2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 2014 தவிர மூன்று சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கூட்டணியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.கவுக்கும் திடீரென்று பிரச்சினை வர, உள்ளூராட்சித் தேர்தல் இடப் பங்கீட்டுப் பிரச்சினை மட்டுமே காரணமா என்பதை நம்ப இயலவில்லை.
மூன்று சட்டமன்றத் தேர்தல்களையும் முதலமைச்சர் வேட்பாளர் கருணாநிதி என்ற அடிப்படையில், காங்கிரஸ் கட்சி தி.மு.கவுடன் கூட்டணியாகச் சந்தித்தது. அதேபோல், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் கருணாநிதி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது.
ஆனால், கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, மு.க. ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஒரேயொரு நாடாளுமன்றத் தேர்தலை, அதாவது 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து, தமிழ்நாட்டில் மரியாதைக்குரிய எண்ணிக்கையில் எம்.பிக்களைப் பெற்றது.
இந்திய நாடாளுமன்றத்தில், காங்கிரஸ் கட்சி இன்றைக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது என்றால், அதற்குத் தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்ற, எட்டு காங்கிரஸ் எம்.பிக்களும் புதுச்சேரியில் வெற்றி பெற்ற ஒரு எம்.பியும் மிக முக்கியம்.
ராகுல் காந்தியை ‘பிரதமர் வேட்பாளர்’ என்று வெளிப்படையாக ஸ்டாலின் அறிவித்து, 2019 தேர்தல் களத்தைச் சந்தித்தார். அதேபோல் ராகுல் காந்தியும் ‘தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்’ என்ற அறிவிப்பை வெளியிட்டு பிரசாரத்தில் தி.மு.கவுக்கு வலுச் சேர்த்தார்.
கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தியே நேரில் வந்தார். இவ்வளவு நெருக்கமாக இருந்த இரு கட்சிகளுக்குள்ளும் கூட்டணிக்குள் குழப்பம் திடீரென்று உருவாகியதற்கு, மிக முக்கிய காரணம் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் என்று தி.மு.க வட்டாரத்தில் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள தலைவர்களில் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கிறார்.
ஆனால், சிதம்பரம் ஊழல் வழக்கில் கைதான நேரத்தில் தி.மு.கவின் சார்பில் யாரும் சென்று அவரைத் திகார் சிறையில் பார்க்கவில்லை. அப்படிப் பார்க்காததற்குப் பல காரணங்கள் உண்டு என்றாலும், தி.மு.கவின் மீது தொடுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில், ப.சிதம்பரத்தின் மீதுதான் தி.மு.க தொடக்கத்திலிருந்தே கோபத்தில் இருக்கிறது.
2011 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, அண்ணா அறிவாலயத்தில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது; 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு, முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பு, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை வழக்கில் சேர்த்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது உள்ளிட்ட பல விடயங்களில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்துக்கும் தி.மு.கவுக்கும் ஜென்ம பகை போல் மாறியது.
சிதம்பரத்தின் தாயார் மரணம் அடைந்த போது, அதற்குத் துக்கம் விசாரிக்கக் கூட போகாமல் விலகி இருந்தார் கலைஞர் கருணாநிதி. இந்தப் பகை, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகும் தொடர்ந்தது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில், கார்த்தி சிதம்பரத்தின் வெற்றிக்காக ஸ்டாலின் பிரசாரம் செய்தாலும், அது கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் மேற்கொண்ட பிரசாரம். ஆனால், சிதம்பரத்தின் மீதான கோபம், தி.மு.க தலைமைக்கு எந்தக் காலகட்டத்திலும் குறையவில்லை.
இந்தப் புகைச்சல் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கொமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற கே.எஸ். அழகிரி, ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். அதேபோல், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக இருக்கும் கே.ஆர் ராமசாமியும் சிதம்பரத்தின் ஆதரவாளர். ஆகவே, காங்கிரஸின் மாநிலத் தலைமையும் சட்டமன்றக் கட்சியின் தலைமையும் சிதம்பரத்தின் முழுக்கட்டுப்பாட்டில் வந்த நிலையில்தான், ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது முறையாக, உள்ளூராட்சித் தேர்தலை காங்கிரஸ் கட்சி சந்தித்தது.
ஊரக உள்ளூராட்சி தேர்தல், 27 மாவட்டங்களில் மட்டுமே நடைபெற்றது. இதற்கு நடைபெற்ற தேர்தலில் மாவட்டஅளவில் ‘தொகுதி பங்கீடு’ செய்து கொள்ள, தி.மு.க தலைமை உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், தொகுதிப் பங்கீட்டை மாவட்ட அளவில் முடித்துக் கொண்டன. ஆனால், இதில் சிக்கல் பிறந்தது, சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள்தான்.
இங்கு நடைபெற்ற கூட்டணிப் பேச்சுவார்த்தையில், இரு கட்சிகளுக்கும் பிரச்சினை ஏற்பட்டாலும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, நடைபெற்ற மறைமுகத் தேர்தலால் கூட்டணிக்குள் ‘அறிக்கைப் போர்’ வெடிக்கும் சூழல் உருவாகி விட்டது.
புதுக்கோட்டையில் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பதவியும் சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியும் கேட்டு வற்புறுத்திய சிதம்பரம் அணி, அது கிடைக்கவில்லை என்றதும் அழகிரி மூலம் ஓர் அறிக்கையை வெளியிட வைத்தது. “தி.மு.க கூட்டணி தர்மத்தை மீறியுள்ளது” என்று வெளிப்படையாக அறிக்கை விட்டார் அழகிரி.
இதன் விளைவாக, டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தி தலைமையிலான ‘குடியுரிமை சட்டத் திருத்த’ எதிர்ப்பு ஆலோசனைக் கூட்டத்தை, புறக்கணித்தார் ஸ்டாலின். அவர் மட்டுமின்றி, தி.மு.கவின் சார்பில் பிரதிநிதிகள் யாரையும் அனுப்பவும் இல்லை. அழகிரி டெல்லிக்கு அழைக்கப்பட்டு, சோனியா காந்தியால் விசாரிக்கப்பட்டாலும் தி.மு.கவுக்கும்- காங்கிரஸுக்கும் இடையிலான கூட்டணிப் பிரச்சினை, தனித்தனியாக இரண்டாம் கட்டத் தலைவர்களின் பேட்டிக் களமாக மாறி விட்டது.
“காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறதா என்பதை, காலம் பதில் சொல்லும்” என்று தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் “காங்கிரஸ் போனால் போகட்டும்” என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் பேசியது காங்கிரஸாரைன் கொந்தளிக்க வைத்து விட்டது. காங்கிரஸ் எம்.பிக்களும் தி.மு.கவை விமர்சிக்க தொடங்கினார்கள். ஆனால், சோனியாவை சந்தித்து விட்டுத் திரும்பிய கே.எஸ். அழகிரி, “தி.மு.கவும் காங்கிரஸும் இணைந்த கரங்கள்; பிரியாது” என்றும் “காங்கிரஸுக்கும் தி.மு.கவுக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. தி.மு.க தலைமை மீது எந்தத் தவறும் இல்லை” என்றும் அடுத்தடுத்து பேட்டிகளும் அறிக்கையும் வெளியிட்டு, ‘கூட்டணி சமாதானத்தை’ தொடக்கி வைத்துள்ளார்.
இப்போதைக்கு கூட்டணிக்குள் சமரசம் தொடங்கியிருந்தாலும் காரணங்கள் இன்னும் கலையவில்லை. ப.சிதம்பரம் தமிழக அரசியல் மீது, நீண்ட காலமாகவே கண் வைத்திருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத இந்த நேரத்தில், முதலமைச்சர் பதவிக்குத் தானும் போட்டியிடுவதில் தவறில்லை என்பது அவரது எண்ணம். அதனால்தான் புதிய தலைவராக கே. எஸ். அழகிரி வந்தவுடன் அடிக்கடி மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிதம்பரத்தை மட்டுமே சிறப்புப் பேச்சாளராக வைத்துக் கூட்டங்களை நடத்தினார்.
ஆகவே, உள்ளூராட்சித் தேர்தலில் மட்டுமல்ல, அடுத்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் தனக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்றே சிதம்பரம் காய் நகர்த்துகிறார் .
காங்கிரஸ் கட்சிக்கு இப்போது, அ.தி.மு.கவோ அல்லது “புதிதாகக் கட்சி ஆரம்பிக்கிறேன்” என்று கூறிக் கொண்டிருக்கும் ரஜினியோ ஒரு தெரிவாக இல்லை.
ஆனால், கமலின் ‘மக்கள் நீதி மய்யம்’, டி.டி.வி தினகரனின் ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ போன்ற கட்சிகள் மட்டுமே, காங்கிரஸின் கூட்டணிக்கு ஏற்ற கட்சிகள். இவர்கள் இருவருமே, சிதம்பரத்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!
ஆகவே, இந்தச் சூழ்நிலையில், தி.மு.கவுடன் உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சினையில் ஓர் அறிக்கை கொடுத்து வைத்தால், ‘தன்னை மதிக்காத கட்சிக்கு’ ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடியும்.
டெல்லி காங்கிரஸுக்கு, நாடாளுமன்றத் தேர்தல்தான் முக்கியமானது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அல்ல. ஆகவே, இந்த விவகாரத்தில் சிதம்பரம் உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்கள், தேவையான முடிவை அவர்களாகவே எடுத்துக் கொள்ளட்டும் என்று அமைதி காக்கிறது.
அதனால்தான், அழகிரி அறிக்கைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் யாரும், குறிப்பாக, குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் உள்ளூராட்சி தேர்தலில் தி.மு.கவுக்கு கிடைத்த 45 முதல் 60 சதவீதம் வரையிலான வெற்றி, காங்கிரஸ் கட்சி ‘இருந்தால் என்ன போனால் என்ன’ என்ற மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவேதான், சோனியா தலைமையிலான கூட்டத்தையே புறக்கணித்தது தி.மு.க. அகில இந்திய அளவில், பா.ஜ.கவுக்கு வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய காங்கிரஸ் கட்சி, 27 மாவட்டங்களுக்கு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலை முன்வைத்து, தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகளை சீண்டுவதா என்ற ஆதங்கம் இருக்கிறது.
மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கும் ‘கூத்துகள்’ சோனியா, ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலத்துக்கு மட்டுமே பிரச்சினையாக முடியும் என்பதே, தி.மு.கவின் எண்ணவோட்டமாக இருக்கிறது.