நாடாளுமன்ற அரசியல், பின்னர் ஆயுதப்போராட்டம், பேச்சுவார்த்தைகள் என்று மாற்றமடைந்து பின்னர் மீண்டும் நாடாளுமன்ற அரசியலுக்குள் அடங்கியது.
மூன்றாவது நிகழ்நிலை சார்ந்த பிரச்சினைகளை மய்யப்படுத்திய அரசியல், இது காலத்துக்குக் காலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மட்டும் மய்யப்படுத்திய அரசியல், இது இணக்க அரசியல், எதிர்ப்பு அரசியல் என்று இரண்டு எதிரெதிர்த் திசைகளில் பயணிக்கிறது.
ஈழத்தமிழ் அரசியல் என்பது யாருடைய அரசியலாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது என்ற கேள்வியுடன் தொடங்குவதே பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஈழத்தமிழ் அரசியலின் வரலாற்றை உற்றுநோக்கினால் அது சாதாரண உழைக்கும் மக்களின் அரசியலாகவன்றி ஆதிக்க சக்திகளின் உயர்வர்க்கத்தினரின் அரசியலாகவே இருந்து வந்திருக்கிறது.
தமிழ்த் தேசிய அரசியலின் தோற்றுவாய் தொட்டு சமூக நீதி என்பதும் அனைவரையும் உள்ளீர்த்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கான அரசியல் என்பதும் இன்றுவரையும் மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்துள்ளன. பொன்னம்பலம் இராமநாதனைத் தமிழ்த் தேசிய அரசியலின் மூலவராகவும் ஆறுமுக நாவலரை அவரது வழிகாட்டியாகவும் தமிழ்த் தேசியத்தின் தொடக்கப் புள்ளியாகவும் கொள்கிறவர்கள், இராமநாதனின் நிலைப்பாடுகள் ஜனநாயக மறுப்பானவையாக இருந்தது பற்றிப் பேச விரும்புவது இல்லை.
இராமநாதன் இலங்கை முழுவதும் பரவி இருந்த தமிழ் மக்களை ஒருமைப் படுத்துவது பற்றியோ பொதுவான தமிழ்த் தேசிய அடையாளத்தை உருவாக்குவதிலோ அக்கறை காட்டவில்லை என்ற உண்மையை நாம் விளங்கியாக வேண்டும்.
இராமநாதனின் தமிழ் அடையாளம், ஒரு புறம் முஸ்லிம்களின் தனித்துவத்தை மறுத்தது. மறுபுறம், கிழக்கு மாகாணம், வன்னி, வடமேல் மாகாணத்தின் கரையை அண்டிய பகுதி ஆகியவற்றில் வாழ்ந்த பலவேறு தமிழ் பேசும் சமூகங்கள் பற்றிய ஆழமான அக்கறையையோ அச் சமூகங்களை எவ்வாறு ஒரு தமிழ் அடையாளத்துக்குள் ஒன்றுபடுத்துவது என்ற பார்வையையோ கொண்டு இருந்ததில்லை. மலையகம் பற்றி இராமநாதனுக்குக் குறிப்பிடத்தக்க அக்கறை இருந்ததாகக் கூறவும் இயலாது.
இராமநாதனின் தமிழ் இன உணர்வு தமிழ் பேசும் சகல மக்களதும் நலன் சார்ந்தோ தமிழர் என்று கூறப்படுகிற மலையக வடக்கு-கிழக்குத் தமிழர் அனைவரையும் அடையாளப்படுத்தியோ வடக்கு-கிழக்கின் தமிழரை ஒன்றுபடுத்துகின்ற நோக்கிலோ கூட அமைந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால், வடக்கினதோ, குடாநாட்டினதோ தமிழர் அனைவரதும் நலன் பற்றியது என்று கூட அதைக் கூற இயலாதளவுக்குப் பொன்னம்பலம் இராமநாதனதும் அவரது ஆதரவாளர்களதும் அரசியல், வர்க்க, சாதிய, பிரதேச நலன்களிலும் பழைமைவாதச் சிந்தனையிலும் ஊறிப் போயிருந்தது. அந்த நிலை இன்றும் தொடர்கிறது.
தமிழ்த் தேசிய அரசியல் என்பது மேற்தட்டு வர்க்க நலன்கள் சார்ந்தும் சிங்களப் பேரினவாதத்தின் எழுச்சியின் பாதிப்பால் அதற்கு எதிர்வினையாக உருவானது அன்றி இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களுக்கானதாகத் தோற்றம் பெறவில்லை. இன்றைய சவால் இதை எவ்வாறு முற்போக்கான திசையில் நகர்த்துவது என்பதே.
இவ்விடத்தில் தேசியம் குறித்த சில அடிப்படையான விடயங்களை நோக்க வேண்டியுள்ளது. தேசமோ தேசியமோ இயல்பானவையோ மாறாதவையோ அல்ல என்பதைப் பற்றியும் தேசமென்பது வரலாற்றின் விளைபொருளேயன்றி மனித உயிரியல் சார்ந்த ஒன்றல்ல என்பதில் அரசியல் வரலாற்றாளர்கள் ஒரு மனதுடையோராக உள்ளனர்.
மேலைநாட்டு அறிஞர்கள் தேசியம் பற்றி அலசுவதில் தவறவிட்ட முக்கியமான அம்சம் யாதெனில், தேசங்களே இல்லாத நிலைமைகளில் தேசங்களும் தேச-அரசுகளும் உருவானதில் கொலனியமும் நவ-கொலனியமும் ஆற்றிய பங்கைக் கணக்கில் எடுக்காமையே ஆகும். தேசிய உணர்வும் தேசியமும் ஐரோப்பாவில் விருத்தி பெற்ற விதத்தினின்று வேறுபட்ட முறையிலேயே மூன்றாமுலக நாடுகளில் தேசியம் விருத்தி பெற்றது.
இதேவேளை பல ஐரோப்பிய நாடுகளில், தேச அரசின் தோற்றமும் முதலாளியத்தின் விருத்தியும் சேர்ந்து, ஒவ்வொரு நாட்டிலும் ஓர் ஆதிக்க மொழியினது அல்லது பொது மொழியினது தோற்றத்துக்கு வழி செய்துள்ளன.
கோணிஷ், வெல்ஷ், ஸ்கொட்டிஷ் இனக்குழும/ தேசிய அடையாளங்களின் வீழ்ச்சிகளின் துணையுடனேயே பிரித்தானியத் தேசிய அடையாளம் எழுச்சி பெற்றது. ஐரிஷ் மக்களது கேலிக் மொழியின் இடத்தை ஆங்கிலம் வலுக்கட்டாயமாகப் பிடித்துக்கொண்டது. நகர் சார்ந்த ஒரு சிறுபான்மையினர் மட்டுமே சரளமாகப் பேசிய ஒரு மொழியான, ‘அதிகாரபூர்வமான பிரெஞ்சு’ தவிர்ந்து, பிரான்சில் பேசப்பட்ட அனைத்து மொழிகளையும் அமுக்குவது நெப்போலியனின் கீழ் வடிவமைக்கப்பட்ட பிரெஞ்சுத் தேசியத்துக்குத் தேவையாயிற்று.
தேசிய பிரச்சினையைத் தேசியவாதக் கண்ணோட்டத்தில் நோக்குவோர், தவிர்க்க இயலாது, பிற தேசிய இனங்களது ஜனநாயக, அடிப்படை உரிமைகளை மட்டுமன்றித் தமது தேசிய இனத்தின் ஜனநாயக, அடிப்படை உரிமைகளையும் மீறும் நிலைப்பாடுகளை எடுத்துள்ளனர். ஒடுக்கும் தேசிய இனத்துக்கு மட்டுமன்றி ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கும் இது பொருந்தும். இதற்குத் தமிழ்த்தேசியமும் விலக்கல்ல.
ஈழத்தமிழ் அரசியல் மரபில் மாற்றுக்கருத்துகளுக்கு என்றும் இடமிருக்கவில்லை. அது எப்போதும் துரோகி-தியாகி என்ற அந்தங்களிலேயே இயங்கியது. விமர்சனத்துக்கு இடமளிக்காத தமிழ்த் தேசிய அரசியலின் துயரங்களையே தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறார்கள். இதைத் தோற்றுவித்து உருவாக்குவதில் தமிழரசுக் கட்சிக்கும் அதன் மறு அவதாரமான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் ஒரு பங்கு இருந்தது.
தமிழ்த் தேசிய அரசியலின் முக்கியமான அடையாளங்களாக இருந்து வந்துள்ள ‘தனிப்பெரும் தலைவர்’, ‘ஏகப் பிரதிநிதித்துவம்’, ‘இன ஒற்றுமை’ என்ற கருத்தாக்கங்கள் விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கு மிக முந்தியன.
மாற்று அரசியல் ஒன்று உருவாவதற்கெதிராகப் பழைமைவாதம் ‘தமிழர் ஒற்றுமை’ என்ற கருவியைப் பலவாறாகவும் பயன்படுத்தி வந்துள்ளது. அதன் விளைவாக, மக்கள் அரசியல் என்ற கருத்தாக்கம் தமிழ் அரசியற் பரப்பில் வேரூன்றத் தவறியது. அதைவிடவும் சாதி, பால், பிரதேசம் என்பன சார்ந்த முரண்பாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அப் பிரச்சினைகளை இல்லை என மறுப்பதுடன் அவற்றைப் பற்றிப் பேசுவது தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் என வாதிப்பதும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு வழமையாகிவிட்டது.
அவற்றை மறுத்ததால் அவை இல்லாமற் போய்விடவில்லை. இன்று அவை முன்பு நாம் அறிந்திருந்த அதேயளவு உக்கிரத்துடன் தொடருவதை நாம் அறிவோம். அதைவிட முக்கியமாகச் சுரண்டும் வர்க்கத்தின் தேசியத் தன்மை எத்தகையது என்பதைப் போருக்குப் பிந்திய சூழல் நமக்குத் தெளிவாக்கியுள்ளது.ஒரு தேசிய இனத்தின் விடுதலையை அதன் அக முரண்பாடுகளைப் புறக்கணித்து வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாது என நாம் உணரலாம்.
தேசியத்துக்குள் செயற்பாடும் உயர் வர்க்க, சாதிய, ஆணாதிக்க, பிரதேச மேலாதிக்கச் சிந்தனைகள் சரிவரக் கையாளப்படாத போது, அவை ஏற்படுத்தும் விளைவுகள் போராட்டத்தை மட்டுமன்றித் தேசிய இன அடையாளத்தையும் கடுமையாகப் பாதிக்க இயலும் என்பதை இப்போதாவது ஈழத்தமிழ் அரசியல் கணிப்பில் எடுப்பது நல்லது.
இன்று எம்முன்னுள்ள கேள்வி ஈழத்தமிழ் அரசியல் என்பது அனைத்து ஈழத்தமிழ் மக்களையும் உள்வாங்கி மக்கள் நலன்களை முன்னிறுத்துகின்ற அரசியலை நோக்கித் நகரத் தயாராக இருக்கின்றதா இல்லையா என்பதே.
ஓர் இனத்தின் விடுதலை என்பது காலக்கேடு வைத்துப் பெறப்படுவதல்ல; யாரும் வந்து பெற்றுத்தருவதும் அல்ல; பெரும்பான்மையான மக்கள் திரள் விடுதலையைத் தங்கள் தோள்களில் சுமந்து போராடாதவரை விடுதலை வெல்லக்கூடியதல்ல.
இதற்குத் தமிழ்ச்சமூகத்தில் ஜனநாயகம் உருப்பெறவேண்டும், சமூகநீதி அதன் அங்கமாக வேண்டும். இவை இரண்டும் ஈழத்தமிழ் அரசியல் அனைத்து ஈழத்தமிழர்களுக்குமான முற்போக்குத் திசையில் நகர்வதற்கான முன்நிபந்தனைகளாம்.
அதனைத் தொடர்ந்து பார்வையாளர்களுடைய கேள்விகளின் பக்கம் கலந்துரையாடலின் கவனம் திரும்பியது. முதலாவது கேள்வி விரிவுரையாளர் சிவகுமார் நவரத்தினத்தை நோக்கியதாக சாம்பசிவம் ஹரிஹரன் என்பவரால் எழுப்பப்பட்டிருந்தது. இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைக் கோரிக்கை வரலாற்றுடன் நேரடியாக தொடர்புபட்டதல்லவா, இலங்கையின் ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றை மீட்டிப் பார்த்தால் இதனை அடையாளப்படுத்த முடியுமல்லவா, பெருந்தேசிய மேல் ஆதிக்கமே இலங்கையில் காணப்படுகின்றதல்லவா என்றவாறு அந்தக் கேள்வி அமைந்திருந்தது.
அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கையில், இலங்கைத் தமிழர்களுடைய போராட்டத்தில் இந்தியத் தமிழர்களின் பங்களிப்பு நிலைத்து நிற்கக் கூடியது. ஆனால், அது அதிகமாக பேசப்படவில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இதனை விளக்கப் போதுமானது. அதனைக் கடந்து ஆட்புல ரீதியாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் இந்திய வம்சாவளியைக் கொண்ட தமிழ் இளம் சமுதாயம், ஆயுதப் போராட்டத்தில் தங்கள் பங்களிப்பைப் பற்றியும், அது அதிகமாகப் பேசப்படாததைப் பற்றியும் ஆதங்கத்தைக் கொண்டுள்ளதோடு அதனைக் குறுந்திரைப்படம் மூலமும் வெளிப்படுத்தியுள்ளனர். இது வெளிப்படையாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஓர் உதாரணம்.
அதுமட்டுமல்லாமல், மலையக தமிழ் மக்களுக்கான ஒரு தனி அரசியல் பயணமும் இடம்பெற்றுள்ளது. தொண்டமான் குடும்பத்தினர் மேற்கொண்ட தனித்துவமான அரசியல் நமக்கு அதனை எடுத்துக் காட்டுகிறது. அவர்களுடைய பங்களிப்பு ஈழத்தமிழ் அரசியலிலும் மிகப்பெரிய பங்கை ஆற்றி உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக இன்று வெளிப்படையாகப் பேசப்படாமல் இன்னலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு பிரதேச இந்திய வம்சாவளி தமிழ் மக்களை நாம் சுட்டிக்காட்டலாம். ஒட்டுமொத்த சமூக விடுதலையில் இவர்களும் உள்வாங்கப்பட வேண்டும்.
அடுத்ததாக,தேசியவாதம். தேசிய விடுதலை தொடர்பாகப் பார்க்கும்பொழுது சமூக விடுதலை அத்தியாவசியமான காரணியாகிறது. அதற்கான ஆரம்பச் செயற்பாடுகளில் நாம் அரசியலை மட்டும் கவனித்து, ஏனைய விடயங்களைக் கவனிக்காமல் விட்டிருக்கிறோம். அவ்வாறு கவனித்தாலும் அது தொடர்பான சுய விமர்சனம் மேற்கொள்ளப்படுமிடத்து, அரசியல் ஒட்டத்திலிருந்து தூக்கி எறியப்படுவோமா, அல்லது பல்கலைக்கழக ‘காட்போட் போராளிகள்’ வழங்கும் ‘சோரம் போனவர்கள்’, ‘துரோகிகள்’ போன்ற பட்டங்களுக்கு ஆளாக்கப்பவோமா என்ற தயக்கத்தில் பேசாமல் இருக்கின்றோம்.
மாற்றுக் கருத்துகளுக்குத் துரோகம் என்ற பட்டம் சாதாரணமாகிவிட்டது. இந்த இடத்தில் தமிழ் அரசியலில் ஆதிக்க அரசியல் நிலவுகிறதா என்ற கேள்வி எழுந்தது. தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வு என்கின்ற பொழுது, அது முறையாக அணுகப்பட வேண்டும்.
ஆனால், இங்கே சுய விமர்சனம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. கடந்த காலத்திலிருந்து அறிவைப் பெறுவதற்கான முயற்சி மிகக் குறைந்து இருக்கிறது. தமிழ்த் தலைமைகளால் அரசியல் தீர்மானமெடுப்புக் குறைபாடுகள் விடப்படுவதற்கான காரணம், கடந்த காலத்துத் தவறுகளைத் திருத்தாததேயாகும்.
இந்த இடத்தில், ஒரு முக்கிய கருத்து பதிவு செய்யப்படவேண்டும். தனிநபர் சார்ந்தோ, குடும்பம் சார்ந்தோ, முடிவு எடுக்கப்படும் பொழுது வீரம் என்பது கருத்திற் கொள்ளப்படலாம். ஆனால், ஒரு சமூகம் சார்ந்த முடிவு எனப்படுவது, வீரத்தை விட விவேகத்துக்கே அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும்.
அரசியல் பரப்பிலிருந்து பார்க்கும் பொழுது, தேசிய, பிராந்திய, சர்வதேச அரசியல் போக்குகள் தொடர்பாக முறையாக விளங்கிக்கொண்டு தர்க்கரீதியான யதார்த்தபூர்வமான தீர்மானங்களை கடந்த காலங்களில் எடுத்து இருக்கின்றோமா என்பது தொடர்பாக சுய விமர்சனத்தைச் செய்ய எத்தனை செயற்பாட்டு அரசியல்வாதிகள் தயாராக உள்ளனர்?
இந்த இடத்தில் அவர்களின் அரசியல் தக்கவைப்புத் தொடர்பான தயக்கம், மக்களுக்கு உண்மை போய் சேர்ந்துள்ளதா என்கிற கேள்வியை எழுப்புகிறது.
ஈழத்தமிழ் அரசியலின் மூன்று கட்டங்களிலும் எடுக்கப்பட்ட முடிவுகள், இந்த இடத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. அவற்றை ஆராய்வதற்கான சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் பங்களிப்பை ஏற்றுக்கொள்வதோடு, ஈழத் தமிழ் அரசியலில் ஆதிக்கம் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், வெளிப்படையான பேச்சுக்கு எதிராகப் பட்டங்களை வழங்குவதும், உடன்பாடின்மை மனப்பாங்கை வெளிப்படுத்துவதும் ஆதிக்கப் போக்காகவே படுகிறது.
இதிலிருந்து விடுபடாத வரை ஒற்றுமையான அரசியல் விடுதலை என்பது கேள்விக்குறி. இக்கேள்வி மாற்று அரசியல் போக்குக்கான தேவையைத் தூண்டிவிடுகிறது. அண்மையில், கம்பவாரிதி குறிப்பிட்டது போல, மாற்றுத் தலைமைகள் உருவாக்கப்பட்டுவிட்டது அல்லது, மாற்றுத் தலைமைகள் உருவாவதற்கான களம் அமைக்கப்பட்டிருக்கிறது என சிவகுமார் நவரத்தினம் குறிப்பிட்டிருந்தார்.
தன்னுடைய கருத்தோடு, கிழக்கு தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இடையிலான ‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’ உறவை, வளப் பங்கீட்டைக் கொண்டு வங்குரோத்து அரசியலாக மாற்றியுள்ளதனாலேயே தமிழ் மக்களுக்கு இடையிலான சமூகப்பிரச்சினைகள் வளர்கின்றன எனவும் சேர்த்துக்கொண்டார்.