நமது நாட்டைப் பொறுத்தவரையில், கொரோனாவுக்குப் பின்னர், ஒவ்வொன்றுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தாங்க முடியாத நிலையில், மக்கள் வீதிகளுக்கு இறங்கிவிட்டனர்.
இந்நிலையில்தான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் (11) உரையாற்றினார். ‘புதிய பிரதமர்’, ‘இடைக்கால அரசாங்கம்’ என்றெல்லாம் கதைகள் அடிபட்டுக்கொண்டிருந்த போது, பிரதமர் மஹிந்தவின் உரை மீதான அவதானிப்பு அதிகரித்திருந்தது.
மஹிந்தவின் உரையை, ‘உப்புச் சப்பில்லாத உரை’யென பலரும் விமர்சனம் செய்துள்ளனர். சமூக ஊடகங்களில், கடுமையான விமர்சனங்களுடன் கேலியும் கிண்டல்களும் செய்யப்பட்டன. தொனியைத் தாழ்த்தி, கிளிப்பிள்ளைக்குக் கூறுவதைப் போல கேட்டுக்கொண்டார். எனினும், 90களிலும் அதற்குப் பின்னால் பிறந்தவர்களுக்கும் வரலாறு தெரியாது என்பதையும் நினைவூட்டினார்.
“மக்களின் உயிரைப் பாதுகாத்தது, கண்ணீர் புகைக்கும், துப்பாக்கி தோட்டாக்களுக்கும் மக்களை பலி கொடுப்பதற்கல்ல” -இது குரலைத் தாழ்த்தி சொல்லப்பட்டாலும், அதன் பின்னால் மறைந்திருக்கும் அர்த்தங்களை விளங்கிக்கொள்ள வேண்டும். ஆட்சியிலிருந்து விழுந்தவர்களுக்குத் தான், ஆட்சியைப் பிடிப்பது எவ்வளவு கடினமானது என்பது புரியும்.
ஆட்சி கவிழ்ப்புக்கான சூழ்ச்சிகள் ஏதாவது நடக்குமாயின், அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு, தக்கவைத்துக்கொள்வர். அதுதான் அரசியல் இராஜதந்திரம். தேர்தலில் வீட்டுக்குப் போகவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டால், மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறவேண்டுமென்ற வெறியுடன் தந்திரங்களைச் செய்வர்.
காலி முகத்திடலில் இருக்கும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, முன்னெடுக்கப்படுவது போராட்டமல்ல; மக்கள் எழுச்சி என்பதை ஆட்சியாளர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். வாழ்வதற்கான உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றனர். மக்களோ, எதிரணியினரோ குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நெருக்கடி நிலைமைக்கான காரணங்களை அம்பலப்படுத்தினர். அரச தலைவர், அதற்குப் பதிலளித்தே நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருக்க வேண்டும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை, குற்றப்பிரேரணைக்கான முனைப்புகள் தீவிரமாகி வரும் நிலையில், தம்பியைக் காப்பாற்றும் தமையனது இறுதி முயற்சியாகக்கூட, பிரதமரின் உரை இருந்திருக்கலாம். கடந்த அரசாங்கமே, தவறுகளைச் செய்திருந்தாலும், ஆட்சியிலிருக்கும் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்பதை விளங்கிக்கொண்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான முயற்சியை கூடிய வேகத்தில் முன்னெடுக்கவேண்டும்.
ஆகையால், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே, காலத்தின் தேவையாகும். வரப்பிரசாதங்களைக் கொடுத்து, காய்களை நகர்த்துவதும் மக்களின் மனங்களை வெல்ல நினைப்பதும் நீண்டகாலத்துக்கு நிலைக்காது என்பதை நினைவூட்டுகின்றோம்.
(Tamil Mirror)