தமிழ் ஈழ விடுதலை இயக்க ஆரம்ப தலைமைகளில் ஒருவரான தங்கமகேந்திரன் காலமானார் என்ற செய்தியை கேட்டதும் என் நினைவுகள் பின்நோக்கி சென்றது. கிழக்கு மாகாணத்தில் வீசிய சூறாவளி புனர்வாழ்வு பணிக்கு தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழகம் சார்பாக நிவாரண பொருட்களை பொதி செய்யும் வேலைக்கு எம்மை அழைத்தார் கதிரவேலு தேவானந்தா. அதே வேளை புனர்வாழ்வு வேலையில் ஈடுபட விரும்புபவரை மட்டக்களப்பு அனுப்பும் முயற்சியும் எடுக்கப்பட்டது. அப்போது மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலிய கூட்டுஸ்தாபன தலைவராக இருந்தவர் தேவாவின் தந்தை. சேதாரங்கள் பற்றி அறிய அவர் மட்டக்களப்பு பயணிக்க முற்பட்ட வேளை அவரது வாகனத்தில் நானும் தொற்றிக்கொண்டேன். இரத்தினபுரி பதுளை செங்கலடி ஊடான பயணம் அது.
எனது உறவினரை நலம் விசாரித்தபின் அரசடி மகா வித்தியாலயத்தில் இருந்த புனர்வாழ்வு முகாம் சென்றேன். அன்று இரவு இரு பகுதியினருக்கு இடையில் ஏற்ப்பட்ட முறுகல் நிலைமையை தவிர்க்க முத்துகுமாரசாமி தலைமையில் பலர் வெளியேறி மெதடிஸ் கல்லூரியில் முகாமிட்டோம். அந்த இரவு வெளியேறியவரில் முக்கியமானவர் பத்மநாபா, அன்னலிங்க ஐயா, சின்னவன், தங்கமகேந்திரன்.
இவர்கள் எவருடனும் எனக்கு முன் அறிமுகம் இல்லை. இருந்தும் முதல் முதல் என் அறிமுகம் கிடைத்தும் என்னை தங்களில் ஒருவன் போலவே நடத்தினர். இதில் முத்துக்குமாரசாமி நிதானமாக செயல்ப்படுவார். பத்மநாபா அளந்து பேசுபவர், அன்னலிங்க ஐயா அமைதிப்படை, சின்னவன் முடிவு எடுப்பதில் தீர்க்கமானவர். இத்தனைக்கும் மொத்தமாக உளறுவாயன் என்றால் அது தங்கமகேந்திரன்.
வெள்ளாந்தியான மனம்படைத்தவர் நாம் கேட்க்காமலேயே நடந்த பல விடயங்களை புட்டுப்புட்டு வைப்பார். சம்பவங்களுக்கு வர்ணனையுடன் கூடிய விளக்கத்தை தன் வாய் நீர் வடிய வடிய கூறுவார். அதுவரை யாழில் நடந்த வங்கி நகை மற்றும் பணப்பறிப்பில் புலோலி வங்கி பணப்பறிப்பு தான் பிரபலம். அதில் தான் சம்மந்தப்பட்டதை சுவாரசியமாக கூறி, பின் பிடிபட்டு சிறை சென்றதையும் சிரித்தபடி கூறுவார்.
இளைஞர் பேரவையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தமிழரசு கட்சி முனைந்த போது, அவர்களின் செயல்த்திறன் பற்றிய முரண்நிலையில் முத்துக்குமாரசாமி, புஸ்பராசா, பத்மநாபா, ஜெயக்கொடி தவராசா, சந்திரமோகன், தங்கமகேந்திரன் ஹென்ஸ்மோகன், போன்ற பலரால் உருவாகியதே தமிழ் ஈழ விடுதலை இயக்கம். ஆயுதங்கள் வாங்க நடத்தப்பட்டதே புலோலி வங்கி நகை//பணப்பறிப்பு.
அந்த வழக்கு நீதிமன்றில் நிலுவையில் இருந்த வேளையில் பிணையில் வந்தபோது தான், அவர் சூறாவளி புனர்வாழ்வு வேலைத்திட்டத்துக்கு திருமலையில் இருந்து வந்திருந்தார். மூன்று மாதங்கள் நானும் அவர்களுடன் அந்தப்பணியில் ஈடுபட்டிருந்த வேளை எனக்கும் அவருக்குமிடையே நெருக்கம் அதிகரித்தது. காரணம் அவரது கலகலப்பான பேச்சும் முன் யோசனை அற்ற செயல்களும்.
களுவாஞ்சி குடியில் இருந்து மண்டூர் செல்லும் வேளை, குருமண்வெளிக்கும் மண்டூருக்கும் இடையே உள்ள ஆற்றை இரவில் கடக்க, கரையில் படகோட்டிகள் எவரும் இல்லை. ஓடங்கள் மட்டும் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. துடுப்புகள் இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தவர் தூரத்து வேலி படலையில் இருந்த இரண்டு பலகைகளை கழட்டி வந்து ஓடத்தை ஆற்றில் இறக்கி துடுப்பாக பாவித்து, என்னையும் வலிக்கச் சொன்னார்.
அதுவரை துடுப்பை தொட்டே அறியாத நான் கையாண்ட தவறால், ஓடம் ஒருபக்கமாக சாய்ந்து நீரில் குப்புற கவிழ்ந்தது. கழுத்தளவு நீரில் ஓடத்தில் கையை பிடித்தபடி கூக்குரல் இட்டோம். நல்லவளை அயலவர் வந்ததால், அன்று மண்டூர் ஆற்றில் ஜலசமாதி ஆகாமல் தப்பினோம். தொப்பமாக நனைந்த எமக்கு மாற்று உடையும் உணவும் இரவு தாங்கவும் ஏற்ப்படு செய்துதந்து ஆதரித்தவர், பிரபல எழுத்தாளர் அருள் செல்வநாயகம் அவர்களின் மனைவியார்.
மறுதினம் ஓடக்காரர் உதவியுடன் மண்டூர் கரையை அடைந்ததும் ஓடத்தை கவிழ்த்த கதையை மாற்றி, மண்டூர் ஆற்றை நீந்தி கடக்க முற்பட்டது போல கதை அளந்தார். எந்த ஒரு சம்பவத்தையும் ஏதாவது புனையலுடன் நகைச்சுவையாக சொல்வார். திருமலை எம் பி யாக இருந்த நேமிநாதன் மகன் எனது கல்லூரி நண்பர் என்பதை அறிந்து நேமினாதன் யு என் பி ஆதரவாளர், அதனால் தான் இம்முறை சம்மந்தருக்கு கூட்டணி பாராளுமன்ற ஆசனம் கொடுத்தது என்றார்.
நேமினாதன் தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர். அப்படி இருக்கையில் எப்படி அவரை யு என் பி ஆதரவாளர் என்கிறார் என யோசித்தபோது அவரே, நேமி இரண்டு குட்டி யானை வளர்க்கிறார். யானை யாரின் சின்னம் என கேட்டு சிரித்தார். உண்மையில் நேமியின் இரண்டு சிறுவர்களும் புஷ்டியான உடல் அமைப்பை கொண்டவர்கள். அதை தான் நகைச்சுவையாக குட்டியானைகள் என்றார் என்பதை புரிந்து கொண்டேன். எதிலும் நையாண்டியும் நக்கலும் கொண்ட தீங்கற்ற பிறவி.
திருமலையில் முத்துக்குமாரசாமி கோவில் பின் மடத்தில் தான் அவர் தனது தாய் சகோதரர்களுடன் அப்போது இருந்தார். அருகில் அவரின் மாமனார் நிர்வகித்த வாசிகசாலை இருந்தது. திருமலை சென்று அவருடன் தங்கியபோது, இரவு திண்ணையில் தூங்கிய என்னை அதிகாலையில் எழுப்பி பொக்கான் பிடிக்கவா என கூட்டிச்சென்றார். நானும் எதோ காட்டுப்பறவை என நினைத்து போனால், அது அடர்ந்த பெருமரங்கள் இடையே காலைக்கடன் முடிக்கும் இடம். குளிப்பது கோவில் கேணியில்.
அப்போது அவரது சகோதரன் வரோதயன் மற்றும் சகோதரி சாந்தி மிகவும் சிறியவர்கள். பாடசாலை போக மறுத்து அடம்பிடிப்பர். தங்கமகேந்திரனும் நானும் கைப்பிடியாய் இருவரையும் கொண்டுசென்று விட்டு விட்டு வீடு திரும்புமுன், தம்பி வரோதயன் குறுக்கு வழியால் வீடுவந்திருப்பான். மீண்டும் அவனை கூட்டி செல்ல முற்ப்பட்டால் பொக்கான் என கூறி அந்தப்பக்கமாக ஓடுவான். பின்நாளில் வடக்கு கிழக்கு மாகாணசபை பேரவை செயலகத்தில் பணியாற்றியவனை புலிகள் கொன்றுவிட்டனர்.
தங்கையான சாந்தி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, வடக்கு கிழக்கு மாகாண சபையை திருமலையில் நிறுவ மூலகாரணமாய் பழி பல சுமந்து செயலாற்றிய, ஜோர்ஜ் தவராஜா தம்பிராஜா வின் மனைவியாகி, அவனும் மாற்று அமைப்பால் பலி எடுக்கப்பட்ட பின்பும், கட்சியை மீண்டும் திருமலையில் நிலைநிறுத்தும் முயற்சியில் துணிந்து செயல்ப்பட்ட வேளையில் துரோகிகளின் தகவல் அடிப்படையில், புலனாய்வு பிரிவினரால் காணாமல் போனவர் பட்டியலில் இடம்பிடித்தாள்.
மிகப் பருத்த சரீரம் கொண்டவர் என்பதால் அவரை பலசாலி என நம்பி நாம் களுவாஞ்சிக்குடியில் பட்ட பாடு நினைவில் வருகிறது. சூறாவளியால் பாதிக்கப்பட்ட களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு நூறு கட்டில்கள் போடக்கூடிய மிகப்பெரிய கூடாரம் ஒன்று, அமெரிக்க நிவாரணமாக கிடைத்தது. பொதுவாக அவ்வாறான கூடாரங்களை தற்க்காலிக இராணுவ முகாங்களில் காணலாம். உயரமான இரும்பு தூண்களை நிமிர்த்தி கூடாரத்தை உயர்த்தினால் இருபது அடிக்கு மேல் உயரும்.
கூடாரத்தை அமைக்க வைத்தியசாலை பொறுப்பதிகாரி எம்மிடம் கோரிக்கை வைத்தபோது, கோவில் மாடு போல தலையாட்டியவனை நம்பி நாமும் போனோம். நடுத்தூண் மிக முக்கியமானது. தூக்கி நிமித்த நால்வர் தேவை. ஒருவாறு நிமிர்த்தி விட்டோம். தான் அதை தாங்கி பிடிப்பதாகவும் பக்க கயிறுகளை இழுத்து கட்டும்படியும் அவர் இட்ட ஆணையை ஏற்று பக்க கயிறுகளை உள்நோக்கி இழுத்தோம். தனது பிடிமானம் நழுவுவதை கூட கூறாமல் இழுங்கோ இழுங்கோ என அவர் கத்த நாமும் இழுத்தோம்.
அவ்வளவுதான் தெரியும் அதன் பின் நொய்.. என்ற சத்தம் காதில் கேட்டது. கண்விழித்த போது மண்ணில் குப்புறக் கிடந்தோம். கூடாரம் எங்களுக்கு மேல் விரிந்து கிடந்தது. ஒருவாறு தவழ்ந்து கூட்டரத்துக்கு வெளியே வந்து பார்த்தல் தங்கமகேந்திரன் நிற்கிறார். நடுத்தூண் அவர் கை நழுவியதும் அதை விட்டுவிட்டு அவர் வெளியே பாய்ந்து விட்டார். உள்ளே மாட்டி வெளியே வந்த எம்மிடம் நலம் விசாரிக்கும் அவர் மனநிலையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. எதயுமே விளையாட்டாக எடுக்கும் வேடிக்கைப் பிறவி.
புலோலி வங்கி வழக்கில் இவர்களுக்காக வாதாடியவர் அமரர் உடுப்பிட்டி சிவசிதம்பரம் அவர்கள். மிகத்திறமையாக அவர் வாதாடி இவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருந்த வேளையில், இன்ஸ்பெக்டர் பஸ்ரியாம்பிள்ளை செய்த சாதுரியம் இவர்களுக்கு பாதகமாக அமைந்தது. தடயப் பொருட்களில் இருந்த கைரேகை அடையாளங்கள் பற்றிய தகவலை, கடைசிவரை அவர் வெளிப்படுத்தாது வைத்திருந்து இறுதியில் அது வெளிப்பட்ட போது, இவர்கள் சிறை வாசியாகினர்.
வெலிக்கடை சிறையில் இவருடன் இருந்த ஜெயக்கொடி போன்றவரும், பயங்கரவாத தடை சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தேவானந்தா போன்றவரும், 1983 இனக்கலவரத்தில் சிறையில் நடந்த படுகொலைகளுக்கு பின்பு மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தன் சக தோழமை இயக்கங்களுடன் இணைந்து மேற்கொண்ட முதலாவது சிறை உடைப்பில் தப்பி, இந்தியா சென்றவரில் தங்கமகேந்திரனும் ஒருவர்.
1984ல் நான் சென்னை சென்றபோதுதான் அவரை மீண்டும் சந்தித்தேன். சென்னையில் இருந்த எபிக் அலுவலக தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை எடுத்தபோது, அழைப்பில் வந்த தங்கமகேந்திரன் நான் என் பெயரை கூறியதும் எங்க நிக்கிறாய் என கேட்டு, அரைமணி நேரத்தில் நான் இருந்த எக்மோர் விடுதிக்கு வந்தார். என்னை கூட்டி சென்று எபிக்கில் விட்டவர் தான் இரவு கும்பகோணம் போவதாவும் அங்கு வா நிறைய பேசலாம் என்றார்.
கும்பகோணத்தில் சின்னவன், வேலு, களுவாஞ்சிகுடி ரஞ்சித், என பலரை தங்கமகேந்திரனுடன் சென்று சந்தித்தேன். வேதாரணியம் கரைக்கு அப்போது ஜெயக்கொடி பொறுப்பாளராக இருப்பதாக கூறினார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்த வரதராஜபெருமாள், பத்மநாபா, ஜெயக்கொடி அவருடன் இருந்ததால் கொக்குவில் தவராசா எங்கே என விசாரித்தார். அவர் கொழும்பில் இருப்பதை அறிந்து சந்தோசப்பட்டார். குமார் அமெரிக்காவிலும் புஸ்பராசா பிரான்சிலும் இருப்பதாக கூறினார்.
தங்கமகேந்திரனில் அதீத விருப்பு கொண்ட தவராசா அவரின் செயல்களை பார்த்து, மூளை இல்லா மகேந்திரன் என்பதும், நரிமூளை தவராசா என தங்கமகேந்திரன் நையாண்டி பண்ணுவதும் சூறாவளி புன்னர்வாழ்வு காலத்து அழியாத கோலங்கள். வடக்கை சேர்ந்த மிக மிக முக்கியமான சக பெண் தோழரை தங்கமகேந்திரன் சீண்டும் வார்த்தை மஞ்சள். மஞ்சள் வருது என அவர் கூறும் காரணம், ஓட்டினால் களராது என்பதே.
நெஞ்சில் எந்த விதமான வஞ்சகமும் இன்றி, வெளிப்படையாக பேசும் தங்க மனசுக்காரன் அவன். நம்பி அவனிடம் எந்த விடையத்தையும் கூறிய மறு நிமிடமே போட்டு உடைத்துவிடுவான். வேண்டும் என்றல்ல. அதனால் ஏற்ப்படக் கூடிய விபரீதம் பற்றிய புரிதல் அற்ற சிறுபிள்ளைத் தனம். இத்தனை குணாம்சம் கொண்டவன் எப்படி இன விடுதலை பற்றி சிந்தித்தான், செயல்ப்பட முற்ப்பட்டான் என்ற கேள்விக்கு ஒரே பதில் அவன் பிறந்த திருமலை மண்.
தன்வரையில் விளையாட்டு குணாம்சம் கொண்டவன், தன் இனம் பற்றிய சிந்தனையில் ஏகலைவன் ஆகினான். கிளிவெட்டி தங்கத்துரை அண்ணன் அவர்களின் அத்துமீறிய சிங்கள குடியேற்ற எதிர்ப்பு, அரசமரம் இருக்கும் இடமெல்லாம் புத்தர் சிலை வைப்பிற்க்கு எதிர்ப்பு என்ற செயல்ப்பாட்டில், பயஸ் மாஸ்டர் போன்றவர்களுடன் தங்கமகேந்திரனும் கைகோர்த்ததால், கிளிவெட்டியில் வேரோடு, இருந்த இடம் கூட தெரியாது மறைந்தது அந்த மரம். கூடவே மாட்டின் முதலாளியும்…..
அவன் பற்றி எழுத எத்தனையோ சம்பவங்கள் உண்டு. ஆனால் அவை எல்லாம் அவனை இனவாதி என முத்திரை குத்திவிடக் கூடாது என்பதால் தவிர்க்கிறேன். உண்மையில் அவனுக்கு மொழி இல்லை மதம் இல்லை, இனம் இல்லை. அவன் ஒரு கம்யூனிஸ்ட். என்றும் எவரையும் அடக்கி ஆளும் ஆசை அவனுக்கு இல்லை. அதனால் தான் அவன் தன் நண்பனான, தோழனான நாபாவை தன் தலைவனாக ஏற்றுக்கொண்டான். அது ஒன்று மட்டுமே அவனின் இனத்தின் மீதான உறுதியான பற்றுக்கு சாட்சி..
இன்று அவன் எம்மிடையே இல்லை. அவன் நேசித்த நபா இல்லை. அவனோடு சேர்ந்து இயங்கிய புஸ்பராசா இல்லை, அவனை அரவணைத்த சந்திரமோகன் இல்லை அவன் பிள்ளைகளில் ஒரு மகன் கூட அவனுக்கு முன்பே விடைபெற்று விண்ணுலகேகினான். நெஞ்சம் நிறைந்த துன்பியல் நிகழ்வுகள் அவனை வாட்டிவதைத்ததை உணர்ந்து அவன் இறப்பில், வெந்து வெதும்பும் என் இதய அஞ்சலியாய் அவனுக்கு ஒன்றை மட்டும் ஞாபகம் மீட்டுகிறேன்…..
சூறாவளி புனர்வாழ்வு வேலைத்திட்டத்தில் நீயும் நானும், மட்டக்களப்பு அம்பாறை எல்லை கிராமமான 36ம் கொலனியில், வாய்க்கால் பாதை ஓரத்தில், ஆளுக்கொரு துவிச்சக்கர வண்டியில் கல்யாண பரிசு படத்தில் ஜெமினி கணேசனும் சரோஜாதேவியும் சயிக்கிள் ஓட்டியபடி பாடிய, ‘’வாடிக்கை மறந்ததும் ஏனோ எம்மை வாட்டிடும் சேதிகள் தானோ’’ என்ற பாடலை, மீண்டும் என்னோடு பாட உன்னால் முடியாது, ஆனால் அதை நான் உன் நினைவு வரும் போதெல்லாம் பாடுவேன். அதுவே உனக்கான என் இறுதி அஞ்சலி.
– ராம் –