக்கு முஸ்லிம் மக்களின் வருகையும் குறைவடைந்தது.
முஸ்லிம் மக்கள் தங்களது பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அரசுடன் உறவாக இருந்த அரசியல் தலைவர்கள் உதவியுடனும் அராபிய நாடுகளின் உதவிகள் மூலமாகவும் ஜிகாத் அமைப்பினை உருவாக்கினார்கள். மொசாட்டும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை ஜிகாத் அமைப்பிற்க வழங்கத் தொடங்கியது.
எதனை எதிர்பார்த்து திட்டமிட்டு நகர்வுகளை றே்கொண்டார்களோ அவை எளிதாக நிறைவேறிக்கொண்டேயிருந்தன. பலமிக்க கரங்கள் சிதைவடையத் தொடங்கின. தமிழ் – முஸ்லிம் மக்களிடையே மனதளவிலான உறவுகள் சிதைவடையத் தொடங்கிக் கொண்டிருந்தன.
(தொடரும்…..)