இந்த விசேட வர்த்தமானியில் எங்கும், சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக இந்த புதிய சட்டப் பிரமானம் கொண்டு வந்தததாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், கடந்த கால அனுபவங்கள் காரணமாக, சிறுபான்மையினரே கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
இதே நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்ட சட்டமொன்று நாட்டில் இருக்கிறது. 2007ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்த சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழும் இதே நோக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க, இந்தப் புதிய வர்த்தமானி எதற்கு என்பது புரியவில்லை.
ICCPR சட்டம் எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்தச் சட்த்தின் கீழ், 2019 ஆம்ஆண்டு வண்டில் சில்லின் படத்தைக் கொண்ட உடையொன்றை அணிந்திருந்த ஒரு முஸ்லிம் பெண், பௌத்தர்களின் தர்ம சக்கரத்தின் படத்தை கொண்ட உடையை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஹஸலக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தெரிந்ததே.
இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால், விசேட நிலைமைகளின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டாலன்றி அவர் பிணையில் விடுதலை செய்யப்பட மாட்டார். ஆனால், அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெறும்.விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டால், நாளாந்தம் விசாரிக்கப்பட்டு, விரைவில் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்கிறது சட்டம். ஆனால் புதிய வர்த்தமானியின் படி, ஒருவர் ‘சந்தேகத்தின் பேரில்’ கைது செய்யப்பட்டால் அவர் சட்டமா அதிபரின் எழுத்து மூல ஒப்புதலுடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுவார். நீதிவான் அவரை ஒரு வருடத்துக்கு குறைந்த காலத்துக்கு, மறுவாழ்வு நிலையமொன்றுக்கு அனுப்புவார். சம்பந்தப்பட்டவரது நடத்தையைப் பொறுத்து, அந்த மறுவாழ்வுக் காலம் நீடிக்கப்படலாம்.
இந்த வர்த்தமானியின் படி, வழக்கு விசாரணை கிடையாது. எனவே, தம்மைப் பாதுகாத்துக் கொள்ள, தமக்காக வாதாட சட்டத்தரணிகளின் உதவியைப் பெறும் வாய்ப்பையும் அவர் இழப்பார். சட்டமா அதிபரின் ஒப்புதல் இருந்தால், நீதிவான் சந்தேக நபரை மறுவாழ்வுக்காக அனுப்புவார். ஆனால், சட்ட மா அதிபர் தனிப்பட்ட முறையில் சந்தேக நபரைப் பற்றி விசாரிப்பதில்லை. அவர் பொலிஸாரின் அறிக்கைகளின் மீதே பெரும்பாலும் தங்கியிருப்பார்.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினம், முஸ்லிம் பெயர் கொண்ட பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு, அண்மையில் வெளியிட்ட அறிக்கையை அடுத்தே, இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அரசாங்கம் புர்க்கா எனப்படும் முகத்திரையை தடை செய்யவும் மத்ரஸாக்களில் சிலவற்றை தடைசெய்யவும் முடிவு செய்துள்ளது.
புர்க்கா தொடர்பான அரசாங்கத்தின் அந்த முடிவை, ஐ.நாவும் பாகிஸ்தான் அரசாங்கமும் விமர்சித்துள்ளன. சமயத்தின் அடிப்படையில் வேற்றுமை காட்டுவது, சகிக்காமை மனித கௌரவத்தின் மீதான நிந்தனை என சமயம் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான ஐ.நா விசேடப் பிரதிநிதி அஹ்மத் ஷஹீத் தமது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
புர்க்கா தடை இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் எனவும் இலங்கையின் சிறுபான்மை மக்களின் மனித உரிமைகள் தொடர்பான பரவலான அபிப்பிராயத்தை மேலும் பலப்படுத்தும் எனவும் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் சாத் கத்தாக் டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் சமயத் தீவிரவாதம் நிலவுகிறது என்பதை, 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் மறுக்கக் கூடியதாக இருந்த போதிலும் உயிர்த் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, அதனை தொடர்ந்தும் மறுக்க முடியாது.
அந்தப் பயங்கரவாதக் கும்பலோடு சம்பந்தப்பட்ட சகலரும் கைது செய்யப்பட்டார்களா என்பது தெரியவில்லை. அவ்வாறு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு இருந்தாலும், அவர்களது வன்முறை சித்தாந்தத்தின் தாக்கத்துக்கு இலக்கானவர்கள் தொடர்ந்தும் சமூகத்தில் இருக்கலாம். எனவே அவர்களைக் கண்டு பிடித்து, மறுவாழ்வளிக்க வேண்டும் என்று அரசாங்கம் கருதுவதாக இருந்தால், அதனை எவரும் எதிர்க்க முடியாது.
ஆனால், அரசாங்கமும் பிரச்சினையைச் சரியாகப் புரிந்து கொள்வதை விட, பேரினவாத ஊடகங்களின் கோஷத்தால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதையே இந்த நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கையைப் பொறுத்தவரை, புர்க்கா என்பது மதத் தீவிரவாதத்தின் அடையாளமாகக் கருத முடியாது. ஏனெனில், உயர்த்த ஞாயிறு தினத் தாக்குதலோடு சம்பந்தப்பட் பல பெண்கள், எப்போதும் முகத்தை மூடியவர்கள் அல்ல என்பதை, அவர்களது புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது.
அதேவேளை, முகத்தை மூடும் ஏனைய பல முஸ்லிம் பெண்கள், சமய தீவிரவாதம் ஒரு புறமிருக்க சமயத்தைப் பற்றிய சாதாரண அறிவையாவது கொண்டவர்கள் அல்லர். மேலும், சிலருக்கு புர்க்கா, நிக்காப் போன்ற முகத்திரைகள் ஒரு ‘பெஷன்’ ஆகவே இருக்கிறது. மிகச் சிலர் மட்டுமே தீவிர சமய ஈடுபாட்டின் காரணமாக, இந்த முகத்திரைகளை அணிகிறார்கள். எனவே, இலங்கையில் தீவிரவாதத்தையும் புர்க்கவையும் முடிச்சுப் போடுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை.
மத்ரஸாக்களைப் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடும் அதேபோல் ஊடகங்களின் தாக்கத்தால் எடுக்கப்பட்டதொன்றேயாகும். இலங்கையில் வன்முறையைக் கையிலெடுத்த முஸ்லிம் தீவிரவாதிகள் அனைவரும் மத்ரஸாக்களில் கல்வி கற்றவர்கள் அல்லர். அதேவேளை, மத்ரஸாக்களில் கல்வி கற்ற ஆயிரக் கணக்கானவர்களில் ஓரிருவர் மட்டுமே தீவிரவாதிகளாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். அதை விட சாதாரண பாடசாலைகளில் கல்வி கற்றவர்களே, அந்தக் குழுவில் இருக்கின்றனர். எனவே தீவிரவாதத்தையும் மத்ரஸாக்களையும் முடிச்சுப் போடவும் முடியாது.
பொதுவாக, இலங்கையில் சகல சமூகங்கள் மத்தியிலும் இருக்கக் கூடிய தீவிரவாதிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மறுவாழ்வளிப்பதை நோக்கமாகக் கொண்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக அரசாங்கம் கூறலாம். ஆனால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றிய ஆணைக்குழுவின் அறிக்கை, புர்க்கா தடை, மத்தரஸா தடைக்கான ஏற்பாடுகள் ஆகியவற்றின் பின்னணியில் பார்ககும் போது, இந்த வர்த்தமானியும் முஸ்லிம் தீவிரவாதிகளையே குறி வைக்கிறது என்பது தெளிவாகிறது.
வன்முறையைத் தூண்டும் தீவிரவாதத்தை களையெடுக்க வேண்டும் தான். அதில் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஆனால் அந்தத் தீவிரவாதம் என்றால் என்ன? அதைப் பற்றிய வரைவிலக்கணம் என்ன? அவ்வாறானதோர் வரைவிலக்கணம் இல்லாமல் தீவிரவாதிகளை அடையாளம் காண முடியுமா? இந்த வர்த்தமானி சகல சமூகங்களிலும் உள்ள தீவிரவாதிகள் விடயத்திலும் ஆமலாகுமா? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன.
அமெரிக்க குடியியல் உரிமைகள் இயக்கத்தின் முக்கியஸ்தரான மார்டின் லூத்தர் கிங் தம்மை தீவிரவாதி என்று கூறியோருக்கு பதிலளிக்கும் போது, “நான் அதைப் பற்றி பெருமையடைகிறேன். இயேசு அன்பு என்னும் விடயத்தில் தீவிரவாதியாக இருக்கவில்லையா? நாம் வெறுப்பு என்ற விடயத்திலா அல்லது அன்பு என்ற விடயத்திலா தீவிரவாதிகளாக இருக்கிறோம்? நாம் நீதிக்காகவா அல்லது அநீதிக்காகவா தீவிரவாதிகளாக இருக்கிறோம்” என்று வினவினார்.
அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவரான ஜோன் எப் கென்னடி, தீவிரவாதிகளைப் பற்றிக் குறிப்படும் போது, “தீவிரவாதிகள் விடயத்தில் எதிர்க்க வேண்டியதும் ஆபத்தானதும் என்னவென்றால் சகிப்பற்றத் தன்மையேயன்றி தீவிரம் அல்ல.மோசமான விடயம் என்னவென்றால் அவர்கள் தமது இலட்சியத்தைப் பற்றிக் கூறுபவையல்ல; அவர்கள் மற்றவர்களைப் பற்றிக் கூறுபவையே” என்று கூறினார்.
நாளை இந்தப் புதிய வர்த்தமானியின் படி, தீவிரவாதத்தைக் கண்காணிக்கும் பொலிஸார் இவ்வாறு சிந்திப்பார்களா? எனவே அவர்களும் சில ஊடகங்களின் பிரசாரத்தால் ஏனைய சாதாரண மக்கள் உசுப்பேற்றப்படுவதைப் போல் உசுப்பேற்றப்பட மாட்டார்களா என்பதும் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெறாமையுமே இங்குள்ள பாரதூரமான ஆபத்தாக இருக்கிறது.