சட்ட ரீதியாக அணுக வேண்டிய விடயமொன்றை உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டத்தின் மூலம் நிறைவெற்றிக் ெகாள்ள முடிந்திருக்கிறதா? உதாரணத்திற்குத் தனி யார் மருத்துவ கல்லூரி சைற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால், எதுவும் நடந்திருக்கிறதா? இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் சைற்றம் கல்லூரி மாணவர்களுக்ேக வெற்றி கிடைத்திருக்கிறது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் அரசாங்க மருத்துவச் சபையும் கசகர்ணம் அடித்தும் ஒன்றையும் சாதிக்க முடியவில்லை. இப்போது சைற்றம் பட்டதாரிகளைப் பதிவுசெய்வதற்கு அரசாங்க மருத்துவச் சபை நடவடிக்ைக எடுத்திருக்கிறது. இப்படிப் பல விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஆர்ப்பாட்டம் நடத்தினால் எல்லாம் நடந்துவிடும் என்ற நிலை தொடர்ந்தும் பொய்யாகியே வந்திருக்கிறது.
நில மீட்புப் போராட்டம், பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினை. சம்பள அதிகரிப்பு எனப் பல்வேறுபட்ட ஆர்ப்பாட்டங்களைக் கண்டிருக்கின்றோம். இறுதியில் நீதிமன்றத் தலையீடுகளே பிரச்சினைக்குத் தீர்வைத் தந்திருக்கின்றன.
அதேபோன்றுதான் சிறைகளில் உள்ள தமிழ்க் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்னர்கூடக் கொழும்பில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. அநுராதபுரத்தில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்ைக. இப்படி அடிக்கடி சிறைகளிலும் வெளியிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன; நடந்து வருகின்றன. இதனால், எதனையும் சாதித்திருக்கின்றோமா? என்றால், இல்லை.
வீதியில் கூக்குரலிட்டுக் கூடிக் கலைவதால், சிறையிலிருக்கும் கைதிகளின் நிலையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை.
இந்த விடயத்தைக் கடந்த வாரம் அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்.
வவுனியாவில் நடைபெற்ற கவனவீர்ப்புப் போராட்டம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“என்னைப் பொறுத்த அளவில் கைதிகள் விடயத்தைச் சட்ட ரீதியாக அணுகினால் மாத்திரமே சரியான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கருதுகின்றேன். இதற்கு முன்னெடுப்புகளை யார் செய்தாலும் அதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தனது முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுக்கும்.
யுத்தம் நிறைவடைந்த பின்பு பல பிரச்சினைகள் இருந்தாலும், முக்கிய பிரச்சினையாக இருப்பது அரசியல் கைதிகளின் பிரச்சினை. உண்மையிலேயே இந்த பிரச்சினை வடக்கு, கிழக்குக்கு மாத்திரம் உரித்தானது அல்ல. இதில் மலையகத்தைச் சார்ந்த இளைஞர்களும் இருக்கின்றார்கள். எனவே, இதற்காகப் போராட்டம் செய்வதோ அல்லது வேறு வகையில் போராடுவதோ அவை அனைத்தும் உணர்வு பூர்வமான ஒரு விடயமாகவே நான் அதனைக் கருதுகின்றேன். அதன் மூலமாக அரசியல் கைதிகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க முடியுமா? என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
இவர்களுக்கு உண்மையிலேயே விடுதலை கிடைக்க வேண்டுமானால் அவர்களுடைய பிரச்சினையை சட்ட ரீதியாக அணுக வேண்டும். அண்மையில் இந்தக் கருத்தை நீதி அமைச்சர் தலதா அத்துகோரளையும் தெரிவித்திருந்தார். அப்படியானால் பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்து தமிழ் உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் ஆகியோருக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக சட்ட மாஅதிபருடன் நாம் கலந்துரையாடல்களை நடாத்த வேண்டும். அப்படிச் செய்வோமானால் நிச்சயமாக இதற்கான ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நான் நினைக்கின்றேன். இந்த விடயம் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்து தமிழ் உறுப்பினர்களும் ஒன்றுபடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.அதற்கான முன்னெடுப்புகளை யார் எடுத்தாலும் அவர்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தனது முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருக்கின்றது.
கடந்த வாரம் நாம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு தனது ஆதரவை வழங்கியிருந்தார். எனவே, நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் பல வெற்றிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.அதே நேரத்தில் உங்களுடைய உணர்ச்சிபூர்வமான போராட்டத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.அத்தோடு சட்ட ரீதியாகவும் இதனை அணுகினால் இன்னும் விரைவாகத் தீர்வு காண முடியும் என்பதே எனது கருத்தாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனின் இந்த உரைக்குப் பின்னர் பல்வேறு திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக, அரசியல் கைதிகளின் அதுவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடயத்தில் சட்ட மாஅதிபர் திணைக்களம் துரித கவனம் செலுத்தியிருக்கிறது.
ஓரிரு நாட்களில் இதுவிடயத்தில் பதில் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறான முன்னெடுப்பை இதற்கு முன்னர் மேற்கொண்டிருந்தால், அல்லது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குப் பதிலாக இவ்வாறு சட்ட ரீதியில் அணுகியிருந்தால், இந்தக் கைதிகள் விடயத்தை ஓரளவிற்குத் தீர்த்து வைத்திருக்க முடியும்.
பாராளுமன்றத்தில் இருக்கின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் இதுவிடயத்தில் ஒருமித்துக் குரல் எழுப்பியிருந்தாலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். ஓர் இடத்தில் நடக்கின்ற ஆர்ப்பாட்டம் குறித்துச் சபையில் உரை நிகழ்த்துவதற்குப் பதிலாக, பெரும்பான்மை உறுப்பினர்களைப் போன்று வாய்மூலமான விடையைப் பெற்றுக்ெகாள்வதற்குத் தமிழ் உறுப்பினர்கள் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் அவ்வாறு செய்திருந்தால், எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க முடியும். பெரும்பான்மை அங்கத்தவர்கள், தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினையைக்கூடப் பாராளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார்கள். தமிழ் உறுப்பினர்கள் உரை நிகழ்த்தினாலும் எவரையும் ஈர்க்குமளவிற்கு இருக்குமா என்பது சந்தேகமே. அவர்கள் ஏதோ உணர்ச்சிப் பிரவாகத்தில் கொந்தளித்துவிட்டு அமர்ந்துவிடுவார்கள். அஃது அந்த வேகத்துடன் முடிந்துவிடும்.
இதனைத்தான் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் சூசகமாக எடுத்துரைத்திருக்கிறார். உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் ஒன்றையும் செய்ய முடியாது.
இலங்கைச் சிறைகளில் கடந்த 42 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை மாற்றியமைப்பதற்கு அமைச்சர் தலத்தா அத்துக்ேகாறள நடவடிக்ைக எடுத்து வருகிறார். அதுவும், அவர் சிறைச்சாலைக்குப் பொறுப்பான அமைச்சராகப் பதவியேற்றுக் ெகாண்டதன் பின்னர் இந்த நடவடிக்ைகயை எடுத்திருக்கிறார். ஆனால், சிறைக்கைதிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்ெகாடுக்கும் மறுசீரமைப்புகள் உள்ளனவா என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
தற்போதைய நிலையில் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை வரம்பு மீறிச்சென்றுகொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள 22சிறைச்சாலைகளில் சுமார் 25 ஆயிரம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப்போதிய வசதிகள் இல்லை. கொழும்பில் 146 பெண் கைதிகள் உள்ள ஒரு சிறைச்சாலையில் மூன்று கழிவறைகள் மாத்திரமே உள்ளதாகச்சொல்லப்படுகிறது.
ஏனோ தெரியவில்லை அரசியல் பலம் பொருந்தியவர்கள் சிறைச்சாலை அடைந்ததுமே அவர்களுக்கு வியாதிகள் தொற்றிவிடுவதனால், வைத்தியசாலைகளில் தடுத்துவைக்கப்படுகிறார்கள்; இல்லை தங்கவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கென சேவைச் சுகபோகங்கள் அனைத்தும் கையூட்டுக்கலையின் பெயரில் சிறப்பாக சென்றடைந்து விடுகிறது. பணபலமுள்ள பாதாள உலக கைதிகள் சிறைக்குள்ளும் தாதாக்களாக வலம் வருகிறார்கள். இவர்களது கைக்கூலிகளாகவே அனேகமான சிறை அலுவலர்கள் தமது கடமையை முறையாக நிறைவேற்ற முட்படுகின்றபோது “நாளை உன்தலையை தெருநாய் நக்கவேண்டுமா?” என அச்சுறுத்தும் நிலை தொடர்கிறது என்கிறது ஓர் உள்வீட்டுத் தகவல். இப்போது கடைநிலையில் உள்ள சாதாரண கைதிகள் பண்ணை அடிமைகள் போன்றே சிறைக்குள் பராமரிக்கப்படுகிறார்கள். சிறைச்சோற்றை நம்பியிருக்கும் இவர்கள் மீது மட்டும் தான் இறுக்கமான அனைத்து சிறைச்சட்டங்களும் பாய்கின்றன. “சிறு தவறு கண்டாலும் சிறைத்தடிகள் பதில் சொல்லும்” என்ற வகையில் மன்னிப்பென்ற வார்த்தைக்கு அப்பாற்பட்டவர்களாகவே இவர்கள் மதிக்கப்படுகிறார்கள். சிறை அலுவலர்களுக்குப் பிரத்தியேக சேவகம் செய்வது மட்டுமின்றி சிறைக்குள் இருக்கும் சிரேஸ்ட கைதிகளுக்கும் கூட பணிவிடை செய்ய பழக்கப்படுகிறார்கள். சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்படுகின்ற சிறை விடுதிகளில் உணவு, நீர்,கழிப்பறை,படுக்கை வசதி போன்ற அடிப்படை தேவைப்பாடுகளின் பற்றாக்குறை பற்றி எவராலும் கண்டுகொள்ளப்படுவதில்லை என்கிறார்கள் கைதிகள்.
தண்டனைகளைக் கடுமையாக்குவதன் மூலம் மட்டும் குற்றங்களையும் குற்றவாளிகளையும் கட்டுப்படுத்த முடியுமென்று பொதுமக்கள் மத்தியில் ஒரு பொதுமைக்கருத்து நிலவுகின்றது. உதாரணமாகப் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் ஒருவருக்கு நெடுநாள் சிறைத்தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ அல்லது மரணதண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், அந்தக்கைதியின் குடும்பங்களும் பிள்ளைகளும் எவ்வாறு சீவிக்க முடியும் என்றொரு கேள்வி மேல் எழுகிறது. அதற்கு அரசிடம் இதுவரை பதில் ஏதும் இல்லை பல வருடங்கள் தண்டனை கைதிகளாகச் சிறையில் உள்ளவர்களின் மனைவி பிள்ளைகள் பெற்றோர் எதிர்கொள்ளும் சமூக பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு அரசிடம் தீர்வுப்பொறிமுறைகளும் இல்லை. இவ்விடத்தில் தான் இன்னுமொரு குற்றம் அல்லது குற்றவாளி உருவாக்கப்படுகிறார்.
அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவில் இருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கணவனின், தந்தையின் பிள்ளைகளின் அதே குற்றப்பாதையில் குடும்பமும் பயணிக்க வேண்டிய பரிதாப நிலை காணப்படுகிறது. இவையெல்லாம் கைதிகளின் ஆதங்கங்கள் என்பதை, பணத்திற்காகப் போராட்டம் என்ற பெயரில் கூடிக்கலையும் தொண்டு நிறுவனங்களுக்குத் தெரியுமா? என்பது கைதிகளின் கேள்வி.
கைதிகள் தமது உறவினர்களைப் பார்த்துப் பேசுவதற்கென அமைக்கப்பட்டுள்ள மிகக்குறுகிய அறைக்குள் கண்ணாடி அல்லது 3 இற்கும் மேற்பட்ட நெற்றுக்களால் தடுப்பமைக்கப்பட்ட நிலையில், அளவுக்கதிகமானவர்களை உள்ளீர்த்து வெறும் 10-,15 நிமிடங்கள் மட்டும் கதைப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது.
இது போதுமா? என்னதான் குற்றவாளியாகவோ சந்தேக நபராகவோ இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் அல்லவா? அவர்களுக்கென்றும் மனைவி பிள்ளைகள் பெற்றோர் என உற்ற உறவுகளை பார்த்து பேச வேண்டுமென்ற உணர்வு இருக்கும் அல்லவா?
இவ்விடத்தில் மிக நீண்ட காலமாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு, கண்டி, அனுராதபுரம் போன்ற சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலை பரிதாபத்திற்குறியது.
வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளைச் சேர்ந்த இவர்களது உறவினர்கள் 3-4 மாதங்களுக்கொரு தடவையே தமது உறவுகளைப் பார்க்க சிறைக்குச் செல்கிறார்கள். சிறைக்கூடங்களுக்குள் கைப்பேசி பாவனையைத் தடுக்கவேண்டும். குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பாசாங்கு செய்யும் சிறைத்துறையினர் கடைநிலை கைதிகளின் உணர்வுகளைக் கண்டுகொள்ளாதது ஏனோ? என்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பது யார்?
வகைப்படுத்தப்பட்ட கைதிகளின் வசதிக்கேற்ப சிறைச்சாலைகள் தோறும் கண்காணிப்பு பொறிமுறையுடன் கூடிய பொதுத்தொலைபேசி கட்டமைப்புக்களை ஏற்படுத்தி கட்டுப்பாட்டு அடிப்படையில் கைதிகளின் பாவனைக்கு வழங்கமுடியும்.
கைதிகளை அவரவர் வாழ்விடங்களுக்கு அண்மையில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதன் மூலம் அனேகமான பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்க முடியும்.
அண்மையில் சிங்கராசா என்ற ஓர் அரசியல் கைதி தனது தண்டனை காலத்தைப் பூர்த்தி செய்து 23ஆண்டுகளின் பின்பு விடுதலைபெற்றுச் சென்றுள்ளார். அவர் வெளியுலக வாழ்வுக்குச் செல்லும் போது சமயலறையில் காய்கறி வெட்டுவதைத் தவிர வேறெந்த பயிற்சிகளையும் சிறை அவருக்கு போதித்திருக்கவில்லை.
ஆகையினால், கைதிகளின் செயற்றிறனுக்கு ஏற்ப அவர்களுக்குத் தொழிற்பயிற்சிகளையும் முறைசாரா கல்வி செயற்பாடுகளையும் மேற்கொண்டு சிறையில் இருந்து விடுதலை ஆவோரின் ஆளுமைத்திறனை அதிகரிக்க கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்போது தான் விடுதலை பெறும் கைதியொருவன் மீண்டுமொரு குற்றச்செயலுக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது தன் இயல்புவாழ்வை தகவமைத்துக்கொள்ள முடியும் என்கிறார் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள ஓர் இளைஞர்.
இவை வெறும் பத்திக்காகவோ கட்டுரைக்காகவோ முன்வைக்கப்படும் கருத்துகள் அல்ல என்பதுடன் சிறைக் கைதிகள் விடயத்தில் உண்மையான கரிசனைகள் இருக்குமாயின் இதுபற்றிச் சிந்தித்துச் சீர்படுத்துவதற்கு இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் போன்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் தமிழ் அரசியல் கைதிகளின் எதிர்பார்ப்பு.