(எஸ்.கருணாகரன்)
‘பிரித்தாளும் தந்திரத்தில் பிரித்தானியர்களுக்கு நிகரில்லை’ என்று சொல்வார்கள். ஆனால், அவர்களையும் விடச் சிங்கள அரசியல் தலைமைகள் நிபுணத்துவம் மிக்கவை என்பது இலங்கையின் அண்மைய வரலாறு. இதற்கு மிக எளிய உதாரணம், 1970 கள் வரையில் இணக்கமாக, ஒருமுகப்பட்டிருந்த இலங்கையின் சிறுபான்மையினங்கள், இப்போது மிக ஆழமாகப் பிளவு படுத்தப்பட்டுள்ளன. அகரீதியாகவும் புறரீதியாகவும் இந்தப் பிளவு மிக ஆழமாகச் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிளவை, முரண்நிலையை, பகையை, மிக நுட்பமாக உருவாக்கி, அதை வலுவாக்கியிருக்கிறது சிங்களத்தரப்பு. இனி எப்போதுமே இணைந்து கொள்ள முடியாது என்ற அளவுக்கு இன்று தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தனித்தனியாக மாறியுள்ளன. அல்லது அப்படி மாற்றப்பட்டுள்ளன. ஏறக்குறைய மலையகச் சமூகத்தினரும் இப்போது தனியான கோட்டிலேயே சிந்திக்கின்றனர்.
இப்படி, இந்தச் சமூகங்கள் தங்களைக் குறித்து, தனித்தனிச் சமூகங்களாகச் சிந்திக்கும் நிலையை உருவாக்கியது மட்டுமல்ல, அவற்றைத் தனித்தனியாகப் பிரித்துத் தனக்கு வசதியாகவும் கையாள்கிறது சிங்கள அதிகார வர்க்கம்.
ஒரு வலுவான கட்டமைப்பாக இருக்கும் தமிழ் மொழிச் சமூகங்களை, அவற்றுக்கிடையில் உள்ள நுண்வேறுபாட்டுக் கூறுகளை (மதம், பிரதேசம் போன்ற வேறுபாடுகளை) பயன்படுத்தி, இந்தப் பிரிப்பைச் செய்துள்ளது.
இப்போது, சிங்கள அதிகார வர்க்கமானது முஸ்லிம்களைத் தனியாகவும் மலையகத் தரப்பைத் தனியாகவும் தமிழ்த்தரப்பைத் தனியாகவும் கையாண்டு வருகிறது.
இப்போது இந்தத் தரப்புகளுக்குள்ளும் உடைவுகளை ஏற்படுத்திச் சிறுசிறு அணிகளாக்கி, அவற்றையெல்லாம் தனித்தனியாகக் கையாள்கிறது. இது ஒரு சுவாரசியமான நுட்ப விளையாட்டு. இதில் நாம் தெளிவாக, சிங்கள இராசதந்திரத்தின் நுட்டங்களைத் உணர முடியும்.
உண்மையில், சிறுபான்மைத் தேசிய இனங்கள் என்ற ரீதியில், இந்தச் சமூகங்கள் சிங்களப் பேரினவாதச் சக்திகளினால் நெருக்கடிகளுக்குள் உள்ளாக்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் மிக வெளிப்படையாகவே இந்தச் சமூகங்களின் மீது, அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, முஸ்லிம்களின் மீதான அச்சுறுத்தலும் நெருக்கடியும் மிக வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகின்றன. அண்மையில் கூட, முஸ்லிம் சமூகத்தின் மீதான நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த, நல்லாட்சியிலும் முஸ்லிம்கள் தங்களுக்குப் பாதுகாப்பான நிலை ஒன்று உருவாகியுள்ளதாக உணரவில்லை. ஆகவே, தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வரும் முஸ்லிம்களின் மீதான நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் அரசாங்கத்தின் மறுப்போ எதிர்ப்போ வலுவானதாக இல்லை.
அப்படியென்றால், முஸ்லிம் சமூகத்தின் மீதான சிங்களப் பௌத்த இனவாதத்தின் அச்சுறுத்தல்களை அரசாங்கம் மறைமுகமாக ஆதரிக்கிறது என்றே அர்த்தமாகும்.
இப்படித்தான், தமிழ்ச்சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ்ச்சமூகத்தினர் இரண்டாம் நிலை அல்லது அதற்கும் கீழானவர்கள் என்ற நிலையிலேயே கையாளப்படுகின்றனர். இவ்வாறுதான், மலையகத் தமிழர்களுடைய நிலையும். ஆகவே, இந்த மூன்று இனச் சமூகங்களும் அபாயத்தின் முன்னே, அச்சுறுத்தலின் முன்னே, இனப் பாராபட்சத்தின் முன்னே, இன ஒடுக்குமுறையின் முன்னே நிறுத்தப்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
எனவே, இன ரீதியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்ற இந்த மூன்று சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தமக்கு ஏற்படுத்தப்படுகின்ற நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், அபாய நிலைகளை எதிர்கொள்வதற்கு, ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.
அப்படி ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே, தமக்குரிய பலத்தைத் திரட்டிக் கொள்வதுடன், எதிர்த்தரப்பையும் நெருக்கடிக்குள்ளாக்க முடியும். ஆனால், அப்படி இவை செயற்படவில்லை. பதிலாக இதற்கும் இந்தத் தேவைக்கும் யதார்த்தத்துக்கும் மாறாக, இவை தமக்கு எதிராக இயங்கும் தரப்புடன் ஒன்றிணைந்திருக்கின்றன. இது எவ்வளவு கொடுமையான நிலை?
இந்த வீழ்ச்சி எப்படி இந்தச் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டது? என்பது மிகத் தீவிரமாக ஆராயப்பட வேண்டியது. ஏனென்றால், பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் ஒரு பெருந்தொகுதி மக்களைப் பலவீனமடைய வைக்கும் செயற்பாடுகள், எப்படி நுட்பகரமாகச் செய்யப்படுகின்றன என்பதையும் இந்தப் பிரித்தாளும் தந்திரத்துக்கு, இந்தச் சமூகங்கள் எப்படிப் பலியாகியுள்ளன என்பதையும் கண்டறிய வேண்டும். இதை அறியும்போதே இந்தச் சமூகங்கள் தங்களை நோக்கியுள்ள அபாயங்களிலிருந்து விடுபட முடியும்.
இவற்றின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலையும் சாத்தியமாகும். இதை விளங்கிக் கொள்வதற்கு நாம் இந்த வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
1948 – 49 களில் மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமைகள் பறிப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, அதை எதிர்த்தவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம். அதாவது, மலையக மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் யாழ்ப்பாணத்தவரான செல்வநாயகம் ஆகும்.
அப்போது அவர், தமிழ்க் காங்கிரஸின் தலைவர்களில் ஒருவர். செல்வநாயகத்தின் இந்த எதிர்ப்பானது, மலையக சமூகத்தின் மீதான அக்கறையையும் அந்தச் சமூகத்தை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை முறியடிப்பதையும் கொண்டது.
இதைப்போல, பின்னாட்களில் மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகளின்போதெல்லாம் தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்கள் ஒன்றுபட்டு நின்றே தமக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொண்டன.
அரச ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பையும் பேரினவாத எதிர்ப்பையும் மூன்று சமூகங்களும் பெருமளவுக்கும் ஒருமுகப்பட்டே வெளிப்படுத்தி வந்தன. இந்தப் போக்கின் அரசியல் ரீதியான வளர்ச்சியாக, 1970 களில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மூன்றும் இணைந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி என ஒரு கூட்டு அணி உருவாகியது.
அப்போது இவற்றுக்குள் முஸ்லிம்களும் இணைந்திருந்தனர். அல்லது உள்ளடங்கியிருந்தனர். இது இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்கள் அல்லது இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தங்களுக்கிடையில் ஒன்றுபட்டு நின்று, அரசியல் ரீதியாக இயங்கிய, இயங்க வேண்டும் என்று உணர்ந்திருந்த ஒரு செழிப்பான காலமாகும்.
அதாவது, சிங்களப் பெருந்தேசிய இனவாதத்தை எதிர்கொள்ள வேண்டுமாக இருந்தால், அதை முறியடிக்க வேண்டுமாக இருந்தால், தமக்கிடையில் ஐக்கியப்பட்டு, ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்று கருதி அனைவரும் ஒன்றிணைந்தனர்.
இத்தகைய ஒருங்கிணைவின் மூலமாக, 1977 இல் தமிழர் விடுதலைக்கூட்டணி எதிர்க்கட்சி ஆசனத்தை வரலாற்றில் முதற்தடவையாகக் கைப்பற்றியது. இது சிங்களத் தரப்புக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாகும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மைச் சமூகத்தின் கைகளில் எதிர்க்கட்சி ஆசனம் கிடைப்பது என்பது நம்ப முடியாதாக இருந்தது. ஆனால், அடுத்து வந்த காலங்கள் இதையெல்லாம் தலை கீழாக்கி விட்டன.
இதற்குப் பிறகான இயக்கங்களின் விடுதலைப் போராட்டத்தின்போதும் தமிழ், மலையக, முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் பெருமளவில் ஒன்றிணைந்தே பங்கேற்றனர். இந்த நிலை, ஏறக்குறைய 1980 களின் நடுப்பகுதி வரையில் நீடித்தது.
ஆனால், இந்த ஒருங்கிணைந்த நிலை, 1980 களின் தொடக்கத்திலேயே பலவீனமடையத் தொடங்கின என்றே கூற வேண்டும். இதற்குத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கு (இயக்கங்கள் உட்பட) பெரும்பொறுப்புண்டு என்றாலும், சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த சிங்களத்தரப்புக்கு பாயாசம் கிடைத்த மாதிரி அமைந்தது.
தமிழ்த்தரப்பின் ஏகமனப்பாங்கின் விளைவான நடவடிக்கைகள், முஸ்லிம்களையும் மலையகத்தினரையும் இணைந்திருத்தலில் இருந்து வெளித்தள்ளின. இருந்தாலும், இதைச் சீர்ப்படுத்துவதற்கான அவசியமும் வாய்ப்புகளும் தாராளமாக இருந்தன.
ஆனால், இதற்கான அவகாசத்தைக் கொடுக்காமல், துரிதமாகவும் நுட்பமாகமும் செயற்பட்ட சிங்களத் தரப்பு முஸ்லிம்களையும் மலைகத்தினரையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டது.
முஸ்லிம்களைத் தனியான ஒரு தரப்பாக, அஷ்ரப் தலைமையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸாக வளர்த்து, அதைத் தனக்குள் உள்வாங்கிக் கொண்டது. 1980 களின் பிற்பகுதியிலிருந்து அஷ்ரப் இலங்கை அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கத் தொடங்கினார். இதற்கு முன்னரே மலையகத் தரப்பை சிங்களத்தரப்புத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தொண்டமான் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சராக 1970 களின் இறுதிப்பகுதியில் மாறியிருந்தார்.
மலையகத்தலைமையும் முஸ்லிம்களின் தலைமையும் இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிச் செயற்படுவதைத் தமிழ்த்தரப்பு எதிர்நிலை நோக்கிலேயே பார்த்தது. விளைவாக முரண்பாடுகள் வளர்ந்தன. இதையே சிங்களத்தரப்பு விரும்பியது.
இதற்கு அடுத்த கட்டமாக, தமிழ் இயக்கங்களுக்குள் நடந்த பிரிவுகளும் மோதல்களும் சிங்களத் தரப்புக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. அதற்கு இதெல்லாம் வாய்ப்பாகவும் அமைந்தன. 1980 களில் இயக்களையிட்டுக் கலக்கமடைந்த சிங்களத்தரப்பு, 1990 களில் புலிகளையும் ஈரோஸையும் தவிர்ந்த ஏனைய இயக்கங்களைத் தன்னுடைய காலடியில் கொண்டு வந்திருந்தது.
ஈரோஸ் இயக்கம் கலைந்து போக, புலிகள் மட்டுமே எதிராக இருந்தனர். ஏனைய அனைத்துத் தரப்பும் இலங்கை அரசாங்கத்தின் பக்கமாக இருந்தன. தமிழர் விடுதலைக் கூட்டணியும் கூட.
ஆகவே, 1990 களில் புலிகளைத் தவிர்த்து, பிற அனைத்துத் தரப்பையும் தனக்குக் கீழ் கொண்டு வந்திருந்தது சிங்களத்தரப்பு. சிறுபான்மைச் சமூகங்களின் ஒற்றுமையும் திரட்சியும் உடைக்கப்பட்டன. மட்டுமல்ல, சிறுபான்மைச் சமூகங்கள் ஒவ்வொன்றும் தமக்கிடையில் மோதிக்கொண்டும் இடைவெளிகளை அதிகரித்துக் கொண்டும் சென்றன.
வரலாற்றில் ஒரு போதுமே இல்லாத அளவுக்கு 1980 களின் நடுக்கூறிலிருந்து முஸ்லிம்களும் தமிழ்த்தரப்பும் பகை நிலைக்குச் சென்றன. மோதல்களில் ஈடுபட்டன.
இதற்கு வாய்ப்பாக முஸ்லிம் தரப்பிலிருந்து ஊர்காவல் படையை வளர்த்தெடுத்தது இலங்கை அரசாங்கம். தமிழியக்கங்கள் முஸ்லிம் ஊர்காவல் படையை எதிர்த்ததுடன் தமிழ், முஸ்லிம் மோதல்கள் வலுத்தன.
இதற்கு அடுத்த கட்டமாக, தமிழ்த் தரப்புக்குள்ளும் மலையகத் தரப்புக்குள்ளும் முஸ்லிம் தரப்புக்குள்ளும் உடைவுகளை உண்டாக்கும் முயற்சியில் சிங்களத்தரப்பு ஈடுபட்டது. அதில் வெற்றியும் கண்டது.
1980 களிலும் தொண்ணூறுகளின் நடுப்பகுதிவரையிலும் அஷ்ரப்பின் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அமைப்பின் கீழ் மட்டுமே ஒன்றுதிரண்டிருந்த முஸ்லிம்கள், பின்னர் ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, ரிஷாட் பதியூதீன், முஜிபுர் ரஹ்மான், சேகு இஸ்ஸத்தீன் எனப் பல தலைமைகளாப் பிளவுண்டிருக்கின்றனர்.
தமிழ்த்தரப்பிலும் இதுதான் கதை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஈ.பி.ஆர்.எவ் பத்மநாபா அணி, சமத்தும, சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு எனப் பலவாகப் பிளவுண்டிருக்கின்றன.
கூட்டமைப்புக்குள்ளும் ஏராளம் முரண்நிலைகள் இன்று வளர்ச்சியடைந்திருக்கின்றன. ஒரு தரப்பு அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயற்படுகிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக சம்மந்தன், சுமந்திரன் தரப்பு. ஏனையவை அரசாங்கத்தை எதிர்க்கின்றன.
வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தலைமையிலான அணி.
இதைப்போல மலையகத்தில், முன்பு சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக அரசியலின் ‘கிங் மேக்கராக’ இருந்தார். இப்போது அங்கே பல அணிகள்; பல தலைவர்கள்; பல்வேறு நிலைப்பாடுகள்.
ஆனால், இங்கே நாம் மேலும் ஒரு வலுவான உண்மையை அறிய வேண்டும். இவ்வாறு தமக்கிடையில் முரண்பட்டு, பகைமை கொண்டு, பிளவு பட்டிருக்கும் பல அணிகளும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்திருக்கின்றன. இதையே மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.
இவ்வாறு எதிர்நிலையில் இயங்கும் சக்திகள் அனைத்தும், வேறு வழியின்றி அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய, அனுசரிக்க வேண்டிய, அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டிய நிர்ப்பந்த, யதார்த்தத்தை சிங்களத்தரப்பு உருவாக்கியுள்ளது.
இதன்மூலம் இந்தச் சிறுபான்மைத் தரப்புகள் தமது அரசியலை அடுத்த கட்டத்துக்கு எப்படி நகர்த்துவது என்று தெரியாத நிலையில் தடுமாற்றத்துக்குள்ளாகியுள்ளன. இதுவும் சிங்களத்தரப்புக்குக் கிடைத்துள்ள வெற்றியாகும்.
இதற்கும் நல்ல உதாரணங்கள் செழிப்பாக உண்டு. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களும் சந்தேகங்களும் இன்று மக்களிடம் வலுத்துள்ளது. இதற்குக் காரணம் அரசாங்கத்துடன் அது நிபந்தனையற்ற முறையில் ‘கள்ள’ உறவைக் கொண்டிருக்கிறது எனப் பலரும் நம்புவது. அல்லது தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, அரசாங்கம் அக்கறையில்லாமல் இருப்பதை, ஏன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கண்டிக்கவில்லை; கேள்விக்குட்படுத்தவில்லை என்று கேட்பதாகும்.
இதை ஒத்த நிலையே தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற மலையகக் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. மலையக மக்களின் பிரச்சினைகளில் இந்த அரசாங்கத்தின் அக்கறையின்மையைக் கண்டிக்காமல் அரசாங்கத்தை அனுசரிக்க முற்படும் முற்போக்குக் கூட்டணியின் மீதான விமர்சனங்கள் இன்று தூக்கலாக மேலெழுந்துள்ளன.
இதைச் சமனிலைப்படுத்துவதற்கு மனோ கணேசன் அரும்பாடெல்லாம்படுகின்றார்.
கடையான அவதானத்தின்படி, அவர் பொலிஸ்காரர்களுக்குத் தமிழ் படிப்பிப்பதற்கு வெளிக்கிட்டிருக்கிறார். எவ்வளவோ அடிப்படையான பிரச்சினைகள் இருக்கும்போது, இப்படி சில சில்லறை விளையாட்டுகளைக் காட்டி நிலைமையைச் சமாளிக்க முற்பட்டிருக்கிறார் மனோ; வேறு வழிகள் அவருக்கில்லை.
இதேநிலைமைதான் ஹக்கீம் உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் தலைமைகளுக்கும் நேர்ந்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான முறையில் மேற்கொள்ளப்படும் சிங்களத்தரப்பின் அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்துவதற்கும் எதிர்ப்பதற்கும் அதையிட்டு, அரசாங்கத்திடம் கேள்வி கேட்பதற்கும் முடியாத நிலையில் இருக்கும் முஸ்லிம் தலைமைகளை மக்கள் சந்தேகிக்கின்றனர்; எதிர்க்கின்றனர். இருந்தாலும் இந்தத் தலைமைகள் சிங்களத் தரப்பின் பிடியிலிருந்து விடபட முடியாத நிலையிலேயே உள்ளன.
ஆகவே, மிக நெருக்கடியான நிலையிலும் பலவீனமான நிலையிலும் இன்று தமிழ், முஸ்லிம், மலையகத்தலைமைகளும் சமூகங்களும் உள்ளன. இந்தப் பலவீனமான நிலையைக் களைய வேண்டுமானால் இவை தமக்கிடையில் ஒன்றுபட வேண்டும்; ஐக்கியப்படுவது அவசியம்.
ஆனால், இது சாத்தியமா? என்ற கேள்வியே எல்லோரிடமும் உண்டு. இந்தப் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது, செய்த பிரகடனங்களில் முக்கியமானது, இனப்பிரச்சினைத் தீர்வும் அதற்கு அடிப்படையான அரசியலமைப்புத்திருத்தமுமாகும்.
இந்த அரசியலமைப்புத்திருத்தமே தமிழ் மொழி பேசும் சமூகங்களின் இருப்புக்கு ஆதாரமானது. ஆனால், இதைச் செய்வதற்கான முனைப்புகள் வரவரக் குறைவடைந்து வருகின்றன. அமைச்சர் மனோ கணேசனின் கூற்றுப்படி, “சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி, அரசியலமைப்புத்திருத்தம் அமையப்போவதில்லை என்பது வெளிப்படையான செய்தி.
இருந்தாலும் அதைக் குறித்துக் கேள்வி எழுப்புவதற்கு சிறுபான்மைத்தரப்புகளிடம் ஒருமித்த குரலும் இல்லை; தனிக்குரலும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால், என்னதான் நடந்தாலும் அதையெல்லாம் ஜீரணித்துக் கொண்டிருக்க இவை முயற்சிக்குமே தவிர, எதிர்த்து வெளிநடப்புச் செய்யவோ, அழுத்தம் கொடுக்கவே முன்வரா என்றே தோன்றுகிறது. அதாவது இவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தி முற்றாக அழிந்து விட்டது எனலாம்.
எனவேதான், எந்த நிலை வந்தாலும் இனி எப்போதுமே இவை இணக்கத்துக்கும் ஒருமுக நிலைக்கும் வருமா? என்று யோசிக்குமளவுக்கு உள்முரண்பாடுகளாலும் பகைமையினாலும் முற்றிப்போயுள்ளன.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் சிங்களத் தேசியவாதச் சக்திகளின் பிரித்தாளும் தந்திரமே. அதற்குப் பலியாகி விட்டன தமிழ் மொழிச்சமூகங்களின் தலைமைகள். அப்படியென்றால் வரலாறு பின்னோக்கிச் செல்கிறதா?