தினக்குரல் லெவ்ரின்ராஜ் அவர்களின் கேள்விகளுக்கு அ. வரதராஜப்பெருமாளின் பதில்கள்

பதில்:-
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தன்மைகளும் போக்குகளும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு மேலும் நெருக்கடிகளை எவ்வகைகளிலெல்லாம் பெருக்கிச் செல்லப் போகின்றது. அவை எந்தவொரு கட்டத்தை நோக்கி இலங்கையை இட்டுச் செல்லப் போகிறது என இப்போதைக்கு கூற முடியாதுள்ளது. அரசாங்கம் பணத்தை அச்சடிப்பதையும் வெளிநாடுகளிடமிருந்து மிகப் பெருந் தொகையில் அடுத்தடுத்து கடன்களை வாங்குவதையும் தொடர்ந்து அதிகரித்துச் செல்வதையே தீர்வாகக் கடைப்பிடித்து வருகின்றது. இறக்குமதிகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதிச் செலவு மிகவும் அதிகமானதாகவே தொடர்ந்தும் உள்ளது. அதனால் ஏற்படும் அந்நியச் செலாவணி பற்றாக்குறை குறைவதற்கான அறிகுறி தென்பட வில்லை.அதேபோலவே,அரசாங்;கத்தின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை குறைவதற்கான வாய்ப்புக்களையும் காணவில்லை. இலங்கையினுடைய பணப்; பெறுமதியின் அந்நியச் செலாவணி விகிதாசாரம் நாளாந்தம் வீழ்ச்சியடைகின்ற விடயமாக உள்ளது.

இலங்கை மக்களின் நாளாந்த வாழ்க்கையோடும் மற்றும் ஏனைய அத்தியாவசியமான தேவைகளோடும் தொடர்பான பெரும்பாலான பொருட்களை இலங்கை இறக்குமதி செய்யும் கட்டமைப்பையே வளர்த்து வைத்திருக்கின்றது. மேலும் நாட்டின் பெரும்பாலான உற்பத்திகளும் இறக்குமதிப் பொருட்களை உள்ளீடாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் இறக்குமதி தடைகள் நாட்டின் உற்பத்திகளையும் பெருமளவில் பாதித்திருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள பொருட் தட்டுப்பாடுகள். விலையேற்றங்கள், கள்ளச் சந்தைகள் என்பன மிகப் பெரியஅளவில் பொருளாதார சிதைவுகளையும் சீரழிவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்நிலைமைகள் தொடர்பில் ஆளும் தரப்பினர் மட்டுமல்ல, எதிர்க் கட்சியினரும் அடுத்து என்ன செய்வது என்ற தெரியாத ஒரு நிலையிலேயே உள்ளனர் என்பதுதான் உண்மை.

  1. இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் ஒரு காலகட்டத்தில் சீனா சற்று விலகி நிற்க, இந்தியா இலங்கைக்கு ஆதரவு கரம் நீட்டி வருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான போக்கை எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்?

பதில்:-
எந்த நாடும் தன்னுடைய நலன்களுக்கான வாய்ப்புக்கள் எப்போது எங்கிருந்து கிடைக்குமோ அப்போது அந்த வாய்;ப்புகளை உச்ச பட்சம் தமக்கு சாதகமாக்கும் வகையில்பயன்படுத்திக் கொள்ளம் என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும.; நாடுகள் ஒவ்வொன்றும் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எந்த நேரத்தில் எவ்வளவுக்கு அதிகரிப்பது எப்போது குறைத்துக் கொள்வது – சற்று விலகி நிற்பது என்பதெல்லாம் அவை தத்தம் நாடுகளுக்கான பொருளாதார மற்றும் மூலோபாய கணக்குகள் மற்றும் கணிப்புகளுக்கு ஏற்பவே செயற்படுத்துகின்றன. இந்தியாவுக்கு இலங்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு. ஓவ்வொரு விடயத்திலும் இலங்கை அரசு கடைப்பிடிக்கும் நிலைப்பாடும் அதன் விளைவாக இலங்கையின் அகநிலைமைகள் மற்றும் புற உறவுகள் இந்தியாவின் நலன்களோடும் தொடர்புடையவை. எனவே, இலங்கை தொடர்பான இந்தியாவின் பொருளாதார மற்றும் தேசிய மூலோபாயக் கொள்கைகள் வெறுமனே சீனாவின் செயற்பாடுகளால் நிர்ணயிக்கப்படுபவை அல்ல. இலங்கையின் ஒவ்வொரு வெளிநாட்டு உறவு தொடர்பிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே தீரும்.

அதேயளவிற்கு இலங்கைக்கு உள்N;ள நிகழும் அரசியல் பொருளாதார குழப்பங்கள், முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பிலும் இந்தியா மிகுந்த அக்கறையோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்படும் என்பதும் இயல்பானதே.அதேபோலவே இலங்கை அரசும் எந்த நாட்டோடு எப்போது நெருக்கமாவது, எப்போது எவ்வளவுக்கு விலகிநிற்பது அல்லது விலகி நிற்பதாகக் காட்டிக் கொள்வது என்பதைக் கணித்தே மிகவும் கவனமாகச் செயற்படுகிறது. நாடுகளுடனான நல்லுறவைப் பேணுவதில் ஒன்றிலிருந்து ஒன்றை விலக்கும் கொள்கையை இந்தியா மற்றும் சீனாவுடனான உறவில் இலங்கை அரசு கடைப்பிடிக்கவில்லை என்பதையே காண முடிகின்றது. சீனாவுக்கு இலங்கை புவியியல்ரீதியில் தூரமானதாக இருப்பினும் அதனது உலகமய நலன்களுக்கான பாதையின் ஒரு பகுதியாக இலங்கையை அது ஆக்கியுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு இலங்கை பக்கத்து நாடு என்கிற போது அதன் பிராந்திய நலன்களோடு மட்டுமல்ல அதன் பொருளாதார மற்றும் மூலோபாய விடயங்களோடு உடனடியானதும் மற்றும் நேரடியானதுமான தொடர்புகளைக் கொண்ட நாடு. எனவே எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்தியமான எல்லா வழிகளிலும் இலங்கையை தன்னிலிருந்து தூர விலகுவதற்கு இந்தியா அனுமதிக்காது என்பதே உண்மை.

  1. யுத்தத்துக்குப் பின்னர் சீனாவின் பக்கம் சாய்ந்திருந்த ராஜபக்ச அணி, தற்சமயம் இந்தியாவுடன் நெருக்கத்தை வளர்க்க எத்தனிப்பதாக தோன்றுகிறது. இதன் பின்னணியில் உள்ள அரசியலை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்:-
இலங்கையின் அதிகார அரசியல் பீடத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை ஏனைய நாடுகளை விட இந்தியாவுக்கு அதிகமாக உண்டு என்பதை ராஜபக்சாக்கள் நன்கு புரிந்து கொண்டவர்கள். இப்போது ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி இலங்கையில் ராஜபக்சாக்களுக்கு பெரும்;உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளை உருவாக்கியிருக்கின்றமை வெளிப்படை. இந்நிலைமையில் இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி பெருமளவில் கடனுதவிகளை பெறுவதோடு, இங்கு அரசியல் அதிகார மாற்றம் நிகழ்வதில் இந்தியா தீவிர ஈடுபாடு காட்டிவிடக் கூடாது என ராஜபக்சாக்கள் முன்னெச்சரிக்கையோடு செயற்படுகிறார்கள் எனவும் கொள்ளலாம்.

  1. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் கொரோனாவையும் சர்வதேச அரசியல் போக்கையும் காரணம் காட்டி வருகின்றது. உண்மையில் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணங்கள் அரசாங்கம் கூறுபவைகள்தானா? இல்லை அரசாங்கத்தின் பலயீனங்களா?

பதில்:-
இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே மிகவும் பலயீனமான நிலையிலேயே இருந்தது. 1977ல் ஜே.ஆர். அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் நவதாhராளவாத பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடித்ததன் மூலம், இலங்கையைஒரு கட்டத்தின் பின்னர் பொருளாதார பெருநோய் பிடித்த நாடாக ஆகுவதற்கான அடித்தளங்கள் இடம்பெற்றன அக்கொள்கை மாற்றம் நிகழ்ந்து ஒரு சில ஆண்டுகள் பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றத்தால் முன்னேற்றம் ஏற்பட்டது போலத் தோற்றமளித்தாலும் பின்னர் அதன் பலயீனங்கள் செயற்படத் தொடங்கின. அவற்றை இலங்கையின் உள்நாட்டுக் கலகங்களும்போரும் தீவிரப்படுத்தின். 2009ல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதாரத்தை ஓரளவு சீமைத்திருக்கலாம், ஆனால் இலங்கை அரசின் அரசியலும் அதன் மோசமான வரவு செலவுக் கொள்கைகளும் இலங்கையை மீள முடியா பொருளாதார நிலைமை என்ற கட்டத்துக்குள் நீண்ட தூரம் கொண்டு சென்று விட்டது. 2015ல் வந்த கூட்டாட்சி அரசும் அதனையே தொடர்ந்தது.

2019ல் நிகழ்ந்த ஏப்ரல் பயங்கரவாத செயல்கள் கணிசமான அளவு அந்நியச் செலாவணி வருமானத்தைத் தந்த உல்லாசத் துறையை பெரிதும் பாதித்தது. கோத்தாபய அவர்கள் ஜனாதிபதியான உடனேயே வரிக் குறைப்புகள் செய்து நெருக்கடியை மேலும் அதிகரித்தார். இலங்கையின் பொருளாதாரம் அதுகால வரை குவித்துக் கொண்டிருந்த அனைத்துப் பலயீனங்களையும் 2000ம் ஆண்டு பீடித்த கோவிட்ஒருங்கு திரட்டி ஒரு பெரும் நோயாக்கியது. அதிலிருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கையென இயற்கை விவசாயம், தற்சார்பு பொருதாரம் என்ற பெயரில் விவசாய உற்பத்திகளுக்கான உரம் உட்பட இராசாயன உள்ளீடுகள் அனைத்தையும் தடை செய்து நாடு உணவு உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியைக் காண வேண்டிய நிலையை ஆக்கியது இந்த ஆட்சியே. மேலும் இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்துக்கு ஒரு சீரான கொள்கைகள் இல்லாமல் செயற்பட்டு உள்நாட்டு உற்பத்திகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களின் அத்தியாவசியப் பண்டங்களுக்காக இப்பொழுதுநாடு நாடாகச் சென்று கடன் கேட்டு வாங்க வேண்டியதை தவிர்க்க முடியாததாக்கிவிட்டது.

1970 தொடக்கம் 1976 வரை நிதியமைச்சராக இருந்த கலாநிதி என் எம் பெரேரா அவர்கள் காலத்தைத் தவிர சுதந்திரம் பெற்ற காலம் முதல் ஆட்சியில் இருந்த அனைத்து அனைத்து அரசாங்கமும் போட்டி போட்டு இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துள்ளார்கள் என்றே கூற வேண்டும்.

  1. இலங்கை எதிர் கொண்டிருக்கும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னவென நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்:-
ஏற்பட்டுள்ள சிக்கல்களிலிருந்து நாட்டை விடிவிப்பதற்கு எந்தவொரு கட்சியிடமும் சரி அல்லது இலங்கையின் எந்தவொரு அறிஞரிடமும் சரி நடைமுறைக்குச் சாத்தியமான திட்டம் எதுவும் இருக்குமெனக் கூற முடியாது. அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தீர்க்கவும் நாட்டில் தேசிய உற்பத்திகளை அதிகரிக்கவுமென திட்டங்களைப் போட்டுச் செயற்படுத்தியபடியால்த்தான் 1970 தொடக்கம் 1977ம் ஆண்டு வரை சிறிமா பண்டாரநாயக்காவின் தலைமையில் அமைந்திருந்த அரசாங்கம் 1977ம் ஆண்டு தேர்தலின் போது எதிக்கட்சியாகக் கூட வரமுடியாத அளவுக்கு படுதோல்வியடைந்தது. இந்த அரசாங்கமும் ஏற்கனவே மிகப் பெரிய அளவில் மக்களின் ஆத்திரத்துக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியிருக்கின்றது.

இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கான சரியான தீர்வு என்பது நாலு வரிகளில் அமையக் கூடிய ஒன்றல்ல. அது நீண்டதொரு பட்டியலைக் கொண்ட நீண்ட கால மற்றும் குறுங்கால திட்டங்களைக் கொண்டதாகவே இருக்க முடியும். ஆனாலும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் – அடுத்த தேர்தலில் வெல்ல வேண்டும் என்று இருக்கின்ற அரசியற் கட்சிகள் அவ்வாறானதொரு நடைமுறைக்குத் தயாராக இருக்க மாட்டா. மக்களும் தமது வாழ்க்கை வசதிகள் எல்லாம் அப்படியே தொடர தமக்கு சிரமமில்லாத தீர்வையே ஏற்பார்கள். அடுத்த தேர்தலுக்குக் காவல் இருக்கும் எதிர்க்கட்சிகள் அரசாங்கம் எதைச் செய்தாலும் எதிர்க்கவே செய்வார்கள். இந்நிலையில் யாரால் எப்படி ஒரு சரியான திட்டத்தை முன்வைக்க முடியும் – அதனை எப்படி அரசு ஏற்கும்.

பேரின தேசியவாதம், குறும் தேசியவாதம், பெரும்பான்மையின அதிகாரச் செருக்கு, இராணுவம் சார் நிலைக்கு அரசைக் கட்டுகின்றமை போன்றவற்றில் இருந்து நாடு விடுபட வேண்டும். நாட்டின் தேசிய சொத்துக்களை அந்நியர்களுக்குப் பங்கு போட்டுக் கொடுத்தாலும் பரவாயில்லை, நாட்டின் அரசியல் அதிகாரத்தை சகோதர இனத்தவர்களுடன் பகிர்ந்து விடக் கூடாது என இருக்கும் மனோநிலை மாற வேண்டும். ஏல்லாவற்றிற்கும் மேலாக லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் இல்லாத அரசியல் வேண்டும். அரசாங்கத்தின் தலைமைகள் நேர்மையாகவும் சிக்கனமாகவும் கட்டுப்பாடாகவும் வெளிப்படையாகவும் அர்ப்பணிப்புடனும் இருந்தால்த்தான் மக்களும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அரசுடன் ஒத்துழைப்பார்கள்.

சந்தர்ப்பங்களைச் சாதகமான சாத்தியங்களாக ஆக்காவிடின், சங்கடங்களை விலை கொடுத்துத்தான் வாங்க நேரிடும். கூடி நின்று கும்பிடு போட்டு புகழ் பாடுபவர்களைக் கண்டு மகிழும் தலைவன் மக்களையும் தேசத்தையும் கொலைக் களத்துக்கே அழைத்துச் செல்வான். அவ்வாறானவர்களுக்கு வழி காட்டும் தகுதி எனக்கில்லை.

  1. கடந்த ஜெனீவா அமர்வில் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை அரசாங்கத்துக்கு கடும் தொனியில் சில விடயங்களை சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவும் தமிழர்கள் தொடர்பில் தன்னுடைய கரிசனையை அங்கு வெளிப்படுத்தியிருந்தது. இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன? தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உணர்கிறீர்களா?

பதில்:-

1983ம் ஆண்டின் இறுதிப்பகுதியிருந்து இன்று வரை தமிழர்களுக்கான அரசியற் தீர்வு விவகாரத்தில் இந்திய அரசாங்கம் ஒரே நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது. யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதி போன்ற விடயங்களில் இந்தியா எந்த வேளையிலும் அக்கறை காட்டியதில்லை. இனியும் அக்கறை காட்டப் போவதில்லை. 2009க்குப் பின்னர்,13வது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும், இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பு, சமத்துவம்,மற்றும் சமநீதி உடைய கௌரவமான பிரஜைகளாக வாழும் நிலைமை உறுதிப்படுத்தப்;பட வேண்டும் என்றே இந்தியா திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றது. அதற்காக இலங்கை அரசோடு பகைமையான அல்லது வெளிப்படையாக முரண்பாடும் வகையில் செயற்படுமென்றில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இலங்கை அரசிடம் அதனை வலியுறுத்தி வருகின்றது. இலங்கை அரசை அது எந்தளவுக்கு கட்டாயப்படுத்துவதாக அமையும் எனக் கூற முடியாது.

  1. தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தம் தொடர்பாக இந்திய அரசாங்கத்துக்கு ஒரு வேண்டுகோள் கடிதத்தினை அனுப்பியிருந்தன. இதனூடாக இந்தியாவின் அணுகுமுறைகள் எவ்வாறு அமையும் எனக் கருதுகிறீர்கள்?

ஏற்கனவேகூறியபடி இந்தியா தொடர்ந்தும் ஒரே அணுகுமுறையையே கடைப்பிடிக்கின்றது. பாரிய அளவிலான அணுகுமுறை மாற்றத்தை இந்தியா ஏற்படுத்துவதற்கான வாய்ப்பில்லை. 13வது திருத்தம் பற்றி விபரமாக பேசுவதற்கு தமிழர்களின் கட்சிகள் தயாராக இல்லாத போது இந்தியா அது பற்றி அதிகமாக பேசும் என்று எதிர்பாக்க முடியாது. தமிழர்களின் கட்சிகள்தான் தமது விரிவான காத்திரமான செயற்பாடுகள் மூலம் இந்திய அரசை செயற்பட வைக்க வேண்டும். அதற்கான எந்த அறிகுறிகளையும் இங்கு காண முடியவில்லை. 13வது திருத்தப்படியான அதிகாரப் பகிர்வை முறையாகவும் முழுமையாகவும் நிறைவேற்றுதல் என்றால் என்ன என்று விரிவாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தி அவ்வாறு நிறைவேற்றப்படால் அது தமிழர்களுக்கான அரசியற் தீர்வாக அமைவதற்கான வாய்ப்புண்டு என தமிழர்கள் கட்சிகள் கூறாத போது இந்தியா அந்த விடயத்தில் எவ்வாறாக செயற்பாட்டு ரீதியில் ஈடுபாடு காட்ட முடியும். அது இந்தியாவின் கடமையும் பொறுப்பும் எனக் கூறிக் கொண்டு, தமிழர்களின் கட்சிகள் வேறு காத்திரமான தொடர் செயற்பாடு எதுவுமின்றி இருக்கும் வரை 13வது திருத்தம் மூலமான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இன்று ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலைகளை சாத்தியமானதாக்காது தவறிய மற்றுமொரு தோல்வியாகவே இது தமிழர்களின் வரலாற்றில் அமையும்.

  1. ஆட்சி ஏற்ற நாள் முதல் தமிழ் கூட்டமைப்பை சந்திக்காது தவிர்த்து வந்த ஜனாதிபதி கோத்தாபய தற்சமயம் கூட்டமைப்பை சந்;திப்பதற்கு காரணம் என்ன? இது தொடர்பில் உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில்:-
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு ஒரு கட்டாய தேவை ஏற்பட்டால்த்தான் அதிகாரத்தில் இல்லாத எவரையும் சந்திப்பார்கள். சில வேளைகளில் இந்தியா சொல்லியிருக்கக் கூடும். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளும் சொல்லியிருக்கக் கூடும். இன்றையநிலையில் அரசாங்கம் தமிழர்களின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான தீர்வுகள் விடயத்தில் தான் அக்கறையாக இருப்பது போல காட்ட வேண்டிய பல்வேறு சூழ்நிலைகள் ஏற்பட்டிருப்பதுவும் வெளிப்படை.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி வேறெந்த கட்சிகளுடனும் பேசுவதாக இல்லையே. அடுத்த ஜனாதிபதி தான்தான் என ஆட்சிக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிற சஜித் பிரேமதாசாவின் கட்சியோடு நின்று கலர் காட்டுகின்ற இவர்களும் அவரோடு எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லையே! ஆட்சியிலிருந்த போது “ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி தரப் போறார்”என்ற ரணில் விக்கிரமசிங்காவுடனோ அல்லது தான் ஆட்சியிலிருந்த போது ஒற்றையாட்சியை நீக்கி பிரதேச சுயாட்சி தர முன்வந்த சந்திரிகா அவர்களுடனோ இவர்கள் எந்தவித ஒருங்கிணைந்த செயற்பாட்டுக்;கான முயற்சியில் இல்லைதானே!

கூட்டமைப்புக்காரர்கள் தங்களுக்குள்ளேயே பேசுவதில்லையே! தமிழர்களுக்கான தீர்வு தொடர்பாக நியாயமானதொரு அரசியற் திட்டத்தை இவர்கள் வெளிப்படையாக முன்வைத்து ஓர் மாபெரும் தொடர் இயக்கத்தை விடாப்பிடியாக முன்னெடுத்தால் இலங்கையின் அனைத்து இன மக்களும் ஈடுபாடு காட்டுவார்கள்: இலங்கையின் அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் அதனுடன் இணைவார்கள்: உலக நாடுகளின் ஆதரவுக் குரல் வலுவானதாகும். அப்போதுதான் அரசாங்கம் உண்மையான கரிசனை காட்டும்: அதுவரை அரசாங்கம் தனக்கு எது எப்போது தேவையே அதனை மட்டுமே செய்யும்.
அ. வரதராஜா பெருமாள் – 24-03-2022