(Saakaran)
மரண வீடு ஒன்றிற்கு சகா ஒருவருடன் இணைந்து செல்லும் வாய்பை ஏற்படுத்திக் கொண்டேன். பொது வாழ்வில் இணைந்து 40 வருடத்திற்கு மேற்பட்ட பயணத்தில் ஒரே குறிக்கோளுக்காக ஒரே பாதையில் பயணித்த போது கந்தையா நாகம்மா வீட்டிற்கு பல தடவை 1980 களின் முற் கூற்றில் சென்று வந்த நினைவுகளுடன் தனது 98 வயதில் இயற்கை எய்திய அந்த தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் வாய்பை இழந்திருந்தாலும் அதற்கு மறு தினம் அவரின் இரு புதல்வர்களை சந்தித்து எமது அம்மாவின் இழப்பிற்கான எனது வருந்தலை தெரிவிக்க கட்டைப்பிராயில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இன்னாள் மாகாணசபை அமைச்சர் என்ற இருவரையும் சந்தித்த வாய்பு 28 வருடங்களின் பின்பு ஏற்பட்டது.
எமது பாதை இரு வேறு திசைகளில் 1990 களின் பின்பு பயணித்தாலும் இன்று வரை ஒரு ஆரோக்கியமான விமர்சத்தை மட்டும் எமக்குள் கொண்டிருந்தன என்பதை கிடைத்த 1 மணி நேர அளவளாவலில் என்றால் உணர முடிந்தது.
எனது தாய் தந்தையர் இருவரது மரணச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனது எம்மவரால் எனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சனை எனக்கு மட்டும் தனியாது அல்ல. இதற்கு பன்முகப்படுதப்பட்ட கருத்தியலை மறுத்த சிந்தனை ஓட்டமும் இதனை நியாயப்படுத்திய ஏனையவர்களின் செயற்பாடுகளும் ஒரே குறிக்கோளை அடைய வேறு பாதையில் பயணிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்சியான பல இழப்புகளும் ஏகபோக பெரும் போக்குத் தகர்வும் 2009 உடன் ஏற்பட்டிருந்தாலும் இதனைத் தொடர்ந்த ‘ஜனநாயக’ இடைவெளி பல்வேறு பாதைப் பயணிப்புகளில் சிந்தனை மாற்றங்களை அதிகம் ஏற்படுத்தவில்லை இந்த 9 ஆண்டுகளில் என்பது வருத்தத்திற்குரிய விடயமாகவே எனக்கு படுகின்றது.
மொழி மதம் பிரதேசம் சாதி என்ற வாதங்களுக்குள் ஆரம்ப காலத்தில் இடதுசாரியம் பேசியவர்களையும் இழுத்து சென்றுள்ளது என்பது சந்திபின் போது பரிமாறப்பட்ட கருத்துகளில் பாவிக்கப்பட்ட சொல்லாடல் எனக்குள் உணர்வுகளை ஏற்படுத்தியிருந்தன. ஏன் இந்த பிறழ்வு என்பதற்கு இருப்பை தக்க வைப்பதற்காக ஏற்பட்ட சிந்தனை மாற்றம் காரணம் என்று மட்டும் கூறி என்னை நாம் சமாதானப்படுத்திக் கொள்ள முடியுமா…? இந்த கருத்து சிந்தனைப் பிறழ்வுகளின் மத்தியிலும் நாம் உரையாட வேண்டும் என்பதுவும் இதற்கான இடைவெளிகள் இன்னமும் இருப்பதாகவும் என்னால் என்றும் போல் உணரப்படுகின்றது. எனவே தொடர்ந்தும் உரையாடுவோம்.
இந்த சந்திப்பு எமது அம்மா நாகம்மாவின் இழவு வீடு நடைபெறாவிட்டாலும் இம்முறை எனது தாயகத்திற்கான பயணத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது எனது விருப்புகளில் ஒன்று என்பதை சிலர் அறிவர். இதனைச் சாத்தியப்படுத்துமாறு அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய சகாக்களிடம் என் பயணத்தின் ஆரம்பத்திலேயே விருப்பாக தெரிவித்திருந்தேன். இழப்பிலும் பல ஆண்டுகளின் பின்பு சந்திப்பை ஏற்படுத்தி அம்மா தமது மூன்று புதல்வர்களை மட்டும் அல்ல தனது தள்ளாத வயதிலும் தன்னையே இழந்து ஏற்படுத்திருக்கின்றார் என்ற மரியாதை என்றும் என் மனதில் இருக்கும்.
சென்று வாருங்கள் அம்மா அறம் சார்ந்துதான் செயற்பட வேண்டும் என்று தைரியத்தையும் ஊட்டி வளர்த்த உங்கள் தாய்மை தோற்றுப் போகக் கூடாது என்பது எனது விருப்பும் கூட. இது எமது மக்களின் கௌரவமான சுய இருப்பிற்கான வாசலை பலமான சரியான ஒரு பன்முககப்படுத்தப்பட்ட தலமையை உருவாக்கி முன்னோக்கிய நகர்வை ஏற்படுத்த தோழமையை வளர்போம் என்ற நம்பிக்கையிற்கான கோஷத்துடன் செயற்படுவோம்….பயணிப்போம்….. இது ‘பகை மறைப்போம்’ அல்ல நிச்சயமாக ‘தோழமையை வளர்போம்’ என்பதாகத்தான் இருக்க வேண்டும் இருந்திருக்க வேண்டும்.