ஆண்டாண்டு காலமாகக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு, ஏற்கப்பட்டு வந்தவற்றுக்குள் மாற்றங்களைக் கொண்டு வருதல் இலகல்ல. மனித மனங்கள், சில விடயங்களை அறிவுபூர்வமாய் சிந்திப்பதை விட, உணர்வுபூர்வமாகவே சிந்திக்கின்றது.
அறிவுபூர்வம், உணர்வுபூர்வம் ஆகிய இரண்டுக்கும் இடையிலான போராட்டம், வரலாற்றில் புதிதல்ல.
ஆனால், உலகில் பழைமையானதும் நன்மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நிறுவனத்தில், இந்தப் போராட்டம் நிகழும்போது, அது நிச்சயம், கவனத்தைக் கோரி நிற்கிறது.
கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு மிக நீண்டது. வெறுமனே, ஒரு மத நிறுவனமாக மட்டுமன்றி, உலகில் பலம்வாய்ந்த சமூக அரசியல் அமைப்பு என்ற பெருமையும் திருச்சபையையே சாரும். உலகின் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில், திருச்சபையின் கரங்கள் ஆழமாகப் பதிந்துள்ளன.
அதேவேளை, திருச்சபைக்குள் சீர்திருத்தவாதிகளுக்கும் பழைமைவாதிகளுக்கும் இடையிலான போராட்டங்கள், தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளன. இதன் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகின்றது.
திருச்சபையின் நவீன வரலாற்றில், இப்போதே முதன்முறையாக, இரண்டு பாப்பரசர்கள் ஒரே காலப்பகுதியில் இருக்கிறார்கள்.
தற்போதைய பாப்பரசர் பிரான்ஸிஸ், ஓய்வுநிலை பாப்பரசர் 16ஆவது பெனடிக்ட் ஆகிய இரண்டு பாப்பரசர்களும், துறவறம் தொடர்பில் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைப்பாடுகள், இதுவரை வெளிப்படையாகப் பொதுவெளியில் முன்வைக்கப்படவில்லை.
இவை, வத்திகானின் சுவர்களுக்குள் அடங்கியிருந்தன. ஆனால், கடந்த சில மாதங்களாக, இந்த விவாதங்கள் பொதுவெளிக்கு வரத்தொடங்கி உள்ளன.
திருச்சபையும் துறவறம் குறித்த விவாதங்களும்
கடந்த ஒக்டோபர் மாதம், வத்திகானில் நடந்த சிறப்பு மாநாட்டில், தென்அமெரிக்காவின் அமேசன் பகுதிகளில், கத்தோலிக்க மதகுருமாருக்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனால், மக்கள் வருடக்கணக்கில் மதகுருமாரைக் காணவியலாத நிலை இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தச் சிக்கல் விவாதிக்கப்பட்ட போது, திருமணமானவர்களை குருக்களாக அபிஷேகம் செய்வதன் மூலம், ஏராளமானோரை உள்வாங்கவியலும் என்றும், தற்போதைய இந்த நெருக்கடிக்கு, இதுவே பயனுள்ள தீர்வு என்றும், கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்தக் கருத்துக்குக் களப்பணியாற்றும் அருட்தந்தையர்கள் ஆதரவு நல்கி இருந்தார்கள். ஆனால், இதற்கான எதிர்ப்பு, வத்திக்கானில் இருக்கும் கருதினால்களிடம் இருந்து வந்தது.
இவை, துறவறம் சார்ந்ததும் அடிப்படையான தத்துவார்த்தம் சார்ந்ததுமான விவாதங்களை எழுப்புகின்றன.
இன்று, துறவறம் சார்ந்த தத்துவார்த்த விவாதங்களின் இரண்டு முனைகளிலும் இரண்டு பாப்பரசர்களும் நிற்கிறார்கள். சிறப்பு மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை, சட்டபூர்வமாக்குவதன் மூலம், அமேசன் பகுதிகளில் நிலவுகின்ற அருட்தந்தையர்களின் பற்றாக்குறையை நீக்க, பாப்பரசர் பிரான்ஸிஸ் முனைகிறார்.
ஆனால், இது எதிர்காலத்தில் திருமணமானவர்கள் உலகின் எல்லாப் பாகங்களிலும், அருட்தந்தையராக வழிவகுக்கும் என்றும் இது, திருச்சபையின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும், பழைமைவாதிகள் வாதாடுகின்றார்கள்.
அதேவேளை, மாறுகின்ற காலத்துடன், நவீன தேவைகளுக்குத் திருச்சபையும் கத்தோலிக்கமும் தப்பிப் பிழைக்க வேண்டுமாயின், இந்த மாற்றங்கள் அவசியமானவை என்று, சீர்திருத்தவாதிகள் கருதுகிறார்கள்.
அண்மையில், திருத்தந்தை பிரான்ஸிஸால் வெளியிட்டு வைக்கப்பட்ட புத்தகம், இந்தக் கருத்தியல் மோதலை, அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. ஓய்வுநிலை பாப்பரசர் 16ஆவது பெனடிக்ட், ரொபேட் கார்டினல் சரா ஆகியோர் இணைந்து எழுதியுள்ள ‘எமது உள்ளத்தின் அடியாளத்தில் இருந்து: குருத்துவம், துறவறம் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின் நெருக்கடி’ (From the Depths of Our Hearts: Priesthood, Celibacy and the Crisis of the Catholic Church) என்ற புத்தகம், நேரடியாகவே பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸின் முன்னெடுப்புகளை விமர்சிக்கின்றது.
துறவறத்தைத் திறந்த மனத்துடன் பேசுவதற்கும், அதற்கான தீர்வுகளை நோக்கி நகர்வதற்கும், பாப்பரசர் பிரான்ஸிஸ் முயன்று வருகின்ற நிலையில், இந்தப் புத்தகம் பல வழிகளில், பாப்பரசர் பிரான்ஸிஸின் செயற்பாடுகளை விமர்சிக்கின்றது.
இந்த நூல், ஒருபுறம், துறவறம் ஏன் கத்தோலிக்கப் திருத்தந்தையர்களுக்கு அவசியம் என்பதற்கான கருத்துகளை இறையியல் அடிப்படையில் முன்வைக்கிறது. மறுபுறம், கத்தோலிக்க திருச்சபை எதிர்நோக்கியுள்ள நெருக்கடியின் பலவகைப்பட்ட அம்சங்களை முன்வைக்கிறது.
துறவறம் என்பது, கத்தோலிக்கத் திருச்சபையில் என்றென்றும் இருந்ததல்ல. முற்காலங்களில் திருமணமானவர்கள் பாதிரியார்களாக இருந்தார்கள். ஆனால், காலப்போக்கில் இது ஒரு சட்டமானது. வேதாகமத்தின் பிரகாரம், பாதிரிமார்கள் பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
ஆனால், கத்தோலிக்க திருச்சபையே இதைச் சட்டமாக்கியுள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் இரகசியமாகத் திருமணம் செய்த, பல பாதிரிமார்களின் கதைகள் வெளியாகி இருக்கின்றன.
பிரம்மச்சரியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் பழைமைவாதிகள், திருச்சபையின் மீதான மதிப்பும் மரியாதையும் இன்றுவரை, கேள்விக்கிடமின்றித் தொடர்வதற்கு, அருட்தந்தையர்களின் பிரம்மச்சரியம் முக்கியமான காரணம் என்று வாதிடுகிறார்கள்.
உலக விருப்பங்களில் இருந்து விடுபட்ட ஒருவராலேயே, இறைவனை முழுமையாகத் தியானிக்கவும் வழிபடவும் வழிகாட்டவும் முடியும் என்பது அவர்களின் கருத்து.
குடும்பம், மனைவி, பிள்ளைகள் ஆகிய பந்தங்கள், முழுமையான இறைபணியை ஆற்ற, ஒருபோதும் அனுமதிக்க மாட்டா. எனவே, பிரம்மச்சரியம், கத்தோலிக்க திருச்சபையின் அடிப்படையாகவும் துறவறத்தின் முதன்மையானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
மாறுகின்ற நவீன காலத்துக்கு ஏற்ப, கத்தோலிக்கத்தையும் திருச்சபையையும் காப்பதற்கும் அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு, இவ்வமைப்பையும் கத்தோலிக்கத்தையும் எடுத்துச் செல்லவும் இந்த மாற்றங்கள் அவசியமானவை என்று, சீர்திருத்தவாதிகள் கருதுகிறார்கள்.
குறிப்பாகப் புதிய தலைமுறையினர், தேவாலயங்களுக்குச் செல்வதைக் குறைத்துவிட்ட நிலையில், தேவாலயம் அதன் பிரதான மீயுயர் இடத்தை, மெதுமெதுவாக இழக்கத் தொடக்கிவிட்டது.
குறிப்பாக, ஏனைய கிறிஸ்தவ மதப்பிரிவினரின் செயற்பாடுகள், நெகிழ்வுத்தன்மை, கவர்ச்சி ஆகியன, கத்தோலிக்கத்தின் மீதான ஈர்ப்பைக் குறைத்துள்ளன. இவை, இன்றைய கத்தோலிக்க திருச்சபையும் தேவாலயங்களும் எதிர்நோக்கியுள்ள சவால்களாகும்.
இரண்டு பாப்பரசர்கள்
இந்தப் புத்தகம், திருச்சபை சார்ந்தும் பாப்பரசர்கள் சார்ந்தும் புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. பாப்பரசர் 16ஆவது பெனடிக்ட் 2013ஆம் ஆண்டு, உடல் நிலையைக் காரணம் காட்டி ஓய்வுநிலையில் இருக்கிறார். அவர், “உலகத்திடம் இருந்து ஒளிந்து வாழ்வேன்” என்று அப்போது கூறியிருந்தார்.
ஆனால், அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை. எல்லோரும் எதிர்பார்த்ததுக்கு மாறாக, அவர் தனக்கு ‘ஓய்வுநிலை பாப்பரசர்’ என்ற பட்டத்தைச் சூடிக் கொண்டார்.
எல்லோரும், ‘இளைப்பாறிய உரோமின் ஆயர்’ என்ற பட்டத்தையே, அவர் சூடுவார் என எதிர்பார்த்தார்கள். எனவே, புதிதாகப் பாப்பரசர் பிரான்ஸிஸ் பதவியேற்ற நாள்முதல், இரண்டு பாப்பரசர்களிடையே அதிகாரப் போட்டியும் செல்வாக்குக்கான நெருக்கடியும் இருந்து வந்தன.
பழைமைவாதிகளின் முக்கிய கையாளாக, ஓய்வுநிலை பாப்பரசர் 16ஆவது பெனடிக்ட் இருந்தார். இவரை முன்னிலைப்படுத்தியே, பாப்பரசர் பிரான்ஸிஸின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டன.
இதேவேளை, கடந்த சில ஆண்டுகளாக, பாலியல் குற்றச்சாட்டுகளால் கத்தோலிக்கத் திருச்சபை நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. இதன் பின்னணியில், கடந்தாண்டு ஓய்வுநிலை பாப்பரசர் 6,000 சொற்கள் கொண்ட, நீண்ட கடிதமொன்றை எழுதினார்.
இக்கடிதம், பாப்பரசர் பிரான்ஸிஸுக்கு எதிரான, நேரடியான விமர்சனமாக இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, இந்தப் புத்தகத்தை நோக்க வேண்டியுள்ளது.
பாப்பரசரை விட, ஓய்வுநிலை பாப்பரசர் வத்திக்கானில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். இவர் பாப்பரசராகுவதற்கு முதல், மூன்று தசாப்த காலம், வத்திக்கானின் பிரதான இறையியல் கோட்பாட்டாளராக இருந்தார். பழைமைவாதிகள் மத்தியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. வத்திக்கானின் அதிகார மய்யங்கள் பலவற்றில், இன்றுவரையிலும் நிறைந்த செல்வாக்கு, இவருக்கு உண்டு.
இது பாப்பரசர் பிரான்ஸிஸுக்கு மிகப் பெரிய சவாலாகும். குறிப்பாக, ஓய்வுநிலை பாப்பரசர், மீண்டும் பொதுவெளிக்கு வந்துள்ளமையும் பாப்பரசரின் செயல்களை, வெளிப்படையாக விமர்சிப்பதும் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நிலவும் நெருக்கடியை காட்டி நிற்கின்றது.
பாப்பரசரின் அதிகாரத்தை, ஓய்வுநிலை பாப்பரசர், கேள்விக்கு உட்படுத்துகிறார் என்ற விமர்சனம், பல தளங்களில் முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த புத்தகத்தை ஓய்வுநிலை பாப்பரசர் எழுதவில்லை. அதை எழுதிய ரொபேட் கார்டினல் சரா, ஓய்வுநிலை பாப்பரசரின் பெயரையும் இணைத்துள்ளார் என்று, ஒரு கருத்து வெளியிடப்பட்டது.
இதற்குப் பதிலளித்துள்ள ரொபேட் கார்டினல் சரா, “இந்நூல் ஓய்வுநிலை பாப்பரசரின் முழுமையான அறிவுடனும் அறிவுறுத்தலுடன் ஒத்துழைப்புடனுமே எழுதப்பட்டது” என்று கூறியுள்ளார்.
இவை, திருச்சபைக்குள் நிலவும் நெருக்கடிகள், புதிய கட்டத்தை எட்டியுள்ளமையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இவை, மதம் குறித்தும், அதன் பயன் குறித்தும் பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
இன்று எழுப்பியுள்ள இந்த நெருக்கடியின் மய்யங்களில் ஒன்று, தென்அமெரிக்கப் பழங்குடிகளிடையே, கத்தோலிக்க மதநம்பிக்கை குறைவடைந்து வருவதும் அருட்தந்தையர்கள் இன்மையும், முதன்முதலாக தென்அமெரிக்காவை கொலனியாதிக்கவாதிகள் கைப்பற்றிய போது நடந்த கதையொன்றை நினைவுகூரத் தோன்றுகிறது.
‘செவ்விந்தியத் தலைவன் ஹாடுவே நெருப்பில் கொளுத்தப்படுவதற்காகக் கட்டிவைக்கப்பட்டிருந்த போது, பாதிரியார் ஒருவர் அவனைக் கிறிஸ்தவராக மாற்ற முயற்சி செய்தார். “கிறிஸ்தவனாக மாறினால் உன்னுடைய ஆன்மா காப்பாற்றப்படும். அப்படி நடந்தால் நீ சொர்க்கத்துக்குச் செல்லலாம். நரகத்தின் முடிவில்லா வேதனைகளில் இருந்து காப்பாற்றப்படுவாய்” என்று சொன்னார். “சொர்க்கத்தில் ஸ்பானியர்கள் யாரேனும் இருக்கிறார்களா?” என்று ஹாடுவே கேட்டான். “இருக்கிறார்கள்” என்றார் பாதிரியார். இப்பதிலைக் கேட்ட ஹாடுவே சொன்னான். “நான் நரகத்துக்கே சென்று விடுகிறேன்”.