நவரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்டதை சாக்காக வைத்து பொலிஸ் நமது ஊருக்குள் புகுந்தது.இக் கொலையில் மாணிக்கம் இராசன்,சின்னத்தம்பி செல்லத்துரை ,நல்லையா ஆறுமுகம்,சோலையன் செல்லப்பா ஆகியோரை குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர். அன்று பல சட்டத்தரணிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தனர்.யாரும் உதவ முன்வரவில்லை .தமிழரசுக்கட்சி,தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவை இதில் ஒன்றாக நின்றன.முன்னாள் பனம் பொருள் அபிவிருத்திச் சபை தலைவர் நடராசா சாவகச்சேரி பா.உ. வி.என.நவரத்தினத்தின் பரம விசுவாசி.அவரும் நவரத்தினம் மூலமாக ஒழுங்கு செய்வதாக கூறுனார்.எதுவும் நடக்கவில்லை.
இக்காலத்தில் செல்வநாயகம் இது இந்துக்கள் பிரச்சினை. எனவே நான் தலையிட மாட்டேன் என்று நழுவினார்.அமிர்தலிங்கம் சங்கானை ஒரு வியட்நாமாக மாறி வருகிறது என கம்யூனிஸ்ட் சாயம் பூசி திசை திருப்ப முயற்சித்தார்.இப் போராட்டத்தை கேவலப்படுத்தி பேசினார்.அன்று உள்ளூராட்சி அமைச்சாராக தமிழரசுக்கட்சி சார்பில் இருந்தவர் எம்.திருச்செல்வம்.அவர் நினைத்திருந்தால் கட்டுப்படுத்தி இருக்கலாம்.அவரின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இவை.
எந்த சட்டத்தரணிகளும் உதவிக்கு வராத நிலையில் சண்முகதாசன் மூலமாக நடேசன் சத்தியேந்திரா உதவ முன்வந்தார்.அன்று பலகலைக்கழக மாணவராக இருந்த என் சகோதர்ர், அவருடன் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசினார்,சத்தியேந்திரா ஒரு இளம் சட்டத்தரணி.எனவே எமது பகுதியில் நம்பிக்கை தளர்ச்சி காணப்பட்டது.
சட்டத்தரணி ஒழுங்கு படுத்தியதை அறிந்த சாதிவெறியர்கள் தமது சட்டத்தரணிகள் மூலமாக வழக்கை கொழும்புக்கு மாற்றினர் .நீதித்துறை,பொலிஸ் எல்லோருமே அவர்களுக்கு துணை நின்றது.பொருளாதார வளம் குறைந்த நமது ஊரவர்கள் கொஞ்சம் நிலை குலைந்தனர்.
இக்,காலத்தில், நடைபெற்ற கொடுமைகளை பாராளுமன்றம் கொண்டு சென்று வாதிட்டவர் அமர்ர் தோழர் எஸ்.டி. பண்டாரநாயக்கா.இவர் இறந்தபோது எமது பகுதிகளில் யாரும் அஞ்சலி செலுத்தியதாக நான் அறியவில்லை .இது எனக்கு வேதனை அளிக்கிறது.இவர் மட்டும் இல்லாவிட்டால். அன்றைய தமிழ் பொலிசார் எமது மக்களை உண்டு இல்லை என நாசம் பண்ணியிருப்பார்கள்.அன்று யாழ்ப்பாண எஸ்.பி ஆக இருந்தவர் சுந்தரலிங்கம் .( தமிழீழம் வேண்டுமா)
இவர்கள் வழக்குகளுக்கு செல்லும் வழியில் பலதடவை கொல்வதற்கு முயற்சித்துள்ளனர் .எமது முன் எச்சரிக்கைகளால் எதுவும் சாத்தியப்படவில்லை.
(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)