தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் -மந்துவில்( பகுதி 9)

சாதி வெறியர்கள் ஊருக்குள் புகுந்து நடத்த இருந்த திட்டம் தோற்றது.ஆனால் எமது பகுதி இளைஞர்கள் அதே வழியை சிந்திக்க தொடங்கினர்.இதே வேளை இதற்கு தலைமை தாங்கும் எதிரிகளை கொல்லும் முடிவுக்கு வந்தனர்.இது தொடர்பாக இரத்தினத்திடம் கேட்க அவர் மறுத்துவிட்டார்.அப்படி செய்வதாயின் ஒரே நாளில் சத்தமின்றி அவர்களை அழிக்கலாம்.நமது நோக்கம் அதுவல்ல.அவரகளை நம் கண் முன்னே பணிய வைக்க வேண்டும்.


இரத்தினம் அந்த நாட்களில் பல ஊர் சண்டியர்களை எல்லைக்கோடு தாண்டவிடாமல் தடுத்தவர்.பலர் அந்த எல்லைகளை தாண்டவே பயந்தனர்.இவரைக, கண்டாலே ஓடி விடுவர்.எனவே பழிவாங்கும் திட்டம் கைவிடப்பட்டது.

கொலை வழக்கில் சத்தியேந்திரா உதவ வந்தபின்னர் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ச்சியாக வருகை தந்தனர்.சிலர் அவர்களுடன் உறவுகளை பலபல படுத்தினர்.எம்.பி.நவரத்தினம் விமர்சனத்துக்கு உள்ளாக தொடங்கினார்.இது நடராசா மாஸ்ரருக்கு பிடிக்கவில்லை.நேரடியாக இன்றி மற்றவரகளை தூண்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

அப்போது எமது ஊரில் அரச உத்தியோகம் பார்ப்பவரகள் இல்லை.ஒரு சிலர் சிறுபான்மை தமிழர் மகாசபை மூலமாக ஆசிரியர்கள் ஆனவர்கள்.இதில் நடராசா கத்தோலிக்க மதம் மாறி அவர் மூலமாக தொண்டர் ஆசிரியராகி பின் மகாசபை மூலமாக நியமனம் பெற்றவர்.அவரின் இயற் பெயர் கந்தையா எனவும் கத்தோலிக்க மதம் மாறி பின் இந்துவாக மாறும்போது நடராசா என மாற்றினார்.கத்தோலிக்க மதம் மாறியபோதும் பெயரை அவர் பதிவு செய்யவில்லை.அவரது தம்பி இப்போதும் கணபதி வேதநாயகம் தங்கராசா.

அப்போது எமது ஊரில் உள்ள ஒரு இளைஞருக்கு கண்டக்டர் வேலை நியமனம் கிடைத்தது.எல்லோருக்கும் சந்தோசமாக சொல்லித் திரிந்தார்.பின்னர் அவரது நியமனம் ரத்து செய்யப்பட்டதாக வந்தது. போய் விசாரித்தால் எம்.பி. நவரத்தினத்தின் தலையீட்டால் நியமனம் ரத்து செய்யப்பட்டு நடராசா மாஸ்ரின் தம்பிக்கு தங்கராசாவுக்கு அவ் வேலை வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நவரத்தினம் மீது எதிர்ப்பு தொடங்கியது.இவ் வழக்கில் சிக்கிய சின்னதம்பி செல்லத்துரை நடராசாவின் மைத்துனர்.நல்லையா ஆறுமுகம் நடராசாவின் மருமகன்.ஒரே வளவு இரண்டு வீடுகள்.இவரகளும் கம்யூனிஸ்ட் பக்கம் சாய்ந்தனர்.

நடராசாவின் பிரச்சினை தன் செல்வாக்கு தளராமல் தமிழரசுக்கட்சி விழாமல் காக்க வேண்டும்

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)