நாம் தமிழர் கட்சி இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விக்னேஸ் என்ற இளைஞர் தீக்குளித்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். விக்னேஸ் தீக்குளித்த செய்தி வந்த பொழுது, நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஊர்வலத்தில் தனக்குத்தானே தீமூட்ட முயற்சித்திருப்பான், உடனடியாகவே அவனை பக்கத்தில் நின்ற தொண்டர்கள் காப்பாற்றியிருப்பார்கள், சிறிய தீக்காயம்தான் ஏற்பட்டிருக்கும், இன்றைக்கே வீடு வந்து விடுவான்’ இப்படி எனக்கு நானே நினைத்துக் கொண்டேன்.
ஆனால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சிலர் விக்னேஸ் பற்றி அஞ்சலி செய்யாத குறையாக முகநூலில் பதிவுகளை தொடர்ச்சியாகப் போடுவதை பார்த்த பொழுது கலவரமடைந்தேன்.
விக்னேஸ் மீது தீப்பற்றி எரிகின்ற வீடியோவைப் பார்த்த போது மேலும் அதிர்ச்சியாக இருந்தது. வெறும் உடலில் இப்படி தீ பற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. விக்னேஸ் தன் மீது ஏதாவது எரிதிரவத்தை ஊற்றி விட்டே, தீயை பற்ற வைத்திருக்க வேண்டும்.
அப்படியென்றால் அதுவரை பக்கத்தில் நின்ற தொண்டர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இத்தனைக்கும் விக்னேஸ் தனது முகநூலில் தான் தீக்குளிக்கப் போகின்ற செய்தியை மறைமுகமாக தெரிவித்திருந்தான்.
தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகளுக்கு ‘தியாகிகள்’ உண்டு. விக்னேஸ் இறந்து போனால், நாம் தமிழர் கட்சிக்கும் ஒரு ‘தியாகி’ கிடைக்கும். இதை விட இந்தத் தீக்குளிப்பால் வேறு ஏதாவது பலன் உண்டா?
சாதிவெறியும், இனவெறியும் ஒன்றாக இந்த இளைஞர்களுக்கு ஊட்டப்படுகிறது. வெற்றி பற்றிய நம்பிக்கை விதைக்கப்படுகிறது. மக்களால் நிராகரிக்கப்படுகின்ற போது, விரக்தி உருவாகின்றது. முடிவு தீக்குளிப்பு போன்ற முட்டாள்தனத்தில் வந்து நிற்கிறது.
காவிரி நீர் திறந்து விடப்பட்டு, நீர் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்ற பொழுது, ஒரு இளைஞன் தீக்குளிக்கின்றான் என்றால், தனது தொண்டர்களை அந்தக் கட்சி எவ்வளவு தூரம் முட்டாள்களாக்கி வைத்திருக்கிறது என்பது புலப்படுகிறது.
சீமானிடம் இருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை காப்பாற்ற வேண்டிய கடமை தமிழ்நாட்டின் முற்போக்குச் சக்திகளுக்கு உண்டு.
(வி. சபேசன்)