புலிகள் செய்த கொலைகளையும், அவர்கள் முஸ்லீம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதையும் தவறு என்று சுமந்திரன் பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றார். இது ஒரு வகையில் ;துணிச்சலான’ செயற்பாடுதான்.
அதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயே அவருக்கு முதலில் எதிர்ப்பு கிளம்பியது. புலிகளை ஆதரித்து தமது வாக்கு வங்கியை காப்பாறறி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு சுமந்திரனின் இந்த தடாலடிப் பேச்சுகள் திருப்தியளிக்கவில்லை.
மறுபுறம் புலிகளின் ஆதரவாளர்கள், குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள், சுமந்திரனின் கருத்துகளை ஏற்க முடியாமல் கடும் சினத்தில் இருக்கின்றனர். அதன் காரணமாகவே முன்பு ஆஸ்திரேலியாவிலும் தற்பொழுது கனடாவிலும் அவருக்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகள்.
இது ஒரு புறமிருக்க, சுமந்திரன் புலிகள் மீது செய்யும் விமர்சனங்கள் தம்மை இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்வோர் உட்பட இன்னொரு தரப்பினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவர் மீது பற்றுதலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தமிழ் அரசியல்வாதிகளிலேயே சுமந்திரன் மட்டும்தான் நேர்மையானவர், ஜனநாயகத்தை நேசிப்பவர் என அவர்கள் சாதாரண பொதுப் புத்தியில் நம்புகிறார்கள்.
ஆனால் உண்மை என்ன? ஏகப் பெரும்பான்மையான தமிழ் தேசியர்களை எதிர்த்துக் கொண்டு அரசியல் செய்து தனது எதிர்காலத்தைப் பாழடிக்கும் முட்டாளா சுமந்திரன்? இல்லவே இல்லை. உண்மை என்னவென்றால்…
சுமந்திரன் அரசியலுக்குள் நுழைக்கப்பட்டது தமிழ் மக்களால் அல்ல.
தமிழரசுக் கட்சியாலும் அல்ல. 1956 இற்குப் பின்னர் தமிழ் மக்களால் அதிகம் விரும்பும் தமிழரசுக் கட்சியை சுமந்திரன் மூலம் கட்டுப்படுத்த விரும்பும் இலங்கையின் பெரும்பான்மை சிங்கள இனத்தின் தரகு முதலாளித்துவ சக்திகளாலும், அவர்களை ஆதரிக்கும் மேற்கத்தைய சக்திகளாலுமே.
இந்த இரண்டு சக்திகளும் புலிகளின் பாசிஸ நடவடிக்கைகளை ஏற்காதவர்கள். இன்றும் கூட புலிகள் இராணுவ ரீதியாக ஒழித்துக் கட்டப்பட்டு சுமார் 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமாகக் கருதி தடை செய்து வைத்திருக்கின்றன. எமது அண்டை அயல் பெரிய நாடான இந்தியாவும் அப்படியே.
எனவே இலங்கையின் ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு சக்திகளுடனும், சர்வதேச ஏகாதிபத்திய சக்திகளுடனும், இந்தியாவுடனும் சமரச அரசியல் செய்யவும், அவர்களுக்கு தரகு வேலை செய்யவும் ‘நுண்ணறிவாளரான’ சுமந்திரனுக்கு இரண்டு வழிகளே உள்ளன.
அதில் ஒன்று, புலிகளை விமர்சித்து தன்னை ஜனநாயகவாதியாகக் காட்டிக் கொள்வது. இரண்டாவது அதைவிடப் பிரதானமானது, தன்னை ஐ.தே.கவுக்கு எதிரான தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கு எதிரானவராகக் காட்டிக் கொள்வது. (இன்று அவர்கள் பொதுஜன பெரமுனவும் அதன் கூட்டணிக் கட்சிகளும்) ஏகாதிபத்தியத்தினதும் பிற்போக்கினதும் அரசியல் தரகரான சுமந்திரனின் இந்தச் செயற்பாடுகளை விளங்கிக் கொள்ளாததால்தான் புலிகளின் ஆதரவாளர்கள் அவரைத் தீவிரமாக எதிர்ப்பதும், தம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அவரை ஆதரிப்பதும் நிகழ்கின்றது.
இன்றைய தேசிய மற்றும் சர்வதேச அரசியல் என்பது சற்றுச் சிக்கலானது. அதை விளங்கிக் கொள்ள பலர் சிரமப்படுகின்றனர். அதனால்தான் சுமந்திரன் போன்ற வகையறாக்களைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறி நிற்கின்றனர். ஆனால் உண்மையான ஒரு மார்க்சியவாதிக்கு இத்தகைய விடயங்களைப் புரிந்து கொள்வதில் அதிகம் சிரமம் இருக்காது.