(Thiruchchelvam Kathiravelippillai)
திருக்கோணமலை மாவட்டத்தில் கண்டி-திருக்கோணமலை வீதியில் தம்பலகமம் உள்ளது. கந்தளாயக்குளம், வெண்டரசன்குளம், கல்மெட்டியாவகுளம், புலியூற்றுக்குளம், கடவாணக்குளம், சேனைவெளிக்குளம், போன்ற குளங்களிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற நீர் மூலமாக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
தம்பலகமம் வெளி என்பது ஏறத்தாள 7000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் நெற்செய்கை செய்யப்படும் வயல்வெளியாகும்.
தம்பலகமத்தில் பல யாழ்ப்பாணத் தமிழர்கள் அந்நாட்களில் அரசபணி நிமிர்த்தமாக வாழ்ந்துள்ளனர். யாழ் வடமராட்சியிலிருக்கும் மக்களுக்கும் தம்பலகமம் மக்களுக்கும் நெல் வியாபாரம் மற்றும் நெற்செய்கை காரணமாக தொடர்புகள் அதிகமாக இருந்தன. ஆரம்பத்தில் தம்பலகமத்திலிருந்து நெல் கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்றவர்கள் பின்னர் தம்பலகமத்தில் வயல் நிலங்களை 10, 15, 20 ஏக்கர்கள் என்ற வகையில் தமதுடமையாக்கியுள்ளனர். இன்றும் தம்பலகமத்தில் பல யாழ்ப்பாணத்தவர்களுக்கு வயல்நிலங்கள் உரித்துடையவையாக உள்ளன.
தம்பலகமத்திலுள்ள வயல்நிலங்கள் எருமை மாடுகளின் உதவியினால் பண்படுத்தப்பட்டன. அவ்வேலைகளில் தம்பலகமத்திலுள்ள மேற்குக்கொலனி, சிறாஜ்நகர் மற்றும் கிண்ணியா போன்ற இடங்களில் வசித்த முஸ்லிம் மக்கள் தொழிலாளர்களாக பணியாற்றியுள்ளனர். தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்தே வயல்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வயல் விதைப்பு தொடங்கி அறுவடை முடிந்து சுடடித்து நெல் உரியவர்களின் வீடுகளுக்குக் கொண்டு சென்று சேர்க்கும் வரையான நடவடிக்கைகளில் தொழிலாளர்களாக முஸ்லிம்களே ஈடுபட்டுள்ளனர்.
1950 – 1970 களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுடன் இந்திய வம்சாவழி வந்த தனவந்தர்களும் இணைந்து நெல் வணிகத்தில் ஈடுபட்டதுடன் நெற்செய்கை யிலும் ஈடுபட்டு பின்னர் அரிசி ஆலைகளையும் தம்பலகமத்தில் நிறுவினார்கள்.
பொற்கேணியில் இலங்கைநேசன் அரிசி ஆலை, லோகராஜா அரிசி ஆலை (எல். ஆர்.எஸ். அரிசி ஆலை), கோவிலடியில் இராசலெட்சுமி அரிசி ஆலை என்பன இவ்வாறு உருவாகிய அரிசி ஆலைகளாகும்.
இராசலெட்சுமி அரிசி ஆலை சின்னராசா என்பவரால் ஆதிகோணநாயகர் ஆலயத்திற்கு உரித்தான காணியில் அமைக்கப்பட்டிருந்தது. மில்லுச் சின்ராசர் என மக்கள் அவரை அழைத்தனர். பின்னர் அவ்வரிசி ஆலை மூடப்பட்டு தம்பலகமத்தில் இருந்த ஒரேயொரு திரைப்பட மாளிகை அவ்விடத்தில் இயங்கியது. வன்செயல் காலங்களில் அநாதரவாக இருந்த அவ்விடத்தில் தற்போது சுகாதார மருத்துவ அதிகாரி தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
தம்பலகமத்தில் உள்ளவர்களாலும் அரிசி ஆலைகள் தொடங்கப்பட்டன. முள்ளியடியில் சமேஸ்வரி அரிசி ஆலை, நடுப்பிரப்பன்திடலில் தங்கராசாப்போடியார் அரிசி ஆலை, நாயன்மார்திடலில் நாகேஸ்வரி அரிசி ஆலை என்பன தொடங்கப்பட்டன.
அக்குறணையைச் சேர்ந்தவர்களால் புதுக்குடியிருப்பில் “லக்கி அரிசிஆலை“ தொடங்கப்பட்டது. இது முஸ்லிம் மக்களால் தொடங்கப்பட்ட அரிசி ஆலையென்பதுடன் இதுவே இறுதியாக உருவாக்கப்பட்ட அரிசி ஆலையுமாகும்.
1985 மே மாதம் கடவாணையில் விடுதலைப்புலிகளால் நிலக்கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கடவாணையில் முகாமிட்டிருந்த கடற்படையினர் எட்டுப் பேர் மடிந்தனர். அந்தச் சத்தம் தம்பலகமத்தில் கேட்ட முதலாவது பாரிய வெடிப்புச் சத்தம் என்பதுடன் இவ்வாறுதான் கண்ணிவெடிச்சத்தம் இருக்கும் என்பதை தம்பலகமம் மக்கள் தெரிந்து கொண்ட முதலாவது சந்தர்ப்பமுமாகும்.
பொற்கேணி, பட்டிமேடு, கூட்டாம்புளி, கள்ளிமேடு, சிப்பித்திடல், கரைச்சைத்திடல், வர்ணமேடு, முள்ளியடி, நடுப்பிரப்பன்திடல், நாயன்மார்திடல், ஐயனார்திடல், மாக்கைத்திடல், குஞ்சடப்பன்திடல், கோவிலடி ஆகிய ஊர்களில் இருந்த மக்கள் கிண்ணியா நோக்கி இடம்பெயர்ந்தனர். பத்தினிபுரம், பாரதிபுரம், முள்ளியடி, பொற்கேணி ஆகிய ஊர்களில் வசித்த மக்கள் தம்பலகமத்திலுள்ள கோவிலடி , பட்டிமேடு, கள்ளிமேடு ஆகிய ஊர்களில் தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.
1985 ஜுன் 10 ஆம் நாள் “எல்.ஆர்,எஸ். அரிசிஆலை“ படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. படையினருடன் பெருமளவிலான சிங்கள-முஸ்லிம் இளைஞர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஊர்காவல்படை வீரர்கள் இணைந்திருந்தனர். அரிசி ஆலையில் இருந்த நான்கு 12 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மற்றும் 06 பெண்கள் உட்பட 33 பேர் கைகள் பிணைக்கப்பட்டு பொற்கேணி பக்கமாக அழைத்துச் செல்லப்படுகின்றபோது பொற்கேணியில் உள்ள “வளர்மதி கூப்பன்கடை“ என அனைவராலும் அழைக்கப்பட்ட நாவலர் வீதிச் சந்திக்கருகில் குடியிருந்த மணியம் அவர்களின் துணைவி மற்றும் இரு பெண்பிள்ளைகள் வீதியில் நின்றமையால் அவர்களின் கைகளும் பிணைக்கப்பட்டு கல்மெட்டியாவிலுள்ள பாடசாலைக்கு கூட்டிச் செல்லப்பட்டார்கள். அழைத்துச் செல்லப்பட்டவர்களில் அரிசி ஆலை உரிமையாளர் திரு.லோகராஜா அவர்களின் 68 வயது தாயாரும் ஒருவர். நடக்கமுடியாத நிலையிலும் அவரையும் அழைத்துச் சென்றார்கள். அழுதழுது வீதி வழியால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். பாடசாலையில் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் வைத்திருந்த போது பல முஸ்லிம் தலைவர்கள் பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். பாடசாலையில் அதிபர் மற்றும் சிங்கள பொது மக்களும் விடுதலை செய்யுமாறும் கோரினர். அனைவரையும் விடுதலை செய்கிறோம் என உறுதியளிக்கப்பட்டு கைகள் அவிழ்த்து விடப்பட்டனர். காலை 06.00 மணிக்கு கைது செய்யப்ட்டவர்களுக்கு மாலையில் உணவு வழங்கப்பட்டது.
அன்றிரவு அனைவரும் அடித்தே கொல்லப்பட்டனர். 36 உயிர்கள் கண்ணிவெடியில் உயரிழந்த கடற்படையினருக்கு ஆறுதலளிப்பதற்காக காணிக்கையாக்கப்பட்டனர்.