‘எனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு ஒரு கீறலேனும் ஏற்பட வேண்டும்’ என்று நினைப்பது போலத்தான். கிழக்கின் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீதான வெறுப்பு எரிந்து கொண்டிருக்கிறது.
இலங்கை வரலாற்றில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, மற்றுமோர் இரத்தக்கறை படிந்த நாளாகும் என்று, காத்தான்குடி சிவில் அமைப்புகளின் சம்மேளனம் கடந்த திங்கட்கிழமை தெரிவித்தது. ‘கத்தோலிக்க மக்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில் திட்டமிட்டு, தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமானதும் மிலேச்சத்தனமானதுமான இக்குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி உயிர்நீத்த இலங்கையர்கள், வெளிநாட்டவர்கள், பாதுகாப்பு தரப்பினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவாகக் குணமடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம். இக்கோழைத்தனமானதும் மிலேச்சத்தனமானதுமான தாக்குதல் சம்பவங்களில், தமது உறவுகளை இழந்து துயருறும் உங்கள் அனைவரது துன்பத்திலும், துயரத்திலும் நாங்களும் பங்கு கொள்கின்றோம்’ என்று அறிக்கையூடாகப் பொதுமக்களிடம் துயர்பகிர்ந்து கொண்டார்கள்.
2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தாக்குதல், போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்புகள், மனிதப் படுகொலைகள் தொடர்பான அச்சத்தை விதைத்துச் சென்றுள்ளது. இத்தாக்குதல் சம்பவங்கள் மனித குலத்துக்கு விரோதமானவையேயாகும்.
இலங்கையின் அமைதியையும் பல்லினத் தன்மையையும் சகிக்க முடியாத சர்வதேச தீவிரவாத சக்திகளின் சதிவலைகளில் சிக்கிய குறிப்பிட்ட சிலரது இந்தத் தீவிரவாத செயல், இலங்கையை மீண்டும் அச்சத்துக்குள்ளும், ஒருவரையொருவர் சந்தேகத்தோடும், பயத்தோடும் நோக்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.
இஸ்லாத்தின் பெயரால் இத்தாக்குதலை முன்னெடுத்த ‘இஸ்லாமிய அரசு’ எனும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினரின் நடவடிக்கை, காத்தான்குடியை அச்சத்துக்குரிய பிரதேசமாகப் பிரகடனப்படுத்த வைத்திருக்கிறது. அது, கிழக்கின் பல கிராமங்களையும் இதற்குள் இழுத்துக் கொண்டது கவலையானது.
இலங்கை முஸ்லிம்கள், கடந்த 30வருட கால யுத்தத்திலும், யுத்தத்துக்குப் பின்னரும் பல்வேறு படுகொலைகள், இழப்புகள், பலவந்த வெளியேற்றங்களைச் சந்தித்த போதிலும் ஒருபோதும் வன்முறையை நாடவில்லை என்று முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்தாலும், குற்றச்சாட்டுகள் குறைந்தபாடில்லை.
இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், மத விடயத்தில் பலாத்காரம் இல்லை. மக்கள் விசுவாசிகளாக மாற (நபியே) அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்கின்றீர்களா? அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவராக நீங்கள் இல்லை. அவர்கள், அழைத்துப் பிரார்த்திப்பவற்றை (தெய்வங்களை) ஏசாதீர்கள் என்ற வழிகாட்டல்களையே அல்குர்ஆன் போதிக்கின்றது. இதற்கு மாற்றமான வன்முறையை இஸ்லாம் ஒருபோதும் அங்கிகரிக்கவில்லை.
அந்த வகையில் கடந்த 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மதத்தின் பெயராலான மிலேச்சத்தனமான வன்முறைகள் இலங்கை முஸ்லிம்கள் சார்பாகவும் குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம்கள் சார்பாக, கவலையையே ஏற்படுத்திவிட்டிருக்கிறது.
இந்நாசகார சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான நபர், காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்ற வகையில், பொதுவாக நாடு முழுவதிலும் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள ஓர் அச்சநிலைக்குக் காரணம் என்று தெரிந்து கொண்டமையால், காத்தான்குடி மக்கள் மீதான சந்தேகப்பார்வை தொடர்வது இயல்பானதே.
இருந்தாலும் சஹ்ரான் என்ற இளைஞன், தன்னுடைய வாழ்க்கையைச் சீரழித்தது மாத்திரமல்லாமல் முழு முஸ்லிம் சமூகத்தினதும் நிம்மதியின் மீதும் கையை வைத்துவிட்டார். இத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்த விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாக இருந்தாலும் இதனைத் தவிர்க்கத்தான் முடியாதிருக்கிறது.அச்ச நிலையையும் போக்க முடியாமல்த்தான் இருக்கிறது.
பிரதான சூத்திரதாரியும் அவருடன் தொடர்புபட்ட ஒரு சிலரும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அலியார் சந்தி’ச் சம்பவத்தின் பின்னர், காத்தான்குடியை விட்டுத் தலைமறைவாகி, இலங்கை முழுவதும் தொடர் குண்டுத் தாக்குதல்கள் மூலம், நாட்டு மக்களை மாத்திரமல்ல, உலக மக்கள் அனைவரையுமே நிலைகுலையச் செய்திருக்கின்றனர்.
நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பேணி சமாதான சகவாழ்வை இந்நாட்டில் வாழும் இனங்கள் மற்றும் சமயங்களுக்கூடாகக் கட்டியெழுப்ப, கடந்த காலங்களைப் போலவே எதிர்காலத்திலும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க, அர்ப்பணிப்புடன் செயற்பட இத்தருணத்தில் காத்தான்குடி மக்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள்.
தீவிரவாத நடவடிக்கைகள் கடந்து போன 10 வருடங்களுக்கு முன்னர் துடைத்தெறியப்பட்டன. இனி எந்தப்பிரச்சினைகளும் இல்லை என்று நம்பிக்கையுடன் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான இக்காலங்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன.
இருந்தாலும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வியாபார நிமித்தமும் கல்விசார் நடவடிக்கைளுக்காகவும், தனிப்பட்ட தேவைகளுக்காகவும் வாழும் சமாதானத்தையும் அமைதியையும் விரும்பும் அனைவருக்கும் இந்தச் சூழல் உருவாக்கியிருக்கின்ற நெருக்கடிகளானவை இலங்கையின் அனைத்துத் தரப்பினருக்கும் சவாலானதுதான்.
இலங்கையின் இறைமைக்கு ஒரு போதும் இடைஞ்சலை ஏற்படுத்தியதுமில்லை. அதனைப் பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியான பங்களிப்பைச் செய்து வருகிறோம் என்று மார்பு தட்டிக் கொண்ட முஸ்லிம்கள் இப்போது அச்சத்துடன் இருக்கின்ற சூழல் உருவாகியிருப்பது வேதனைக்குரியது.
கிழக்கின் காத்தான்குடியில் உருவானதோர் இளம் விசத்துளிர், இலங்கைத் தாய்நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவு, பொருளாதார வீழ்ச்சி என்பவைகளை மீளவும் கட்டியெழுப்புவது இலங்கையர்கள் என்ற வகையில் அனைவருக்கும் பாத்திரமானது.
நீண்டு கொண்டிருக்கும் சுற்றிவளைப்புகள், கைதுகள் மேலும் மேலும் அச்சத்தினை உருவாக்கி வருகின்றது. நேற்றைய மேதினம், தொழிலாளர்கள் ஒன்றுகூடுவதைத் தடுத்துவிட்டது. இது பௌத்த மக்களின் வெசாக் ஒன்றுகூடலையும் தவிர்க்கவே செய்யும் சாத்தியங்களும் காணப்படுகின்றன.
இந்த நிலையில் தான் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் படுகொலையுடன் தொடர்பில்லாத, குற்றமிழைக்காத என்னுடைய கணவரை இன்னும் ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள்…? என்று வவுணதீவு பொலிஸ் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அஜந்தனை விடுவிக்கவேண்டும் என்று ஜனாதிபதிக்கு கோரிக்கையை விடுத்திருக்கிறார் திருமதி செல்வராணி இராஜகுமாரன்.
வவுணதீவு பொலிஸ் சாவடியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் உண்மையான கொலையாளிகள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய சஹ்ரான் குழாமினர் என்று பொலிஸார் அறிவித்ததையடுத்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து அவசர அவசரமாக குற்றப்புலனாய்வுத் தரப்பினர் மட்டக்களப்பு நீதிமன்றில் அஜந்தனை முன்நிலைப்படுத்தியுள்ளனர். அவர் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
இப்போது எழுந்துள்ள சந்தேகம், சிந்தனைகள் எல்லாமே முஸ்லிம்களது பிரதேசங்களில் ஆயுதப் பாவனை இருக்கிறது. இஸ்லாமிய ஜிகாத்துக்கான தடைகள், நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் தமிழர் தரப்புகள் பல வேளைகளில் முன்வைத்த போதும், எடுக்கப்படாத கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமாகத்தான் கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து மாவீரர் தினத்தில் நடைபெற்ற பிரச்சினைகளைக் காரணம் காட்டி முன்னாள் போராளிகள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டதுடன் தடுத்தும் வைக்கப்பட்டனர்.
ஆனால், இப்போது ‘இஸ்லாமிய அரசு’ என்கிற ஐ.எஸ் அமைப்பு காட்சிக்குள் வந்திருக்கிறது. இது போன்று யுத்தம் நின்று போன பின்னர், மட்டக்களப்பில் நடைபெற்ற கொலைகள், கொலை முயற்சிகள் குறித்த விசாரணைகளிலும் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்று தான் சொல்லிக் கொள்ள முடியும்.
இனிவருங்காலங்களிலேனும் எடுத்ததற்கெல்லாம் முன்னாள் போராளிகள் மீது கைகளைத் திருப்புவது நிறுத்தப்பட வேண்டும். விசாரணைகளின் திசை திருப்பங்களைத் தாண்டிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கின்றன.
கிழக்கின் குழப்பகரமான அரசியல் சூழலில் இவை சாத்தியமாகவும் வேண்டும். தீவிரவாதத்தால் நிலை குலைந்த கிழக்குக்கு, நிம்மதி கிடைக்க வேண்டும். அது அரசியல் மாற்றத்துடன் ஏற்படும் என்று நம்புவோமாக.