ஒரு மூத்த அரசியல்வாதி, தமிழரசுக் கட்சியின் தலைவர், நீண்டகாலமாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் இவ்வாறு சொல்வதென்றால் அதை விடக் கேவலம் வேறில்லை. இந்திய மத்திய அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட தமிழ்நாட்டில் கூட இப்படிச் சொல்ல மாட்டார்கள். ஏன் அங்கே எந்த மாநில அரசுகள் கூட இவ்வாறு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அங்கே மக்களும் எதிர்த்தரப்புகளும் ஊடகத்தினரும் கேள்வி மேல் கேள்வி எழுப்பித் தொலைத்து விடுவார்கள்.
ஆகவே சேனாதிராஜாவின் இந்தக் கருத்து மிகத் தவறான நிலைப்பாடாகும். இதைப்பற்றித் தமிழ் ஊடகங்களும் புத்திஜீவிகளும் எதையும் பேசாதிருப்பது இன்னும் தவறானது.
மக்களிடமோ கூட்டாக நிற்கும் பங்காளிக் கட்சிகளிடமோ கேட்டு, ஆலோசித்து முடிவெடுப்போம் என்ற உணர்வு சேனாதிராஜாவுக்கு வரவேயில்லை. அப்படியானதொரு பழக்கமோ மரபோ அண்மைய காலத் தமிழரசுக் கட்சியிடம் கிடையவே கிடையாது. (இதேபோலத்தான் இப்போதைய ஐ.தே.கவும். அதனால்தான் இரண்டும் ஒத்துப்போகின்றன).
பதிலாக வெளிச்சக்தியின் கால்களைச் சேவித்துப் பிழைக்கவே இரண்டும் முயற்சிக்கின்றன.
தமிழரசுக் கட்சியையும் தம்மையும் எங்கே வேண்டுமென்றாலும் (அரசாங்கத்திடமோ இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிச் சக்திகளிடத்திலோ) மாவையும் அவருடைய சகாக்களும் அடகு வைக்கலாம். சில்லறைக்கும் விற்கலாம்.
ஆனால், சனங்களையும் அவர்களுடைய கௌரவத்தையும் உரிமைகளையும் விற்க முடியாது.
எவரையும் அண்டிப் பிழைக்கலாம் என்றால் இத்தனை போராட்டங்களை மக்கள் செய்திருக்க வேண்டியதில்லை.
இவ்வளவு உயிர்களை மக்களும் போராளிகளும் இழந்திருக்கத் தேவையில்லை.
இத்தனை ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களும் தங்கள் உடல் உறுப்புகளை இழந்திருக்க மாட்டார்கள்.
இத்தனை ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் துணைவர்களை இழந்திருக்க வேண்டியதில்லை.
இத்தனை ஆயிரக்கணக்கான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இழந்திருக்க வேண்டி வந்திருக்காது.
இத்தனை ஆயிரம் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை இழந்த நிலையில் சிறுவர் இல்லங்களிலும் பிறருடைய தயவிலும் வாழ வேண்டியிருந்திருக்காது.
ஆகவே மாவை சேனாதிராஜா மக்களின் போராட்டத்தையும் உரிமைகளையும் வாழ்க்கையையும் விற்றே பிழைக்க முற்படுகிறார்.
இது மிகப் பெரிய தவறும் பச்சைத் துரோகமுமாகும்.
இதையே இவர்கள் தொடர்ந்தும் செய்து வந்தனர். இப்பொழுது எந்தக் கூச்சமும் இல்லாமல் வெளிப்படையாகப் பேசுகின்றனர். அவ்வளவுதான்.
தமிழரசுக் கட்சிக்குள்ளிருந்து புலிகளைப் பற்றிப் பெருமையாகப் பேசுவோர் இதையிட்டு – மாவை இவ்வாறு சொல்லியுள்ளதையிட்டு – என்ன சொல்லப்போகிறார்கள்?
இதைப்பற்றி ரெலோ, புளொட் ஆகியவற்றின் நிலைப்பாடு என்ன?
(“தட்டுங்கள்” இணையத்தளத்துக்கான கட்டுரையிலிருந்து)
(Karunakaran Sivarasa)