வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து திரு தவராசா நீக்கப்பட்டு திரு தவநாதன் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, ஈ பி டி பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய மக்கள் சோசலிச முன்னணி (UPFA) செயலாளருக்கு கடிதமூலம் வைத்துள்ளார். அதற்கான காரணமாக இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவரே எதிர்கட்சி தலைவர் பதவி வகித்ததால் இனிவரும் காலம் கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதிக்கு வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை தேர்தலில் ஈ பி டி பி, மகிந்தவின் ஐக்கிய மக்கள் சோசலிச முன்னணியில் போட்டியிட்ட போது, யாழில் கமலேந்திரனும் கிளிநொச்சியில் தவநாதனும் தெரிவாகினர். எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட திரு கமலேந்திரன் கொலை குற்றச்சாட்டு வழக்கில், விளக்கமறியலில் சென்றதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பதவி இழந்தார். அந்த வெற்றிடத்துக்கு அடுத்ததாக விருப்பு வாக்கு பெற்ற திரு தவராசா தெரிவாகி எதிர்க்கட்சி தலைவர் பதவி ஏற்றார்.
டக்ளசால் அனுப்பப்பட்ட நீக்கம் பற்றிய கோரிக்கை கடிதத்தை, ஐக்கிய மக்கள் சோசலிச முன்னணி செயலாளர், ஆளுநர் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார். இது சம்மந்தமான தகவல் மின் அஞ்சல் மூலம் பத்திரிகைகளுக்கு கசியவிடப்பட்டுள்ளது. ஈ பி டி பி முக்கியஸ்தவர்களில் டக்ளசுக்கு அடுத்து திரு சந்திரகுமார் மற்றும் திரு தவராசா முக்கியமானவர்கள். டக்ளஸ் இந்தியாவில் இருந்தபோது ஈ பி டி பி அரசியல் கட்சியாக பதிவாகும் முற்சியில் சாதித்தவர் சந்திரகுமார். அதே போல் நிர்வாக, மற்றும் அரசியல் விடயங்களில் தூணாக நின்றவர் தவராசா.
இருவரும் சில வருடங்கள் கட்சியை விட்டு வெளியேறி, இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் பெற்று டக்ளசின் அழைப்பில் மீண்டும் நாடு திரும்பி கரம்கோர்த்தனர். சந்திரகுமார் சென்ற பாராளுமன்ற தேர்தலில் வென்று குழுக்களின் பிரதி தலைவராக பதவி வகித்தார். கடந்த தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இருந்தும் அவரின் தொடர்செயலால் கட்சிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் ஆறாயிரம் வாக்குகளுக்கு மேல் கிடைத்தது. அதனால் தான் ஈபிடிபி 1 ஆசனத்தை பெற முடிந்தது. இருந்தும் தேர்தல் நேர உள் முரண்பாட்டால், சந்திரகுமார் கட்சியில் இருந்து ஒதுங்கி புதிய பாதையில் பயணிக்கிறார்.
சிறிது காலமாக ஏற்பட்ட சலசலப்பு இப்போது செய்தியாய் வெளிவந்துள்ளது. கருத்து வேறுபாடுகள் உருவாகி வருவதும், அது முரண்நிலையை தோற்றுவிப்பதும் காரணமாகவே, மாவட்டத்தை காரணம் காட்டி தவராசா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என தெரிகிறது. ஏனென்றால் தவராசா அளவுக்கு சிறப்பாக எதிர்க்கட்சி தலைவராக, தவநாதன் செயல்படுவார் என எதிர்பார்க்க முடியாது. ஆளும் கட்சியின் தாக்குதலுக்கு ஆதாரங்களுடன் பதிலுரைக்கும், தவராசாவின் அனுபவம் தவநாதன் பெற கால அவகாசம் தேவை.
மேலும் தவராசா போன்றவர்கள் இருப்பதால் பொது வெளியில் ஈ பி டி பி க்கு ஒரு நன்மதிப்பு உண்டு. இன்று வடக்கு மாகாண சபையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களில், எதிர்க்கட்சி தலைவர் தவராசா முதன்மையானவர். அவர் முன்வைக்கும் விடயங்களை ஆளும் கட்சியினரே, ஏன் முதல்வர் உட்பட தவிசாளர் வரை பாராட்டி உள்ளனர். இந்த நிலையில் தவராசாவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்குதல் உள்கட்சி விவகாரமாக இருந்தாலும், அது புத்திசாலித்தனமான முடிவல்ல. வடக்கு மாகாண சபைக்கு என்ன கெடுகாலமோ தெரியவில்லை. அண்மையில் தான் பிரதி தவிசாளர் புடுங்குப்பாடு முடிந்தது. அதற்குள்?
– ராம் –