சிறப்பாக கிழக்கு மகாணம் எங்கும் தமிழர்களும் முஸ்லீம்களும் குழல் புட்டிற்குள் தேங்காயும் புட்டுமாக இணைந்து பிணைந்து வாழும் அந்த வாழ்விற்குள் எற்பட்ட இணக்கங்கள் பிணக்கங்கள் சந்தோஸங்கள் கவலைகள் கொண்டாட்டங்கள் என்று எல்லாவற்றையும் உள்வாங்கி முன்னோக்கி நகர்த்திய பெரியவர்களில் சேகு இஸ்ஸதீன் முன்னிலை வகிக்கின்றார்.
இலங்கை போன்ற ஒரு நாட்டில் இனங்களுக்கு இடையிலான சகோதரத்துவம் சமத்துவம் சமஉரிமை என்றாக பேசப்பட வேண்டியதாக இருந்த காலத்தில் முஸ்லீம் சமூகத்தில் இருந்து அதற்கான வலுவான குரலாக எழுந்து வந்தவர்தான் சேகு இஸ்ஸதீன்.
இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்பே பேரினவாதத்தின் மேலாதிக்க செயற்பாடுகள் இலங்கை மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தனியான அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதாக உருவானதுதான் தமிழர் மகாசபைகளும் இலங்கை தமிழ் காங்கிரசும் ஆகும்.
இதன் பின்னரான தோன்றலான இலங்கைத் தமிழரசுக் கட்சியும்.
இவற்றுடன் இணைந்துதானா பாதைகளைத்தான் தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மக்கள் மதங்களால் பண்பாட்டினால் வேறுபட்டிருந்தாலும் மொழியால் இணைந்து பயணித்தனர்.
அது தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கமாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவாகிய காலத்தில் அது இன்னொரு வடிவமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பரிணாமத்தை அடைந்த போது சிறுபான்மையினருக்கும் இதற்குள் இருக்கும் இன்னொரு சிறுபான்னமையினராக உணரும் வகையிலான தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இன் தேவையை உருவாக்கியது.
இதன் வெளிப்பாடாக முஹுமு. அஸ்ரப் தலமையிலான சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உருவானது
இதில் முக்கிய ஆரம்ப செயற்பாட்டாளராக தன்னை இணைத்துக் கொண்டவர் சேகு இஸ்ஸதீன்.
ஆனாலும் இவர் இனங்களுக்கிடையேனான சகோதரத்துவத்தை அதுவும் சிறப்பாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள், முஸ்லீம் மக்களிடையே பேணுவதில் தன்னளவிலும் தனது கட்சி அளவிலும் சிறப்பாக நேர்மையாக நடந்து கொண்டார் என்பதே அவரை பற்றிய பேச்சுகளை நாம் முன்வப்பதற்கு இன்று காரணமாகின்றது.
அதுவும் ஈழவிடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியும் அதிகாரப் பரவலாக்கம் என்பதாக உருவாக்கப்பட்ட இந்திய அனுசரணையுடனான 13 அரசியல் திருத்தச் சட்டமும் மகாணசபை என்ற அமைப்புக்கள் ஏற்பட்ட காலத்தில்…..
இது அதிகாரப் பரவலாக்கத்திற்கான ஒரு ஆரம்ப புள்ளியாக கொண்டு முன்னோக்கி நகரலாம் என்பதை மறுதலித்தனர் பலர்.
தமிழ் பேசும் தரப்பில் பலரும் இதனை இந்திய அரசின் மேலாதிக்கம் செயற்பாடு கூடவே அதிகாரம் அற்ற தீர்வு என்பதாக கூறிக் கொண்டு தமது ஏக போகத்திற்கு மறுதலிக்கும் செயற்பாடாக பல வடக்கு கிழக்கு கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலை மறுதலித்தனர்.
கூடவே இதில் ஈடுபட்டவர்களை கொலை செய்வதும் என்றான சூழலில் தேர்தல் என்ற ஜனநாயகக் கடமையில் தனி ஒரு கட்சி என்றாக தோழர் பத்மநாபா தலமையில் ஈபிஆர்எல்எவ் ரெலோ ஈஎன்எல்எவ் என்ற கூட்டணி மட்டும் தமிழர் தரப்பினாராக கலந்து கொள்வது என்று முடிவெடுத்த நிலையில்….
இவ்வாறு நடைபெற்றால் அது உண்மையான ஜனநாயகத் தேர்தலாக பார்க்கப்படுமா என்ற கேள்விகளை துடைத்தெறியப் புறப்பட்ட முஸலீம் காங்கிரசின் தலமையாக அன்று வடக்கு கிழக்கு மகாணசபையின் தேர்தலில் மக்களிடம் சென்று தமக்கான பிரதிநித்துவம் என்ற களத்தில் நின்றவர்கள் என்றால் அது சேகு இஸ்ஸதீன் தலமையிலான் முஸ்லீம் காங்கிரஸ்காரர்கள்தான்.
அது மக்களிடம் அதிலும் சிறப்பாக முஸ்லீம் மக்கள் மத்தியில் அதிக வாக்குளைப் பெற்று முதலும் கடைசியுமாக அமைந்த இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற விடுதலை அமைப்பின் தலமையிலான கூட்டமைப்பு, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் என்றாக உருவானதுதான் இணைத்த வடக்கு கிழக்கு மகாணசபையின் முதல் அரசு
இதில் எதிர் கட்சித் தலைவராக பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் சேகு இஸ்ஸதீன்.
இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபையின் முதலும் கடைசியுமான எதிர் கட்சித் தலைவர் என் பெருமையை சேகு இஸ்ஸதீன் கொண்டிருக்கின்றார். இதன் முதலும் கடைசியுமான முதல் அமைச்சராக வரதராஜப்பெருமான் இருந்துள்ளார்.
மகாண சபையில் எதிர் கட்சித் தலைவராக இருந்தாலும் எதிரிக் கட்சியாக இல்லாது முழு வடக்கு கிழக்கிலும் சகல இனங்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை மேம்பாட்டை உருவாக்கி இணைந்த வடக்கு மகாணசபையின் முன்நோக்கிய நகர்விற்கு பாரிய அரசியல் பங்களிப்பை செய்தவர் சேகு இஸ்ஸதீன்.
இலங்கை வரலாற்றில் இப்படியான வரலாற்றுப் பாத்திரத்தை வகித்த சேகு இஸ்ஸதீனின் மரணம் சகோதரத்துவதற்கும் முஸ்லீம் சமூகத்திற்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகின்றது.
வேதாந்தி என்ற பெயரில் அவர் எழுத்துலகில் படைத்த இலங்கியங்கள் கவனிக்கப்பட வேண்டி பல பதிவுகளை கொண்டுள்ளது. அதிலும் சிறப்பாக வயது மூப்பான காலத்தில் தான் கடந்து வந்த பாதைகளை மையப்படுத்திய அவரின் பதிவுகள் அவர் விட்டுச் செல்லும் பொக்கிசங்களுக்குள் அடங்கும்.
மிகவும் சிக்கலான் பல வழிகளிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதாக இரந்த காலத்தில் தான் பிறந்த மண்ணில் இருந்த வண்ணம் இனங்களுக்கு இடையில் சகோதரத்துவத்தை வளர்த்து தேவையற்ற முரண்பாடுகளை தீர்த்து ஐக்கியமாக சகோதரத்துவமாக வாழ்ந்த அக்கரைப்பற்றின் மைந்தன் முழு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதி என்பதற்கு அப்பால் இலங்கையிற்கான ஒரு தேவையான பிரதிநிதியாக பெருமகனாராக செயற்பட்டார் என்பதினால் அவரின் மரணம் இழப்பாக அதிகம் உணரப்படுகின்றது.
ஈழத்தேசிய விடுதலை முனன்ணி(ENLF), தமிழீழ விடுதலைக் கழகம்(TELO) போன்றவை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF)யுடன் ஐக்கிய முன்ணியாக இணைந்து உருவாக்கிய இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை இல்லா ஓழிப்பதற்கு அன்றை இலங்கையின் பிரேமதாசாவின் அரசு புலிகளுடன் இணைந்து செயற்பட்டதும் தமிழ் நாட்டில் இருந்த இடதுசாரிக் கட்சிகள் தவிர்ந்து ஏனைய அரசியல் கட்சிகளும் ஓரணியில் இருந்து கொண்டு இதற்கு ஆதரவாக செயற்பட்டதும் வரலாற்று உண்மைகள்
இதனை எந்த வகையிலும் அது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் தமது மகாணசபை பிரதிநிதிகளுக்கான மக்கள் தேர்வு அங்கத்துவத்தை மாற்றீடு செய்து ஆட்சியைத் தொடர வேண்டும் என்பதற்கு சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் அர்பணிப்புடன் தோழர் பத்தமநாபாவின் வேண்டுகோளக்கு அமைய செயற்பட்ட பல முஸலீம் காங்கிரஸ் உறுப்பினர்களில் சேகு இஸ்ஸதீன் முதன்மையானவர்.
இன்னொருவர் வாழும் சாட்சியாக எஸ்எல்எம். ஹனீபா இன்னமும் ஓட்மாவடியில் வாழந்தும் வருகின்றார்.
தமிழ் பேசும் மக்களின் முக்கிய வரலாற்றுக் காலகட்டம் ஒன்றில் உயர் பாதுகாப்பு அச்சுறத்தலுக்கு மத்தியில் இதற்கான பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஈடுபட்டு அது தோல்வியில் முடிந்த இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபையும் அதன் அரசும் இல்லாது போன வரலாற்றை அனுபவமாக கொண்ட சேகு இசகுதீன் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நகர்வில் முக்கியமான பாத்திரத்தை வகித்துவிட்டே இயற்கை எய்தி இருக்கின்றார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் செறிந்து வாழும் முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத இலங்கை இந்திய அரசுகளின் பேச்சுவார்த்தைகளும் அது சார்ந்த செயற்பாடுகளும் முஸ்லீம் தரப்பிற்கு இழைக்கடும் வரலாற்று துரோகம் என்பதாக இருந்த சூழலிலும் தொடர்ந்தும் பிரதான அரசியல் ஓட்டத்தில் தம்மை இணைத்து தாம் சார்ந்த மக்களின் உரிமைகளுக்காக இறுதிவரை அரசியல் செயற்பாடுகள் இலக்கியம் என்றாக தன்னை அர்பணித் அந்த சேகு இஸ்ஸதீனுக்கு… வேதாந்தியிற்கு…. எமது அஞ்சலி வணக்க மரியாதைச் செலுத்துகின்றொம்
உங்கள் சகோதரத்துவக் கருத்தியல் செயற்பாடுகளை நாம் தொடர்ந்தும் எடுத்துச் செல்வோம் என்பதாக உங்கள் நினைவலைகளை நாம் சுமக்கின்றோம்.