எமது போராளிகளின் வழக்கு நமக்கு சாதகமாக முடிந்தபின் மாணிக்கம் ராசன் கிளிநொச்சிக்கும்,சோலையன் செல்லப்பா பளைக்கும் இடம்பெயர்ந்தனர்.சேகரித்த நிதி தொடர்பான விவகாரம் கொஞ்சம் பகை முரண்பாடாக மாறியது.நடராசா தனக்கும் சார்பாக ஆட்பலம் கொண்டிருந்தார். இக் காலகட்டத்தில் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேசம் உச்சகட்டமான நிலையில் இருந்தது.இது தொடர்பாக மட்டுவில் மோகன்தாஸ் சனசமூக நிலையம், மானாவளை மக்கள் சகல இடத்து மக்களின் ஆதரவுகளை கோரியிருந்தனர்.
எமது கிராமத்தில் நடராசாவுக்கு எதிர்ப்பு இருந்தாலும் எமது சனசமூக நிலையம் அவரின் கட்டுப்பாட்டில் அவரது மைத்துனர் பைரவன் நடராசா நிர்வகித்து வந்தார்.
பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப். பிரவேசத்தை தடுக்க தமிழரசுக்கட்சி மறைமுகமாக செயற்பட்டது.காரணம் உயர்சாதியினர் ஆதரவை தக்க வைப்பது.இரண்டாவது சீன கம்யூனிஸ்ட் வளர்ச்சி பிடிக்காத்தது.இதற்காக அன்றைய பொலிஸ் இலாகாவை தன் பகடைக்காயாக பயன்படுத்தியது.
இந்த ஆதரவுக்கூட்டத்தில் எமது ஊரின் சார்பாக முன்னாள் அதிபர் இராசதுரையும்,பைரவன் நடராசாவும் கலந்து கொண்டு கம்யூனிஸ்ட் கட்சிகார்ர்கள் வரக்கூடாது என விதண்டாவாதம் பண்ணிணினர்.இதற்கு மட்டுவில்,கல்வயல் பகுதியினர் சிலர் ஆமோதித்தாலும் முழுமையாக இவர்களை ஆதரிக்கவில்லை.அவரகளது முழுநோக்கமும் எப்படியாவது குழப்புவதே.ஆனால் ராசதுரையும்,பைரவன் நடராசாவும் நயப்புடைபட வெளியேறிவந்தனர்.
ஆனாலும் எமது கிராம மக்கள் ஆதரவின்றி இஸ்லாமிய சகோதர்ர்கள் துணையுடன் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது. இதில் தோழர் அண்ணன் இக்பால் என்பவர் தலைமையில் பல இஸ்லாமிய இளைஞர்கள் தோள் கொடுத்தார்கள்.இங்கேதான் செல்லக்கிளி என்னும் வீரப் பெண் முதற் போராளியாக களம் ஆடி வரலாறு படைத்தார்.
இந்தப் போராட்டத்தின் வெற்றி தமிழரசுக்கட்சிக்கு பெரிய இடியாக வீழ்ந்தது .நடராசாவும் ஏமாற்றம் அடைந்தார்.
எமது ஊரில் போராடும்போது நமது சமூகம் தனியாகவே போராடியது.மானவளையில் மூன்று சமூகங்கள் கைகோர்த்து நின்றன. இன்றுவரையும் அந்த உறவுகள் மிக அழகாகவே பேணப்படுகின்றன.அதற்கு கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு வலுவான காரணம் எனலாம்.
தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் ஓரணியில் இணைத்த பெருமை சிறுபான்மைத் தமிழர் மகாசபையைச் சாரும்.போராட்டத் துணிவைக் கொடுத்தது சீன கம்யூனிஸ்ட் கட்சியும் தோழர் சண்முகதாசன் அவரகளுமே.ஆனாலும் பொதுவாக அனைத்து தரப்பு சிறுபான்மைத் தமிழர்களும் ஆதரவு தந்தனர்.
(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)