சொன்ன பொய்க் கதைகளைத் திருப்பிச் சொல்ல இயலாது. எனவே, புதிய பொய்களைச் சொல்ல வேண்டும்; அல்லது, பழைய பொய்களுக்குத் தூசி தட்டி, வண்ணம் பூசி, புதுவடிவில் கொடுக்க வேண்டும்.
நம்முன் உள்ள கேள்வி யாதெனில், இன்னும் ஒரு முறை ஏமாறுவதற்கு, நாங்கள் தயாரா என்பதுதான்.
இன்னுமொருமுறை மட்டுமன்றி, என்றென்றைக்கும் ஏமாற்றுவதற்கு ‘அவர்கள்’ தயாராகவே இருக்கிறார்கள்; அதில், ஐயப்பட ஒன்றுமில்லை.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழரைத் திசை மாற்றுவதற்கான புதிய பொய் ஒன்று, தயாராகவே இருக்கிறது. அது தேர்தல் அறிவிக்க முன்னரே, சொல்லப்பட்டு விட்டது. இனிவரும் காலங்களில், அதைச்சுற்றிப் பரிவட்டம் கட்டி, ஊடகங்கள் ஆடும்.
அந்தப் பொய் யாதெனில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், அரசாங்கம் 2/3 பெரும்பான்மை பலத்தைப் பெறுவதைத் தடுப்பதற்கு, தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பெருமளவில் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்பதுதான் அந்தப் பொய் ஆகும்.
இந்தப் பொய்யை, உண்மை போல் அரங்கேற்ற, தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் போன்றன, மெதுமெதுவாய் ஊட்டி வளர்க்கப்படும். இவ்வாறு, மக்களின் உணர்வுகளைத் தூண்டி, அடுத்த தேர்தலிலும் மக்களை உசுப்பிவிட, தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் தயாராகவே இருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம், சுயாதீனமானதாகவும் அயல்நாடுகளின் தலையீட்டை நிராகரிப்பதாகவும் சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கும் அதேசமயம், சிங்கள மக்களுடன் நட்புறவுடையதாகவும் அமைவது, சிங்கள முற்போக்குச் சக்திகளின் கரத்தை வலுப்படுத்தும் கைங்கரியங்களாக அமையும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை, வெறும் பயங்கரவாதமாகவும் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதியாகவும் அரசாங்கம் சித்திரித்து வருகிறது.
இதைப் பொய்ப்பிப்பதற்கான முயற்சிகள், அரசாங்கத்தின் பலமான பிரசார இயக்கத்துக்கு எதிராகவே மேற்கொள்ளப்படல் அவசியம். இறுதியில், சிங்கள முற்போக்குச் சக்திகள், இன்றைய இடையூகளை மீறி, வெற்றி பெறுவது உறுதி.
அவர்களிடமிருந்து, தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம், தமிழ் மக்களது விடுதலை இயக்கம், தன்னையும் சிங்கள முற்போக்கு சக்திகளையும் பலவீனப்படுத்திக்கொள்ளும் என்பதை, நாம் நினைவில் கொள்ளல் முக்கியமானது.
தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது, இலங்கையின் ஒவ்வொரு புரட்சிவாதியினதும் முற் போக்குவாதியினதும் தேசபக்தனினதும் கடமை.
ஆனால், விடுதலை என்பது, ஒரு குறிப்பிட்ட வடிவிலேயே இருக்க முடியும் என்று வரையறைப்படுத்தி, அதற்குப் புறம்பானவற்றை எதிர்ப்பதும் தீர்வுகளை முன்வைப்போரை எதிரிகளாகக் காட்டுவதும் இன விடுதலைக்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் விரோதமான காரியங்களே ஆகும்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் இலக்கு, முழு இலங்கையினதும் தேசிய இனப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதோ, இலங்கையின் தேசிய சுயநிர்ணயத்தைப் பறிகொடுப்பதோ அல்ல!
ஆயினும், இந்த அபாயங்கள் இன்று அதிகரித்துள்ளன. எனவே, நாம் தேடும் தீர்வு, நீண்ட காலத் தீர்வாயினும், குறுகிய காலத் தீர்வாயினும் இவற்றைக் கணிப்பில் எடுப்பது அவசியம்.
நம் தேசிய இனப்பிரச்சினைக்கு, முன் வைக்கப்படும் குறுகிய காலத் தீர்வும் நீண்டகாலத் தீர்வும் சில அடிப்படை நெறிகளால் ஆளப்படுவன.
இந்த நெறிகள், அவற்றை முன்வைப்போரின் வர்க்கப் பார்வைகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
நாம் முன்வைக்கும் தீர்வு, பரந்துபட்ட வெகு ஜனங்களது நலன்களையும் உலகில் ஒடுக்கப்பட்ட சகல மக்களது போராட்ட நலன்களையும் சார்ந்ததும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இனம், மதம், மொழி, சாதி, பிரதேசம் போன்று எந்த அடிப்படையிலும் ஒடுக்குமுறையை இல்லாது ஒழிப்பதற்குத் தன் பங்களிப்பைத் தருவதுமாகும்.
நமது விடுதலைப் போராட்டத்தை, இலங்கையின் பிற ஒடுக்கப்பட்ட மக்களது போராட்டத்துடன் மட்டுமன்றி, உலகில் ஒடுக்கப்பட்ட சகல மக்களினதும் போராட்டங்களுடன் இணைத்து நோக்கும் பார்வை மூலமே, முழுமையானதும் நிலைக்கக் கூடியதுமான விடுதலையை வென்றெடுக்க முடியும்.
தேர்தலை நோக்கிய குறுகிய பார்வைகளும் இனஉணர்வைப் பற்றிய மேன்மைகளும் தமிழரின் இருப்பையும் எதிர்காலத்தையும் கேள்விகளையுமே எழுப்புகின்றன.
ஏமாற்றுத் தலைமைகள் பற்றி, அவதானமாயிருப்பது அவசியம்.
(Tamil Mirror)