ஒரு வித்தில் முளைத்து, அகன்ற கிளைகளைத் தாழ்வாகப் பரப்பி, நிழல் தந்து கம்பீரமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கும், மரங்களில் மிகவும் அகலமான ஆலமரத்தை போன்று, சமூகத்துக்கு நிழலாய் நின்று, ஒவ்வொரு துறைக்கும் வித்திட்டுக்கொண்டிருக்கும் ஆசான்களை ‘ஆலமரம்’ எனக் கூறுவதில் தவறே இருக்காது.
அவ்வாறான ஆலமரமொன்றின் கிளைகளைத் தறித்துக்கொண்டிருந்த போது, கிளையொன்று முறிந்துவிழ, அதற்குள் சிக்கி, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் ஆசிரியர் வேலுசாமி மகேஸ்வரன் மரணித்துவிட்டார். ஒவ்வொரு மரணங்களும் மனங்களை ஏதோவொரு வகையில் நெருடிக்கொண்டுதான் இருக்கும்.
இந்த ஆசானின் மரணம், முழுச் சமூகத்தின் மனங்களிலும் வடுவாய் பதிந்திருக்கிறது என்பது, சமூக வலைத்தளங்களின் எழுத்துகள் எடுத்தியம்பி நிற்கின்றன. ஆலமரங்களில் பெரும்பாலானவை கோவில்களை அண்மித்தவையாகவே இருக்கும்.
கோவில்களைப் புனரமைக்கும் போது, இடப்பற்றாக்குறை ஏற்படுமாயின் ஒருசில இடங்களில் ஆலமரத்தின் கிளைகளைத் தறித்துவிடுவர். ஆனால், லோகி தோட்டத்தின் பிள்ளையார் கோவிலோடு இருந்த ஆலமரத்தின் கிளைகள் தறிக்கப்பட்டது ஏன் என்பது, கேள்வியோடு தொக்கி நிற்கின்றது.
பிரதான வீதிகளின் இருமருங்கிலும் நிற்கும் மரங்களை, அன்றேல் கிளைகளைத் தறிக்கும் போது, முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். ஆனால், தவவாக்கலையில் அவ்வாறான முன்னேற்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது, தெட்டத்தெளிவாகிறது. இதனால், ஆலமரக் கிளைகள் மட்டுமன்றி, ஆலமரமொன்றே சாய்த்துவிடப்பட்டுள்ளது.
மலையகத்தைப் பொறுத்தவரையில், மரங்களைத் தறித்து கட்டாந்தரையாக்கும் செயற்பாடுகளுக்கு குறைவே இல்லை. ‘மரத்துக்கு மரம்’ எனும் தொனிப்பொருளை காணக்கிடைப்பதே இல்லை. மரமொன்றை தறிப்பதற்கு முன்னர், அம்மரத்துக்காக மற்றுமொரு மரக்கன்றை நடவேண்டும். பல்வேறான பிரதேசங்களிலும் இந்தத் தொனிப்பொருள் அச்சொட்டாகப் பின்பற்றப்படுகின்றது.
சாதாரண வீட்டுத் தோட்டங்களில் கூட, ‘மரத்துக்கு மரம்’ அச்சொட்டாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. மலையகத்தில் அதனைக் காணமுடியாது. விலைமதிக்க முடியாத மரங்கள், குற்றி குற்றிகளாக வெட்டப்பட்டு, ஏற்றிச்செல்லப்படுகின்றன. இதனூடாக பெருந்தொகை பணம் சம்பாதிக்கப்படுகின்றது.
உயிர், உடமைகளுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், மரங்களோ அல்லது அதன் கிளைகளோ இருக்குமாயின், அவற்றை பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தறிப்பதில் தவறே இல்லை. ஆனால், லோகி தோட்டத்தில் நின்றிருந்த ஆலமரத்தின் கிளைகளைத் தறித்தமைக்கு, சாதாரண காரணங்கள் கூட எவையும் கூறப்படவில்லை.
தறித்து வீழ்த்தப்பட்டது ஆலமரத்தின் கிளைகள் மட்டுமல்ல; நற்பிரஜைகளை உருவாக்குவதற்காகத் தன்னையே அர்ப்பணித்த ஆசிரியரின் வாழ்வும் சாய்க்கப்பட்டுள்ளது. அவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதுதான், மனங்களை ரணங்களாக்கிக் கொண்டுள்ளது. தறிக்கப்பட்ட கிளைகளையும் பிடுங்கியெடுக்கப்பட்ட ஆசானின் உயிரையும், திரும்பப் பெறமுடியாது என்பதை நினைவூட்டுகின்றோம். (Tamil Mirror)