இது குறித்து, தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின் முழு விவரம் வருமாறு,
கே: ஹக்கீம் என்றாலே, இனப்பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவரென, அனைத்தின மக்கள் மத்தியிலும் ஒரு நல்லெண்ணம் இருந்தது. இவ்வாறானதொரு நிலையில், ஓரினத்துக்காக அமைச்சுப் பதவியைத் துறந்திருக்கிறீர்கள். இது உங்களுடைய அரசியல் பயணத்துக்கான ஓர் அபாய நடவடிக்கையாகத் தோன்றவில்லையா?
இது, எல்லா இனங்களுக்காக வேண்டியும் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். இங்குதான், ஒரு தவறான புரிதல் ஏற்பட்டிருக்கிறது. இது நாட்டு நலன்சார்ந்த விடயம் என்பதை நான் தெளிவுபடுத்திக்கொள்கிறேன். முஸ்லிம்களுடைய பாதுகாப்புக்கு, வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள், பாய்ச்சல்கள், அடாவடித்தனங்களும், சர்வதேச ரீதியான இந்த நாட்டுக்குள்ள நற்பெயருக்கு ஏற்படுத்தப்படுகின்ற ஒரு களங்கமாகும்.
இந்த நாட்டு மக்கள் அனைவரும், பொருளாதார ரீதியில் பின்னடைவைச் சந்திக்கக்கூடிய ஓர் அபாயம் இருக்கிறது. உல்லாசப் பயணிகளின் வருகை, மீண்டும் தடைப்படுவதற்கான ஓர் ஆபத்தும் நிலவுகிறது. மெதுவாகக் கட்டியெழுப்பப்படும் இருப்பு வாழ்க்கைக்கு, தடி எடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரர்களாக, சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கவேண்டிய பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும், பாரபட்சமாக நடந்துகொள்ளும் ஒரு சூழல் உருவாவதென்பது, முழு நாட்டினதும் சட்டத்துறையைக் கேள்விக்குறியாக்குகின்ற விடயமாகும். இதன் விளைவு, முழு நாட்டினுடைய மக்களையும் பாதிக்கக்கூடும். இங்கேதான் அந்தப் புரிதலின் அவசியம் இருக்கிறது.
இதே முரட்டுத்தனமான, இனவாதப் போக்கிலே யோசிப்பவர்கள், இந்த உண்மையைப் புறத்தொதுக்கிவிட்டு, வேண்டுமென்றே நாங்கள் ஓர் இனவாத நோக்கிலே கூட்டுச் சேர்ந்திருக்கிறோம் என்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
தனியே முஸ்லிம் அமைச்சர்கள் மாத்திரம் இந்த ஒரு முடிவை எடுத்திருப்பதால், அப்படியானதொரு பார்வை ஏற்படுவது உண்மைதான். ஆனால், இன விரிசலை மேலும் ஏற்படுத்தாது தடுப்பதற்காகத்தான், நாங்கள் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருக்கிறோம் என்பதைத் தெட்டத்தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்.
கே: ஆனால் இந்த முடிவு, இனவிரிசலுக்கான வழியென்றே பார்க்கப்படுகிறதல்லவா?
எங்களுடைய இந்தத் தீர்மானம், உண்மையில் அச்ச உணர்வையே தோற்றுவித்திருக்கிறது. தொடர்ந்து ஒரு சமூகத்தின் மீது பாய்ச்சல்களை மேற்கொண்டால், வேறு வழி தெரியாமல், எமது சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், விபரீதமான எண்ணங்களுக்குள் அள்ளுப்பட்டுச் செல்வார்கள். சஹ்ரான் போன்ற பயங்கரவாதிகளின் நோக்கம், பேரினவாதச் சக்திகளின் நடவடிக்கைகளால் நிறைவேறிவிடுகின்ற ஆபத்து இருக்கின்றது.
மறுபுறம், இவ்வாறான சிக்கல்களை எமது சமூகம் எதிர்கொண்டிருக்கும் தருவாயில், எம்மைப் பாதுகாக்க வேண்டிய அரசியல் தலைமைகள், கையாலாகாத நிலையில் இருக்கிறார்களே என்று எம்மக்கள் நினைக்கத்தோன்றும். அதனால், தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, மாற்றுவழியில் நாடத்துணிவார்கள். இவ்வாறான நிலைமைகளை, இந்தப் பேரினத் தரப்புகள் புரிந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம் இளைஞர்கள், ஒருவிதத் தீவிரப் போக்கைக் கடைப்பிடிப்பதிலிருந்து பாதுகாக்கவும் அவர்களைப் பாதுகாப்பதற்காகவும், எமது இந்த நடவடிக்கை உதவும் என்பதை, அனைவரும் மனதிற்கொள்ள வேண்டும்.
இதேவேளை, ஒட்டுமொத்தத் தமிழ் பேசும் சமூகங்களும், ஓர் ஒற்றுமையை நாடிப்போய்விடும் என்றதோர் அச்சமும் மறு பக்கத்தில் உள்ளது. தலைவர் பிரபாகரனால் போராட்ட நடவடிக்கைகள் இருந்த காலத்தில்கூட, இவ்வாறான பரந்துபட்ட முடிவுக்கு, முஸ்லிம் அரசியல் தலைமைகள் வந்துவிடவில்லை. ஆனால், சஹ்ரான் கும்பலும் இரண்டு பௌத்த தேரர்களும், முஸ்லிம் தலைமைகளை ஒற்றுமைப்படுத்திவிட்டார்கள் என்ற ஒரு நிலைமை உருவாகியிருக்கிறது.
இதன் ஒரு தாக்கம் தான், என்னை அதுவரையிலும் மிதவாதத் தலைவராகக் கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள், இன்று என்னைப் படுமோசமாகத் தூற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். இது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், பக்குவமான அரசியலைச் செய்யும்போது, நாங்கள் இவற்றைப் பற்றிப் பெரிதான அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
கே: மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்க ஏன் தயங்குகிறீர்கள்?
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது, சமூக விடுதலை இயக்கம் என்ற அந்தஸ்தில் இருக்கின்ற நிலையில், அதன் தலைமை, அமைச்சுப் பதவியில் இருந்துதான் அந்த அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்ற வங்குரோத்து நிலைமைக்கு வரவில்லை.
ஆளுங்கட்சியில் இருந்தாலும் எதிர்க் கட்சியில் இருந்தாலும், முஸ்லிம்களின் விமோசனம் என்பது, எங்களுடைய ஒட்டுமொத்த ஒற்றுமையில்தான் தங்கியிருக்கிறது. இங்கு அமைச்சுப் பதவி என்பது, வெறும் ஒரு சோடனையேயொழிய, அதனால் மாத்திரம்தான், ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியுமென்பதற்கு எதிரான தரவுகள் நிறைய இருக்கின்றன.
தமிழர்களுடைய போராட்டம், அமைச்சுப் பொறுப்புகளை நாடுகின்ற போராட்டம் அல்ல. தங்களுக்கான ஒரு சுயாட்சி வரும்வரை, ஆட்சியின் பங்காளிகளாக வருவதில்லை என்ற நிலைப்பாட்டில்தான் தமிழ்த் தலைமைகள் இன்னும் இருக்கிறார்கள். மலையகத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பொறுத்தமட்டில், இந்த அமைச்சுப் பதவிகள் மீதான ஒருவிதக் கவர்ச்சி, அதனூடாக அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு என்பனவே, அமைச்சுப் பதவிகளை எடுப்பதற்கான ஒரு நிலைப்பாட்டுக்குத் தள்ளியிருந்தது.
முஸ்லிம் சமூகத்தின் செறிவு என்பது, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இல்லை. அதனால், அமைச்சரவையில் அங்கம் வகித்தால், தங்களுடைய பிரதேசங்கள்சார் நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமென்ற எடுகோளின் அடிப்படையிலும், அமைச்சுகளை முஸ்லிம் தலைமைகள் ஏற்றுவந்தன. ஒரு சமூக விடுதலைக்கான போராட்டத்தில், அமைச்சுப் பதவி இருந்தால்தான் சாதிக்கலாம் என்பது, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சாத்தியப்படாது.
எவ்வாறாயினும், முஸ்லிம் சமூகத்தின் அரசியல், ஒரு தளத்துக்கு வந்திருக்கிறது. அதை மிக நேர்மையாகப் பயன்படுத்த வேண்டும். அதை, ஏனைய தரப்புகள் புரிந்துகொளும்படியான முன்னெடுப்புகளைச் செய்யவேண்டும்.
கே: அவ்வாறாயின், அமைச்சை ஏற்காமலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிடிவாதப் போக்கை, முஸ்லிம் தலைமைகளும் இனி கடைப்பிடிக்குமென எதிர்பார்க்கலாமா?
இவ்வாறான அபிப்பிராயம், முஸ்லிம்களின் அரசியலிலும் இருந்திருக்கிறது. அஷ்ரப்பின் அரசியல், பிரதிநிதித்துவ அரசியலாக இருந்தது. எதிர்க்கட்சியின் 6 வருடங்கள், ஆளுங்கட்சியில் 6 வருடங்கள் என்று, முஸ்லிம்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவருடைய அரசியலினூடாக, அதிகப்படியான பட்டறிவுகளைப் பெற்றிருக்கிறோம். இவ்வாறாக, பதவிகளைச் துச்சமாக மதிப்பதென்பது, எங்களுடைய அரசியலில் இருந்து வந்திருக்கின்றது. இந்தக் கட்டத்தில், ஒற்றுமையுடன் அனைத்துத் தரப்புகளையும் இணைந்துச் சாதித்திருக்கிறோம்.
இதனுடைய தாக்கம், ஜனரஞ்சகமான விடயமாக மாறியிருக்கிறது. இவ்விடயத்தை, நடுநிலையிலிருந்து பார்க்கிற பேரினச் சமூகமும் தமிழ்ச் சமூகமும், எமது முடிவின் யதார்த்தத்தை சரிவரப் புரிந்து, எமக்கான ஆதரவைத் தருகின்றமையானது, எங்களுக்கு மேலும் தெம்பூட்டியிருக்கிறது.
கே: இஸ்லாத்தை, எவ்வாறு நீங்கள் வரையறுக்கிறீர்கள்?
இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற எல்லோரும் முஸ்லிம்கள். இஸ்லாம் என்பது, ஒரு மொழி சார்ந்த அடையாளம் அல்ல. பல இடங்களில், இனத்துவ அடையாளத்துக்கு மொழியைக் கொண்டு தீர்மானிக்கிறார்கள். ஒற்றுமைக்கான அடையாளத்துக்கு, மொழியென்பது அத்தியாவசியம். தமிழ் பேசும் மக்களுக்கான ஓர் ஒருமித்த பயணம் அவசியமாகிறது. இதற்கான புரிந்துணர்வென்பது முக்கியமாகிறது.
அடுத்தகட்ட அரசியலிலும் வருகின்ற தேசியமட்டத் தேர்தல்களிலும், நல்ல புரிந்துணர்வுடனான கூட்டு என்பது, பலன்தரக்கூடிய, இந்தக் கட்டத்தில், நாம் அனைவரும் மிகத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். இதனால், தேவையற்ற பீதியை மாற்றுத்தரப்பில் ஏற்படுத்திவிடாமல் பார்த்துக்கொண்டு, நாங்கள் இதை, நேர்மையாகவும் பக்குவமாகவும் கையாளலாம்.
கே: முஸ்லிம்கள் என்று தனிப்பட்ட ரீதியில் போட்டியிடுவதற்கான நிலைமை காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பான வதந்திகள் உண்மையா?
முஸ்லிம் சமூகம், அதீத கற்பனையுடன், பல விடயங்களைச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. அது சாத்தியப்பட்டால் நல்லதென்றும், நிறையப் பேர் நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நாட்டில் நடைபெறவிருக்கின்ற தேர்தல்களைப் பொறுத்து, ஒருமித்த நிலைப்பாடு, வெவ்வேறு விதமாகப் பயன்படுத்தப்படலாம். ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், வேறு தேர்தல்களில், சேர்ந்தும் தனித்துமென்றும் அணுகுமுறைகளைக் கையாளலாம்.
கூட்டுச் செயற்பாட்டின் மொத்த நன்மை, ஒரு நாடுதழுவிய தேர்தலில், பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். அந்தப் பீதி உணர்வுதான் இன்று, பேரினக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம், சந்தர்ப்பங்கள் வருகின்ற போது பரீட்சித்துப் பார்ப்போம்.
கே: அப்படியானால், முஸ்லிம்களின் கூட்டணியொன்றை, எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாமா?
அது, இப்போதைக்கு ஓர் அதீதமான கற்பனையே. ஆனால், இதற்கான பாரிய வரவேற்பு, மக்கள் மத்தியில் இருக்கிறதென்பது உணரப்படுகிறது.
கே: இஸ்லாமியராக இருந்துகொண்டு, அதன் நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களைக் கொலைசெய்ய வேண்டுமென்ற வரையறை, இஸ்லாத்துக்குள் இருக்கிறதா?
இங்குதான் தீவிரவாதமென்பதை அடையாளப்படுத்த முடிகிறது. ஒரு மதத்தைக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் மத்தியில், நான்கு சாரார்கள் இருக்கின்றனர். முதலாவது சாரார், சமயத்தையும் தங்களுடைய சாதாரண வாழ்க்கை நடைமுறைகளையும் வேறுபடுத்திப் பார்ப்பார்கள். அவர்கள், இஸ்லாமியர்கள்தான். ஆனால், தாங்கள் முஸ்லிம்களாக இருக்கின்ற போதிலும், தாங்கள் முஸ்லிம்கள் என்ற அடையாளத்தை, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் காட்டிக்கொண்டு திரியமாட்டார்கள். இவர்கள், தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மாத்திரம் முஸ்லிமாக வாழ்வார்கள்.
இவர்களுக்கு அடுத்தபடியாகவே, இரண்டாவது சாரார் காணப்படுகின்றனர். இவர்கள், சாதாரண வாழ்க்கையையும் மார்க்கத்தையும் ஒன்றாகப் பார்ப்பவர்கள். நாங்கள் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால், தங்களுடைய அடையாளங்களைப் பகிரங்கமாகவே பேணிப் பாதுகாப்பவர்கள். இவர்கள், மார்க்கத்தின் மீது அதீத பற்றுக்கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்தலாம். முதலாவது சாரார், தீவிரப் பற்று இல்லாவிட்டாலும், மார்க்கத்தைப் பின்பற்றுவார்கள். ஆனால் இரண்டாந்தரப்பினர், மார்க்கத்தின் மீது, அதீத தீவிரம் கொண்டிருப்பார்கள். ஆனால் இவர்கள், தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மாத்திரம் அதைத் தீவிரமாகக் கையாள்வார்கள்.
உதாரணமாக, ஹிஜாப் விரகாரத்தை எடுத்துக்கொண்டால், தங்களுடைய பெண் பிள்ளைகள், ஹிஜாப் அணிய வேண்டுமென்று நினைப்பார்கள். அதைக் கடைப்பிடிப்பார்கள். ஆனால், மற்றையவர்கள் அதை அணிவதைப் பற்றியோ அணியாமல் இருப்பதைப் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள்.
அடுத்த சாரார், மார்க்கத்தை அதி தீவிரமாகப் பின்பற்றுவார்கள். அந்தக் கட்டத்துக்கு வந்தவர்கள் பற்றி, நாம் அவதானமாகத்தான் இருக்க வேண்டும். தாங்கள் தமது மார்க்கத்தில் பின்பற்றும் விடயங்களை, மற்றையவர்களும் பின்பற்ற வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாவிட்டால், அவர்களைக் குறைகூறுவார்கள். அது ஒரு தீவிரப் போக்குக்காகப் போகிற ஒரு கட்டமாகவே பார்க்கப்படுகிறது.
அந்தக் கட்டத்துக்கு வந்துவிட்டால், அவர்களைப் பற்றிக் கவனமாகத்தான் இருக்கவேண்டும். மற்றவர்களைக் குறைகூறுவதிலிருந்து பயங்கரவாதத்துக்குப் போகும் தூரம் கொஞ்சமாகும். மற்றவன் செய்யவில்லை என்று குறைகூறுபவனை, ஓர் ஆபத்தின் அறிகுறியாகவே பார்க்க வேண்டும். அதற்கப்பால் அவர்களை அடுத்த கட்டத்துக்கு இலகுவாகக் கொண்டுசென்று விடலாம்.
நான்காவது சாரார்தான், பயங்கரவாதத்துக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். “நீ என்னைப்போல இல்லையென்றால், உன்னைக் கொல்லவேண்டும்” என்ற நிலைப்பாட்டில்தான் அவர்கள் இருப்பார்கள். “நீ இப்படித்தான் மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும். நீ இப்படிச் செய்யவில்லை என்றால், உன்னை முஸ்லிம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதனால், உன்னைக் கொல்லவேண்டும்” என்று நினைப்பவன் பயங்கரவாதியாவான்.
நபி பெருமானின் ஒரு ஹதீஸ் (வாக்கியம்) இருக்கிறது. “மற்றவர்களுக்கு மிகத் தீவிரமான இஸ்லாத்தைப் போதிக்க விரும்புகிறவன், தீவிரவாதமெனும் ஒரு கட்டத்துக்குள் வருவான். அவன், வில்லிலிருந்து அம்பு புறப்படுவது போல, மார்க்கத்திலிருந்து தூரப்படுவான். அவன் குறித்து அச்சப்படுங்கள்” என்று போதித்துள்ளார். இது நபி வாக்கியம். எனவே, இந்தக் கட்டத்துக்குச் செல்லும் கூட்டம் தொடர்பில், மிக அவதானமாக இருக்கவேண்டும்.
கே: ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், முஸ்லிம் கட்சிகளுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருந்த சஹ்ரான், முஸ்லிமாக இருந்துகொண்டு, மார்க்கத்தைக் கடைப்பிடிக்காதவர்களைக் கொல்லவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதில், உங்களது கட்சியின் பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டுள்ளார்கள். சஹ்ரான் போன்றவர்கள் குறித்து அவதானமாக இருக்கவேண்டும் என்று கூறுகின்ற நீங்கள், எப்படி அவ்வாறானதொரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டீர்கள்?
துரதிர்ஷ்டவசமாக, காத்தான்குடி என்ற பிரதேசத்தின் பெயர், பல விசித்திரமான சம்பவங்களுடன் தொடர்புபட்டுப் பேசப்படுகிறது. ஒன்றரை சதுர கிலோமீற்றருக்குள், கிட்டத்தட்ட 50ஆயிரத்துக்கும் அதிகமாக மக்கள் வாழ்கின்ற பிரதேசமே காத்தான்குடியாகும். தெற்காசியாவிலேயே, ஆகக்கூடிய சனச்செறிவு வாழும் பிரதேசமாகவும் இது காணப்படுகின்றது.
இவ்வாறான பிரதேசத்துக்குள், முஸ்லிம்களின் போட்டித் தன்மையுடைய அரசியலைச் செய்கின்ற போது, ஒரு சிலநூறு வாக்குகளுக்குப் பின்னால் ஆளாய்ப் பறக்கிற நிலைமையே காணப்படுகின்றது. இப்படியான ஒரு நிலைமையில் கட்சிகள் இருக்கும்போது தான், சஹ்ரான் என்பவர், தன்னுடன்சார் வாக்குகளை வழங்க வேண்டுமாயின் ஒப்பந்தத்துக்கு அழைத்துள்ளார்.
இவ்வாறான ஒருவரின் வாக்குகளுக்குப் பின்னால் போகவேண்டிய தேவை இல்லை. இருப்பினும் உள்ளூர் அரசியல்வாதிகள், எப்படியாவது தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, அந்த அழைப்பை ஏற்றுச் சென்று, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். ஆனால் இதுபற்றி, தலைமைத்துவம் அறிந்திருக்கவில்லை. ஒப்பந்தத்தில் அடங்குகின்ற விடயங்கள் பற்றியும் தெரியாது. கேள்விப்பட்டிருந்தால், ஒட்டுமொத்தமாக இதை அலட்சியப்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அந்த ஒப்பந்தத்தில், மேடைகளில் பாடல் ஒலிபரப்ப முடியாது. சங்கீதம் இசைக்க முடியாது. ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது. உண்மையில், ஒலிபெருக்கி இல்லாமல், சங்கீதம் இல்லாமல், தேர்தல் மேடையொன்று சாத்தியமானதா? இப்படியான அபத்தமான விடயங்களைக் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாமா? இவ்வாறான நடவடிக்கைகளைக் கொண்டே, தீவிரவாதி என்பதை, அடையாளம் கண்டிருக்கலாம். இவ்வாறான ஒருவரிடம் போய் ஒப்பந்தம் செய்ததைவிட அபத்தமான செயல் கிடையாது.
இப்போது தான், இவற்றைப் பற்றியெல்லாம் நாங்கள் கேள்விப்படுகிறோம். இது குறித்து, எங்களுக்குள்ளேயே ஒரு வெட்கக்கேடான விடயமாகப் பார்க்கிறோம். சொற்ப வாக்குகளுக்கு ஆசைப்பட்டு, இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நிகழ்வுகளுக்கோ அல்லது தேர்தல் மேடைகளுக்கோ சென்றால், எங்களுக்கு கௌரவமளிப்பதற்காக மாலை அணிவிப்பார்கள். அதைக்கூட தடுப்பவர்கள் இருக்கிறார்கள். அத்துடன், பட்டாசும் கொளுத்தக்கூடாது. இவ்வாறு பட்டாசும் கொளுத்தாமல் மாலையும் அணிவிக்காமல் அரசியல் செய்வதெப்படி?
இவையெல்லாமல், அபத்தமான வேலைகளாகும். அளவுக்குமீறி, எங்களுடைய அடையாளத்தைப் பேணவேண்டும் என்கிற தீவிரப் போக்கை, இன்னும் கொஞ்சம் பக்குவமாகத்தான் கையாள வேண்டும். தலைமைத்துவக் கதிரைகளிலுள்ள நாங்கள், பல சந்தர்ப்பங்களில் பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்டிருக்கிறோம்.
எங்களுடைய மேடைகளில், கட்சிக்கான எழுச்சிப் பாடல்கள் ஒலிபரப்பப்படுவது வழமை. இது, மிகப்பெரிய கவர்ச்சியான நடவடிக்கையாகும். இந்தப் பாடலை ஒலிக்கவிட்டபின்னர், மக்கள் அவ்விடத்தைத் தேடி ஓடி வருவார்கள். சில சமயங்களில், பாடலுக்கேற்ற இசையில், கைகளைத் தட்டி ஆடவும் செய்வார்கள். அந்தப் பாடல் முடியும் வரையிலும், ஒருவித குதூகலம் இருக்கும். இது வழமையாக நடக்கும் விடயம். இதைக்கூட தடுக்கும் சில பேர்வழிகள் இருந்தார்கள். ஆனால், அவர்களையெல்லாம் நாம் அலட்சியப்படுத்தி விட்டோம். இந்த விவகாரத்திலும், இவர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்து, மார்க்கத்தைப் பாதுகாப்பதாகப் பிரசாரம் செய்திருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் என்று நெற்றியில் எழுதிக்கொண்டு, இவ்வாறான விடயங்களைச் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் இவ்வாறான விடயங்கள், சர்வ சாதாரணமானவை. ஆனால், பொலித்தீன் பாவனை கூடாது என்று குறிப்பிட்டிருந்தால், அதை நாங்கள் மனப்பூர்வமான ஏற்றுக்கொண்டிருப்போம். அவ்வாறான விடயங்கள் வரவேற்கத்தக்கவையாகும். பட்டாசு கொளுத்துவதைக்கூட குறைத்துக்கொள்ளச் சொல்லியிருந்தால் செய்திருப்போம். காரணம், இவற்றால் சுற்றாடலுக்குத் தீங்கு என்பதை, நாமும் அறிவோம்.
ஆனால், இதையெல்லாமல் மார்க்கமாக்கி, விபரீதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களின் நிலைமை, இன்று எங்கு போய் முடிந்திருக்கிறது பாருங்கள். இவையெல்லாம், ஆபத்துக்கான அறிகுறிகள். இதுபற்றி, அனைவரும் தெளிவாக உணர்ந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்.
கே: சஹ்ரானின் அந்த ஒப்பந்தத்தில், சூபி முஸ்லிம்களுக்கு எந்தவோர் உதவியும் அளிக்கப்படக்கூடாதெனக் குறிப்பிடப்பட்டிருக்கிறதே?
சூபி முஸ்லிம்களுக்கு எதிரானவராகவே, சஹ்ரான் காணப்பட்டார். நான், சூபி அமைப்பின் தலைவரது இருப்பிடத்துக்கும் பள்ளிவாயலுக்கும் அடிக்கடி சென்றுவருவேன். அப்படி நாங்கள் செல்வதை, அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே பார்க்கிறார்கள். இதை இந்த ஆசாமிகள் தடுக்க வந்தால், நான் உடன்பட மாட்டேன். என்னை அவ்வாறு கட்டுப்படுத்த வந்தால், பயங்கரவாதத்துக்கு தலைவணங்கும் ஒரு தலைவராக நான் இருந்திருக்க மாட்டேன். அது, என்னுடைய ஆளுமைக்கும் பங்கம் விளைவிக்கும் விடயமாகும்.
உள்ளூர் அரசியலில் ஈடுபடும் என்னுடைய தரப்பினர், அரசியல் நோக்கத்துக்காக அங்கு சென்றிருக்கலாம், பேசியிருக்கலாம். அதனால் நாங்கள் பயங்கரவாதிகள் அல்லர். அத்துடன், இன்று பயங்கரவாதியாகப் படுபாதகச் செயலைச் செய்த ஆசாமி, அன்று பயங்கரவாதியாக இருக்கவில்லை. பெரிய போதகராகவே இருந்தார். அவருடைய போதனைகள், சிலரைக் கவரக்கூடியனவாக இருந்தன. இதை அவர், அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டார். அதன்மூலம், தன்னுடைய கொள்கைகளைச் சந்தைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக்கொண்டார். 2015க்குப் பின்னர், இவருடைய சுயரூபம், அனைவருக்கும் தெளிவானது. அவரும் தலைமறைவாகிவிட்டார்.
கே: குறித்த அறிகுறிகளுடன் பயணிப்பவர்கள் தொடர்பில் அவதானம் வேண்டும் என்கிறீர்கள். ஆனால், அவ்வாறான அறிகுறிகளுடன் இருந்த சஹ்ரான் என்ற நபர் குறித்து, ஏன் நீங்கள் அவதானம் செலுத்தவில்லை?
அப்போது, சஹ்ரான் பற்றி அறிந்திருக்கவில்லை. எனக்கு அவருடைய பெயரும் தெரிந்திருக்கவில்லை. காத்தான்குடி – அலியார் சந்தியில் அவர் நடத்திய கூட்டத்துக்குப் பின்னர் இடம்பெற்ற கத்தி வீச்சு, வாள்வெட்டை அடுத்தே, சஹ்ரான் பற்றித் தெரியவந்தது. அந்தச் சம்பவத்தை அடுத்து, அந்நபரும் தலைமறைவாகி விட்டார். அந்தக் கட்டத்தில் தான், அவர் வன்முறையை நோக்கிப் போகிறார் என்று உணரத் தொடங்கினர். ஆனால், அந்த நேரத்திலும், சிலருக்கு அவர் மீது அனுதாபம் காணப்பட்டது. காரணம், அவருடைய கொள்கைகளால் சிலர் ஈர்க்கப்பட்டிருந்தனர்.
காத்தான்குடியில் இருக்கின்றன முஸ்லிம்களின் மிகப்பெரிய ஆன்மிகக் கல்லூரியாக மத்ரஸத்துல் பலாஹ் விளங்குகிறது. அதில் இணைந்து படித்த நிறைய ஆலிம்கள், உலமாக்கள், நாடு முழுவதிலும் இருக்கிறார்கள். அந்தக் கல்லூரியில் இணைந்திருந்த சஹ்ரானின் தீவிரச் செயற்பாடுகளை ஏற்காத கல்லூரி நிர்வாகம், அவரை அங்கிருந்து வெளியேற்றியிருந்தது.
அந்தக் கட்டத்திலேயே, இவரைப் பற்றிய தீவிரக் கண்காணிப்பு இருந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இவருடைய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் விடயத்தில் தவறுகள் நடத்திருக்கின்றன. எவ்வாறாயினும், இவருடைய தீவிரப் போக்கை அவதானித்துள்ள வெளிச் சக்தியொன்று, அவரை லாவகமாகக் கையாண்டிருக்கின்றது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். முஸ்லிம் சமூகத்தைப் பலிக்கடாவாக்கி, இப்படியான கும்பலைக் கூலிக்கு அமர்த்திய விடயமாகத்தான், நான் இதைப் பார்க்கிறேன்.
கே: நீங்கள் நீதி அமைச்சராக இருந்த காலத்திலும், இவரைப்பற்றி நடவடிக்கை எடுக்கவில்லையே?
இவருடைய செயற்பாடுகள், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் தீவிரமாகியிருந்தன. இதுபற்றி சாட்சியமளித்த பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், அதைத்தான் கூறியிருந்தனர். 2017 அளவில்தான், அவருக்கு எதிரான பிடிவிறாந்து, தலைமறைவுச் சம்பவங்கள் இடம்பெற்றன. 2015க்குப் பின்னர் தான், அவர் ஒரு தீவிரப் போக்கை நோக்கிச் சென்றிருக்கிறார். அதுவரையிலும், சிறந்தவொரு பிரசங்கவாதியாகவே செயற்பட்டிருந்தார்.
கே: அப்படியானால், 2015க்குப் பின்னர் உருவான அரசாங்கத்தின் பாதுகாப்பு பலவீனம்தான், இவ்வாறான நிலைமைக்குக் காரணமென்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
அரசாங்கமொன்று, சதாவதானியாக இருக்க முடியாது. சதாகாலமும் எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டு, இராணுவ ஆட்சியாக இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, 10 வருடங்களாக நாட்டில் இயல்புநிலை காணப்படுகின்ற போது, எல்லா விடயங்களையும் கூர்மையாக அவதானித்துக்கொண்டு, அவை எல்லாவற்றினதும் பக்க விளைவுகள் பற்றிய அதீத கரிசனையோடு செயற்படுகிற நிலைவரத்தில் சில தொய்வுகள் ஏற்பட்டிருக்கலாம். அது சர்வ சாதாரணமானது.
நாட்டில் சமாதானம் ஏற்பட்டிருக்கும் தருவாயில், மீண்டும் ஆயுதக் கலாசாரம் தோன்றக்கூடும் என்று எண்ணுவது, மெத்தனப்போக்காகும். இதைத்தான் இப்போது இந்த அரசாங்கம், நாட்டின் பாதுகாப்பு மீது கவனயீனமாக இருந்துவிட்டதெனப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், எந்தவொரு நாட்டிலும், இப்படியான சம்பவங்கள் நடக்கலாம். இருப்பினும், இந்த விவகாரத்தை அடுத்து, அனைவரும் அனைத்து விடயங்களிலும் உஷாராக இருக்கவேண்டுமென்ற பட்டறிவு கிடைத்திருக்கிறது.
கே: தெரிவுக்குழுவில் நீங்கள் நிலைத்திருப்பது குறித்து எழுந்திருக்கும் சர்ச்சை பற்றி..?
முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையை, தெரிவுக்குழு மீதான நம்பிக்கையீனமாகவே, எதிர்க்கட்சியினர் காண்பிக்க முயல்கின்றனர். தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதென்பது, சபாநாயகரின் தெரிவு சார்ந்த விடயமாகும். கட்சித் தலைவர்கள் கூட்டாகத் தீர்மானம் எடுத்து, கட்சிகளின் விகிதாசாரத்துக்கு ஏற்ப, அனைத்துக் கட்சிகளுக்கும் உறுப்புரிமையை வழங்க வேண்டுமென்பது நாடாளுமன்றத்தின் நியதியாகும். அதைச் சவாலுக்கு உட்படுத்த வேண்டுமாயின், அதற்கெனத் தனியே பிரேரணையொன்றைக் கொண்டுவர வேண்டும்.
அதை விடுத்து வெறுமனே கூப்பாடு போடுவதால் சாதித்துவிட முடியாது. இதை, எதிர்க்கட்சியினரும் அறிவர். இருப்பினும், வெறும் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தும் ஓர் அரசியல் உபாயமாகவே, இதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
நாட்டின் பேரினச் சமூகத்துக்குள் இருக்கின்ற பீதியையும் சந்தேகத்தையும், தொடர்ந்து வைத்துக்கொண்டு இருக்க வேண்டுமென்பதே, அவர்களின் நோக்கமாகும். இதற்காக, கிடைக்கிற எல்லாச் சந்தர்ப்பங்களையும் கொண்டு, கல்லெறியப் பார்க்கிறார்கள்.
கே: கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரமும், இன்று பூதாகரமாகியுள்ளது. இதுபற்றிய, உங்கள் தரப்பு நியாயம் என்ன?
நிர்வாக ரீதியான எல்லை நிர்ணயம் என்பது, ஒரு தனி இனம் சார்ந்த விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில், எல்லைகளை வரையறுக்கும்போது, நிலத்தொடர்பற்ற முறையிலான அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்படக் கூடாது. இது தொடர்பாக ஏற்படுத்தப்படுகின்ற பிரசாரங்கள், அடிப்படை நியதிகளுக்கு மாறானவையாகும். குறிப்பாக, வளங்கள், வளப்பங்கீடு, அரச காணிகளுடைய தேவைப்பாடு என்ற விவகாரங்களிலும், சமநிலை பேணப்பட வேண்டும்.
நிர்வாக அலகுகள் எல்லாவற்றையும் தனி ஓர் இனம் சார்ந்த அலகாக மாத்திரம் அமைவதற்கு எதிரான சில நியதிகளும் இருக்கின்றன. இதிலிருக்கின்ற முரண்பாடுகளைக் களைவதற்கும் எல்லை நிர்ணயத்தில் காணப்படும் சில சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதற்கும், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் ஏற்பட்டிருக்கின்ற பெரும்பான்மை சமன்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்ற பேரம் பேசும் சக்தி, இந்த அரசாங்கத்துக்கு எதிராக, இந்தக் கட்டத்தில் பிரயோகிக்கப்பட வேண்டுமென்று, ஒருசில எம்.பிக்கள் விரும்பலாம்.
எவ்வாறாயினும், நாங்கள் எங்களுக்குள்ளேயே பேசி, இதுபற்றி உடன்பாட்டைக் காணவேண்டும். பேரின சக்திகள் நுழைந்து, இந்த விடயத்தில் குளிர் காய்வதற்கு இடமளிக்கக் கூடாது. அதனால், சில ஆரோக்கியமான விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கு, நாங்கள் தயாராக வேண்டும். அது, எந்தத் தீர்வாக இருந்தாலும், நாம் சார்ந்த சமூகத்தில் சந்தைப்படுத்தக்கூடிய தீர்வாக அமைய வேண்டும். இல்லாவிடின், இலகுவில் இந்தப் பிரச்சினைக்கு விடை காண்பதென்பது கடினமாகிவிடும்.
அதனால், ஆரோக்கியமான கலந்துரையாடல்களையும் எல்லை நிர்ணயத்தையும் செய்வதற்கு, ஒன்றுகூடிப் பேசி முடிவெடுப்பதற்காக, குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை விடுத்து, தேரர்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பதால் தீர்த்துவிட முடியாது. இதன்போது, யார் யாரோடு கூட்டுச் சேர்கிறார்கள் என்ற விடயத்தில், நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும். இதற்குப் பின்னால், ஓர் அரசியல் நோக்கம் காணப்படுகின்றது. அதை உணர வேண்டும். தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையைக் குலைப்பதற்கு, இந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சக்திகளுக்கு பலியாகிவிடாமல், நிதானமாக இந்த விடயத்தைக் கையாள வேண்டும்.