தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை கருத்தில் கொள்ளாத ‘இமயமலை பிரகடனம்

இலங்கையில் யுத்தம் மௌனிக்கப்பட்டதையடுத்து 2009ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பரிஸில் 14 நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய உலகத் தமிழர் பேரவையிலிருந்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 10 அமைப்புகள் அடுத்தடுத்த வருடங்களில் விலகின.

பிரித்தானியத் தமிழர் பேரவை, பிரான்ஸிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பு மையம், ஐரிஷ் தமிழர் பேரவை, சுவிஸ் தமிழ் நடவடிக்கைக் குழு மற்றும் மொரீஷியஸிலுள்ள இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு போன்றனவும் இதில் அடக்கம். அதேநேரம், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், அமெரிக்காவின் தமிழ் செயற்பாட்டுக் குழு என்பனவும் உலகத் தமிழர் பேரவையில் இருந்து விலகியிருக்கின்றன.

அந்தவகையில், புலம்பெயர் நாடுகளிலுள்ள அனைத்து அமைப்புக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உலகத் தமிழர் பேரவை அமையாது என்பதுடன் ஒரு சில தனிப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டதாக உள்ள நிலையில் இதனை ஒரு ரப்பர் முத்திரை அமைப்பாகவே தமிழர்கள் பார்க்கின்றனர் என்ற கருத்துக்களும் நிலவுகின்றன.

உலகத் தமிழர் பேரவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரசால் 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இருப்பினும் 2015ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசினால் அத்தடை நீக்கப்பட்டது.

மீண்டும் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்று அரகலய மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்ததையடுத்து ‘அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதில்லை’ புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் போது புதிய பொருளாதாரம் அவசியம் என கூறி ஓகஸ்ட் 2022இல் அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டது.

இந்தவகையில்தான், பௌத்த பிக்குகளை உள்ளடக்கியதாக நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றின் முடிவில் இமயமலைப் பிரகடனம் உருவாக்கப்பட்டது. இந்தப் பிரகடனம் முக்கியமானது, நாட்டில் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் சில பௌத்த தேரர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம், ‘இமயமலைப் பிரகடனம்’ என்பவை ஜனாதிபதிக்கும் குறிப்பிட்டளவான பௌத்த பிக்குகளுக்கும் உலகத் தமிழ்ப் பேரவைக்கும் முக்கியமானதாக இருந்தாலும் தமிழர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது என்பதே வெளிப்படையானது.

இதில், இலங்கையில் ஒரு பல்லினத்தன்மையை ஏற்படுத்தி அதன் மூலம் அனைத்துச் சமூகங்களின் நல்வாழ்விற்கும் இமயமலைப் பிரகடனம் வழிவகுக்கும் என்று உலகத் தமிழர் பேரவை கூறுவதை ஏனைய தமிழர் அமைப்புக்களும், உள்நாட்டிலுள்ள அரசியல் தரப்பினரும் கடுமையாகச் சாடியுள்ளதுடன், அதைப் புறந்தள்ளுவதாக அறிவித்திருக்கின்றன.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் பௌத்த பீடங்களே நாட்டை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதுவே தமிழ் மற்றும் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இடையே, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்படுவதற்கும், இரத்து செய்யப்படுவதற்கும் முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது.

இலங்கையில் இன மோதல்களுக்கான வரலாற்றுப் பின்னணி மிகச் சிக்கலானதாகவும் மோசமானதாகவுமே நகர்ந்து வந்துள்ளது. இலங்கையில் தொடர்ச்சியாக வரலாற்று ரீதியாகத் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலையில் அரசின் பங்கிருந்துள்ளது என்பதற்கு உறுதியாக ஆதாரங்கள் உள்ளன.

யார் ஆட்சியில் இருந்தாலும் ஒரே இன, ஒரே மொழி மற்றும் சிங்கள – பௌத்த நாடு என்கிற நோக்கம் முன்னெடுக்கப்படுவதிலேயே அவர்கள் குறியாக இருந்துள்ளனர். இந்த கூட்டம் தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் எண்ணத்தில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்த “பிரகடனம்” தொடர்பிலான முழு நடவடிக்கையும் எவ்விதமான கலந்துரையாடலும் இன்றி இரகசியமாகச் செய்யப்பட்டது என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துடன் ஆரம்பிக்கின்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டத்துக்கான விதை வளர்ந்து விருட்சமாகி எழுந்து நிற்கின்றது. “இமயமலைப் பிரகடனம்” போன்று பல பிரகடனங்கள் உருவாக்கப்பட்டாலும் எந்தவொரு தீர்மானமும் பாதிக்கப்பட்டவர்களுடனான கலந்துரையாடல் தவிர்க்கப்பட்டு உருவாக்கப்படுவதில் எந்தப் பயனும் இல்லை.

போர் ஓய்வுக்கு வந்ததன் பின்னர் இதே போன்று அனைத்து உலகத் தமிழர் பேரவை எடுத்த முயற்சிகள் யாவும் மோசமான தோல்வியைக் கண்டிருந்தன. இதற்கு காலத்தே பயிர் செய்யாமை கூட காரணமாக இருக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தின் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் ஓரளவுக்குத் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் சற்றுக் குறைந்திருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தில் மாவீரர் தினத்துக்கான தடை அதன் பின்னரான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள், அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கிற வேளையில் உலகத் தமிழர் பேரவை இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.

இது அவர்களது முயற்சிக்கு முக்கிய தடையாக இருக்கிறது என்று சொல்லாம்.

அதாவவது அரசின் மீது கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டிய தருணத்தில் அரசின் மோசமான செயற்பாடுகளை மூடி மறைக்கின்ற செயற்பாடாகவே உலகத் தமிழர் பேரவையின் முயற்சிகள் பார்க்கப்பட்டன.

அதே நேரத்தில் இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் உள்நாட்டிலேயே தீர்வு காணும் வகையிலான அறிவிப்புக்களே கடந்த காலங்களிலும் மிக அண்மைக்காலத்திலும் இருந்து வந்திருக்கின்றன. இந்த நிலையில், உலகத் தமிழர் பேரவையினை எந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

அதே நேரத்தில், உண்மையைக் கண்டறிந்து இணக்கப்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஆணைக் குழுவை அமைப்பதற்குப் புலம்பெயர் அமைப்புகளுடன் வெற்றிகரமாகப் பேசி முடிவெடுத்துள்ளதாக, சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாய்ப்பை அளிக்கலாம். அதற்கு உலகத் தமிழர் பேரவை பயன்படுத்தப்படுமா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அந்தவகையில்தான், தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு பொறுப்புக்கூறல் நடைபெற்றேயாகவேண்டும் என நகர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் ஏன் இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்கிற வகையிலும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

வரலாற்று ரீதியாக அரசியல் தீர்விற்கான உள்ளூர் பொறிமுறைகளில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதும் தீர்வானது சர்வதேசத்தின் பிரசன்னத்துடன் நடைபெற வேண்டும் அவ்வாறில்லாத இடத்தில் மீண்டும் ஒரு முறை தமிழர்கள் ஏமாற்றப்படலாம் என்ற எதிர்வு கூறல்களும் வந்த வண்ணமிருக்கின்றன.

இந்தப்பின்னணியில்தான் நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட இமயமலைப் பிரகடனம் தலைமையில்லாதவர்களாக மாறிக் கொண்டு வருகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வை நியாயமானதாக எதிர்பார்க்கின்ற தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என்று வர்ணிப்பப்படுகிறது. இலங்கையின் பௌத்த பீடங்களின் பிரசன்னமில்லாது அல்லது ஒத்துழைப்பில்லாது இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வில்லை என்ற உண்மை வெளிப்படை என்றாலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகள் விமர்சனங்கள் புறக்கணிப்புகளுக்கு மத்தியில் இமயமலைப்பிரகடனத்தின் ஊடு தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் நிறைவேறுமா என்பது சந்தேகமே.

12.18.2023