தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 21)

பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேச போராட்டத்தில் எமது ஊரவர்கள் கலந்துகொள்ள முடியாமல் போனது கவலைக்குரிய விசயம்.மட்டுவில் இளைஞர்களும், மந்துவில் இளைஞர்களும் மிக நெருங்கிய நட்பில் இருந்தும் திட்டமிட்ட சதியால் கலந்து கொள்ளமுடியவில்லை. எமது ஊருக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் வந்து அவ்வப்போது கரைப்பார்கள்.இக் காலத்தில் நடராசா குடும்பம் கல்வயலுக்கு இடம் பெயர்ந்துவிட்டது.அவரின் தாய்,மற்றும் சகோதர்ர்கள் வந்து போவார்கள்.

எமது ஊரில் ஒரு அப்பாவி மனிதர் இருந்தார்.பாரத்தால் சினிமா நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் தோற்றம் இருக்கும்.அவரின் மூத்த மகளை கைதடி சண்டைக்கு காரணமானவர் வயதுக்கு வந்த சில மாதங்களில் ஏமாற்றி கர்பமாக்கிவிட்டார்.அவருக்கு ஒரே மகள். மிகவும் கலங்கிப் போனார்.ஒரு நாள் நடராசா எமது ஊருக்கு வந்த வேளை அவரின் கால்களில் வீழ்ந்து தன் நிலையை சொல்லி அழுதார்.அப்போது நான் சின்னப்பிள்ளை.எனக்கு விசயம் தெரியாது.வளரந்த பின்பே உண்மை தெரியும்.அந்த காமுகன் பின்னாளில் புலிகளால் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார்.அவர் இது போன்ற பல சம்பவங்களில் தொடர்புடையவர்.அந்தப் பெண் இப்போது மணமாகி சந்தோசமாக வாழ்கிறார்.

மட்டுவில் சம்பவத்தை அடுத்து நடராசாவும் அவரது சகாக்களும் கம்யூனிஸ்ட் கட்சிமீதும் மானாவளை மீதும் கோபம் அடைந்தனர்.மிக வெளிப்படையாக திட்டியதுண்டு.
கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரு கூட்டம் நடாத்த முடிவு செய்தனர்.பொதுவாக நமது ஊரில் கூட்டம் எமது பள்ளிக்கூட வளவில் நடக்கும்.இந்த கூட்டத்தை அங்கு நடாத்த சிலர் எதிர்த்தனர்.இதனால் இக்கூட்டம் ஒரு தனியார் காணியில் மண்ணால் மேடை அமைத்து நடைபெற்றது.இது நடக்கும்போது ஜே.வி.பி கிளர்ச்சி ஆரம்பம்.சீன கம்யூனிஸ்ட் எல்லோரையும் அரசாங்கம் தேடியது.இக் கூட்டத்தில் டானியலும் வேறு சிலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் நடந்த காணிக்குள் கை ஒழுங்கை ஒன்றின் ஊடாகவே வரலாம். கூட்டம் நடந்தபோது இராணுவம் ஜீப் வண்டியில் வந்தது.டானியலுக்கு விசயம் விளங்க ஆமி எல்லோரும் ஓட்டங்கள் என்று சொல்லி பின் காணியால் ஓடி ஒழிந்தனர்.அவரகள் கம்யூனிஸ்ட் கட்சியினரை மட்டுமல்ல எமது ஊரவர் மூவர் பெயரையும் கேட்டனர்.எமது ஊருக்கு இராணுவம் புதிது என்பதால் சுற்றி வேடிக்கை பார்க்க எமது ஊரவர்களும் மறைந்துவிட்டனர்.இராணுவம் போய் விட்டது.எமது ஊரவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் தேடி வந்ததாக நினைத்து அமைதி அடைந்தனர்.தேடப்பட்டவரகளில் ஒருவர் மல்லாவிக்கும்,மற்றவர் கண்டாவளைக்கும் வயல் வேலை காரணமாக போய்விட்டனர்.

எமது ஊரில் வயதான அம்மாவின் மரணச் சடங்கு நடந்தது.பிரேதம் எடுக்கும் நேரம் இராணுவம் மீண்டும் நுழைந்தது.அவர்கள் தேடும் ஒருவர் அங்கே நின்றார். வேறு வழியின்றி பிரேதம் தூக்கும் பாடைக்குள் ஒழிந்து கொண்டார்.இராணுவம் காணவில்லை. யாரும் காட்டிக் கொடுக்கவும் இல்லை.பின்னாட்களில் டானியல் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.நம்மைச் சேர்ந்தவர் ஒருவர் பழிவாங்க இந்த தகவலை ஆனைக் கோட்டை பொலிஸ் நிலையத்தில் கொடுத்திருக்கிறார்.அதன் பிரகாரமே இராணுவம் வந்தது.அவர் வேறு யாரும் அல்ல.இராணுவம் தானாக வரவில்லை.புரிந்துகொள்ளவும்.அவர் யார் என்று.

இந்த சம்பவத்தை அடுத்து எமது சமூகத்தின் பிரதான மோசமான எதிரி அடையாளம் காணப்பட்டார்.ஜே.வி.பி கிளர்ச்சி காரணமாக கம்யூனிஸ்டுகள் செயற்பாடுகள் நின்றன.அடுத்து வந்த வரட்சி,உணவுப் பஞ்சம் காரணமாக எமது ஊரவர்கள் விவசாயத்துக்காக கிளிநொச்சி ,வ்வுனிக்குளம் ,முத்தையன்கட்டு என இடம்பெயர்ந்தனர

இன்று இது பற்றி எமது ஊரில் கூட எத்தனைபேர் அறிந்திருப்பார்கள் என தெரியாது.தமிழரசுக்கட்சி அரசியலைப் புகுத்தி இலங்கையின் தேசாதிபதி விருது பெற்ற மட்டுவில் மோகன்தாஸ் வாசிகசாலையும் செயலிழந்தது.
முற்றும்

இது தொடர்பான சில தவறவிட்ட சம்பவங்கள் மனிதர்கள் பற்றி ஞாபகம் வரும்போது எழுதுவேன்.என் எழுத்துக்களின் தவறுகளுக்கும் சொல்லாடல் தவறுகளுக்கும் மன்னிப்பை கோருகிறேன்.இதை ஒரு சிறு பதிவாக எழுத்த் தொடங்கி மிகவும் நீண்டுவிட்டது.நல்ல மனிதர்கள்,சமூக அக்கறை உள்ளவர்கள் எல்லா சாதிகளிலும் இருக்கிறார்கள்.இதைப் படித்தவர்கள் வாசித்து ஒரு பொதுவான விமர்சனத்தை வைத்து எழுதுவது நல்லதென நினைக்கிறேன்.இது வெறுமனே ஒரு சாதிஅமைப்புக்கு எதிரான போராட்டம்.இதை ஒரு பாடமாக வைத்து வர்க்க ரீதியாக மக்களை இணைக்க இதை ஒரு பாடமாக உதாரணமாக கருத முடியும் என நம்புகிறேன்.யாரையும் சமூக ரீதியாக என் சொற்களால் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

ஏழைகள்,உழைக்கும் பாட்டாளிகள் எந்த சாதி,இனம்,மதம், மொழி எதுவென்றாலும் பிரச்சினைகள் ஒன்றுதான்.இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் இந்த முட்டாள்தனமான முரண்பாடுகள்,மோதல்களைத் தவிர்க்கலாம்.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)