தலைதூக்கும் துப்பாக்கிகள்

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம், தற்காப்பு நிலையை அடைந்து மௌனித்ததன் பின் ஆயுதக் கலாசாரம் என்பது பூச்சிய நிலையை அடைந்தது. இத்தகைய பின்புலத்தில் மூன்று நான்கு ஆண்டுகள் கடந்த பின், இச் சூழ்நிலை படிப்படியாக மேலெழுந்தது. வட புலத்திலே வாள்  வெட்டுக் கலாசாரமும் கிழக்கிலங்கையில் துப்பாக்கிக் கலாசாரமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக முகிழ்த்து தற்பொழுது அன்றாட செயல் நிகழ்வுகளில் ஒன்றாக மாறிவருகின்றது. இத்தகைய வன்முறைக் கலாசாரமானது முற்றுகைக்கும் முறியடிப்புக்கும் உட்பட்டிருந்த தமிழ்த் தேசிய விடுதலை ஆயுதப் போராட்ட மையத்தில் பல்வேறு எதிர் விளைவுகளை ஏற்படுத்தி நிற்கின்றது. 

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட முனைவுகளுக்கு அப்பாற்பட்ட வகையில்  முளைத்தெழும் புதிய நிலச் சுவாந்த அடிவருடி கும்பல்களும்,  சர்வதேச, தேசிய, உடன்பாட்டுச் செயலொழுங்கில் தங்களுக்கென வடிவமைக்கப்பட்ட மாபியா, போதைவஸ்துக் கடத்தல் குழுமங்களும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பண்புகளைச் சாயம் பூசி, அரச இராணுவ மூலோபாய கைங்கரியங்களுக்குள் நுழைகின்றன. 

இந்தப் பின்புலத்தில் தொடர்புபட்ட சுயலாப அரசியல் நலன் கருதியும் தங்கள் சொந்த வியாபார மூல உபாயங்களைப் பயன்படுத்தியும்  அதனை ஸ்திரப்படுத்துவதற்கான மாபியா தொடர்பாடல் செயலொழுங்கில் வடிவமைக்கப்பில் மறுக்கப்பட்ட போதைவஸ்துப் பிரயோகங்களை சுயலாப நோக்கில் நடைபெறுகின்றன. 

இது இலங்கை பாரம்பரியத்துக்கும் பண்பாட்டுக்கும் சமூக ஒழுங்கு முறைக்கும் கல்விப் பாரம்பரியங்களுக்கும் முரணான முறையில், அரசியல் ஆசீர்வாதத்தோடு முன்னெடுத்துவரும் போதைப்பொருள் கடத்தல் நடைமுறைகளும் அதற்குச் சமாந்தரமான வகையில் உள்ளூர் உற்பத்திகளையும் பொருளாதார முறைமைகளையும் சுரண்டுகின்ற காலனித்துவ உணர்வோடு கூடிய குட்டிப் பூர்சுவாக்களும் தமிழ்த் தேசிய சிந்தனைகளையும், தமிழர் தம் விடுதலைப் போராட்ட உணர்வுகளையும் சிறுபான்மைச் சமூகங்களின் தேவைப்பாடுகளையும் எவ்வாறு கேள்விக்குறியாக்கி சிதைவடையச் செய்திருக்கின்றதோ, அத்தகைய நிலைமைகள் இன்று பெரும்பான்மைச் சமூகத்தவரான சிங்கள மக்கள் மத்தியிலும்  இதனைத் தோற்றுவித்துள்ளது. 

சிங்களத் தேசியவாதத்தின் ஒத்த ஏற்புடைமையில் பல்தேசியச் சிந்தனைகளை ஒருங்கிணைத்து சிங்களத் தேசியம் என்னும் கருத்தொன்மையை சிங்களத் தேசியவாதத்தின் தனி ஓர்மைக் கொள்கையாக பிரகடனப்படுத்தி கடந்த ஆண்டிலே ஆட்சி அதிகாரம் கையகப்படுத்தப்பட்டது.  தேசியவாதப் போக்குகளையும் தேசியவாதச் சிந்தனைகளை எதேச்சதிகாரமாகக் கைக்கொண்டு சிறுபான்மை இன அறைகூவல்களையும்  விருப்புரிமைகளையும்,  கேள்விக்கும் ஐயப்பாட்டுக்கும் உரியதாக்கி,  சிறுபான்மைச் சமூகத்தைக் கண்கொண்டு பார்க்கின்ற முறைமையை பெருந்தேசியவாத சிந்தனா சக்திகள் உரப்படுத்துகின்றன. 

இதன் எதேச்சதிகாரச் செயற்பாடுகளை முதன்மைப்படுத்தி, குடும்ப அதிகார மையத்துள் இலங்கை பொருளாதார பொருண்மியத்தை உள்ளடக்கப்படுத்தி, இலங்கையின் சுதேசிய பொருளாதார விருத்திக்கும் சுய உற்பத்தி முறைக்கும் சுதேசிய வியாபார நலன்களுக்கும் முரணான வகையில் பொருளாதார வியூகங்களை வகுக்கின்ற நிலைமை காணப்படுகிறது.

தேசிய நலன்களில் அக்கறையற்று சொந்த இலாப மூலோபாயங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் அதிகரித்துச் செல்லும் பணவீக்க நிலைமையினையும் டொலர்களின் பெறுமதி வீழ்ச்சியையும் சுதேசிய பொருளாதார உற்பத்திகளின் வீழ்ச்சியையும் கருத்தில் கொள்ளாத நகர்வுகள் காணப்படுகின்றன. 

குடும்ப பொருண்மிய லாப அரசியலை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட திட்டங்கள் மூலம், தேசிய நலன் என்னும் போர்வையில் அதிகரிக்கப்பட்ட ஏற்றுமதி உற்பத்தி முறைமைகளும் அவற்றில் அடையமுடியா லாபங்களை பிரதியிட்டுக் கொள்வதற்காக வரையறுக்கப்பட்ட இறக்குமதி வரித் தீர்வைகளும் சர்வதேச ரீதியில் அதிகரித்துவரும் கொவிட்-19 கெடுபிடிகளும் அதற்கான மாற்று உபாயங்களில் பின்பற்றப்படும் தடுப்பூசிக் கமிசன் விவகாரங்கும் இலங்கை அரசியல் சூழ்நிலையில் அடைக்கமுடியாத கடன் பழுக்களும் இலங்கைப் பொருளாதாரத்தை ஆட்டங்காணச் செய்துள்ளன.

இந்த உள்ளூர், வெளியூர், தேசிய, சர்வதேச விவகாரங்கள் இலங்கைத் தீவில் அபிவிருத்தி தொடர்பாக பேச்சளவில் முன்னெடுக்கப்படும் சிந்தனைகளும், திட்டங்களும் ஒரு தேர்தல் பிரசாரக் கூற்றாகவே மக்களைச் சென்றடைந்துள்ளன. 
இந்த உள் விவகாரங்களின் வலிகளையும் வேதனைகளையும் பாதிப்புகளையும் தேவைகளையும் வேண்டுதல்களையும் இறைஞ்சி வேண்டி எதிர்பார்த்து நிற்கும் மக்களின் வாழ்வியலில் முடிவுற்ற போர் நிதி அழுத்தங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கொவிட் நிதி அழுத்தங்களும் பாமர மக்களையும் மத்தியதர வர்க்கத்தினரையும் மிகுந்த சுமைக்கு உள்ளாக்கியுள்ளது.

உலக நாடுகளின் பணப் பொருளாதார வேதனக் கொடுப்பனவுகளின் பின்புலத்தை ஆராய்கின்ற போது மிக மோசமான வேதனக் கொடுப்பனவுகளை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஒரு முதன்மை நாடாக இலங்கை விளங்குகின்றது. அதற்குச் சிறந்த சான்றாக ஆசிரியர், அதிபர், கல்வியியலாளர், சுகாதார ஊழியர்கள், போக்குவரத்துத் துறை சார்ந்தவர்களது போராட்டங்களைக் கொள்ளலாம்.

இந்ததைய சூழ்நிலையில் இயற்கை வளச் சுரண்டல்களில் ஆளும் தரப்பின் ஆசீர்வாதத்தோடு மக்களது விருப்புகளுக்கு முரணனான வகையில் நடத்தப்படுகின்ற காணிச் சுரண்டல், நீர்வளச் சுரண்டல், மண் வளச் சுரண்டல் என்பனவும் மக்களது உழைப்பினை வரிவீதங்களாலும் பல்வேறு சட்டப்பிடிமானங்களாலும் சுரண்டப்படகின்ற வேதனச் சுரண்டல்கள் குறிப்பாக பெருந்தோட்டத்துறையினரையும்  விட்டுவைக்கவில்லை.

இந்த வகையிலே அண்மைக்காலத்தில் வட கிழக்கில் அதிகரித்துவரும் மண் சுரண்டல் மோசடிகளில் பல்வேறு முறைமையில் உயிர்ப்பலிகளும் உயிர் அச்சுறுத்தல்களும், அரச ஆசீர்வாதத்தோடு அல்லது அனுகூலத்தோடு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வகையில் கிழக்கில் மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி. இது கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்தித் தலைப்பு. கடந்த வாரத்தில் இதே போன்றதொரு துப்பாக்கிப்பிரயோகம் நடைபெற்றது, இரண்டும் மண் கடத்தலுடன் சம்பந்தப்பட்டதுதான்.  இரண்டு மாதங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டத்தில் சம்பவ இடத்தில் பொது மகன் ஒருவர் உயிரிழந்தார். அதன் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவும் மணல் சம்பந்தப்பட்டதாகவே பேசப்படுகிறது. 

இவ்வாறாக பெருந்தேசிய சிந்தனை வாதத்தோடும் தேசிய இனவாத அரசியலோடும் ஒன்றிணைந்து, தேர்தலை முகம் கொண்டு, அதிகாரங்களைக் கைப்பற்றி, வாக்களித்த மக்களை நசுக்கும் ஒடுக்குமுறை அரசியலில், பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மாத்திரமல்லாது சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம் மக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

உற்பத்தி, முதலீடு, நீடித்த பொருளாதாரம், வேதனம், பொருளாதார விருத்தி, சுபீட்சம், மக்கள் மகிழ்ச்சி, மக்கள் சேமிப்பு என்ற மக்களின் நம்பிக்கைக்கு முரணான வேதாந்தப் பேரினவாத அரசியலும் அதன் அதிகாரமளிக்கப்படாத சாசனங்களும் இலங்கை அரசியல் சாசனத்துக்கு முரணான வகையில் பன்சமூக மக்களின் வாழ்வியலை, எதேச்சதிகாரமான வகையில் கபளீகரம் செய்து நிற்கின்றது. 

தேசியம் சுயநிர்ணயம், சுபீட்சம் என்ற அடிப்படையில் சுதேசிய பொருளாதார வீழச்சிக்கும் பரஸ்பர பொருளாதார ஸ்திரப்பாட்டுக்கும் மருந்தாக நாட்டின் பொருளாதாரச் சுமையின் வீக்கத்தைக் கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவதாக இருந்தால் ஊழலற்ற, ஜனநாயக மயப்படுத்தப்பட்டதென விதந்துரைக்கப்பட்ட பொருளாதார முறைமைகளைப் பின்பற்றுவதும், ஏற்றுமதி, இறக்குதி பொருளாதாரத்தில் ஒரு சமாந்தர முறைமையைப் பின்பற்றுவதும் முக்கியமாகும்.

அதே போல் சர்வதேச அழுத்தங்களில் நின்றும் சர்வதேச பொருளாதார அச்சுறுத்தல்களிலிருந்தும் தம்மை இலங்கைத் தீவு விடுவித்துக் கொள்வதாயின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக பெரும்பான்மை மக்களினது விருப்புக்கு அமைவாக குறைந்த பட்சம் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.அத்தோடு வற்றிப் போயிருக்கும் மத்திய வங்கியினுடைய நிலையான நிதியை மீட்டெடுப்பதாயின் வரையறுக்கப்பட்டதான இறக்குமதிக்கான பொருண்மியத்தில் அரசு கவனம் செலுத்தல் வேண்டும். 

வெறுமனே பண வீக்க நிலை காரணமாக முற்றுமுழுதாக இறக்குமதியினைத் தவிர்த்து,   ஏற்றுமதியை முன்னெடுப்பது சிரமமானதாகும். 

இத்தீவில் அமிழ்ந்து போயிருக்கின்ற பிரச்சினைக்கான தீர்வு என்பது, சரியானதொரு அரசியல் கொள்கையை மீட்டெடுப்பதன் மூலமே சாத்திமாகும். எனவே அரசியல் தீர்வும், கொவிட்-19 நடைமுறைகளும், சர்வதேச மனித உரிமை அமைப்பினதும் கோரிக்கைகளுக்கு அமைவாக இலங்கை சோசலிச ஜனநாயக் குடியரசின் தலைவர்கள் அந்த மக்களின் மன விருப்புகளை அறிந்து, அவர்கள் சார்பாக நாட்டினுடைய ஜனநாயகத்தினை நிலை நிறுத்துவதே சிறப்பு.

ஆயுதம், அதிகாரத்தின் அடையாளம்; அடைக்குமுறையின் அடையாளம் என்ற வகையில், அதற்குள் துப்பாக்கிகள் நிமிர்த்தப்படுதல் தவிர்க்கப்படுவதே முக்கியமானது.