அன்றைய அரசியல் சூழல்1965 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து ஐ.தே.க. தலைமையில் டட்லி சேனநாயக்கவை பிரதமராகக் கொண்டு ஏழு கட்சி கூட்டரசாங்கம் ஒன்று பதவியில் அமர்ந்தது. அந்த அரசில் தீவிர சிங்கள இனவாதிகளான கே.எம்.பி.ராஜரத்தின, ஆர்.ஜீ.சேனநாயக்க போன்றோரின் கட்சிகளும், தமிழ் இனவாதக் கட்சிகளான தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளும் அங்கம் வகித்தன.தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் அதிகாரத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து தமிழ் பகுதிகளில் பிற்போக்கு சக்திகளின் கொட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. அவர்களது முதல் தாக்குதல் இடதுசாரிகளின் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டது. 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மட்டும் மேதின ஊர்வலங்களோ கூட்டங்களோ நடத்தப்படக்கூடாது என அரசாங்கத்தைக் கொண்டு தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தடை விதிப்பித்தன. ஆனால் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி என அழைக்கப்பட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தடையை மீறி யாழ்ப்பாணத்தில் மேதின ஊர்வலத்தையும் கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தது.அடுத்ததாக, இரண்டு தமிழ் கட்சிகளினதும் ஆதரவாளர்களான பிற்போக்கு சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் ஆங்காங்கு தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். சில இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருந்த உயர் சாதியினரின் காணிகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர், அவர்கள் கள் இறக்க வழங்கிய பனை – தென்னை மரங்கள் தடுக்கப்பட்டன, சில இடங்களில் பாளைகள் வெட்டப்பட்டன, அவர்களுக்கு கூலி வேலை மறுக்கப்பட்டது, அவர்கள் பயன்படுத்திய கிணறுகளில் மலம் போடப்பட்டது, அந்த மக்களில் சிலர் சாதி வெறியர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகினர், இவ்வாறு பல நடவடிக்கைகள் அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டது. இதற்கான காரணங்களில் ஒன்று, 1965 பொதுத்தேர்தலின் போது பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் இடதுசாரிக் கட்சிகளுக்கே வாக்களித்தார்கள் என்பதாகும்.தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் சம்பந்தமாக பொலிஸ் நிலையங்களில் முறையிடச் சென்றபோது அங்கு பெரும்பாலும் கடமையில் இருந்த தமிழ் பொலிசாரால் அவர்களது முறைப்பாடுகள் ஏற்கப்படவில்லை அல்லது விசாரணையின்றி இழுத்தடிக்கப்பட்டது. (இந்த இலட்சணத்தில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் தமிழ் பகுதிகளில் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்). பெரும்பாலும் தமிழ் பொலிசார் சாதி வெறியர்களுக்குச் சார்பாகவே நடந்து கொண்டனர்.ஊர்வலத்துக்கான பின்னணிஇந்தச் சூழ்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காக அச்சுவேலியில் அமைந்திருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நல்லதம்பி என்பவருடைய சினிமா கொட்டகையில் சர்வகட்சி ஆலோசனைக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் எமது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக சாதி வெறியர்களிடமிருந்து தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கை அங்கு விடுக்கப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அங்கேயே காற்றில் பறக்க விட்டுவிட்டுப் போய்விட்டன. ஆனால் எமது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அவ்வாறு இருக்க விரும்பவில்லை. நடைமுறையில் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பியது. எனவே முதல் கட்டமாக சாதியமைப்புக்கும் அதன் கோர வடிவமான தீண்டாமைக்கும் எதிராக ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் அதன் முடிவில் ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்துவது என கட்சி முடிவு செய்தது. அதனடிப்படையில் ஊர்வலத்தை சுன்னாகம் நகரில் ஆரம்பிப்பது எனவும், ஊர்வலத்தின் முடிவில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவாகியது.ஊர்வலம் ஆரம்பிப்பதற்கு சுன்னாகத்தைத் தேர்ந்தெடுத்ததிற்கு ஒரு காரணம் இருந்தது. சுன்னாகம் நீண்டகாலமாக இடதுசாரிகளின் ஒரு கோட்டையாக இருந்தது. சுன்னாகம் பட்டினசபையின் தலைவராக லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் செனட்டரான பொ.நாகலிங்கம் நீண்ட காலமாகப் பதவி வகித்தார். அருகே கந்தரோடையில் அமைந்திருந்த ஸ்கந்தவரோதயா கல்லூரியின் அதிபராக இடதுசாரி போக்குடைய ஒறேற்றர் சி.சுப்பிரமணியம் நீண்ட காலம் சேவையாற்றியதுடன், வி.பொன்னம்பலம் மாதகல் கந்தசாமி போன்ற பிரபலமானவர்கள் உட்பட பல இடதுசாரி ஆசிரியர்ளும் அங்கு கற்பித்துக் கொண்டிருந்தனர்.அதன் காரணமாக அங்கு கல்வி கற்ற என்போன்ற பல மாணவர்கள் இடதுசாரிக் கருத்துக்களால் கவரப்பட்டு புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்தோம். அதுமட்டுமின்றி, நாம் அமைத்த கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கத்தின் ஊடாக சுன்னாகம் பொதுச்சந்தையில் நிலவிய தனியார் குத்தகை முறைக்கு எதிராகப் போராடி, அந்தப் பொறுப்பை பட்டின சபை மூலம் கையேற்க வைத்து வெற்றியும் பெற்றிருந்தோம். அதன் மூலம் சுன்னாகம் பகுதி மக்கள் மத்தியில் கட்சிக்கு செல்வாக்கையும் தேடியிருந்தோம்.இந்த நிகழ்வுகளால் உந்தப்பட்டு எம்மில் மூவர் படிப்பைத் தொடருவதில்லை எனத் தீர்மானித்து முழுநேரமாக கட்சி வேலை செய்வது என முடிவு செய்திருந்தோம். அதனடிப்படையில் தோழர் நா.யோகேந்திரநாதன் சுன்னாகத்தில் ஒரு கட்சி அலுவலகம் எடுத்து அங்கு பணிபுரியத் தொடங்கினார். தோழர் அ.கௌரிகாந்தன் வவுனியாப் பகுதியில் வேலை செய்யச் சென்றுவிட்டார். நான் கிளிநொச்சிப் பிரதேசத்தில் வேலை செய்யச் சென்றேன். இடையிடையே தோழர் கௌரிகாந்தனும் நானும் சுன்னாகம் சென்று தோழர் யோகேந்திரநாதனுடனும் எமது ஸ்கந்தா மாணவத் தோழர்களுடனும் அளவளாவி வருவதுண்டு.1966 ஒக்ரோபர் 21 தீண்டாமைக்கெதிரான ஊர்வலம் நடைபெறுவதற்கு சில தினங்கள் முன்பாகவும் நானும் காந்தனும் சுன்னாகம் சென்றிருந்தோம். அப்பொழுது யோகேந்திரநாதன் ஊர்வல ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நாமும் அவருக்கு உதவியாகச் சில வேலைகளில் ஈடுபட்டோம். அப்பொழுது சுன்னாகம் பஸ் நிலையத்துக்கு முன்னால் புடவைக் கடை வைத்திருந்த தோழர் எஸ்.ரி.என்.நாகரத்தினம் மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்தார். அவருக்கு நாம் வாரம் தோறும் எமது கட்சி வெளியீடான ‘தொழிலாளி’ பத்திரிகை கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். அவர் பதிலுக்கு தான் விநியோகிக்கும் மொஸ்கோ சார்பு கட்சியின் வெளியீடான ‘தேசாபிமானி’ பத்திரிகையைத் தருவார். நாம் எமது ஊர்வலத்தைத் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பதாக நிதி உதவி கேட்டு அவரிடம் சென்றோம். நிதி தருவாரோ மாட்டாரோ என்ற தயக்கம் எம்மிடம் இருந்தது. ஆனால் அவர் எம்மை அன்புடன் வரவேற்று 100 ரூபா (அன்றைய நிலையில் 100 ரூபா என்றால் இன்றைய 10,000 ரூபாவுக்கு சமம்) தந்ததுடன், “தம்பியவை நீங்கள் உண்மையாகப் போராட்டத்தில் ஈடுபட்டால் நானும் உங்களுடன் சேருவேன்” என்று உற்சாகமூட்டினார். அதன்படி பின்னர் எம்முடன் சேர்ந்து எமது கட்சி உருவாக்கிய ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ என்ற அமைப்பின் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.பொலிசாரின் முதல் தாக்குதல்சுன்னாகத்தில் நாங்கள் தங்கியிருந்த பொழுது ஒருநாள் இரவு மூவரும் நீண்ட நேரம் பல்வேறு விடயங்கள் குறித்து உரையாடினோம். நள்ளிரவைக் கடந்த நேரம் தனக்குத் தூக்கம் வருகிறதெனச் சொல்லி காந்தன் தூங்கச் சென்றுவிட்டார். நானும் யோகேந்திரநாதனும் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் வீதியோரம் அமர்ந்திருந்து தொடர்ந்தும் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு ஜீப் வண்டியில் வந்த சுன்னாகம் பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி (சப் – இன்ஸ்பெக்டர்) இராசையாவும் சில பொலிசாரும் எங்கள் இருவரையும் வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு இராசையா எம்மை தூசணை வார்த்தைகளால் ஏசி, “எந்த சாதி வேசிகளுக்கு பிறந்தனிங்களடா?” எனக் கேட்டு மிரட்டியதுடன், பல துன்புறுத்தல்களைச் செய்த பின்னர் காலையில்தான் விடுவித்தனர். அவர்கள் நீண்ட நேரம் எம்மை இருத்தி எழுப்பியதால் எமது கால்கள் நடக்க முடியாதபடி வீங்கிவிட்டன. (இந்த இராசையா பிற்காலத்தில் சித்தசுவாதீனமற்று இடுப்பில் ஒரு காவித்துண்டுன் யாழ் நகர வீதிகளில் அலைந்ததைக் கண்டிருக்கிறேன்)இராசையாவின் இந்த நடவடிக்கைகள் எம்மை மிரட்டுவதற்கான ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்பது எங்களுக்குத் தெரியும். நாம் எமது ஊர்வலத்துக்கு அனுமதி கேட்ட பொழுது சுன்னாகம் பொலிசார் ‘மேலிடத்தின்’ உத்தரவின் பேரில் அனுமதி தர மறுத்துவிட்டனர். மேலிடம் எனும் பொழுது இரண்டு வகை அர்த்தம் உண்டு. ஒன்று அரசாங்க அல்லது பொலிஸ் மேலிடம். மற்றது தமிழ் கட்சிகள் இரண்டினதும் தலைமை மேலிடம். தமிழ் கட்சிகள்தான் இந்தத் தடைக்குக் காரணம் என்பதை சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான சிங்களவர் சூசமாக எம்மிடம் வெளிப்படுத்தியிருந்தார்.அந்த அதிகாரி சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் என அறிந்தோம். பொதுத்தேர்தலில் அத்தனகல தொகுதியில் சிறீமாவோ பண்டாரநாயக்கவுக்கு ஆதரவாக வேலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தார். (பின்னர் சிறீமாவோ 1970இல் ஆட்சிக்கு வந்ததும் பொலிஸ் உதவி அத்தியட்சராகப் பதவி உயர்வு பெற்று தென்னிலங்கைக்கு மாற்றப்பட்டதாக அறிந்தோம்) அவர் எம்மீது அனுதாபம் கொண்டவராக இருந்தார். அவர் எமது ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விடயத்தை தெரிவித்தபோது, தன்னால் இந்த விடயத்தில் எதுவும் செய்ய முடியாதிருப்பதாகவும், தடையை மீறி ஊர்வலம் நடத்தினால் சில வேளைகளில் பொலிசார் துப்பாக்கிச் சூடு கூட நடத்தலாம் என்றும். அதனால் தான் அந்தப் பாவத்தைச் செய்ய விரும்பாததால் ஊர்வல நேரத்தில் தான் ஒரு வாரம் விடுமுறையில் இருக்கத் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர் இன்னொரு விடயத்தையும் எம்மிடம் சிறிது நகைச்சுவையாகக் கூறினார். அதாவது, “நீங்கள் தடையை மீறி ஊர்வலம் சென்றால் இன்னொரு கந்தசாமி தினத்தைக் கொண்டாட வேண்டியும் வரலாம்” என்று சிரித்துக்கொண்டு சொன்னார். (அவர் இன்னொரு கந்தசாமி எனக் குறிப்பிட்டது எமது வி.ஏ.கந்தசாமி தோழரையே. 1947 பொது வேலைநிறுத்தத்தின் போது கந்தசாமி என்ற அரச ஊழியர் ஏற்கெனவே பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவர் நினைவு தினம் வருடாவருடம் ‘தியாகி கந்தசாமி தினம்’ என நினைவுகூரப்பட்டு வந்தது)பொலிசார் பாய்ந்தனர்பொலிசார் தடை விதித்திருந்தபோதும், நாம் திட்டமிட்டபடி ஒக்ரோபர் 21ஆம் திகதி சுன்னாகம் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலத்தை ஆரம்பித்தோம். ஊர்வலத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொழும்பிலிருந்து வந்திருந்த எமது கட்சித் தலைவர்களில் (மூன்று செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர்) ஒருவரான தோழர் நா.சண்முகதாசன் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்று ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கும்படி இறுதியாக ஒருமுறை கேட்டுப் பார்த்தார். அப்பொழுதும் பொலிசார் மறுத்துவிட்டனர். எனவே அவர் எம்மிடம் வந்து திட்டமிட்டபடி ஊர்வலத்தைத் தொடங்குமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் உணர்ச்சி மிகுந்தவர்களாகவும், எதற்கும் தயாரானவர்களாகவும் காணப்பட்டனர். ஊர்வலத்தின் முன்னணியில் தோழர்கள் வி.ஏ.கந்தசாமி, கே.ஏ.சுப்பிரமணியம், டாக்டர் சு.வே.சீனிவாசகம், கே.டானியல், மு.முத்தையா, அகில இலங்கை விவசாயிகள் சங்க சம்மேளன பொதுச்செயலாளர் டி.டி.பெரேரா ஆகியோர் தலைமைதாங்கிச் சென்றனர். ஊர்வலம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை அண்மித்த பொழுது பொலிசார் தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு மிரட்டினர். சுன்னாகம் பொலிசாருடன் வேறு பல பொலிஸ் நிலையங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொலிசார் வீதியை மறித்து நின்றனர். ஊர்வலம் தடையை மீறச் செல்ல முயன்றபொழுது பொலிசார் துப்பாக்கிப் பிடிகளாலும் குண்டாந்தடிகளாலும் ஊர்வலத்தினர் மீது கடுமையாகத் தாக்கியதுடன், தோழர் வி.ஏ.கந்தசாமி, கே.ஏ.சுப்பிரமணியம், இ.கா.சூடாமணி ஆகியோரைக் கைது செய்து கொண்டு சென்றனர்.அதைத் தொடர்ந்து ஊர்வலத்தில் சென்றவர்கள் நடுவீதியில் அமர்ந்துவிட்டனர். பொலிசாரால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. பின்னர் பொலிசார் இறங்கிவந்து கோசங்கள் எழுப்பாது இரண்டு இரண்டு பேராக நடந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் பிரகாரம் எமது பேச்சுச் சுதந்திரம் மறுக்கப்பட்டதை உணர்த்தும் முகமாக வாய்களைக் கறுப்புத் துணிகளால் கட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் வரை நடந்து சென்றோம் செய்தி அறிந்து வீதியோரங்களில் கூடி நின்ற ஆயிரக்கணக்கான மக்கள் தமது கைகளை அசைத்து தமது ஒருமைப்பாட்டை எமக்குத் தெரிவித்துக் கொண்டனர்.மாலையில் யாழ் முற்றவெளயில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சண்முகதாசன் உட்பட பலர் அங்கு உரையாற்றினர்.வரலாற்றை மாற்றிய ஊர்வலம்இந்த ஊர்வலத்தை தொடக்கப்புள்ளியாகக் கொண்டு பின்னர் வட பகுதியெங்கும் ஏராளமான ஆலயப் பிரவேச – தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. 1970 வரை இப்போராட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயப் பிரவேசப் போராட்டமே மிக நீடித்ததாகவும் பிரசித்தி பெற்றதாகவும் அமைந்தது. அப்போராட்டம் பற்றி சீன வானொலியில் கூட ஒலிபரப்பப்பட்டது. (அதைக் கேட்டு ‘சீன சார்புக் கொம்யூனிஸ்ட்டுகள் தமிழரின் மானத்தை கப்பலேற்றுகிறார்கள்’ என கேடுகெட்ட சாதியமைப்பைக் கட்டிக்காக்கும் தமிழ் தேசியர்கள் அன்றும் ஒப்பாரி வைத்தார்கள்)ஆரம்பத்தில் இப்போராட்டங்களை புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாகத் தலைமையேற்று நடத்தினாலும், பின்னர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் என்ற பரந்த மக்கள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு அதன் தலைமையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்தப் போராட்டங்களுக்கு சிங்கள – முஸ்லீம் – மலையக மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்களும் தமது உறுதியான ஆதரவை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் வரலாற்றில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட போராட்டம் இதுதான் என்றால் மிகையாகாது.